SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

கிச்சன் டிப்ஸ்

2021-09-16@ 17:25:40

நன்றி குங்குமம் தோழி

* கோதுமை மாவு அரைக்கும்போது ஒரு கைப்பிடி கொண்டைக்கடலையும் சேர்த்து அரைத்தால் சப்பாத்தி, பூரி எது செய்தாலும் சுவை, மணம், சத்து மூன்றும் மும்மடங்கு கூடுதலாக கிடைக்கும்.

* கோதுமை மாவு அரைக்கும்போது ஒரு கட்டு அப்பளத்தை நொறுக்கிப் போட்டால் சப்பாத்தி, பூரி மென்மையாகவும் உப்பலாகவும் வரும்.
- ச.லெட்சுமி, தென்காசி.

* வடைக்கு கிரைண்டரில் உளுந்து மாவு அரைத்தால் வழவழப்பாக இருக்கும். அரைத்து எடுத்தபின் சிறிது அரிசி நொய் போட்டு ஒரு தடவை ஆட்டிவிட்டு கழுவினால்  வழவழப்பு போகும்.

* பூரி செய்ய மாவைப் பிசைந்து 15 நிமிடங்கள் கழித்து, பிறகு பொரித்தால் எண்ணெய் செலவு குறையும்.

* பருப்பு வேகும்போது சிறிதளவு நல்லெண்ணெய், மஞ்சள் பொடி சேர்த்தால் சுவை கூடும். சீக்கிரம் வெந்துவிடும். அதிலுள்ள புரதமும் வீணாகாது.
- ஆர்.பிரசன்னா, திருச்சி.

* துவையல் அரைக்கும்போது வழக்கமாக வைத்து அரைக்கும் பொருட்களுடன் வறுத்த பயறு வகைகள் சேர்த்து அரைத்தால் சுவையும் கூடும். சத்தும் கிடைக்கும்.

* எந்த வகை கிழங்கையும் வேகவைப்பதற்கு முன் நன்கு கழுவிவிட்டு உப்புப் போட்ட தண்ணீரில் கிழங்கை போட்டு பத்து நிமிடம் போட்டு பின் வேகவைத்தால் சீக்கிரமாக வெந்துவிடும்.
- மாலா பழனிராஜ்,  சென்னை.

* எல்லாவிதமான சிப்ஸ் செய்யும் போதும் நெய்யில் சிறிது உப்பு, காரம் பிசறி சிப்ஸில் கலக்கினால் சிப்ஸ் மணமாகவும், ருசியாகவும் இருக்கும்.

* பிரஷர் குக்கரில் கேக் செய்ய குக்கரில் தண்ணீர் வேண்டாம். குக்கரில் கியாஸ்கட் போட வேண்டாம். கேக் கலவை வைப்பதற்கு முன் குக்கரை நன்றாகச் சூடாக்க வேண்டும். தேவைப்பட்டால் குக்கருக்குள் உப்பைக் கொட்டி அதன் மேல் கேக் பாத்திரத்தை வைக்கலாம். கேக் சுலபமாக இளகிவர
பாத்திரத்தில் நெய் தடவினால் போதும்.
- கே.பிரபாவதி, கன்னியாகுமரி.

* தேங்காய் பர்ஃபி செய்யும் போது பழுத்த மாம்பழம் ஒன்றை தோல் சீவி கலந்து விட்டால் கலர் ஃபுல் பர்ஃபியாகவும், சுவையாகவும் இருக்கும்.

* தோசை மாவில் தேங்காய்ப் பாலை சேர்த்து தோசை செய்தால் மணமாகவும், சுவையாகவும் இருக்கும்.

* சீஸ், பன்னீர் போன்றவை துருவலில் துருவும்போது அதில் பாதி துகள்கள் ஒட்டிக் கொண்டு வீணாகிவிடும். இதைத் தவிர்க்க துருவுவதற்கு முன் துருவலின் உட்புறமும், மேற்புறமும் சிறிதளவு எண்ணெயைத் தடவி விட்டு துருவினால் ஒட்டிக் கொள்ளாமல் சுத்தமாக துருவ வரும்.
- எஸ்.ஆஷாதேவி, சென்னை.

* அவரைக்காய். கொத்தவரங்காய், கத்தரிக்காய் வற்றல்களைக் குழம்பில் போடுவதற்கு முன்பு பத்து நிமிடம் வெந்நீரில் ஊறவைத்துப் போட்டால் சுலபமாக வெந்து விடும்.

* தயிருக்கு உறை ஊற்றும் போதே கொஞ்சம் கறிவேப்பிலைகளைப் போட்டு விட்டால் மறுநாள் மோராகக் கடையும் போது மணமாக இருக்கும்.
* வறுவல், கூட்டு ஆகியவற்றில் உப்பு, காரம் அதிகமாகி விட்டால் உலர்ந்த பிரெட் அல்லது ரஸ்க்கை மிக்சியில் அரைத்து தூவி விட்டால் காரமோ, உப்போ சமப்பட்டு விடும்.
- ஆர்.பூஜா, சென்னை.

* பாதுஷா கம்பி பாகு பதம் வரும் வரை காய்ச்சியதும் அரை மூடி எலுமிச்சம் பழச்சாற்றைப் பிழிந்தால் பாகு திரவ வடிவிலேயே இருக்கும். பொரித்த எல்லா பாதுஷாக்களையும் சுலபமாக பாகில் போடலாம்.

* மிக்சர் செய்யும்போது கடைசியில் கறிவேப்பிலை பொரிக்கும்போது நாலு பூண்டு பல்லையும் நசுக்கிப்போட்டு பொரித்து சேர்த்தால் மணம் கூடும். உடலுக்கும் நல்லது.

* எந்த வகையான பர்ஃபி செய்தாலும் அதில் நூறு கிராம் இனிப்பு சேர்க்காத கோவாவை சேர்த்துச் செய்தால் பர்ஃபி வித்தியாசமான சுவையுடன் இருக்கும்
- ஆர்.ஜெயலெட்சுமி, திருநெல்வேலி.

* ரவா தோசை செய்யும்போது இரண்டு டீஸ்பூன் கடலைமாவு சேர்த்து செய்தால் தோசை நன்கு சிவந்து மொறுமொறுவென இருக்கும்.

* சுண்டலை தாளிதம் செய்து இறக்கிய பின் இரண்டு  டீஸ்பூன் அவலை வறுத்து, பொடித்து தூவினால் சுண்டல் சூப்பராக இருக்கும்.
- எஸ்.சடையப்பன், திண்டுக்கல்.

* ஃபில்டர் காபி போடுபவராக இருந்தால் காபி பொடியைப் போட்டு அதன்மேல் ஒரு சிட்டிகை சுக்குப்பொடி போட்டு, அதன் பிறகு வெந்நீர் ஊற்றி டிகாக்‌ஷன் இறக்கி காபி கலந்து அருந்திப் பாருங்கள். சுவையும், மணமும்  A1 ஆக இருக்கும்.

* முள்ளங்கி கீரையைத் தூக்கிப் போடாமல் பொடியாக நறுக்கி, பாசிப்பருப்பு, வெங்காயம்,  தேங்காய் சேர்த்து கூட்டு, பொரியல் செய்து சாப்பிடலாம். ருசியாக இருக்கும். உடம்புக்கும் நல்லது.
- கே.நாகலட்சுமி, சென்னை.

* மோர்க்குழம்பிற்கு அரைக்கும் கலவையில் ஒரு டீஸ்பூன் ஓமம் சேர்த்தால் சுவையும், மணமும் தூக்கலாய் இருக்கும்.

* பிளாஸ்கில் சூடான பொருட்களை வைக்கும்போது, கொள்ளளவில் 1/2 இன்ச் குறைவாக ஊற்றினால் ரப்பர் வாசனை வராது.

* உளுந்து வடை மாவு நீர்த்துவிட்டால் ஒரு கைப்பிடி ரவை அல்லது ஓட்ஸ் சேர்த்து வடை தட்டினால் வடை சுவையாகவும், மொறுமொறுப்பாகவும் இருக்கும்.
- எஸ்.மீனாட்சி, வேலூர்.

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • tngovt05

  சென்னை துறைமுகம் சட்டமன்ற தொகுதியில் வசிக்கும் 250 வசிக்கும் குடும்பங்களுக்கு இலவச அரிசி மளிகை பொருட்கள் மற்றும் தலா ஆயிரம் ரூபாய் உதவி தொகை வழங்கப்பட்டது.

 • Chennai 05

  சென்னையில் அதிக பனி பொழிவில் செல்லும் வாகனங்கள்

 • Governer

  கடற்படை தினத்தையொட்டி சென்னை தீவுத்திடல் உள்ள போர் நினைவு சின்னத்தில் கவர்னர் ஆர்.என்.ரவி மரியாதை

 • planet Vaikundam

  ஜொலிக்கும் பூலோக வைகுண்டம்

 • 04-12-2021

  04-12-2021 இன்றைய சிறப்பு படங்கள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்