SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

சமைக்க விடலாமா கணவரின் நண்பரை?

2021-09-03@ 16:59:42

நன்றி குங்குமம் தோழி

என்ன செய்வது தோழி?

அன்புடன் தோழிக்கு,

எங்கள் அப்பா, அம்மாவுக்கு நாங்கள் 3 பிள்ளைகள். அண்ணன், அடுத்து அக்கா கடைசியாக நான். அண்ணனுக்கும் எங்களுக்கும் ஏழெட்டு ஆண்டுகள் வித்தியாசம். அப்பா தனியார் நிறுவன தொழிலாளி. குறைந்த சம்பளம் என்றாலும் எங்களை நன்றாக படிக்க வைத்தார். அண்ணனும், அக்காவும் முதுநிலை பட்டம் பெற்றவர்கள். அண்ணனுக்கு அரசு வேலை.

கூடவே ஆசிரியர் பயிற்சி முடித்த அக்கா தனியார் பள்ளியில் வேலை செய்கிறார். எங்கள் மூவருக்கும், அப்பா, அம்மாதான் வரன் பார்த்து திருமணம் செய்து வைத்தனர்.அண்ணனுக்கு வேலை கிடைத்ததும் திருமணமும் நடந்தது.  திருமணமான கொஞ்ச நாட்களில், அவர் வெளியூருக்கு தனிக் குடித்தனம் போய் விட்டார். அதன் பிறகு சிறிது நாட்களில் அப்பாவுக்கு உடல் நலமில்லாமல் போய்விட்டது.

எங்களுக்காக உழைக்க கவனம் செலுத்தியவர், தன் நலம் குறித்து கவலைப்படாமல் இருந்துவிட்டார். அதனால் நோய் முற்றி டாக்டர்கள், நாள் குறித்து விட்டனர். அதை தெரிந்து கொண்ட அப்பா, உடனடியாக தன் பெண்களுக்கு திருமணம் செய்து வைத்து விட வேண்டும் என்பதில் தீவிரமாக இருந்தார். அக்காவுக்கு பார்த்தவர்கள் 2 மாதம் அவகாசம் கேட்டார்கள். ஆனால் என்னை பெண் கேட்டவர்கள் உடனே திருமணத்திற்கு ஒப்புக் கொண்டனர். என்னை பார்த்தவர்கள் எங்கள் தெருவைச் சேர்ந்தவர்கள். எனக்கு திருமணம் ஏற்பாடு செய்கிறார்கள் என்று தெரிந்ததும் அவர்களே வந்து பெண் கேட்டனர்.

அக்காவுக்கு பார்த்தவர்கள் வெளியூர்காரர்கள். அவர்களது பெரிய பையன் ராணுவத்தில் இருந்ததால் விடுமுறைக்கு வருவதற்கும், ஊரில் அறுவடை முடிவதற்கும் சரியாக இருக்கும் என்று காரணம் சொன்னார்கள். அதனால் எனக்கு முதலில் திருமணம் முடித்துவிட்டு பிறகு அக்காவிற்கு நடத்தினார்கள். அக்காவுக்கு திருமணமாகி 2 மாதங்களில் அப்பா இறந்து விட்டார். அம்மா மட்டும் தனியாக இருக்க வேண்டுமே என்பதால் அண்ணனிடம் பேசினோம். அவரோ, ‘நான் இங்கு வந்து இருக்க முடியாது. வேலைக்கு போய் வருவது கஷ்டம்’ என்று சொன்னார். அம்மாவும் அண்ணனுக்கு தொந்தரவாக இருக்க வேண்டாம் என்று ‘நான் தனியாக இருக்கிறேன். எனக்கு உடம்பு நல்லாதானே இருக்கு, பிரச்னையில்லை’ என்று சொல்லிவிட்டார்.

உடனே அக்கா, ‘நான் வந்து அம்மாவுடன் இருக்கிறேன்’ என்று சொன்னார். நானும் அதே தெருவில் இருப்பதால், ‘நான் பார்த்துக் கொள்கிறேன்’ என்றேன். அதற்கு அண்ணன் இரண்டு பேரும் இங்கே அம்மாவுடனே வந்திடுங்க. பழைய வீட்டை ஒருத்தரும், காலி இடத்தை ஒருத்தரும் எடுத்துக் கொள்ளுங்கள். நான் எழுதி கொடுத்து விடுகிறேன். அம்மாவுக்கு கூடவே ஆட்கள் இருந்த மாதிரி இருக்கும் என்று சொன்னார். நாங்கள் இருவரும் வேண்டாம் என்று மறுத்தோம். உறவினர்களோ... ‘அண்ணன் இங்கு வரப்போவதில்லை. அவன் இருக்கிற இடத்திலேயே வீடு கட்டி விட்டான். அதனால் நீங்கள் எடுத்துக் கொள்வதில் தவறில்லை. அம்மாவுக்கும் துணையாக இருக்கலாம்.  அக்கா, தங்கைகள் என்பதால் ஒன்றாக இருப்பதும் பிரச்னையும்
இருக்காது’ என்றனர்.

தன் மகனுக்கு ஒரு மனை வரப்போவது தெரிந்ததும், ‘என் மாமியார் வீட்டில் சரியென்று சொல்லும்படி என் கணவரை கட்டாயப்படுத்தினர். அவரும் ஒப்புக் கொண்டார். அதன்பிறகு அக்கா பழைய வீட்டில் இருந்தார். கொஞ்ச நாட்கள் கழித்து காலியாக இருந்த இடத்தில் நாங்கள் வீடு கட்டிக் கொண்டாம். தனிக்குடித்தனம்தான். அம்மா எங்கு வேண்டுமானாலும் இருப்பார். அக்காவும், மாமாவும் வேலைக்கு செல்வதால் என் பிள்ளைகளையும், அக்கா பிள்ளைகளையும் நானும் அம்மாவும் பார்த்துக் கொள்வோம்.

அக்கா வீட்டுக்காரரும், என் கணவரும் அண்ணன், தம்பிகள் போலதான் பழுகுவார்கள். விசேஷம், கோவிலுக்கு செல்வதென்றால் எல்லோரும் ஒன்றாகத்தான் செல்வோம். அண்ணன் எப்போதாவது வந்து அம்மாவை பார்த்து விட்டு செல்வார். இதோ அப்பா இறந்து  9 ஆண்டுகள் ஆகி விட்டன. இந்நிலையில் கொரோனா கால கட்டத்தில், என் கணவர் வேலை செய்யும் நிறுவனத்தில் வாரத்தில் மூன்று நாட்கள்தான் வேலை. ஊதியமும் அதற்கேற்ப குறைந்து விட்டது. அதனால் குடும்பம் நடத்துவதில் சிக்கல் ஏற்பட்டது. என்னால் நீண்ட நேரம் நிற்கவோ, உட்காரவோ முடியாது என்பதால் ஆரம்பத்தில் இருந்து நான் வேலைக்கு செல்லவில்லை.

சூழ்நிலையை உணர்ந்து வேலைக்கு செல்லலாம் என்றாலும் இப்போது வேலை கிடைக்கவில்லை.இந்நிலையில் என் கணவருடன் படித்த பள்ளி நண்பர் ஒருவர் எங்கள் பகுதிக்கு குடித்தனம் வந்தார். ஒரு குழந்தை பிறந்த நிலையில் அவருக்கும், மனைவிக்கும் பிரச்னை ஏற்பட்டு விவாகரத்து வழக்கு நடைபெற்றுக் கொண்டு இருந்தது. என் கணவர் அடிக்கடி, அவரது வீட்டுக்கு போய் வருவார். அதேபோல் அவரும் எங்கள் வீட்டுக்கு வந்து போவார். மேல்நிலை வகுப்புகளுக்கு பாடம் எடுக்கும் கணக்கு ஆசிரியர். இப்போது தனியார் பள்ளியில் வேலை செய்கிறார். ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்றிருப்பதால் அரசு பணிக்காக காத்திருக்கிறார். இப்போது ஆன்லைன் மூலம் வகுப்பெடுக்கிறார். நல்ல குணம். உதவும் உள்ளம் உள்ளவர். எங்கள் கணவர் பொருளாதார சிக்கலில் இருப்பதால், அவர்தான் மாதம் தோறும் பணம் கொடுத்து உதவுகிறார். அதனால் அவரை, ‘தனியாக சமைக்க வேண்டாம், இங்கேயே வந்து சாப்பிட்டுக் கொள்’ என்று என் கணவர் சொன்னார். அதனால் அவரும் எங்கள் வீட்டிலேயே வந்து சாப்பிட்டு விட்டு செல்வார்.

அப்படி வரும் போது தட்டு, பாத்திரங்களை கழுவி வைத்து விட்டுதான் செல்வார். அப்படியே நாட்கள் ஆக, ஆக அவர் காய்கறி வெட்டித்தருவது போன்ற உதவிகளை செய்ய ஆரம்பித்தார். ஒரு கட்டத்தில் அவர்தான் எங்கள் வீட்டு சமையல் வேலைகளை செய்ய ஆரம்பித்தார். ‘நான் வேண்டாம்’ என்று சொன்னாலும், என் கணவரோ, ‘அவனுக்கு பொழுது போக வேண்டும் என்கிறார். அவனை தடுக்காதே’ என்று சொல்லிவிட்டார். என் கணவர் இல்லாத நேரங்களிலும் வருவார். சமைப்பார்.

பாத்திரங்களை கழுவி வைத்து விட்டு செல்வார். சில நேரங்களில் எங்கள் வீட்டிலேயே படுத்து தூங்குவார். இதெல்லாம் கடந்த சில மாதங்களில் இயல்பாகி விட்டன. அவரது செயல்களில் எங்களுக்கு எந்த வில்லங்கமும் தெரியவில்லை. ஆனால் எனது அக்கா கணவர் மூலம் பிரச்னை வந்தது. அவர் தனது மனைவியிடம் , ‘அவனையெல்லாம் எதுக்கு வீட்ல தங்க விடுகிறார்கள்’ என்று சத்தம் போட்டுள்ளார். அதற்கு என் அக்கா, ‘அவன் நல்ல பையன்தான். எல்லாரிடமும் மரியாதையாக பழகுகிறார். பொறுப்பான பையன். அவனால் உங்களுக்கு என்ன பிரச்னை’ என்று கண்டித்துள்ளார்.

அந்த நேரத்திற்கு அமைதியான அக்கா கணவர், விஷயத்தை என் அண்ணனிடமும், நெருங்கிய உறவினர்களிடமும், ‘வீட்டுக்காரர் இல்லாத நேரத்தில் அந்த பையன் வருவதும், வீட்டு வேலைகள் செய்வதும், தூங்குவதும் சரியில்லை. உங்கள் தங்கை கணவரும் கேட்பதில்லை’ என்று சொல்லியுள்ளார். அதன்பிறகு உறவுகள் விசாரிக்க ஆரம்பித்து விட்டன. போதாததற்கு என் அண்ணனும் வந்து சத்தம் போட்டார். அதற்கு என் கணவர், ‘என் மனைவி மீதும்... என் நண்பர் மீதும் நம்பிக்கை இருக்கிறது. என் நண்பர் என் வீட்டுக்கு வருவதை நீங்கள் யாரும் தடையோ குறையோ சொல்ல வேண்டாம். உங்கள் வேலையை பாருங்கள்’ என்று சொல்லிவிட்டார். இதனால் அண்ணன், கோபித்துக் கொண்டார். என் கணவரின் நண்பரை நான் அண்ணன் என்றுதான் அழைப்பேன். அவரும் என்னை மரியாதையாக தான் அழைப்பார். ஒருமுறை கூட கண்ணியக் குறைவாக என்னிடம் நடந்து கொண்டதில்லை.

என் கணவரும் இதுவரை ஒருமுறை கூட சந்தேகப்பட்டு பேசியதில்லை. அவரது நண்பரையும் மரியாதையாகத்தான் நடத்துவார். ஆனால் என்னை எல்லோரும் சந்தேகப்படுகிறார்கள். என் கணவர் சந்தேகப்படவில்லை என்றாலும், எனக்கு உறுத்தலாகத்தான் இருக்கிறது. என் கணவரின் நண்பர் வரும் நேரங்களில் என் அக்கா வீட்டுக்காரர் வீட்டு வாசலில் உட்கார்ந்து கொண்டு எங்கள் வீட்டையே பார்த்து கொண்டு இருக்கிறார். என் கணவருக்கு சரியாக வருவாய் இல்லாததால் தான், அவரது நண்பரை இப்படி வீட்டுக்குள் அனுமதிப்பதாகவும், என்னுடன் பழக விடுவதாகவும் கூட பேசுகிறார்கள். கணவரின் நண்பர் ஏற்கனவே ஒரு வீட்டில் இதுபோல் தங்கி பிரச்னையானதாகவும் எனது அக்கா கணவர் சொல்லிக் கொண்டிருக்கிறார்.

அது எத்தனை உண்மை என்று தெரியவில்லை. அதே நேரத்தில் நல்ல மனதுடன் பழகும் கணவரின் நண்பரை வீட்டுக்கு வர வேண்டாம் என்று சொல்லவும் தயக்கமாக இருக்கிறது. என் கணவரோ ‘உலகம் ஆயிரம் பேசும் விட்டுத் தள்ளு’ என்கிறார். என்ன செய்வது என்று தெரியவில்லை. இந்த பிரச்னைகளுக்கு பிறகும் அவர் எங்கள் வீட்டில் வழக்கம் போல் இருக்கிறார்.

இந்த விஷயத்தில் என்ன முடிவு எடுப்பது என்று தெரியவில்லை. கூடவே முடிவு எடுக்க வேண்டியது நானா, என் கணவரா இல்லை அந்த நண்பரா என்பதும் புரியவில்லை? ஒரு நல்ல மனிதரை ஊர் வாய்க்கு பயந்து, ‘எங்கள் வீட்டுக்கு வராதே என்று சொல்லலாமா? அதை அவர் எப்படி புரிந்து கொள்வார் என்ற பயமும் இருக்கிறது. நான் அப்படிச் சொன்னால், என் கணவர் கோபித்துக் கொள்வாரா என்ற தயக்கமும் உள்ளது! இந்த பிரச்னை வந்ததில் இருந்து என் அம்மா, அக்காவை தவிர மாமா, அண்ணன் மட்டுமின்றி நெருங்கிய உறவினர்களும் சரியாக பேசுவதில்லை. கணவரின் நண்பருக்காக உறவினர்களை பகைத்துக் கொள்வது சரியா? யார் மனமும் கஷ்டப்படாமல், என் பெயரும் கெடாமல் என்ன முடிவெடுப்பது? என்ன செய்வது? எனக்கு வழிகாட்டுங்கள் தோழி

இப்படிக்கு,
பெயர் வெளியிட விரும்பாத வாசகி.


நட்புடன் தோழிக்கு,

கொரோனா பெருந்தொற்று பலரின் வாழ்க்கையை புரட்டி போட்டுவிட்டது.பலர் தங்கள் அன்புக்குரிய உறவுகளை, நட்புகளை இழந்து விட்டனர். பலர் தங்கள் வேலையை இழந்து, வாழ்வாதாரங்களை இழந்து வறுமையின் பிடியில் சிக்கியுள்ளனர். மொத்தத்தில் கொரோனா பெருந்தொற்று நம்மை மனதளவிலும், உடலளவிலும் பாதித்துள்ளது. கூடவே எளிமையான வாழ்க்கை, ஆரோக்கியமான பழக்க வழக்கங்களின் அவசியத்தையும் நமக்கு உணர்த்தியுள்ளதையும் மறுப்பதற்கில்லை.

அந்த கொரோனா உங்கள் வாழ்விலும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளதை என்னால் உணர முடிகிறது. மனைவி, 2 குழந்தைகள் அவர்களின் அன்றாட தேவைகள் ஆகியவற்றை பூர்த்தி செய்ய வேண்டிய நிலையில், குடும்பத்தலைவர் வேலை இல்லாமல் இருப்பது உண்மையில் கடினமானது. அந்த கொடுமையான நிலையில்தான், இப்போது ஒரு இக்கட்டான சூழலில் சிக்கியுள்ளீர்கள். ஆனால் அதை சிக்கல் என்று உணர்ந்ததால்தான் இந்த கடிதத்தை எழுதியுள்ளீர்கள். அதில் இருந்து சட்டென்று வெளியே வர நினைக்க வேண்டாம். அவசரப்பட்டு எந்த முடிவும் எடுக்க வேண்டாம். மென்மையான பிரச்னை. அதை இலகுவாக கையாள வேண்டும்.

இது போன்ற இக்கட்டான காலகட்டத்தில் அந்த நண்பரின் உதவியை எளிதில் தவிர்க்க முடியாத நிலை. பொருளாதாரரீதியா இப்போது அவரை சார்ந்து இருக்கும் சூழல். அதனால் அவர் வீட்டுக்கு வந்து செல்வதை தடுக்க முடியாமல் தவிப்பதை புரிந்து கொள்கிறேன். அதே நேரத்தில் உங்கள் உறவினர்கள் ஏச்சுக்கும் சந்தேகத்திற்கும் ஆளாக வேண்டிய நிலைமையும் ஏற்பட்டுள்ளது. அதில் உண்மை இல்லை என்றாலும், அதை ஒதுக்கி தள்ளி விடுவதும் எளிதானதல்ல. அது உறவுகளையும் ஒதுக்குவது போலாகும்.

அதே நேரத்தில் அவர் உங்கள் கணவரின் நல்ல நண்பர். கூடவே உங்கள் இருவரையும், உங்கள் கணவர் நம்புகிறார். ஆனால் உறவுகளை போன்றே, சமூகமும் அமைதியாக இருக்காது. அதனால் இந்த பிரச்னை குறித்து உங்கள் கணவருடன் உட்கார்ந்து பேசுங்கள். அவருக்கு நிலவரத்தை மென்மையாக விளக்குங்கள். அவரின் நண்பர் எப்போது வேண்டுமானாலும் வரலாம். ஆனால் நீங்கள்  இருக்கும்போது மட்டும் வரச் சொல்லுங்கள். அப்படி வரும் போதும் சமைப்பது, பாத்திரம் கழுவுவது போன்ற வேலைகளை செய்ய வேண்டாம் என்று கணவரிடம் எடுத்துச் சொல்லுங்கள். அதையும்  பக்குவமாக சொல்லச் சொல்லுங்கள். உறவுகளை போன்ற நட்பும் முக்கியம். நல்ல நண்பர் என்பதால் அவரும் புரிந்து கொள்வார்.

அப்புறம், நாம் தான் தவறு செய்யவில்லையே... உறவுக்கும், ஊருக்கும் ஏன் பயப்பட வேண்டும். நேர்மையாக இருக்கும் போது எதற்கு கவலைப்பட வேண்டும் என்று கூட இப்போது உங்களுக்கு தோன்றலாம். ஒன்றை புரிந்து கொள்ளுங்கள். சில விஷயங்கள் இப்போது சரியாகத் தோன்றலாம். ஆனால் எந்த நேரத்திலும் அந்த விஷயங்கள் மாறலாம். உங்கள் கணவரின் நண்பருக்கு வேறு எண்ணங்கள், உணர்வுகள் இருக்காது என்பதை உங்களால் சொல்ல முடியாது. மற்றவர்களின் உணர்வுகளை  கண்டுபிடிப்பது சிரமம்.

அவர் மனைவியை பிரிந்து வாழ்பவர். அவருக்கு வேறு எண்ணங்களும் இருக்கலாம். அதிக சுதந்திரம் ஆபத்தானது. அதை உங்கள் கணவர் புரிந்து கொள்ளாமல் இருக்கலாம். நீங்கள் புரிந்துகொள்ளுங்கள். எனவே உணர்ச்சி வசப்படாமல் எப்போதும் எச்சரிக்கையாக இருங்கள். எனவே மீண்டும் சொல்கிறேன்.... உங்கள் கணவர் மூலமாக அவர் நண்பருக்கு நாசுக்காக, ‘இலை மறை... காய் மறையாக...’ என்று சொல்வார்களே அப்படிச் சொல்லி புரிய வையுங்கள். அதற்கு முன் உங்கள் கணவர் புரிந்துகொள்வதும் அவசியம்.

அதை செய்வதை விட்டு விட்டு கவலைப்படுவதால் எந்த பிரச்னையும் தீராது. நேர்மையாக இருப்பதால் உறவுகள் ஏச்சு, பேச்சுகள் குறித்து கவலைப்பட வேண்டாம். அதே நேரத்தில் மற்ற உணர்வுகளை புரிந்து கொள்ளாத இரக்கமற்ற சமூகத்தில் நாம் வாழ்கிறோம் என்பதை புரிந்து கொள்ளுங்கள். அதனால் முடிந்தவரை அந்த சமூகத்திற்கு ஏற்ப வாழ வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறோம். கூடவே, பொருளாதாரரீதியாக உங்கள் கணவரின் நண்பரை சார்ந்திருக்காமல் இருக்க, மாற்று வழிகளையும் பாருங்கள். எல்லாம் சரியாகும்.

தொகுப்பு: ஜெயா பிள்ளை

என்ன செய்வது தோழி
பகுதிக்கான கேள்விகளை எழுதி
அனுப்ப வேண்டிய முகவரி


‘என்ன செய்வது தோழி?’
குங்குமம் தோழி,
தபால் பெட்டி எண்: 2924
எண்: 229, கச்சேரி சாலை,
மயிலாப்பூர், சென்னை - 600 004


வாசகிகள் கவனத்துக்கு,

பிரச்னைகள்  குறித்து  எழுதும் போது  பிரச்னைகளுடன்  முழு  விவரங்களையும்  குறிப்பிடுங்கள். சம்பவங்களை, காரணங்களை தெளிவாக... ஏன் விரிவாக கூட எழுதுங்கள். அப்போதுதான் தீர்வு சொல்பவர்களுக்கு வசதியாக இருக்கும். பெயர், முகவரி போன்றவற்றைதான் தவிர்க்க சொன்னோம். விவரங்களை அல்ல...

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • porkappal1

  முற்றிலும் இந்தியாவில் தயாரிக்கப்பட்ட 2 போர்க்கப்பல்களை நாட்டுக்கு அர்ப்பணித்தார் ராஜ்நாத்சிங்

 • france_elizabeth

  30 ஆண்டுகளுக்கு பிறகு பிரான்சில் பெண் பிரதமர் பதவியேற்பு..!!

 • assam-rain-17

  அசாமில் அடித்து நொறுக்கிய கனமழை!: வெள்ளத்தில் மூழ்கிய ரயில் நிலையம்...2 லட்சம் பேர் பாதிப்பு..!!

 • ramnjamaiii

  ஜமைக்காவில் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த்: அம்பேதகர் சதுக்கத்தை திறந்து வைத்து மரக்கன்றை நட்டார்!!

 • pudha_purnima

  உலகம் முழுவதும் புத்த பூர்ணிமா கோலாகல கொண்டாட்டம்..!!

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்