SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

மாமன் மகளிடம் கணவரை பறி கொடுத்தேன்!

2021-10-18@ 17:51:53

நன்றி குங்குமம் தோழி

என்ன  செய்வது தோழி?

அன்புள்ள தோழிக்கு,

எனக்கு 40 வயது. திருமணமாகி 20 ஆண்டுகள் ஆகின்றன. பன்னிரெண்டாம் வகுப்பு முடித்ததும் ‘போதும்’ என்று வீட்டில் படிப்பை நிறுத்தி விட்டார்கள். கூடவே மாப்பிள்ளை பார்க்க ஆரம்பித்தனர். நான் கறுப்பு. சாதாரண குடும்பம். அதனால் ‘அதிகம்’ எதிர்பார்த்து வந்தவர்கள் வேண்டாம் என்று திரும்பி விடுவது வாடிக்கையாக இருந்தது. ஆனாலும் எனது பெற்றோர் சலிக்கவில்லை. எனது மாமா மகளை வெளியூரில் திருமணம் செய்து கொடுத்து இருக்கிறார்கள்.

அவரது கணவரின் அத்தை மகனுக்கு என்னை பெண் கேட்டார்கள். அவர் சொந்தமாக தொழில் செய்வதாகவும், சொந்த வீடு இருப்பதாகவும் அவர் வீட்டின் பெருமைகளை கூறினார்கள். அதனால் எங்கள் வீட்டில் அவர் மீது எதிர்பார்ப்பு கூடியது. எப்போது பெண் பார்க்க வருவார்கள் என்று எங்கள் வீட்டில் காத்திருக்க ஆரம்பித்தனர். அந்த அளவுக்கு என் மாமா மகள், அவரை பற்றியும், அவர்கள் குடும்பம் பற்றியும் ஊருக்கு வரும்போதெல்லாம் சொல்லிக் கொண்டே இருப்பாள். அழகு என்று சினிமா சொல்லும் அளவுகோல் அவளுக்கும் பொருந்தும். என்னை விட 4 வயது பெரியவள் என்றாலும் நானும் அவளும் ‘வாடி, போடி’ என்று பேசிக் கொள்ளும் அளவுக்கு நெருக்கம்.

எனவே அவளும், ‘ஒரே ஊரில் வாழ்க்கைப்பட்டால் ஒன்றாக இருக்கலாம். அடிக்கடி பார்த்துக் கொள்ளலாம். ஒருவருக்கு ஒருவர் உதவியாக இருக்கலாம்’ என்று சொன்னாள். அதனால் எனக்கும் அந்த வரன் குறித்து ஆர்வம் வந்தது. ஆனால் அவர்கள் எங்கள் எதிர்பார்ப்பை அதிகரித்துக் கொண்டு இருந்தார்களே தவிர, பெண் பார்க்க உடனே வரவில்லை.

ஒருகட்டத்தில் ‘வேறு இடத்தில் பெண் கிடைக்கவில்லை என்றால் இங்கு பெண் பார்க்க வருவார்களோ’ என்ற எண்ணம் கூட எங்களுக்கு ஏற்பட்டது. ஆனால் என் மாமா மகளோ, ‘அண்ணன் வேலையில் ரொம்ப பிசி. அதனால் உடனே வர முடியவில்லை. ஆனால் கட்டாயம் உன்னைதான் பெண் பார்க்க வருவார்கள். நான் பேசிவிட்டேன். உன் போட்டோவை கூட காட்டி விட்டேன். அவர்களுக்கும் ஓகேதான்’ என்று சொன்னாள். அவள் அப்படி சொல்லி நான்கைந்து மாதம் கழித்துதான் பெண் பார்க்க வந்தார்கள். வந்த பிறகுதான் தெரிந்தது. அவர் கொஞ்சம் தாங்கி, தாங்கி நடந்தார். உற்று பார்த்தால்தான் தெரியும். மற்றபடி இயல்பாக இருப்பது போல் தோன்றியது. ஆனாலும் எனக்கு தயக்கமாக இருந்தது. கறுப்பாக இருப்பதால் இப்படி, ஒருவருக்கு நம்மை திருமணம் செய்ய பார்க்கிறார்களோ என்ற எண்ணம் வந்தது.

அதை நான் வெளிப்படையாக எனது பெற்றோரிடம், பெண் பார்க்க வந்தவர்களுடன் வந்த மாமா மகளிடமும் சொன்னேன். ஆனால் அவர்கள் என்னை சமாதானப்படுத்தும் வேலையில்தான் ஈடுபட்டனர். நான் ‘யோசிக்கணும்’ என்று சொல்லிவிட்டேன். அதனால் பெண் பார்க்க வந்தவர்களிடம் , ‘நாங்களும் உங்கள் வீட்டுக்கு ஒருமுறை வந்து பார்க்கிறோம்’ என்று எங்கள் வீட்டில் சொல்லிவிட்டனர். எங்கள் பக்கத்தில் நிச்சயதார்த்தத்திற்கு முன்பாக இப்படி பெண், பையன் வீட்டுக்கு இரு தரப்பும் மாறிமாறி போய் பார்ப்பது வழக்கம்.

ஆனால் அவர்களுடன் வந்த மாமா மகள் ஊரிலேயே தங்கி விட்டாள். அவள் தினமும் என்னை வந்த பார்த்து, ‘அவள் அண்ணனின் பெருமையை’ சொல்லி என்னை சம்மதிக்க வைப்பதே வேலையாக இருந்தாள். இடையில் பையன் வீட்டுக்கு சென்று வந்த எங்கள் குடும்பத்தினருக்கும், சொந்தக்காரர்களுக்கும் அவர்களின் வசதி சம்மதிக்க வைத்து விட்டது. அதன் பிறகு என் விருப்பம் 2ம் பட்சமாகி விட்டது. அதனால் வேறு வழியில்லாமல் சம்மதிக்க வேண்டியதாகி விட்டது.

இரு வீட்டார் விருப்பப்படி திருமணம் நடந்தது. பல கனவுகளுடன் இருந்த என்னுடைய எண்ணங்கள் அனைத்தும் அவரின் நடத்தையால் தூள்தூளானது. என்னிடம் அதிகம் பேச மாட்டார். ஏதாவது வேண்டும் என்றால் கேட்பார். வீட்டில் எல்லாம் அவர் விருப்பப்படி தான் நடக்கணும். ஒரு கட்டத்தில் ‘அவர் விருப்பத்தை மீறி எதுவும் செய்ய முடியாது’ என்பதை புரிந்து கொண்டேன். அதிகம் சம்பாதிப்பவர் என்பதால் வீட்டில் அவர் வைத்ததுதான் சட்டம். மாமியார் தன் பிள்ளை வார்த்தைக்கு மறு வார்த்தை பேச மாட்டார் என்பதால் எனக்கும் ஆதரவு யாருமில்லை.

ஓராண்டு கழித்து பிறந்த மகன்தான் ஆதரவு, ஆறுதல் எல்லாம். இன்று வரை எனக்கு துணையாக இருப்பது அவன் மட்டும்தான். ஆம். இன்றும் என் கணவருக்கு நான் இரண்டாம் பட்சம்தான். திருமணமான புதிதில் சில நாட்களில் இரவில் வீட்டுக்கு வரமாட்டார். கேட்டால் , ‘புது காண்டிராக்ட்’ என்று சொல்வார். அதன்பிறகு நினைத்தால் வருவார். கேட்டால் திட்டுவார், ஒரு கட்டத்தில் அடிக்கவும் ஆரம்பித்தார். வீட்டில் சொன்னதற்கு ‘கொஞ்ச நாட்களில் சரியாகி விடும்’ என்றார்கள்.

பக்கத்து தெருவில் இருக்கும் மாமா மகள் அவ்வப்போது வந்து பேசி விட்டு போவாள். திருமணத்திற்கு முன்பு சொன்னது போல் அடிக்கடி எல்லாம் வருவதில்லை. கேட்டால் ‘வேலை நிறைய... கடைக்கு போனேன்... ஆஸ்பிட்டல் போனேன்...’ என்று ஏதாவது காரணம் சொல்வாள். என் வீட்டுக்காரர் அடிப்பதை சொன்னால், ‘என் வீட்டுக்காரர் கூடதான் ஆரம்பத்தில் அடித்தார். இப்போது எல்லாம் என் கண்ட்ரோல்தான். நான் நில்லுனா நிப்பார். உட்காருனா உட்காருவார். நீயும் விட்டு பிடி எல்லாம் சரியாகி விடும்’ என்பாள்.

உண்மைதான். அவள் வீட்டில் அவள் வைத்ததுதான் சட்டம். அவளது கணவர் எதையும் அவளிடம் கேட்டுவிட்டுதான் செய்வார். அவள் சத்தம் போட்டால் அமைதியாகி விடுவார். பொது இடத்தில் கூட அவரை மிரட்டுவாள். எனக்கு அப்படி எதிர்பார்ப்பு இல்லாவிட்டாலும், கணவர் மாறுவார் என்ற நம்பிக்கையில் இருந்தேன். ஆனால் அதற்கு மாறாக நடந்ததே வேறு. வீட்டுக்கு அடிக்கடி வராமல் இருப்பதற்கு அவருக்கு வேறு பெண்களிடம் பழக்கம் இருப்பதாக  அரசல், புரசலாக கேள்விப்பட்டேன்.

ஒருநாள் சண்டையில், பொறுக்க முடியாமல் கேட்டு விட்டேன். அதனால் கோபப்பட்ட அவர் என்னை கண்மண் தெரியாமல் நன்றாக அடித்து விட்டார். மாமியாரும், ‘ஆம்பிள்ளைனா நாலு இடத்துக்கு போவான்.. வருவான். அதையெல்லாம் கேள்வி கேட்டா எப்படி’ என்று என்னை திட்டினார். ஆனால் என் காதுக்கு வரும் தகவல்கள் குறைந்தபாடில்லை. ஒரு பெண்ணுடன் கோவில், கடைத்தெரு, பஸ், ரயிலில் பார்த்ததாக சொல்வார்கள். அப்படி சொல்லும் நாட்களில் நான்கைந்து நாட்களுக்கு அவரும் வீட்டுக்கு வரமாட்டார்.

எனக்கு தகவல் சொன்னவர்களிடம் யார் அந்த பெண் என்று கேட்டால், எல்லாரும் சொல்ல தயங்கினார்கள். ஒரு கட்டத்தில் கெஞ்சி, அழுது அடம் பிடித்த போது என் பக்கத்து வீட்டுக்கார அக்காதான் பொறுக்க முடியாமல் சொன்னார். என் கணவருடன் ஜோடி போட்டு சுற்றுவது என் மாமா மகள் என்று.... எனக்கு அதிர்ச்சியாக இருந்தது. அவளே வாழ்க்கையை ஏற்படுத்தி தந்து விட்டு, அவளே வேட்டு வைத்து விட்டாளே என்று அழுது துடித்தேன். கூடவே இருவருக்கும் முறை கூட கிடையாது. எனக்கு தெரிந்த பிறகு இன்னும் தைரியமாக ஊர் சுற்ற ஆரம்பித்து விட்டனர். அதன் பிறகு என் மாமா மகளிடம் நான் பேசுவதில்லை. அவர்கள் ஜோடி போட்டு ஊர் சுற்றுவதும் நிற்கவில்லை. இந்த விவரம் தெரிந்து 15 ஆண்டுகள் ஆகி விட்டன.

ஆனாலும் இன்னும் அவர்கள் மாறவில்லை. என் பையன் இப்போது கல்லூரியில் படிக்கிறான். அதுமட்டுமல்ல கடந்த 10 ஆண்டுகளாக செலவுக்கும் காசு கொடுப்பதில்லை. நான் வீட்டு வேலை செய்துதான் பிள்ளையை படிக்க வைக்கிறேன். அவரோ என் மாமா மகளுக்கு வீடு கட்டி கொடுத்து விட்டார். பைக், கார் வாங்கிக் கொடுத்திருக்கிறார்.நான் இப்படி வேதனைப்படுவதைப் பார்த்து, என் மகன், ‘கவலைப்படாதே மா நான் வேலைக்கு போய் உன்னை நல்லா பாத்துக்கிறேன். அதுக்கப்புறம் நாம அப்பா கூட இருக்க வேணாம். தனியா போய்டலாம்’ என்று சொல்வான். அவன் அப்படி சொல்வதுதான் எனக்கு ஆறுதல். அதை நம்பிதான் கஷ்டங்களை கடந்து சென்று கொண்டு இருக்கிறேன்.

இந்நிலையில் என் வீட்டுக்காரர் என்னுடன் ராசியாக இல்லாததை பார்த்து சில ஆண்கள் எனக்கு ஆறுதல் சொல்ல ஆசைப்படுகிறார்கள். என் பக்கத்து வீட்டு அக்காவின் கணவர், ‘உன் அருமை உன் கணவனுக்கு தெரியவில்லை. நானாக இருந்தால் உன்னை தேவதைப் போல் பார்த்துக் கொள்வேன். உனக்கு ஏதாவது கஷ்டம்னா என்கிட்ட சொல்லு... நான் இருக்கிறேன்’ என்ற ரீதியில்தான் எப்போதும் பேசுகிறார். அவர் மனைவி இல்லாத நேரங்களில் கூப்பிட்டு பேசுகிறார்.

‘அப்படி பேசாதீர்கள்’ என்று பலமுறை சொல்லியும் பயனில்லை. அவரது மனைவியிடம் சொல்லலாம் என்றால், அந்த அக்காதான் என் வீட்டுக்காரர் பற்றி எனக்கு சொல்லி என்னை எச்சரிக்கை செய்தவர். எனக்கு ஆறுதலாக இருப்பவர். என் பிள்ளை படிப்புக்கு அடிக்கடி கடன் கொடுத்து உதவுபவர். அவர் மனம் கஷ்டப்படுமே.... அந்த உறவும், உதவியும் பாதிக்குமே என்று தயக்கமாக இருக்கிறது.

என் கணவரிடம் சொன்னால் என்னைதான் அடிப்பார். ‘நீ பெரிய அழகி... உன்னை எல்லோரும் பாத்து மயங்கிடறாங்களா’ என்று கிண்டல் செய்வார். அதனால் என்ன செய்வதென்று தெரியவில்லை. என் பிள்ளையும் அந்த தம்பதி மீது மரியாதை வைத்திருக்கிறான். அந்த பக்கத்து வீட்டுக்காரரும் என் பிள்ளைக்கு எப்போதும் நல்ல புத்திமதிகளை சொல்வார். என்ன செய்வதென்று தெரியாமல் தவிக்கிறேன். என் வாழ்க்கையே நிம்மதி இல்லாத வாழ்க்கையாக மாறி விட்டது.

என் கணவரை என் மாமன் மகளிடம் பறிகொடுத்து விட்டேன். என் மரியாதையையும் பக்கத்து வீட்டுக்காரர் காலி செய்து விடுவாரோ என்று பயமாக இருக்கிறது. எனக்கு நிம்மதியான வாழ்க்கை வாழ ஆலோசனை சொல்லுங்கள்? என் கணவர் முதல் பக்கத்து வீட்டுக்காரர் வரை யாரும் திருந்த வாய்ப்பில்லையா? தனியாக இருக்கும் பெண்ணிடம் இப்படி ஆண்கள் நடந்து கொண்டால் நாங்கள் எல்லாம் எப்படி வாழ்வது? எனக்கு நல்ல வழி காட்டுங்கள் தோழி.

இப்படிக்குபெயர் வெளியிட விரும்பாத வாசகி.

நட்புடன் தோழிக்கு,

உங்களின் கடிதம் படிக்கும் போது, உங்கள் விருப்பம்  இல்லாமல்  திருமணம் நடந்தது தெரிகிறது. அவரின் குணநலன்களை முழுவதும் ஆராயாமல், கட்டாயப்படுத்தி உங்களை திருமண வாழ்க்கையில் தள்ளியுள்ளனர். அவர்களைப் பொறுத்தமட்டில் பெண்ணை சீக்கிரம் கல்யாணம் செய்து கொடுக்க வேண்டும். மாப்பிள்ளைக்கு வேலை இருந்தால் போதும், வீடு இருந்தால் போதும் என்று மிகவும் குறுகிய மனப்பான்மையுடன் உங்களைத் திருமணம் செய்து தந்துள்ளனர்.

நீங்களும் 20 ஆண்டு ஏதோ வாழ்க்கையை வாழ்ந்து உள்ளீர்கள்.  உங்கள் மீது கணவருக்கு அக்கறை இருப்பதாக தோன்றவில்லை.  அவர் ஆணாதிக்க மனப்பான்மையுடன்,  பிற்போக்குத் தனமாக நடக்கும் ஆளாக தெரிகிறது.  ஒரு ஆண் எத்தனை பெண்களுடனும் பழகலாம். அதை மனைவி கேள்வி கேட்கக் கூடாது. அவன் என்ன செய்தாலும், அவற்றை பெண்  ஏற்றுக்கொண்டும்,  பொறுத்துக் கொண்டும் வாழ வேண்டும். சில பெண்களும் இது மாதிரி ஆண்களை ஊக்குவித்து அவர்களுடன் பழகுவார்கள். உங்கள் மாமன் மகள் அப்படித்தான் செய்கிறார்.

அறிவியலின்படி மன உளைச்சல்  ஏற்பட்டால்,  மன அழுத்தம் வந்தால் எளிதாக சிகிச்சை செய்யலாம். ஆனால் ஒருவரின் அடிப்படை குணத்தை மாற்றி அமைப்பது அவ்வளவு எளிதல்ல. உங்கள் கணவரின் அடிப்படை குணத்திலேயே பிரச்சனை உள்ளது. அதை பொறுத்துக் கொண்டு நீங்களும் இவ்வளவு காலம் வாழ்ந்து உள்ளீர்கள். இப்பொழுது உங்கள் மகன் வளர்ந்து வரும் பொழுது அதைப் பொறுத்துக் கொள்ள வேண்டிய அவசியம் இல்லை என்று உணர்கிறீர்கள்.

இப்படி  கணவருடன் பிரச்சனையில் இருக்கும்  பெண்களை அவர்களுடன் சம்மதமில்லாமல் அவர்களுக்கு உதவி செய்வது போல் அணுகவும் தனியாக ஆண்கள் கூட்டம் உள்ளது. அவர்களும்  பிற்போக்குத்தனமான அதே ஆணாதிக்க மனப்பான்மை உள்ளவர்கள்தான். உதவி செய்வதுபோல், ஆறுதல் சொல்வது போல் பெண்களின்  பலவீனத்தை பயன்படுத்தி,  அவர்களையும் பயன்படுத்திக் கொள்ள நினைப்பார்கள். உங்கள் கணவரை போல், இவர்களின் புத்தியையும் மாற்ற முடியாது.  

நீங்கள் முதலில்  செய்ய வேண்டியது,  உங்கள் கணவர், பக்கத்து வீட்டுக்காரர் போன்ற ஆண்களும். உங்கள் மாமா மகள் போன்ற பெண்களும் இந்த சமுதாயத்தில் இருக்கிறார்கள் என்பதை புரிந்து கொள்வதுதான். கல்யாணத்தின் போது உங்களுக்கு அந்த புரிதல் ஏற்பட்டிருக்க வாய்ப்பில்லை.

ஆனால் இப்பொழுது நீங்கள் அதைப் புரிந்துகொள்ள முயற்சிக்க வேண்டும். உங்களுக்கு உதவி செய்யும் ஆண் உங்களிடம் எல்லை மீறும் பட்சத்தில்,  உங்கள் மகனிடமோ அல்லது அவரது மனைவியிடமோ பகிர்ந்து கொள்வதில் தவறு இல்லை. ஆதலால் உதவி கிடைக்காதோ என்று நீங்கள் அச்சப்படத் தேவையில்லை. இந்த பலவீனம் தான் அவர்களை தவறு செய்யத் தூண்டுகிறது.

ஆதலால் அதற்கு முற்றுப்புள்ளி வைக்க நீங்கள் முயற்சி செய்ய வேண்டும். மற்றபடி உங்கள் கணவரை பற்றியோ, உங்கள் மாமன் மகளை பற்றியோ யோசித்து கவலைப்பட ஒன்றுமில்லை. நீங்கள் கூறியது போல் உங்கள் மகன் படிப்பை முடித்து நல்ல வேலைக்கு சென்றதும் நீங்கள் அவனுடன் சென்று இருந்து கொள்ளலாம். பல இடங்களில் சமரசம் செய்தால்தான் மகனை படிக்க வைக்க முடியும் என்றெல்லாம் நீங்கள் எண்ணத் தேவை இல்லை.

நீங்கள் தைரியமாக உங்களின் பிரச்சனைகளையும் கஷ்டங்களையும் பகிர்ந்து கொள்ள முயற்சி செய்யுங்கள். அதையும் தாண்டி உங்களுக்கு மன உளைச்சல் அதிகமானால் நல்ல மனநல மருத்துவரை அணுகி  ஆலோசனை பெறுங்கள். உங்கள் வாழ்க்கை மாறும்.

தொகுப்பு : ஜெயா பிள்ளை

என்ன செய்வது தோழி
பகுதிக்கான கேள்விகளை எழுதி
அனுப்ப வேண்டிய முகவரி


‘என்ன செய்வது தோழி?’
குங்குமம் தோழி,
தபால் பெட்டி எண்: 2924
எண்: 229, கச்சேரி சாலை,
மயிலாப்பூர், சென்னை - 600 004


வாசகிகள் கவனத்துக்கு,

பிரச்னைகள்  குறித்து  எழுதும் போது  பிரச்னைகளுடன்  முழு  விவரங்களையும்  குறிப்பிடுங்கள்.சம்பவங்களை, காரணங்களை தெளிவாக... ஏன் விரிவாக கூட எழுதுங்கள். அப்போதுதான் தீர்வு சொல்பவர்களுக்கு வசதியாக இருக்கும். பெயர், முகவரி போன்றவற்றைதான் தவிர்க்க சொன்னோம். விவரங்களை அல்ல...

மேலும் செய்திகள்

LikeGamezop
Like Us on Facebook Dinkaran Daily News
 • kite_chennai

  மாமல்லபுரத்தில் நடைபெற்ற பிரம்மாண்ட பட்டத் திருவிழா..!!

 • poland-fish-16

  போலந்தில் நதிநீர் மாசுபாட்டால் டன் கணக்கில் செத்து மிதக்கும் மீன்கள்..!!

 • ruto-wins-presidency

  கென்யாவின் அதிபராக வெற்றி பெற்றார் ரூட்டோ..

 • ragul-inde-15

  டெல்லியில் காங். கட்சித் தலைமை அலுவலகத்தில் சுதந்திர தின விழா கோலாகலம்: ராகுல் காந்தி, குலாம்நபி ஆசாத் உள்ளிட்டோர் பங்கேற்பு..!!

 • independence-15

  75வது சுதந்திர தின விழா: டெல்லி செங்கோட்டையில் தேசிய கொடியை ஏற்றினார் பிரதமர் நரேந்திர மோடி.. வானிலிருந்து பொழிந்த பூமழை..!!

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்