SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

பெண்கள் சிறகடித்துப் பறக்க வேண்டும்!

2021-11-17@ 17:37:18

நன்றி குங்குமம் தோழி

பெண் குழந்தைகள் பிறந்தால் செல்வம் என்று சொல்லுபவர்கள்தான், அவர்கள் வளர வளர… செலவு என்கிறார்கள். ஒரு பெண் குழந்தை பெற்றவர்களுக்கே இந்த நிலை என்றால் 6 பெண் குழந்தைகளை பெற்று, அவர்கள் அனைவரையும் மருத்துவராக்கி அழகு பார்த்திருக்கும், கேரள மாநிலம் நடபுரத்தைச் சேர்ந்த சாய்னா தனது கதையை பகிர்கிறார்… “ஐந்தாம் வகுப்பு வரைதான் படித்தேன். எனக்கு 12 வயது இருக்கும் போதே என் உறவினரான அகமது குஞ்சமெடுக்கும் என்பவரோடு திருமணம் செய்து வைத்தனர் பெற்றோர். திருமணம் முடிந்து முதல் முறையாக என் வீட்டிலிருந்து வெளியே சென்ற போது புதிய வாழ்க்கையை நினைத்து பயமாக இருந்தது. அதே சமயம் தொடர்ந்து படிக்க முடியவில்லையே என்ற  வருத்தமும் இருந்தது. என் கணவர் சென்னையில் தொழில் செய்து கொண்டிருந்தார். முதல் குழந்தை பிறந்த பிறகு, கத்தாரில் அவருக்கு வேலை கிடைத்தது. எங்களையும் சீக்கிரம் அழைத்துச் செல்வதாகக் கூறிவிட்டுச் சென்றார்.

எனக்கு சந்தோஷமாக இருந்தது. கத்தாருக்குப் பறந்து சென்று அங்கேயே செட்டில் ஆகி விடலாம் என்ற நினைப்பே என் மனதில் ஓடிக் கொண்டிருந்தது. என் கணவர் விஷயம் அறிந்தவர். நிறைய புத்தகங்களைப் படிப்பார். உலகில் உள்ள பல்வேறு இடங்களை பற்றி கதையாக சொல்வார். எங்களுக்கு அடுத்தடுத்து ஃபாத்திமா, ஹாஜிரா, ஆயிஷா, ஃபாயிஷா, ரஹ்னாஸ் மற்றும் கடைசியாக அமீரா ஆகிய பெண் குழந்தைகள் பிறந்தனர்.

யாரைப் பார்த்தாலும் ஆறு பெண்களின் எதிர்காலத்தைப் பற்றியே கவலையுடன் பேசுவார்கள். ஆனால், என் குழந்தைகளை வளர்ப்பது பற்றியோ ஆறு பெண் குழந்தைகள் பிறந்துவிட்டார்களே என்றோ ஒருபோதும் நான் கவலைப்பட்டதில்லை. அவர்களை நான் ஒருபோதும் சுமையாக நினைத்ததில்லை. என் ஆறு பெண் குழந்தைகளையும் நன்றாக படிக்க வைத்து வாழ்க்கையில் உயர்ந்த நிலைக்குக் கொண்டு வரவேண்டும் என்பதில்  உறுதியாக இருந்தேன். பொது அறிவை வளர்த்துக்கொள்ள ஆறு மகள்களுக்கும் என் கணவர் ஏராளமான புத்தகங்களை வாங்கிக் கொடுத்துள்ளார். இந்த சமுதாயத்துக்கு சேவை செய்யும் வகையில், ஆறு மகள்களையும் டாக்டருக்கு படிக்க வைக்க வேண்டும் என்று முடிவு செய்தேன்.

 என் கணவருக்கும் அதே எண்ணம்தான் இருந்தது. என் பெரியப்பா தான் எங்கள் பகுதியிலிருந்து டாக்டருக்கு படித்த முதல் நபர். அவரை மக்கள் மதிப்பதை நான் நேரில் பார்த்திருக்கிறேன். இது போன்ற சம்பவங்களால் ஆறு மகள்களையும் டாக்டருக்கு படிக்க வைக்க வேண்டும் என்ற உத்வேகத்தை ஏற்படுத்தியது. எங்கள் மூன்றாவது மகளுக்கு சட்டம் படிக்கத்தான் ஆசை. டாக்டருக்குப் படித்துவிட்டு அதன்பிறகு என்ன வேண்டுமானாலும் படித்துக்கொள் என்று சொல்லிவிட்டேன். எந்தத் துறையிலிருந்தாலும் பெண்கள் பாதுகாப்பாக இருக்க வேண்டும் என்று நினைப்பேன். வீட்டுக்குள்ளேயே முடங்கிய என்னைப் போல் நீங்களும் ஆகிவிடக் கூடாது என்று மகள்களிடம் கூறிக் கொண்டே இருப்பேன்.

நானும் என் கணவரும் கத்தாரில் இருந்தோம். அங்கு இருக்கும் போதே முதல் இரண்டு பெண்களும் டாக்டருக்கு படித்து முடித்தார்கள். அதன் பிறகு கேரளாவில் வந்து செட்டிலாயிட்டோம். இங்கு வந்த பிறகு மற்ற 4 பெண்களையும் டாக்டருக்கு படிக்க வைத்தோம். நாங்க கேரளாவுக்குத் திரும்பி வந்த 2 ஆண்டுகளில் என் கணவர் மாரடைப்பில் இறந்துவிட்டார். என் வாழ்க்கையின் பலமே அவர் தான். இருந்தாலும் என் மகள்களை எப்படியாவது டாக்டருக்கு படிக்க வைக்க வேண்டும் என்ற வைராக்கியத்தை மட்டும் நான் இழக்கவில்லை. இதற்கிடையில் என் 2 மகள்களின் திருமணத்தை முடித்தோம். என் கணவர் இழப்பிலிருந்து நான் மீளவில்லை என்றாலும், அவர் இன்றும் எனக்கு துணையாக இருப்பது போல் உணர்கிறேன்” என்றார்.

உயர் படிப்பை முடிக்காமல் குழந்தைகளுக்கு திருமணம் செய்து வைப்பதில்லை என்பதில் சாய்னா உறுதியாக இருந்திருக்கிறார். சரியான நேரத்தில் சரியான முடிவுகளை எடுத்ததால்தான் ஆறு பெண் குழந்தைகளையும் நினைத்தபடி டாக்டராக்க முடிந்திருக்கிறது. தனக்குக் கிடைக்காத விஷயங்களை எல்லாம் தன் குழந்தைகளுக்குக் கிடைக்க வேண்டும் என்பதில் சாய்னா மனம் தளராமல் தான் நினைத்ததை  முடித்து காட்டியுள்ளார்.

தொகுப்பு: விவி

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • Avanyapuram

  அவனியாபுரம் ஜல்லிக்கட்டு

 • Jallikkattu

  ஜல்லிக்கட்டு போட்டி: சீறிப் பாய்ந்து வரும் காளையை அடக்க முயன்ற வீரர்கள்

 • Bogi_Festival_People_Celebrate

  போகி பண்டிகையையொட்டி பழைய பொருட்களை தீயிட்டு மக்கள் கொண்டாட்டம்

 • simla-snow-11

  உறையும் பனி...வெண்பனி போர்வையுடன் காட்சியளிக்கும் சிம்லா: குளுகுளு புகைப்படங்கள்

 • pig-heart-human-11

  உலகில் முதன்முறையாக பன்றியின் இதயத்தை மனிதனுக்கு பொருத்தி மருத்துவர்கள் சாதனை..!!

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்