SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

ட்ராஜிக் டூ மேஜிக் நாயகி டாக்டர் மேரி பூனன் லூகோஸ்

2021-10-04@ 17:49:37

நன்றி குங்குமம் தோழி

வெளித்தெரியா வேர்கள்

சுகப் பிரசவத்திற்கு வழியில்லை. இந்தக் குழந்தையும் உங்களுக்கு உயிருடன் கிடைப்பது கடினம் என்று டாக்டர்கள் கைவிரித்தபோது கலங்கிப் போனார் ஏழை சவரிமுத்து. ஏற்கனவே பிறந்த குழந்தைகள் மூன்றும் அடுத்தடுத்து இறந்து போக, இப்போது நான்காவது குழந்தையும் உயிருடன் கிடைக்காது என்றவுடன் கலங்கியவரிடம் ‘‘உங்கள் மனைவியை திருவனந்தபுரம் தைக்காடு அரசு மருத்துவமனைக்குக் கூட்டிச் செல்லுங்கள். அங்கே வெளிநாட்டில் படித்த ஒரு பெண் டாக்டர் இருக்கிறார். அவர் ஏதாவது செய்து காப்பாற்றலாம்!” என்று ஒரு டாக்டர் யோசனை கூற, மனைவியை அழைத்துக் கொண்டு கேரளாவின் குந்தமண்கடவு கிராமத்திலிருந்து நம்பிக்கையுடன் திருவனந்தபுரம் புறப்பட்டார் சவரிமுத்து.

மழை பெய்து கொண்டிருந்த அந்த  இரவு, சவரிமுத்துவின் மனைவி மேரியைப் பரிசோதித்த பெண் மருத்துவரின் பெயர் டாக்டர் மேரி பூனன் லூகோஸ். திருவனந்தபுரம் தைக்காடு அரசு மகளிர் மற்றும் குழந்தைகள் நல மருத்துவமனையின் தலைமை மருத்துவர். “சிசேரியன் செய்தால் குழந்தையை காப்பாற்றலாம். உடனடியாக தயார் செய்யுங்கள்!” என்று பணிக்க, உடனிருந்த மருத்துவர்களே அதிர்ந்து போனார்களாம். அதுவரை சிசேரியன் என்ற வார்த்தையை கேரள மருத்துவர்கள் புத்தகத்தில்தான் படித்துத் தெரிந்திருந்தார்கள். மழை பெய்து மின்சாரம் இல்லாத அந்த வேளையில், டாக்டர் மேரி எதற்கும் அஞ்சாமல் நான்கைந்து ஹரிக்கேன் விளக்குகள் வெளிச்சத்தில், சிசேரியன் அறுவை சிகிச்சையை வெற்றிகரமாக முடித்தார். இப்படியாக 1920ல் பிறந்த மைக்கேல் சவரிமுத்துவே கேரளாவின் முதல் சிசேரியன் குழந்தை.

திருவிதாங்கூர் சமஸ்தானத்தின் முதல் பெண் மருத்துவர், முதல் பெண் பட்டதாரி, சமஸ்தானத்தின் முதல் சட்டமன்ற உறுப்பினர், உலகின் முதல் பெண் சர்ஜன் ஜெனரல், தற்போதைய கேரளாவின் தாய்-சேய் நலத் திட்டங்களின் முன்னோடி எனப் பலவற்றிற்கும் முதலாவதாய் திகழ்ந்தவர் டாக்டர் மேரி பூனன் லூகோஸ். கோட்டயம் அருகிலுள்ள ஐமணம் என்ற ஊரில் வசதியான சிரியன் கிறிஸ்துவக் குடும்பத்தில் 1886ல் பிறந்தவர். தந்தை டி.ஈ.பூனனும் மருத்துவர் என்பதோடு திருவிதாங்கூர் அரசவை மருத்துவரும்.

மருத்துவத் தந்தையுடன் சமஸ்தானத்தில் வளர்ந்த மேரிக்கு, மருத்துவமே பிடித்தமானதாக இருந்தது. மகள் மருத்துவம் பயில்வதில் தந்தைக்கும் விருப்பமே என்றாலும், பெண்களுக்கு கல்லூரிப் படிப்பு முற்றிலும் மறுக்கப்பட்ட காலம் என்பதால், மகள் மேரியை மெட்ராஸ் பல்கலைக்கழகத்தில் பி.ஏ. படிப்பில் சேர்த்தார் தந்தை. பள்ளியில் முதலாவதாய் திகழ்ந்த மேரி, கல்லூரியிலும் முதல் மாணவியாய் பட்டம் பெற்று, கேரளாவின் முதல் பெண் பட்டதாரியானார். அரச குடும்பத்தின் தொடர்பைப் பயன்படுத்தி தந்தை தன் மகளை மருத்துவம் பயில இங்கிலாந்து அனுப்ப, மேரியின் மருத்துவக் கனவு மெய்பட்டது.

‘‘உனக்கு சாதாரணமாகக் கிடைத்த இந்த சலுகைகளும், உதவிகளும் யாருக்கும் அவ்வளவு எளிதில் கிடைக்கக் கூடியதல்ல. எனவே பொறுப்புணர்ந்து, முக்கியமாக படிப்பை முடித்து எளியவர்களுக்கு உதவுவதை மறவாதே..!” என்று கூறி தந்தை வழியனுப்ப, தந்தை அறிவுரைப்படி புதிய மண்ணில் மருத்துவம் கற்றுத்தேர்ந்தார் மேரி பூனன். மருத்துவம் பயில இலத்தீன் மொழியும் தேவை என்பதால், அதையும் கற்றார். துவக்க நாட்களில் அறுவை சிகிச்சையின்போது மேரியின் கைகள் நடுங்குவதைக் கண்ட பேராசிரியர் டாக்டர் ட்வீடி, அருகே நின்று தன்னை அறுவை சிகிச்சைகள் செய்ய வைத்ததையும், பின்னர் நூற்றுக்கணக்கான அறுவை சிகிச்சைகளை தான் எளிதாக மேற்கொண்டதையும் நன்றியுடன் குறிப்பிடுகிறார்.

மருத்துவப் பட்டம் பெற்று ராணுவ மருத்துவமனையில் பணிபுரிந்தார் மேரி, முதல் உலகப்போரில் காயமடைந்தவர்களுக்கான சிகிச்சையில் இரவும், பகலும் செயலாற்றியது தனக்கு மிகப் பெரிய அனுபவம் என்றாலும், அதே உலகப்போர்தான், உடல்நலம் குன்றிய தன் தந்தையைக் காண இந்தியாவிற்கு வரவிடவில்லை என்கிறார். இந்தியா திரும்பும் முன்னே தந்தையின் உயிர் பிரிந்திருக்க, ஆளில்லாதா வீட்டை திருடர்கள் சூறையாடியிருந்தனர்.

‘‘ஒரு இளவரசி போல இங்கிலாந்து சென்ற என்னை, ஒரு அனாதையாய் வரவேற்கிறதே இந்த அன்னை பூமி” என்று கலங்கிய மேரியைத் தேற்றியது திருவிதாங்கூர் சமஸ்தானம்                   .  மேரியை தனது மகளைப்போல் பார்த்த மகாராஜா மூலம் திருநாள், அவரை தைக்காடு மருத்துவமனையின் பொறுப்பு மருத்துவராக நியமித்தபோது, ‘‘எளியவர்களுக்கு உதவுவதை என்றும் மறவாதே” என்ற தந்தையின் வார்த்தைகளை நினைவில் கொண்டார் மேரி.  

தான் பணிபுரிந்த அந்த பெரிய மருத்துவமனையில் நூறு படுக்கை வசதி இருந்த போதிலும், பத்து நோயாளிகள் கூட அதைப் பயன்படுத்தவில்லை என்பதை கவனித்தவர், மக்களிடையே மருத்துவத்தை பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தத் தொடங்கினார். அதேசமயம், அந்த மருத்துவமனையில் பணிபுரிந்த பெல்ஜியம் மற்றும் இத்தாலிய செவிலியர்களைக் கொண்டு,
நூற்றுக்கணக்கான கேரளப் பெண்களை பயிற்றுவித்து, மருத்துவமனை செவிலியர்கள் எண்ணிக்கையையும் அதிகரிக்கச் செய்தார். தினமும் 15 வெளி நோயாளிகள் வந்து சென்ற அம்மருத்துவமனைக்கு 300 பேர் என வருகை அதிகரிக்க, மருத்துவமனைப் பிரசவங்களும் உயர்ந்தது.

இந்நிலையில், திருவிதாங்கூர் அரண்மனையின் ஆஸ்தான மருத்துவர் பொறுப்பையும் ஏற்று அழகாக நடத்தினார் மேரி. அதேசமயம், தன்னைத் திருமணம் செய்துகொள்ள விரும்பிக் காத்திருந்த வழக்கறிஞரான குருவில்லா லூகோஸையும் மணமுடிக்கச் சம்மதித்தார். இந்த தம்பதியருக்கு கிரேசி என்ற பெ ண் குழந்தையும், கேபி லூகோஸ் என்ற ஆண் குழந்தையும் அடுத்தடுத்து பிறந்தன.

அப்போது திருவிதாங்கூர் அரசவையில் சில மாற்றங்கள் நிகழ்ந்தன. வயோதிகத்தால் மகாராஜா மூலம் திருநாள் அவர்கள் உடல்நிலை குன்ற, அவரது வளர்ப்பு மகள்களான சேதுலட்சுமி பாய் மற்றும் சேதுபார்வதி பாய் ஆகிய இருவரில் யார் ஆட்சி செய்வது என்ற குழப்பம் ஆரம்பித்தது. மூத்த ராணி சேதுலட்சுமி பாய் அடுத்தடுத்து நிகழ்ந்த கருச்சிதைவால் உடல் நலிவடைந்து, டாக்டர் மேரி மேற்கொண்ட முறையான சிகிச்சையில் உடல் நலம் பெற்ற பிறகே அவருக்கு பெண் குழந்தை பிறந்தது. குறை மாதத்தில் பிறந்த அக்குழந்தையைக் காப்பாற்றிய டாக்டர் மேரி, சேதுலட்சுமி பாயின் அன்பிற்குப் பாத்திரமானார்.

மகாராஜா மூலம் திருநாள் மரணமடைந்த பின், ராணியாகப் பொறுப்பேற்ற சேதுலட்சுமி பாய் தனது பிரியமான மருத்துவரை சட்டமன்ற உறுப்பினராக்கியதுடன் சர்ஜன் ஜெனரலாகவும் அறிவித்தார். இப்படியாகத்தான் நான் உலகின் முதல் பெண் சர்ஜன் ஜெனரலாய் உருவெடுத்தேன் என்று தனது சுயசரிதையான ட்ரெயில்-ப்ளேஸரில் குறிப்பிடுகிறார் டாக்டர் மேரி.

தொடர்ந்து, மகாராணி உதவியுடன் பெண் கல்வி, மகளிர் மற்றும் குழந்தைகள் நலம், கட்டாயத் தடுப்பூசிகள் மற்றும் பல்வேறு சுகாதாரத் திட்டங்கள் என கேரளத்தை உலகத் தரத்திற்கு உயர்த்தியதில் மேரி லூகோஸின் பங்கும் மிகப் பெரியது. ஆண்கள் ஆதிக்கம் நிறைந்த அந்தக் காலத்தில், அரசவையிலும் எதிர்ப்பாளர்கள் நிறைந்திருக்க, ஒரே பெண் உறுப்பினராய் மேரி அனைவரையும் எதிர் நின்று வெற்றியும் கண்டுள்ளார்.

தொடர்ந்து நாகர்கோவிலில் டிபி சானிடோரியம், திருவனந்தபுரத்தில் கதிரியக்க சிகிச்சைப் பிரிவு, மாநிலமெங்கும் மகப்பேறு மருத்துவமனைகள் ஆகியவற்றை ஏற்படுத்தியதோடு, பள்ளிக் குழந்தைகளிடையே சுகாதார விழிப்புணர்வை தானே முன்னின்று நடத்தினார். ஒய்.டபிள்யூ.சி.ஏ., ஐ.எம்.ஏ. கேரளக் கிளைகள், கேரள மகப்பேறு மருத்துவர்கள் அமைப்பு ஆகியவற்றைத் தொடங்கி, அனைவரையும் அறிவியலால் ஒன்றிணைத்தார். டாக்டர் மேரியின் திட்டங்களால் நவீன மருத்துவ உதவி பெரும்பான்மையினருக்குக் கிடைத்தது என்பதைவிட, கேரள மக்களின் சராசரி வாழ்நாள் கூடியது என்பதுதான் மிகப்பெரிய சாதனை. இந்நிலையில் அவருக்கு ‘வைத்திய சாஸ்திர குசல’ விருதினை திருவிதாங்கூர் மன்னர் வழங்க, ‘பத்ம’ விருதை வழங்கி கவுரவப்படுத்தியது இந்திய அரசு.

ஊருக்காக உழைத்த அதேசமயத்தில் குடும்பத்தையும் சரியான முறையில் நிர்வகித்த மேரி, தனது மகளையும் மருத்துவராக்கி, மகளும் லேடி ஹார்டிங் மருத்துவக் கல்லூரியில் பேராசிரியர் பதவி வகித்தார். மகனை சட்டக் கல்வி பயில வைத்து, டாக்டர் மேரியின் மகன் வெளிநாடுகளுக்கான இந்தியத் தூதராக நியமனம் செய்யப்
பட்டார்.

தனது பணிகளால் முழுத் திருப்தியடைந்த டாக்டர் மேரி லூகோஸ், தனது வாழ்நாளின் மீதியை குடும்பத்துடன் கழிக்க எண்ணி 1942ல் தனது 56ம் வயதில்  பணி ஓய்வு பெற்றபோது, விதி அவரை வேறு விதமாகத் துரத்தியது. அடுத்தடுத்து நிகழ்ந்த அன்புக் கணவரின் மரணம், தனது டாக்டர் மகளின் இளம் வயது மரணம், மகனது மரணம் என நிகழ்வுகள் ஒவ்வொன்றும் மேரியை நிலைகுலையச் செய்திட, ஓய்ந்துபோன டாக்டர் மேரி லூகோஸ் தனிமையில் இருக்க ஒய்.டபிள்யூ.சி.ஏ.வில் தொடர்ந்து மக்கள் சேவையைத் தொடர்ந்தார். மருத்துவப் பணியாற்றியபடியே தனது தொண்ணூறாம் வயதில் 1976 அக்டோபர் 2 காந்தி ஜெயந்தியன்று மரணமடைந்தார் டாக்டர் மேரி.

வாழ்நாள் முழுவதும் தனிமையிலும், மரணத்துடனும் போராடிய அவரை ‘ட்ராஜிக் ஹீரோயின்’ என பலரும் அழைத்தபோதிலும், பொதுவாழ்வில் தனியொரு பெண்ணாக அனைத்தையும் வென்ற உண்மையான ‘மேஜிக் ஹீரோயின்’தான் டாக்டர் மேரி பூனன் லூகோஸ்!

தொகுப்பு : டாக்டர் சசித்ரா தாமோதரன்

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • bulgaria-24

  பல்கேரியாவில் பயணிகள் பேருந்தில் தீ விபத்து!: 12 குழந்தைகள் உட்பட 45 பேர் தீயில் கருகி உயிரிழப்பு..!!

 • murasoli-23

  ‘கலைஞரின் மனசாட்சி’முரசொலி மாறனின் 18ம் ஆண்டு நினைவு தினம்!: திருவுருவ படத்திற்கு திமுகவினர் மலர்தூவி மரியாதை..!!

 • selem-gas-23

  சேலத்தில் கேஸ் சிலிண்டர் வெடித்து விபத்து: 4 வீடுகள் தரைமட்டம்...இடிபாடுகளில் சிக்கி 5 பேர் உயிரிழப்பு..!!

 • andhra-flood-22

  ஆந்திராவில் கொட்டித்தீர்த்த கனமழை!: வெள்ளக்காடாக காட்சியளிக்கும் குடியிருப்புகள்...இடுப்பளவு தண்ணீரில் அல்லல்படும் மக்கள்..!!

 • tajmahal-love

  தாஜ்மஹால் போன்றே வீடு...வாழும் ஷாஜகானின் காதல் பரிசால் திக்குமுக்காடிப்போன மனைவி..!!

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்