SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

ஆளுமைப் பெண்கள்!

2021-09-29@ 17:26:42

நன்றி குங்குமம் தோழி

தொழில்முனைவோர் திவ்யா

கடவுள் அருளால் கிடைத்த இந்த பிறப்பில் யாரும் தன்னிடம் உள்ள குறைகளை பெரும் குற்றமாகக் கருதி மனம் குன்றிடக்கூடாது. குறைகளை திருத்திக் கொண்டு தன்னைத்தானே செப்பனிடப் பழகிக் கொண்டு வெற்றி வாசலை ேநாக்கிப் பயணிக்க வேண்டும். இது தான் திவ்யாவின் தாரக மந்திரம். முப்பது வயதை நெருங்காத இளம் பெண்ணான திவ்யா சுயம்பாக ஒரு தொழிலதிபராக வளர்ந்துள்ளார்.

ஒற்றை ஆளாய் ஆன்லைன் களத்தில் சதிராட்ட சண்டிராணியாக வலம் வரும் திவ்யா மற்றும் அவரது படைப்புகளை ‘திவ்யா ஆர்ட்ஸ் அண்ட் கிராப்ட்ஸ்’ என்ற பெயரில் யுடியூப் சேனல் மூலம் வெளியிட்டு வருகிறார். உலகம் முழுதும் ஏழரை லட்சத்துக்கும் மேலானோர் இவரின் சேனலை பின்பற்றி வருகிறார்கள். அது மட்டுமில்லாமல், 2,000 பேருக்கு தொழில் பழக்கி அவர்களுக்கும் சுயதொழில் மூலம் ஒரு வாய்ப்பினை ஏற்படுத்தி தந்ததன் காரணமாக சுய சக்தி விருதினையும் பெற்றுள்ளார்.

‘ஓடி, ஓடி உழைக்கணும், ஊருக்கெல்லாம் கொடுக்கணும்...’ எனும் திரைப்பட பாடலுக்கு ஏற்ப நூறு சதவீதம் தன் உழைப்பு மூலமாக ஆளுமை பெண்ணாக உருவான விதம் குறித்து நம்மிடம் பகிர்ந்து கொண்டார் திவ்யா.‘‘அப்பா, அம்மா, அண்ணன், அக்கா எனும் நிறைவான குடும்பத்தில் நான் கடைக்குட்டிச் செல்லம். அதற்காக விசேஷ சலுகையுடன் வளர்ந்திருப்பேன் என நினைத்தால் அது தவறு.

இந்த வயதில் இந்தளவுக்கு வளர்ந்திருக்கிறேன் என்றால் அதற்கு காரணம் பெற்றோரும், உடன்பிறப்புகளின் ஊக்கமும் மட்டுமன்றி, உறுதுணையாக விளங்கும் எனது கணவர் விஜய்யும்தான். திருமணமான 5 ஆண்டுகளில், முதல் பெண் பிறந்த போது எனக்கு தொழிலில் முதல் விருது கிடைத்தது. அதுபோல, 2வது பெண் இந்தாண்டு பிறந்துள்ள வேளையில், சாதனை அவார்டு கிடைத்திருப்பதை அரிய தருணமாக கருதுகிறேன்.

ஒவ்வொரு விருதையும் பெறும் போது, ‘‘இன்னும் ஆட்டம் முடியல... ஓடு... ஓடிக்கிட்டே இரு... அப்போ தான் சாதனை சிகரம் தொட முடியும்’’ என உள் மூச்சு இரைச்சலிடும். அது தான் என்னை ஓயாமல் உழைக்க வைக்கிறது. விருது அல்லது பட்டம் எனும் அங்கீகாரங்கள் என்னைத் தேடி வர வேண்டும் என்று நான் ஒரு போதும் நினைச்சதில்லை. மாறாக தொழில்முனைவோராக எனக்கான அங்கீகாரம் பெற்றே தீர வேண்டும் எனும் குறிக்கோளுடன் கடுமையாக பாடுபடுகிறேன்.

அதற்கு கிடைக்கும் பரிசுகள் தான் இந்த விருதுகள். சுய சக்தி விருதுக்காக 5,000க்கும் அதிகமான பேர் போட்டியில் கலந்து கொண்டனர். அதிலிருந்து 250 பேரை தேர்வு செய்து தனிப்பட்ட முறையில் நேர்காணல் நடத்தி அதிலிருந்து 16 பேரை தேர்வு செய்தாங்க. அதில் நானும் ஒருவர் என்று நினைக்கும் போது ரொம்பவே பெருமையா இருக்கு. இந்த விருது என்னை மேலும் உற்சாகப்படுத்தியுள்ளது. இன்னும் ஓட வேண்டும் என்ற உந்துதல் கொடுத்துள்ளது. என்னுடைய உழைப்பில் என் மகள்கள் மட்டுமல்லாமல் என் குடும்பத்தினர் அனைவரும் ஒத்துழைப்பாக இருப்பது ரொம்பவே மன நிறைவாக உள்ளது’’ என்று கூறும் திவ்யா பள்ளி பருவத்தில் இருந்தே கலைப் பொருட்களை வடிவமைக்க ஆரம்பித்துள்ளார்.

‘‘அம்மா ரெடிமேட் துணிக்கடை ஒன்றை பரமக்குடியில் நடத்தி வந்தாங்க. அம்மா கடையில் பிசியா இருப்பாங்க. எனக்கு பொழுது போகாது. அந்த நேரத்தில் அங்க இருக்கும் துணி மற்றும் பொருட்களைக் கொண்டு நானா ஏதாவது ஒரு புதிய பொருளை உருவாக்குவேன். அதைப் பார்த்த அம்மாவும் வித்தியாசமா இருக்கேன்னு கடை மற்றும் வீட்டை அலங்கரிக்க சொல்வாங்க. பொழுதுபோக்கிற்காக ஆரம்பித்தேன், அதன் பிறகு எனக்கு அதன் மேல் ஈடுபாடு ஏற்பட ஆரம்பிச்சது. இதற்கிடையில் நாங்க மதுரைக்கு வந்து செட்டிலாயிட்டோம். அங்க தான் நான் கல்லூரி படிப்பு முடிச்சேன். கல்லூரியில் படிக்கும் போது, கைவினைப் பொருட்கள் குறித்த பயிற்சி, மியூரல் வேலைப்பாடு, பேப்ரிக் பெயின்டிங், ஃபேஷன் டிசைனிங், ஆரி ஒர்க், ஹேண்ட் எம்பிராய்டரி, இன்டீரியர் டெகரேஷன், குழந்தைகளுக்கான கைவினைப் பொருட்கள் செய்வது குறித்து பயிற்சி எடுத்தேன். ஒரு பக்கம் கல்லூரி பயிற்சி என்றில்லாமல், நான் கற்றுக் கொண்டதை மற்றவர்களுக்கும் சொல்லிக் கொடுக்க ஆரம்பிச்சேன்.

இதன் மூலம் எனக்கு ஒரு வருமானம் கிடைத்தது. பள்ளிப்படிப்பை முடித்த பிறகு வேலைக்குதான் போக வேண்டும் என்றில்லை. இது போன்ற தனித்திறமை இருந்தால் அதன் மூலமும் சம்பாதிக்க முடியும் என்ற எண்ணம் என் மனதில் ஆழமாக பதிந்துவிட்டது. இதை மேலும் எவ்வாறு மேம்படுத்தலாம் என்று திட்டத்தில் இருந்த போது, எனக்கு வீட்டில் திருமணம் பேசி முடித்தார்கள். கணவர் வீடு சென்னை. சென்னை எனக்கு புதுசு. இந்த ஊர் பழக சில காலம் எடுத்தாலும், வீட்டில் சும்மா இருக்க பிடிக்கவில்லை. என் கணவரிடம் கூறிய போது, அவரும் சம்மதிக்க ஜுவல்லரி மேக்கிங், சில்க்திரட் ஜுவல்லரி, டெரகோட்டோ ஜுவல்லரி என புதிய பரிணாமத்தில் இறங்கினேன்.

நான் செய்வதை பார்த்த என் கணவர்... வீட்டிற்குள் நீ செய்வது வெளியுலகத்திற்கும் தெரிய வேண்டும். அதற்கு சமூக வலைத்தளம் தான் சிறந்த தளம்ன்னு எனக்கு ஆலோசனை கொடுத்தார். அதன் படி என்னுடைய படைப்புகளை முகநூலில் பதிவேற்றினேன். பலர் பாராட்டியது மட்டுமில்லாமல், ஆர்டர்களும் செய்ய ஆரம்பித்தனர். முகநூலைத் தொடர்ந்து இன்ஸ்டாகிராம், டிவிட்டர், வாட்ஸ்அப் என அனைத்து சமூக வலைத்தளங்களிலும் எனது படைப்புகள் விரியத் தொடங்கியது. இதன் அடுத்த முயற்சியாக தான் யு-டியூபில் எனது வீடியோக்களை பதிவேற்றினேன்’’ என்றவருக்கு அந்த தளம்தான் அவரை ஒரு தொழிலதிபராக அடையாளம் காட்டியுள்ளது.

‘‘என்னுடைய படைப்புகள் எல்லாருக்கும் சென்றடைய வேண்டும் என்ற எண்ணத்தில்தான் நான் யுடியூப் சேனலை ஆரம்பித்தேன். ஆனால், அதுவே எனக்கான வருமான தளமாக மாறும் என்று நான் நினைக்கவில்லை. ஒரு நாள் என்னுடைய செல்போனில் குறுஞ்செய்தி வந்தது. அதில் என்னுடைய வங்கிக் கணக்கில் ரூ.7000 கிரெடிட் ஆகி இருப்பதாக இருந்தது. எனக்கு முதலில் ஒன்றுமே புரியல. ஏதாவது மோசடியாக இருக்குமான்னு நினைச்சேன்.

அதன் பிறகு தான் என்னுடைய வீடியோவை பார்ப்பவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரிப்பதாகவும், வீடியோக்கள் இடையே விளம்பரங்கள் வருவதால், அதில் கிடைக்கும் லாபத்தில் எனக்கு கணிசமாக ஒரு தொகை வழங்கி இருப்பதாக குறிப்பிட்டு இருந்தனர். அதன் பிறகு தான் ஆன்லைன் வியாபாரத்தின் அருமை புரிந்தது. அந்த விடியோக்களைப் பார்த்து எனக்கு உலகம் முழுதும் 2000த்துக்கும் மேற்பட்ட வாடிக்கையாளர்கள் என்னிடம் பொருட்களை ஆர்டர் செய்கிறார்கள்.

இன்றைய காலக்கட்டத்தில் பெண்கள் வீட்டில் இருந்தாலும் அவர்கள் பணத்துக்காக ஒருவரை சார்ந்திருக்க வேண்டும் என்ற நிலைப்பாட்டில் இருந்து வெளியில் வர வேண்டும். மேலும் இன்று இருக்கும் அவசர யுகத்தில் வேலைக்கு தான் சென்று சம்பாதிக்க வேண்டும் என்ற அவசியம் இல்லை. இருக்கும் இடத்தில் இருந்தே வருமானம் ஈட்ட முடியும். அதற்கான தொழில்நுட்பம் பல உள்ளன’’ என்ற திவ்யா ஒவ்வொரு பெண்ணும் தன்னுடைய தனிப்பட்ட திறமை மேல் நம்பிக்கை ைவப்பது அவசியம் என்று தன்னிடம் பயிற்சிக்கு வரும் பெண்களுக்கு அறிவுரை கூறுகிறார்.  ‘‘என்னிடம் பயிற்சிக்கு வரும் எல்லாரிடமும் நான் சொல்வது ஒன்று மட்டும் தான்.

உன் திறமை மேல் நம்பிக்கை வை என்பதுதான். அதுவே அவர்களை அடுத்த கட்டத்திற்கு எடுத்து செல்லும். சில பெண்கள், ‘உங்களுக்கு என்ன மேடம், கணவர், கூடப் பிறந்தவங்க எல்லாரும் சப்போர்ட் செய்றாங்க’ன்னு புலம்புவார்கள். அவர்களிடம் என் குடும்பத்தினர் ஊக்கமளித்தாலும்... என்னுடைய வேலையை நான் தான் செய்ய வேண்டும். அவர்கள் செய்யமாட்டார்கள்.

எந்த வேலையாக இருந்தாலும் அதில் ஈடுபாட்டோடு செய்தால், கண்டிப்பாக வாழ்க்கையில் ஜெயிக்க முடியும் என்று அறிவுரை வழங்குவேன்’’ என்றவர் சோஷியல் மீடியாவில் வலம் வந்துகொண்டு இருந்தாலும், சென்னை மட்டுமின்றி ஐதராபாத், ஒடிசா, கர்நாடகா, கேரளா என பிற மாநிலங்கள் மற்றும் கனடா, பிரான்ஸ், ஜெர்மனி, சுவிட்சர்லாந்து, அமெரிக்கா, ரஷ்யா, மலேசியா, சிங்கப்பூர், இலங்கை என பல வெளிநாட்டில் இருந்து பெண்கள் இவரிடம் பயிற்சி பெற்று வருகிறார்கள்.

‘‘என்னைப் பொறுத்தவரை வீட்டிலிருக்கும் எல்லா பெண்களும் வீட்டு வேலை முடித்த பின்னர், மீதமிருக்கும் நேரத்தில் ஏதாவது ஒரு கலையை கற்றுக்கொண்டு, அவர்களுக்கான ஒரு வருமானத்தை பார்க்க வேண்டும் என்பதுதான் எனது குறிக்கோள். வெளியே சென்று பயிற்சி எடுக்க முடியாத பெண்களுக்காகவே ஆன்லைன் பயிற்சியினை பிரத்யேகமாக நடத்துகிறேன். அது மட்டுமன்றி பேப்ரிக் பெயின்டிங், ஃபேஷன் டிசைனிங் வகுப்புகளும் ஆன்லைனிலேயே சொல்லித் தருகிறேன். 2018ம் ஆண்டு தொடங்கி ஒவ்வொரு ஆண்டும் ஒரு சாதனை விருது மற்றும் கின்னஸ் விருது பெற்றிருந்தும், சுய சக்தி ஹோம்புருனர் விருது இந்தாண்டு கிடைத்திருப்பது, இதைக் காட்டிலும் சிறந்த விருதினை அடுத்த ஆண்டு பெற வேண்டும் எனும் ஆர்வத்தை என்னுள் தூண்டியுள்ளது’’ என்றார் திவ்யா.

தொகுப்பு: தி.ஜெனிஃபா

படங்கள்: ஜி.சிவக்குமார்

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • bulgaria-24

  பல்கேரியாவில் பயணிகள் பேருந்தில் தீ விபத்து!: 12 குழந்தைகள் உட்பட 45 பேர் தீயில் கருகி உயிரிழப்பு..!!

 • murasoli-23

  ‘கலைஞரின் மனசாட்சி’முரசொலி மாறனின் 18ம் ஆண்டு நினைவு தினம்!: திருவுருவ படத்திற்கு திமுகவினர் மலர்தூவி மரியாதை..!!

 • selem-gas-23

  சேலத்தில் கேஸ் சிலிண்டர் வெடித்து விபத்து: 4 வீடுகள் தரைமட்டம்...இடிபாடுகளில் சிக்கி 5 பேர் உயிரிழப்பு..!!

 • andhra-flood-22

  ஆந்திராவில் கொட்டித்தீர்த்த கனமழை!: வெள்ளக்காடாக காட்சியளிக்கும் குடியிருப்புகள்...இடுப்பளவு தண்ணீரில் அல்லல்படும் மக்கள்..!!

 • tajmahal-love

  தாஜ்மஹால் போன்றே வீடு...வாழும் ஷாஜகானின் காதல் பரிசால் திக்குமுக்காடிப்போன மனைவி..!!

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்