SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

செந்தமிழ்த் தேன்மொழியாளான கன்னடக்குயில் மைனாவதி

2021-10-06@ 17:28:46

நன்றி குங்குமம் தோழி

செல்லுலாய்ட் பெண்கள் -84

தென்னிந்தியத் திரையில் மின்னிய உடன் பிறந்த சகோதரி நடிகைகள் வரிசை என எடுத்துக் கொண்டால் லலிதா- பத்மினி-  ராகினி, சௌகார் ஜானகி - கிருஷ்ண குமாரி, லட்சுமி பிரபா - எம்.சரோஜா, ஜோதிலட்சுமி - ஜெய மாலினி, அம்பிகா - ராதா, நக்மா- ஜோதிகா வரை பல சகோதரி நடிகைகளைத் திரையுலகம் கண்டிருக்கிறது என்பதைக் குறிப்பிடலாம். இந்தச் சகோதரிகளின் வரிசையில் கர்நாடகத்தின் புகழ் பெற்ற நடிகைகளான பண்டரிபாய் -மைனாவதி சகோதரிகளும் அடக்கம்.

அக்காளின் துன்பங்கள் தங்கைக்கு இல்லை

பண்டரிபாய் நடிக்க வந்த காலத்தில் ‘ஹரிதாஸ்’ படம் தொடங்கி சிறு சிறு வேடங்கள் ஏற்று நடித்து 1952ல் ‘பராசக்தி’ படத்தின் மூலம் நாயகி ஆனார். மிக நீண்ட காலம் அதற்கான கடுமையான உழைப்பை அவர் செலுத்த வேண்டியிருந்தது. படிப்படியான முன்னேற்றமாகவும் அவருக்கு அது அமைந்தது. அதற்கு மொழிச் சிக்கலும் ஒரு முதன்மையான காரணம். தமிழ் கற்றுக் கொண்டு பேசுவதற்கு மிகவும் சிரமப்பட்டு பின்னரே சொந்தக் குரலில் பேசி நாயகி அந்தஸ்தையும் பெற்றார்.

இந்தக் காலம் போல் இரவல் குரலில் பேசிவிட்டுப் போய் விடலாம் என்பதெல்லாம் செல்லுபடியாகாத காலம். சொந்தக் குரலில் பாடவும் வசனம் பேசவும் தெரிந்தால் மட்டுமே நடிக்க முடியும் என்ற நிலை சற்று மாறி, பாடத் தெரியாவிட்டாலும் கூட பரவாயில்லை, ஆனால் கண்டிப்பாகச் சொந்தக் குரலில் வசனம் பேசி நடித்தே தீர வேண்டும் என்ற நிலையை எல்லாம் கடந்த பின்னால்தான் பண்டரிபாய் நாயகியாக முடிந்தது.

ஆனால், மைனாவதியைப் பொறுத்தவரை அவருடைய அக்காள் பண்டரிபாய் பட்ட சிரமங்களையும் துன்பங்களையும் அவர் எதிர்கொள்ளவில்லை. ஏனென்றால் அக்காளின் அனுபவங்களும் அவரது ஆதரவும் இருந்ததால் அவரின் ஆலோசனைகளுடன் திரைப்படங்களில் நடிப்பதற்கான ஒத்துழைப்பு என அனைத்தும் மைனாவதிக்கு எளிதாகவே கிடைத்தன. தாய்மொழியான கன்னடத்தை விடுத்துத் தமிழ் மொழியைக் கற்றுக் கொண்டு பேசுவது உட்பட எவ்வித இடர்பாடுகளும் அவருக்கு இல்லை என்றுதான் சொல்ல வேண்டும். அதற்கான அத்தனை உதவிகளும் ஒத்துழைப்பும் அக்காள் பண்டரிபாய் வழியாக மைனாவதிக்கு எளிதாகக் கிடைத்தது.

தமிழில் அறிமுகமான ‘கண்கள்’

கர்நாடக மாநிலம் மங்களூர் அருகே உள்ள பத்கல் என்னுமிடத்தில் 26 ஜூலை 1935ல் ரங்கா ராவ்- காவேரி பாய் தம்பதிகளின் மகளாகப் பிறந்தவர் மைனாவதி. ஒன்பது குழந்தைகளைக் கொண்ட மிகப் பெரிய குடும்பம். இவ்வளவு பெரிய குடும்பத்தைத் தாங்கக்கூடியவரான தந்தைக்கு டிராயிங் மாஸ்டராகப் பணி. அவரது வருமானம் போதாத காரணத்தால் காலப்போக்கில் கோயில்களிலும், பொது நிகழ்ச்சிகளிலும் ஹரி கதாகாலட்சேபம் செய்பவராகவும் மாறினார்.

தன் மூத்த மகளான 10 வயது பண்டரிபாயையும் தன்னுடன் காலட்சேபம் செய்யும் பணியில் ஈடுபடுத்திக் கொண்டார். இசையும் பாடலுமாக இணைந்த காலட்சேபத்தை அப்பா மற்றும் அக்கா இருவரும் நிகழ்த்துவதை இளம் வயது முதலே பார்த்து வளர்ந்ததாலும் அக்காள் திரைப்படங்களில் நடிப்பதையும் பார்த்துக் கலைகளில் ஈடுபாட்டுடன் வளர்ந்தவர் மைனாவதி. பின்னர் தானும் அக்காளைப் போல் நடிகையாகி நடித்துப் பேரும் புகழும் பெற வேண்டும் என்ற விருப்பத்தின் பேரில் நடிகையாக மாறியவர்.

நடிகர் சகஸ்ரநாமம் குழுவினரால் நடத்தப்பட்ட நாடகம் ‘கண்கள்’, கிருஷ்ணன்  பஞ்சு இயக்கத்தில் 1953ல் திரைப்படமானது. சிவாஜி கணேசனின் ஆரம்ப காலப் படங்களில் இதுவும் ஒன்று. அவரது 7 வது திரைப்படம் இது. இப்படத்தின் நாயகி பண்டரிபாய். மைனாவதி பதினெட்டு வயதிலேயே இப்படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமானார். ஆரம்ப காலங்களில் பண்டரிபாய் நடித்த பல படங்களில் மைனாவதியும் இணைந்து நடிப்பதற்கான வாய்ப்புகளைப் பெற்றார். தொடர்ந்து சில ஆண்டுகள் சிறு சிறு வேடங்கள் என இதே மாதிரியான நிலையே நீடித்தது. 1956க்குப் பின் இந்நிலை மாறியது கைம்பெண் மறுமணத்தை வலியுறுத்திய குலதெய்வம்1956ல் கிருஷ்ணன்  பஞ்சு இயக்கத்தில் வெளியான ‘குல தெய்வம்’ திரைப்படத்தில் குறும்புத்தனம் கொப்பளிக்கும் இளம் பெண்ணாக மைனாவதி நடித்தார்.

இப்படம் கூட்டுக் குடும்பத்தின் மேன்மையைப் பேசியதுடன் கதையின் போக்கு அவர் ஒரு பால்ய விதவை என்பதை ரசிகர்களுக்கும் அந்தக் கதாபாத்திரத்துக்கும் சேர்த்தே உணர்த்தும். அதுவரை தன் நிலை உணராமல், தெரியாமல் உடன் பிறந்த சகோதரியின் வீட்டில் அனைவரையும் வம்பிழுத்துக் கொண்டு கவலை ஏதுமின்றி வளைய வந்த பெண், தன்னைப் பற்றிய உண்மை நிலை அறிந்த பின் வலிந்து கைம்பெண் கோலம் ஏற்றுப் புகுந்த வீட்டுக்கு கிராமத்துக்குத் திரும்பிச் செல்கிறாள்.

அதுவரை படத்தில் பார்த்த மைனாவதிக்கும் அதன் பின்னர் துயரம் தோய்ந்த முகத்துடன் புகுந்த வீட்டில் மாமனார், மாமியாரின் அடாவடித்தனங்களைப் பொறுத்துக் கொண்டு வாழும் கைம்பெண்ணுக்குமான வேறுபாட்டை மிக அற்புதமாகத் தன் நடிப்பில் வெளிக் கொணர்ந்திருப்பார். படத்தின் இறுதியில் அக்காளின் இளைய கொழுந்தன் அவளை மறுமணம் செய்து கொள்வதாகக் கதை நிறைவு பெறும்.

இந்திய சினிமாவின் ஆரம்ப காலத் திரைப்படங்கள் சில, மொழி வேறுபாடின்றி இந்திய சமூகத்தில் நிலவிய கைம்பெண் பிரச்சனை பற்றியும், கைம்பெண் மறுமணம் பற்றியும் பேசியிருக்கின்றன. பால்ய விவாகங்கள் பெருகியிருந்த சமூகத்தில் குழந்தைப் பருவத்திலேயே கைம்பெண்ணாக மாற்றப்பட்டவர்களின் எண்ணிக்கையும் மிக மிக அதிகம். சமூகத்தில் தீர்க்கப்பட முடியாத பிரச்சனையாக மாறிப் போயிருந்த இந்நிலையை மாற்ற, சட்டத்தின் மூலமாகத் தீர்வு காண முடியும் என ஆங்கிலேய அரசு முடிவெடுத்து 1856ல் இந்து கைம்பெண் மறுமணச் சட்டம் இயற்றியது. ஆனால், அதை நடைமுறைப்படுத்துவதில் அவ்வளவு சிக்கல்கள் எழுந்தன.

பண்பாடு என்ற பெயரில் பழமையில் ஊறிப் போனவர்களால் தங்கள் மகளுக்கு மீண்டும் ஒரு திருமணம் செய்து வைக்கலாம் என்பதை அவ்வளவு எளிதாக ஏற்க முடியவில்லை. அந்த மனத் தடையிலிருந்தும் பழமைவாதச் சிந்தனையிலிருந்தும் முற்றிலும் விடுபட முடியவில்லை. 1856ல் இயற்றப்பட்ட சட்டம் முழுமையாக நடைமுறைக்கு வருவதற்கு ஒரு நூற்றாண்டுக்கும் மேல் ஆனது என்பதே உண்மை. கைம்பெண் மறுமணம் பற்றிய ஒரு திரைப்படம் 1956ல் வெளியாகி தேசிய விருது பெற நூறாண்டு இடைவெளி தேவையாக இருந்திருக்கிறது என்றால், இந்தப் பிரச்சனையின் தீவிரம், கள நிலவரம் என்ன என்பது பற்றி யோசித்துப் பாருங்கள்.

கைம்பெண் மறுமணம் பற்றி தமிழில் பேசிய குறிப்பிடப்பட வேண்டிய படம் ‘குலதெய்வம்’ இருபதாம் நூற்றாண்டின் ஆரம்ப கால வங்க எழுத்தாளர்களில் ஒருவரான பிரபாவதி தேவி சரஸ்வதி வங்க மொழியில் எழுதிய ‘பிஜிலா’ என்ற நாவலை அடிப்படையாக வைத்து 1954ல் வங்க மொழியில் ‘பங்க கோரா’ என திரைப்படமாக எடுக்கப்பட்டது. இந்தக் கதையின் தாக்கம் அதன் பின் பல மொழிகளிலும் எதிரொலித்தது.

1956ல் எடுக்கப்பட்ட‘குலதெய்வம்’ படத்துக்குத் திரைக்கதை, வசனம் எழுதியவர் முரசொலி மாறன். இப்படம் சிறந்த திரைப்படத்துக்கான தேசிய விருதினையும் பெற்றது. அடுத்த ஆண்டே பால்ராஜ் சஹானி நடிப்பில் இந்தியில் ‘பாபி’ என வெளியானது. 1963ல் கன்னடத்தில் ‘ஜேனு கூடு’ என மறு அவதாரம் எடுத்தது. அனைத்து மொழிகளிலுமே இது பேசப்படும் திரைப்படமாக இருந்தது என்பதும் குறிப்பிடத்தக்கது. மைனாவதியின் திரையுலக வாழ்க்கையில் இப்படம் மிக முக்கியமானது.

மறக்க முடியாத செந்தமிழ்த் தேன்மொழியாள்கவிஞர் கண்ணதாசன் முதன்முதலில் தயாரித்த ‘மாலையிட்ட மங்கை’ திரைப்படத்தில் டி.ஆர்.மகாலிங்கம் குரலில் இடம் பெற்ற, ‘செந்தமிழ்த் தேன்மொழியாள்; நிலாவென சிரிக்கும் மலர்க்கொடியாள்’

பாடலுக்கு மிக அற்புதமாக நடனமாடி இருப்பார் மைனாவதி. செந்தமிழ்த் தேன்மொழியாள் பாடலை இன்றைக்கும் கேட்கும்போது காதுக்கும் மனதுக்கும் அவ்வளவு இனிமையான அனுபவமாக இருக்கிறது. இந்த வேடத்துக்கு முதலில் ஒப்பந்தம் செய்யப்பட்டவர் எம்.என்.ராஜம். ஏதோ ஒரு சில காரணங்களால் அவருக்கு மாற்றாக ஒப்பந்தம் செய்யப்பட்டவர் மைனாவதி. படத்தின் பிரதான பாத்திரங்களான சரசு (பண்டரிபாய்), கமலம் (மைனாவதி) என அக்காள், தங்கை இருவரும் இணைந்தே இப்படத்தில் நடித்தனர். வங்க மொழி எழுத்தாளர் சரத் சந்திரரின் ‘சந்திரநாத்’ நாவலைத் தழுவி எடுக்கப்பட்ட இப்படம் கண்ணதாசனுக்கு நல்ல வருமானத்தைச் சம்பாதித்துக் கொடுத்தது. மூலக்கதையை அப்படியே படமாக்காமல் சில நகாசு வேலைகளைச் செய்து தமிழ்ச்சூழலுக்கு ஏற்றாற்போல் திரைக்கதை, வசனம் எழுதி வெற்றி கண்டார் கவிஞர் கண்ணதாசன். இப்படத்தில் தான் நகைச்சுவை நடிகையாக மனோரமாவும் அறிமுகப்படுத்தப்பட்டார்.

நாயகன் சந்துரு (டி.ஆர்.மகாலிங்கம்) மீது அவனுடைய அத்தை மகளான கமலத்துக்குக் (மைனாவதி) காதல். ஆனால், அவனோ ஒரு சாதாரண வேலைக்காரப் பெண்ணான சரசு (பண்டரிபாய்) மீது காதல் கொண்டு அவளைத் திருமணமும் செய்து வீட்டுக்கு அழைத்து வருகிறான். கமலமும் இதைப் பார்த்து அதிர்ந்து போகிறாள், சரசுவை விஷமென வெறுக்கிறாள். ஆனால், போகப் போக அவளுடைய குணநலன்களால் ஈர்க்கப்பட்டு அவள் மீது அன்பு கொள்கிறாள். பின்னர் அவளுக்கு ஆறுதலாகவும் இறுதி வரை இருக்கிறாள். அக்காள், தங்கை இருவருமே போட்டி போட்டுக்கொண்டு நடித்திருந்தார்கள்.

சமாதிக்குள் புதையுண்ட மீனவக் காதலிசிவாஜி கணேசன் படங்களில் மைனாவதி நடித்திருந்தாலும் அவருக்கு இணையாக நடித்தது ‘குறவஞ்சி’ படத்தில்தான். ஆனால், கதையமைப்பின்படி அவர்களின் காதலுக்குச் சமாதி கட்டப்பட்டு அதில் உயிர்ப் பலியாகும் மீனவப் பெண் பாத்திரம் மைனாவதிக்கு. காதலர்களுக்கு சமாதி கட்டப்படும் இறுதிக் காட்சி அனார்கலி -  சலீம் காதலை நினைவுப்படுத்தியது.

மேகலா பிக்சர்ஸ் தயாரிப்பான இப்படம் சிவாஜி கணேசன், சாவித்திரி இவர்களுடன் அப்போதைய பிரபல நட்சத்திரங்கள் பலரையும் பங்கேற்க வைத்து மிகப் பெரிய அளவில் எடுக்கப்பட்ட படம். தயாரிப்பாளர்களில் ஒருவர் மு.கருணாநிதி. அவரே கதை, திரைக்கதை, வசனம் எழுதி உருவாக்கினார். தயாரிப்பாளர்களில் மற்றொருவரான காசிலிங்கம் இயக்கம். இவ்வளவு சிறப்புகள் இருந்தும் ‘குறவஞ்சி’ படம் எதிர்பார்த்த வெற்றியைப் பெறவில்லை. அரசு, ஆட்சி, அதிகாரம், சூழ்ச்சி என எல்லாம் கலந்து கதை பின்னப்பட்டிருந்தபோதும் படம் படுதோல்வி கண்டது. மைனாவதி, சிவாஜி பாத்திரங்களுக்கிடையேயான காதலும் டூயட் பாடல்களும் டி.ஆர். பாப்பாவின் இசையில் அற்புதத்தை விளைவித்தன. குறிப்பாக, ‘நீ சொல்லாவிடில் யார் சொல்லுவார் நிலவே’ பாடல். மற்றொன்று ‘காதல் கடல் கரையோரமே...’ டி.,எம்.சௌந்தரராஜன் குரல் சிவாஜி கணேசனுக்கு பொருந்திப் போன காலத்தில், மீண்டும் சி.எஸ்.ஜெயராமன் குரல் சிவாஜிக்காக ஒலித்தது.

மாடர்ன் தியேட்டர்ஸின் படங்களில் நாயகியாக....

1957ல் ஆரவல்லி, 1959ல் வண்ணக்கிளி என மாடர்ன் தியேட்டர்ஸின் இரு படங் களில் நடிக்கும் வாய்ப்பு மைனாவதிக்குக் கிடைத்தது. இவையும் வழக்கம் போல் இரண்டாவது நாயகி வேடங்களே. ‘ஆரவல்லி’ படத்தின் பிரதான நாயகி ஆரவல்லியாக நடித்த ஜி.வரலட்சுமி. ஆரவல்லியின் மகள் அலங்கார வல்லியாக நடித்த மைனாவதி இளம் பெண்ணாக இருந்தபோதும் கதையின் போக்கு அவரை இரண்டாவது நாயகியாக நடிக்க வைத்தது. மகாபாரதத்தின் கிளைக் கதையாக, அதிகம் அறியப்படாத கதையாகவே இக்கதை சொல்லப்படுகிறது.

சூழ்ச்சி, சதி போன்றவற்றால் பின்னப்படும் கதைக்களம். ஆரவல்லியாக ஆண்களை வெறுத்து அல்லி ராஜ்யம் நடத்தும் நாயகி ஜி.வரலட்சுமியே படம் முழுதும் ஆக்கிரமித்துக் கொள்பவர். இதற்கிடையில்தான் அலங்கார வல்லியான மைனாவதிக்கு நடிக்கும் வாய்ப்பு. ஆனால். ஒரு விஷயத்தைக் குறிப்பிட்டே ஆக வேண்டும். நாயகன் அல்லிமுத்துவாக நடிக்கும் ஈஸ்வருடன் அவர் இணைந்து பாடும் பாடல்கள். அதில் ஒரு பாடல் என் சிறு வயதிலிருந்தே என்னை ஈர்த்த பாடலும் கூட

‘சின்னப் பெண்ணான போதிலே
அன்னையிடம் நான் ஒரு நாளிலே
எண்ணம் போல் வாழ்வு ஈடேறுமா
அம்மா நீ சொல் என்றேன்’...


ஜிக்கியின் குரலில் ஒலிக்கும் இப்பாடலைக் கேட்டு ரசிப்பதே ஓர் சுகானுபவம்.ஜி.ராமநாதன் இசையில் அமைந்த இப்பாடலின் மூல வடிவம் ஹாலிவுட்டின் ஓர் ஆங்கிலப் பாடல். இசையில் மட்டுமல்லாமல், பாடலின் பொருளிலும் இரு பாடல்களும் ஒரே தரம் என்பது குறிப்பிடத்தக்கது.இந்தப் படத்துக்குப் பின் இரண்டு ஆண்டுகள் இடைவெளியில் ‘வண்ணக்கிளி’ வெளியாகிறது. கதையின் நாயகன் முரட்டுக் குணங்கள் கொண்ட பூச்சி (ஆர்.எஸ்.மனோகர்). அவனால் வலுக்கட்டாயமாக விருப்பமின்றி இரண்டாம் தாரமாக மணந்து கொள்ளப்படும் நாயகியாக பி.எஸ்.சரோஜா. இந்தப் படத்திலும் மைனாவதி இரண்டாம் நிலை நாயகி. அவருக்கு இணை மாட்டுக்காரனாக நடித்த பிரேம் நசீர்.

நசீரின் ஆரம்ப காலம் சில தமிழ்ப்படங்களில் நடிப்பதிலும் கழிந்தது. படிக்காத கிராமத்து இளைஞனுக்கும் படித்த பண்ணையாரின் மகளுக்குமான காதல் என்று ஏற்றத்தாழ்வு மிக்கதான காதல் இவர்களுடையது. இவர்கள் இருவருக்குமான ‘வண்டி உருண்டோட அச்சாணி தேவை’. இப்பாடல் வாழ்க்கையின் தத்துவத்தைச் சொல்வதாக அமைந்த பாடல். மைனாவதி நாயகியாக நடித்த ஒரு படம் என்றால் அது ‘கண் திறந்தது’. மட்டும்தான். நாயகன் ராமநாதன். (இவர் நடிகை மனோரமாவின் முன்னாள் கணவர்). பிழைப்புக்காகப் பட்டணத்துக்கு வரும் நாயகியும், பட்டணத்துவாசியும் அதே நேரம் திருட்டு, கொள்ளை போன்றவற்றில் ஈடுபடும் நாயகனும் சந்தித்துக் காதல் கொள்கிறார்கள்.

பல்வேறு திருப்பங்களுக்குப் பின் அவன் ஒரு ஜமீன் வாரிசு என்ற உண்மை தெரிய வருகிறது. இறுதியில் நாயகனும் நாயகியும் மணம் முடித்து சுபம் கார்டு போட படம் நிறைவு பெறுகிறது.  மைனாவதியின் ஆரம்ப காலத் தமிழ்த் திரைப்படங்களைப் பார்க்கும்போது 70களில் ஜெயசித்ரா நடிக்க வந்த புதிதில், ஆரம்ப கால மைனாவதியின் அதே சாயல் அச்சு அசலாக அப்படியே ஜெயசித்ராவிடம் தென்படுவதைப் பார்க்கலாம். மைனாவதி கதாநாயகியாக நடித்த ’கண் திறந்தது’ படத்தைப் பார்க்கும்போது ஆச்சர்யத்தின் உச்சத்துக்கே போய் விடுவோம். அந்த அளவுக்கு இருவருக்கும் இடையிலான உருவ ஒற்றுமை பொருந்திப் போகும். சினிமாவின் ஆரம்ப காலம் தொட்டே நடிக்க வந்த நடிகைகளின் சாயலில், பிற்காலத்தில் நடிக்க வந்தவர்களில் பலரும் இருந்ததும் மறுக்க முடியாத ஆச்சர்யகரமான உண்மை.

பண்டரிபாய் நீண்ட காலம் தமிழ்த் திரையில் நிலைத்திருந்ததைப் போல் மைனாவதியால் நிலைத்திருக்க முடியவில்லை. அழகு, இளமை, திறமை அனைத்தும் நிறைந்த நடிகையாக இருந்தபோதும் முதன்மைக் கதாநாயகியாகவும் அவரால் அதிகம் ஜொலிக்க முடியவில்லை. பெரும்பான்மையான படங்களில் இரண்டாம் நிலை நாயகியாகவே அவர் தொடர்ந்தார். ஐம்பது படங்களுக்குள்ளாகவே தமிழ்த் திரையுலகிலிருந்து விடை பெற்றுக்கொண்டு, கன்னடப் படங்களில் தொடர்ந்து நடிக்கத் தொடங்கினார்.

 கன்னடத் திரையில் மைனாவதியின் பங்களிப்பு1955 ஆம் ஆண்டில் ‘சாந்த சக்கு’ கன்னடப் படத்தின் மூலம் ஒரு சிறு கதாபாத்திரத்தில் அறிமுகமானார். பின்னர் சிறு சிறு வேடங்களில் தலைகாட்டுவதற்கான வாய்ப்புகளே அவருக்குக் கிடைத்தன. 1959 ஆம் ஆண்டு H.L.N. சின்ஹா இயக்கத்தில் ‘அப்பா ஆ ஹூடுகி’ கன்னடத் திரைப்படத்தில் கதாநாயகியாக நடித்ததன் மூலம் பிரபலமானார். புகழ் பெற்ற ஆங்கில நாடகாசிரியரான ஷேக்ஸ்பியரின் ‘Taming of the Shrew’ என்ற நகைச்சுவை நாடகத்தின் கதையைத் தழுவி எடுக்கப்பட்ட இப்படம் நன்றாகவும் ஓடியது. ஆண்களை வெறுக்கும் அழகுப் பெண்ணாக, சிறப்பாக நடித்ததால் மைனாவதிக்கு இப்படத்தின் மூலம் நல்ல பேரும் புகழும் கிடைத்தது. ‘மங்கைக்கு மாங்கல்யமே பிரதானம்’ என்ற பெயரில் தமிழிலும் மொழி மாற்றம் செய்யப்பட்டு இப்படம் 1960ல் வெளியானது.

 இந்தப் படத்துக்குப் பிறகு அவர் ஏராளமான படங்களில் முன்னணி நாயகரான ராஜ்குமாருடன் இணைந்து நடித்தார். சாண்டல் வுட்டின் பிற முன்னணி நாயகர்களான உதயகுமார், கல்யாண் குமார் என அப்போதைய நாயகர்கள் அனைவருடனும் இணைந்து நடித்தார்.தமிழ், கன்னடம் என இரு மொழிகளிலுமாக 100 படங்களுக்கும் மேல் நடித்தார். 1953ல் தொடங்கிய அவரது திரையுலகப் பயணம் 1970களில் திருமணத்துக்குப் பின் நிறைவு பெற்றது. அதன் பின் பல ஆண்டு கால நீண்ட இடைவெளிக்குப் பிறகு கன்னடத் திரைப்படங்களிலும் தொலைக்காட்சித் தொடர்களிலும் மீண்டும் நடிக்கத் தொடங்கினார். 1980களுக்குப் பின் தன்னுடைய மகன்கள் குருதத், ஷ்யாம் சுந்தர் இருவருடனும் இணைந்து ‘யந்த்ரா மீடியா’ என்ற நிறுவனத்தைத் துவங்கி சொந்தமாகத் தொலைக்காட்சித் தொடர்களையும் நிகழ்ச்சிகளையும் தயாரிக்கத் தொடங்கினார். இவர்கள் தயாரிப்பில் வெளிவந்த இரு தொடர்களில் மைனாவதியே பிரதான பாத்திரமேற்று நடிக்கவும் செய்தார்.  

இரண்டாவது மகன் ஷ்யாம் சுந்தர் சிறு வயது முதலே குழந்தை நட்சத்திரமாகப் பல படங்களில் நடித்தவர். குறிப்பாக, பாலு மகேந்திராவின் ‘அழியாத கோலங்கள்’ திரைப்படத்தில் நடித்த மூன்று சிறுவர்களில் ஷ்யாமும் ஒருவர். பின்னர், ‘யார்?’ திரைப்படத்தில் பேய் பிடித்த, துஷ்ட சக்தி நிறைந்த இளைஞனாகவும் நடித்தார். இந்தப் படத்தின் கதையே கூட அவரைச் சுற்றியே பின்னப்பட்டது. கடந்த 2008 ஆம் ஆண்டு மாரடைப்பின் காரணமாக மிக இளம் வயதிலேயே ஷ்யாம் மரணமடைந்தார்.

மகனின் இந்த எதிர்பாராத மரணமும் இழப்பும் மைனாவதியை கடுமையாகப் பாதித்து அவரைப் புத்திர சோகத்தில் ஆழ்த்தியது. அது முதற் கொண்டே மனமொடிந்து போனவராக உடல் தளர்ந்து காணப்பட்டார். அதனால் விரைவில் உடல் நிலை நலிவுற்றது. 2012 ஆம் ஆண்டு நவம்பர் 10 ஆம் தேதி கடுமையான மாரடைப்பு ஏற்பட்டதால் தன் 78 ஆம் வயதில் காலமானார்.

தொகுப்பு: ஸ்டில்ஸ் ஞானம்

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • bulgaria-24

  பல்கேரியாவில் பயணிகள் பேருந்தில் தீ விபத்து!: 12 குழந்தைகள் உட்பட 45 பேர் தீயில் கருகி உயிரிழப்பு..!!

 • murasoli-23

  ‘கலைஞரின் மனசாட்சி’முரசொலி மாறனின் 18ம் ஆண்டு நினைவு தினம்!: திருவுருவ படத்திற்கு திமுகவினர் மலர்தூவி மரியாதை..!!

 • selem-gas-23

  சேலத்தில் கேஸ் சிலிண்டர் வெடித்து விபத்து: 4 வீடுகள் தரைமட்டம்...இடிபாடுகளில் சிக்கி 5 பேர் உயிரிழப்பு..!!

 • andhra-flood-22

  ஆந்திராவில் கொட்டித்தீர்த்த கனமழை!: வெள்ளக்காடாக காட்சியளிக்கும் குடியிருப்புகள்...இடுப்பளவு தண்ணீரில் அல்லல்படும் மக்கள்..!!

 • tajmahal-love

  தாஜ்மஹால் போன்றே வீடு...வாழும் ஷாஜகானின் காதல் பரிசால் திக்குமுக்காடிப்போன மனைவி..!!

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்