SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

வம்சமா பாசமா?

2021-09-21@ 16:36:57

நன்றி குங்குமம் தோழி

பொதுவாகவே இந்தியக் குடும்பங்களில் ஆண் குழந்தைகளுக்கான மோகம் அதிகமாகவே இருக்கும். இப்போது மக்களின் மனது கொஞ்சம் கொஞ்சமாக மாறி வந்தாலும், முழுமையான மாற்றத்திற்கு இன்னும் பல வருடங்கள் ஆகும் என்பதே நிதர்சனம். அப்படியே பெண் குழந்தைகளை ஏற்றுக்கொண்ட குடும்பங்கள் கூட குழந்தையின்மை அல்லது குழந்தை வேண்டாம் எனக் கூறும் பெற்றோர்களை நிச்சயம் ஏற்றுக்கொள்வதில்லை. குடும்பம் என்றாலே அதில் தாத்தா - பாட்டி, அம்மா - அப்பா குழந்தைகள் என்ற பிம்பம்தான் சமூகத்தில் எழுகிறது. ஆனால் அப்பா - குழந்தை, அம்மா - குழந்தை, தாத்தா, பாட்டி - குழந்தை என இருந்தால் அது முழுமையான குடும்பமாகாதா? அதை ஏன் இந்த சமூகம் ஒரு முழுமையான குடும்பமாய் ஏற்பதில்லை எனும் கேள்வியை ஒட்டிய கதையில் 22 நிமிடக் குறும்படத்தை தயாரித்துள்ளனர் சுஜாதாவும் அவரது குழுவினரும்.

தமிழகத்தை பூர்வீகமாக கொண்டு பெங்களூரில் வசித்து வரும் சுஜாதா பாலகிருஷ்ணன், பள்ளி ஆசிரியர், உளவியல் ஆலோசகர், நாடக பயிற்சியாளர், நடிகர் எனப் பன்முக திறமைகள் கொண்ட பல்துறை நிபுணர். தனியார் பள்ளிகளில் முப்பது ஆண்டுகளுக்கும் மேலாக வரலாறு ஆசிரியராகவும், ஆலோசகராகவும் பணியாற்றிய பின், சிறுவயதிலிருந்தே தனக்குள் ஒளிந்துகொண்டிருந்த நடிப்பின் மீதான ஆசையை நிறைவேற்ற வேண்டும் என ஐம்பது வயதில் துணிந்தார்.

ஐம்பது வயதில் நாடகத்தில் நடிக்க வேண்டும்  என்று சுஜாதா முடிவெடுத்த போது அதற்கான வாய்ப்புகள் மிகவும் குறைவாக இருந்ததாகக் கூறுகிறார், “நான் நாடகங்களில் நடிக்கத் தொடங்கிய ஆரம்ப காலத்தில் வாய்ப்புகளே கிடைக்காது. அனைத்து நாடகத்திலும் முப்பது வயதிற்கு குறைந்த நடிகர்களையே தேர்வு செய்தனர். வயதானவர்களின் கதையைச் சொல்லவோ கேட்கவோ இங்கு யாருமே இருக்கவில்லை. குறிப்பிட்ட சிலருக்கே வாய்ப்புகள் தொடர்ந்து கிடைத்து வந்தன. ஆனால் நம் நாட்டில் நாடகங்கள் தோன்றிய காரணமே குரலற்றவர்களின் குரல்களை ஒலிக்கத்தான்” எனக் கூறும் சுஜாதா, தன் சொந்த நாடகக் குழுவை உருவாக்கினார்.

சமூகத்தில் நிலவி வரும் ஏற்றத்தாழ்வுகளுக்கு எதிரான கூரிய ஆயுதமாக நாடகங்கள் இருப்பதை உணர்ந்த சுஜாதா, 2015ல் Theatre for Change என்ற நாடகக் குழுவை உருவாக்கி, அந்தக் குழுவில் வயது, பாலினம், கல்வி, சமூகம், உடல் இயலாமை என எந்த வேறுபாடும் இல்லாமல் அனைத்து தரப்பினரின் குரலையும் பதிவு செய்து வருகிறார். அதில் முதல் முறையாக ‘உடான்’ என்கிற நாடகத்தை நடத்தினார். இந்த நாடகத்தின் முக்கிய கதாபாத்திரத்தில், ஆட்டிசம் பாதித்த குழந்தையை நடிக்க வைத்து, மாற்றுத்திறனாளிகளைச் சுற்றியிருந்த தடைகளை தியேட்டர் ஃபார் சேஞ்ச் குழுவினர் உடைத்துள்ளனர். வயதால் வாய்ப்பு மறுக்கப்பட்டவர்களுக்கு வாய்ப்பளிக்கும் விதமாக, பல கதைகளை உருவாக்கியும் இந்த நாடகக் குழுவினர் இயங்கி வருகின்றனர்.

சுஜாதாவின் வாழ்க்கையை மாதிரியாகக் கொண்டு உருவாக்கப்பட்ட இக்குறும் படத்திற்கு ‘வம்சமா பாசமா’ என பெயரிட்டுள்ளார். இக்கதையை எழுதி அதற்கான திரைக்கதையையும் சுஜாதா உருவாக்கியுள்ளார். மேலும் படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்திலும் நடிக்கிறார். நடிகையும் இயக்குனருமான லஷ்மி சுனில் இக்குறும் படத்தை இயக்கியுள்ளார். லஷ்மி கேரளாவில் திருவனந்தபுரத்தில் பிறந்து வளர்ந்தவர். பொறியியல் படித்து மார்கெட்டிங் துறையில் வேலை செய்து வந்தாலும் நடிப்பின் மீது கொண்ட ஆர்வத்தால் திருமணத்திற்குப் பின், முழு நேர நாடக நடிப்பிலும் குறும்பட இயக்கத்திலும் ஈடுபட்டுள்ளார். இதுவரை 55 நாடகங்களிலும் 6 குறும்படங்களிலும் நடித்துள்ளார். இவர் முதல் முறையாக இயக்கி நடித்த ‘மாம்’ (MOM) எனும் குறும்படம் பல ஓடிடி தளங்களில் வெற்றிகரமாக வெளியாகியுள்ளது.

வம்சமா பாசமா குறும்படத்தைப் பற்றி லஷ்மி கூறும் போது, “ஒரு சாதாரண நடுத்தர குடும்பத்தைப் பற்றிய இக்கதையில் பார்வையாளர்கள் நிச்சயம் தங்களையோ அல்லது தங்கள் குடும்பத்து பெண்களையோ சுலபமாக கதாபாத்திரங்களில் பொருத்தி பார்க்க முடியும். இப்படத்தில் இரண்டு பெண்கள் முக்கிய கதாபாத்திரங்களில் தோன்றுகிறார்கள். சமுதாயம் - கணவனின் விதிமுறைகளுக்கு கட்டுப்பட்டு வாழும் தாய். தனது விதிமுறைகளுக்கும் விருப்பத்திற்கும் ஏற்ப வாழும் மகள். இரு தலைமுறைக்கும் வேறுபாடுகள் இருந்தாலும், எப்படி பெண்கள் மீதான சமூகத்தின் பார்வை மட்டும் எத்தனை தலைமுறைகளானாலும் மாறாமல் இருக்கிறது என்பதை இந்த படம் கூறுகிறது.  

இன்று சினிமாக்களிலும் நிஜ வாழ்க்கையிலும் ஒரு பெண்ணின் குறிப்பாக தாயின் தியாகங்கள் மகிமைப்படுத்தப்பட்டு புனிதப்படுத்தப்பட்டு அவளுக்கான அடிப்படை உரிமை களையும், ஓய்வையும் கூட குடும்பத்தினர் வழங்குவதில்லை. ஒரு பெண்ணின் மகிழ்ச்சியும் பாதுகாப்பும் எப்போதும் ஒரு ஆணை சார்ந்தே இருக்கிறது. ஏன் நாம் ரத்த சொந்தங்களை தாண்டி மற்ற மனிதர்கள் மீது அதே அன்பை வைக்க முடியாது, தொப்புள் கொடி உறவை விட, அன்பால் இணைந்த உறவு உண்மையில்லையா போன்ற சில  ஆராயப்படாத  கதைக்களங்களை
இக்குறும்படம் கொண்டுள்ளது.

சுஜாதா மேடம் இந்தக் கதையை என்னிடம் சொன்ன போது, இது நிச்சயம் மக்களுக்குப் பிடிக்கும் என்றும் அவர்களை சிந்திக்கத் தூண்டும் என்பதும் புரிந்தது. இது போல பல சமூகம் சார்ந்த கதைகளை தியேட்டர் ஃபார் சேஞ்ச் குழுவினர் உருவாக்கி மக்கள் மனதிலும், நாடக கலைஞர்களின் மத்தியிலும் ஒரு உயரிய இடத்தை பிடித்துள்ளனர். அவர்களுடனான இந்தப் பயணம் மறக்க முடியாதது. என்னைப் பொறுத்தவரை இந்த படம் ஒரு சிறுமி எப்படி சமுதாய கட்டமைப்புகளை உடைத்தெறிந்து தனக்கான பாதையை தானே உருவாக்கி ஒரு பெண்ணாக வளர்கிறாள் என்பதைக் கூறுவதாகவே இருக்கிறது” என்கிறார் லஷ்மி.

இப்படத்திற்கான ஒளிப்பதிவை வசுதா பிரஹலாத் செய்துள்ளார். இப்படி வலுவான பெண்கள் இந்த குறும்படத்தை தயாரித்துள்ளனர். இவர்களுடன் நாடக கலைஞர் சந்த் பெலானி முக்கிய கதாபாத்திரத்தில் தோன்றி நடித்து, படத்தை தயாரித்தும் உள்ளார். அவருடன் தியேட்டர் ஃபார் சேஞ்ச் குழுவினரும் இணைந்து தயாரித்துள்ளனர். இவர்களைத் தவிர காகம் ஒன்றும் இப்படத்தில் ஒரு முக்கிய பாத்திரத்தில் தோன்றி, ஒரு அழகிய கதையை பார்வையாளர்களுக்கு சொல்ல இருக்கிறது. நவம்பர் மாதம் வெளியாகவிருக்கும் இக்குறும்படம், நேரடியாகப் பல திரைப்பட விழாக்களுக்கு பரிந்துரைக்கப்படவுள்ளது.

தொகுப்பு: ஸ்வேதா கண்ணன்  

படங்கள்: ஜி.சிவக்குமார்

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • la-palma-29

  ஆறாக ஓடும் தீக்குழம்பு...நகரையே சிவப்பு நிற போர்வை போர்த்தியது போல் காட்சியளிக்கும் லா பால்மா...!!

 • bulgaria-24

  பல்கேரியாவில் பயணிகள் பேருந்தில் தீ விபத்து!: 12 குழந்தைகள் உட்பட 45 பேர் தீயில் கருகி உயிரிழப்பு..!!

 • murasoli-23

  ‘கலைஞரின் மனசாட்சி’முரசொலி மாறனின் 18ம் ஆண்டு நினைவு தினம்!: திருவுருவ படத்திற்கு திமுகவினர் மலர்தூவி மரியாதை..!!

 • selem-gas-23

  சேலத்தில் கேஸ் சிலிண்டர் வெடித்து விபத்து: 4 வீடுகள் தரைமட்டம்...இடிபாடுகளில் சிக்கி 5 பேர் உயிரிழப்பு..!!

 • andhra-flood-22

  ஆந்திராவில் கொட்டித்தீர்த்த கனமழை!: வெள்ளக்காடாக காட்சியளிக்கும் குடியிருப்புகள்...இடுப்பளவு தண்ணீரில் அல்லல்படும் மக்கள்..!!

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்