SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

யோகா தெரபிஸ்ட் தேன்மொழி

2021-09-01@ 17:28:25

நன்றி குங்குமம் தோழி

ஆளுமைப் பெண்கள்

ஆளுமை என்பதற்கு இதுதான் அளவுகோல் என தர நிர்ணயம் எதுவுமில்லை. தனிப்பட்ட துறை சார்ந்த எந்த ஒரு தனித்துவ செயலிலும் சிறந்து விளங்குபவர்கள் ஆளுமை படைத்தவர்கள் என அடையாளம் காட்டப்படுகின்றனர். இதில் ஆண்களுக்கு  நிகராக பெண்களும் ஆளுமைத்திறனில் சாதனை படைத்து தூள் கிளப்பி வருவது மிகவும் சிறப்பானதாகும்.

முப்பது வயதின் நெருக்கத்தில் இருக்கும் இளம் பெண்ணான தேன்மொழிக்கு தான் ஒரு ஆளுமைப் பெண்ணாக திகழ வேண்டும் என சிறு வயதிலேயே ஆர்வம் இருந்துள்ளது. அதற்கான தருணம் தற்போது கிட்டியுள்ளதாக பூரிப்படைகிறார். பஞ்சுத் தொழிலில் இங்கிலாந்தின் மான்செஸ்டர் நகர் உலகளவில் எப்படி புகழ் பெற்றுள்ளதோ அதற்கு நிகராக அதே தொழிலில் தென்னிந்திய மான்செஸ்டர் எனப்படும் காட்டன் சிட்டியான கொங்கு மண்டல தலைநகர் கோயமுத்தூரில் பிறந்து வளர்ந்த தேன்மொழி, கல்லூரி படிப்பை முடித்த ஓரிரு வருடத்தில், திருமணம் என செட்டிலானார். இவரின் கணவர் சந்திரசேகர் யோகா நேச்சுரோபதி சிகிச்சை முறையில் கைதேர்ந்தவர். அவர் பரம்பரையாக இயற்கை வைத்தியத்தை பாரம்பரியம் மாறாமல் இன்றும் தொடர்ந்து செய்து வருகிறார். அவர் அளித்த ஊக்கத்திலும், உற்சாகத்திலும் யோகா கல்வியில் எம்.எஸ்சி டிகிரி பெற்றுள்ள தேன்மொழி, தன் ஆளுமை படைப்பை எவ்வாறு ெவளிப்படுத்தினார் என்பதை அவரே பகிர்ந்து கொண்டார்.

‘‘நாங்க சாதாரண குடும்பம் தான். கோவை தான் என்னுடைய சொந்த ஊர். ஆளுமை ஆற்றல் அடைய வேண்டும் எனும் ஆர்வம் பள்ளிப் பருவத்திலேயே எனக்குள் ஊறியிருந்தது. அதற்கான சந்தர்ப்பம் ஐந்து ஆண்டுக்கு முன் வரை எனக்கு சரிவர அமையவில்லை. காலேஜ் முடித்தோம், வேலைக்குப் போனோம் என உப்பு சப்பில்லாமல் தான் என் வாழ்க்கை நகர்ந்து கொண்டு இருந்தது. இதற்கிடையில் எனக்கு திருமணமும் எங்க வீட்டில் பார்த்து முடித்து வைத்தார்கள். திருமணம், குழந்தை என நான் முற்றிலும் குடும்ப வாழ்க்கையில் ஈடுபட ஆரம்பிச்சேன். பெண்களை பொறுத்தவரை திருமண வாழ்க்கையில் ஈடுப்பட்டால் அவர்கள் தங்களின் உடல் மேல் பெரிய அளவில் கவனம் செலுத்துவதில்லை.

என் நிலையும் அப்படித்தான். ஒரு பக்கம் வயசும் ஏறிக்கிட்டே போகுது. உடம்பும் முன்ன மாதிரி ஒத்துழைக்காம, கட்டுக்கடங்காம கூடிக்கொண்டு போனது. இதனால் ஒரு பக்கம் என்னுடைய ஆசை, கனவு எல்லாம் சரிந்துவிட்டது என்ற ஏக்கம் தொற்றிக் கொண்டது. என் மனதில் ஏற்பட்ட சஞ்சலத்தை என் கணவரிடம் பகிர்ந்த போது அவர் தான் என்னுடைய ஆளுமை திறனை செதுக்க வந்த சிற்பி என்று எனக்கு அப்போது தெரியவில்லை.

என் பிரச்னை என்ன என்று புரிந்து  கொண்டவர் என்னை உற்சாகப்படுத்தி யோகா பயிற்சியில் முதுகலைப் பட்டப்படிப்பு படிக்க சொன்னார். அவர் சொன்ன அந்த ஒரு அடி எடுத்து வைத்த அடுத்த நிமிடம் என்னுடைய ஆளுமை எனும் தனித்துவத்துக்கு புத்துயிர் கிடைத்தது போன்ற உணர்வு ஏற்பட்டது. அதையடுத்து முடங்கிப் போன எனது செயல்பாடுகள் அனைத்தும் முழு வீச்சில் வேகம் பிடித்தன. அதில் நான் செய்த முதல் காரியம் என் வாழ்வில் மிகப்பெரும் மாற்றத்தை கொண்டு யோகாவை நடைமுறை வாழ்க்கையில் எளிதாகவும், ஆர்வத்துடனும் பலரும் கற்க வைக்கக் கருதினேன். ஆனால் அதில் என்ன புதுமை புகுத்த முடியும் என பலரும் நினைக்கக் கூடும்.

உண்மைதான். யோகா எனும் அற்புதக் கலையில் புதுமை என எதுவும் கலக்க முடியாது. ஆனால், யாருக்கு எந்த யோகா பொருந்தும், அதனால் ஒருவரின் ஆரோக்கியம் மனதளவிலும், உடலளவிலும் கச்சிதமாக எப்படி செயல்படும் என ஒவ்வொருவருக்கும் பிரத்யேக கவனம் செலுத்தத் தொடங்கினேன். அதன் விளைவு யோகா பயிற்சிக் கூடம் என அமைத்து அதில் கற்பிப்பதைக் காட்டிலும், பயனாளிக்கு அவரது இருப்பிடத்தில் வைத்து பயிற்சி அளித்தால் என்ன என்று தோன்றியது. அதைத் தொடர்ந்து ‘டோர் ஸ்டெப் தெரபி’ எனும் எனது சிகிச்சை தொடங்கியது.

எனது ஆலோசனையையும், பயிற்சியையும் முறைப்படி முடித்து பலன் அடைந்தவர்கள் என இதுவரை 150க்கும் அதிகமானவர்கள் உள்ளனர். இதில் மகிழ்ச்சியான விஷயம் என்னவென்றால், முதல் முறை என்னிடம் வந்து பலன் அடைந்த அனைவரும் மேலும் பலரிடம் என்னைக் கொண்டு சேர்த்தது தான். இப்படியாக 5 ஆண்டுகளாக நானும் என் கணவரும் இணைந்து இந்த தெரபி நடத்தி வருகிறோம். கோவையின் பெரும்பாலான பகுதிகளில் பிரணவ யோகா களை கட்டியுள்ளது.

எனினும் ஒரே பயிற்சிக் கூடத்துக்கு எத்தனை வாரம் தான் போவது என பலருக்கும் அலுப்பு தட்டி தங்களது பயிற்சியை முறையாக முடிக்காமல் அவதிப்படுகிறார்கள். எனவே, அதே கலையை எனது வாடிக்கையாளர்களை அவர்களது வீடு தேடிச் சென்று, மனது மற்றும் உடலளவில் அவர்களது குறை என்னென்ன என விவரம் கேட்டறிந்து அதற்குத் தகுந்த பயிற்சியை அவர்களுக்கு குறிப்பிட்ட காலம் வரை அளித்து வருகிறேன். இதில் மற்றொரு குறிப்பிடத்தக்க விஷயம் என்னவென்றால், அவர்களது இருப்பிடம் செல்லும் போது, அங்கு இருப்பவர்களின் நடைமுறை வாழ்க்கை, சுற்றுச்சூழல் பின்னணி என பலவற்றையும் கவனிக்க முடிவதால், பிரச்னை பலனாளிக்கு எங்கிருந்து உருவானது என கணிக்கவும் முடிகிறது. அதனால் தான் என்னிடம் சிகிச்சை பெற்றவர்களில் ஒரு சதவீதம் கூட தோல்வி இல்லை என உறுதியாக கூறுகிறேன்.

குறிப்பாக, 13 வயதில் ருமாட்டிக் நோய்க்கு உள்ளான நபரை என்னிடம் அழைத்து வரும்போது அவருக்கு 40 வயதாகி இருந்தது. உட்கார முடியாமலும், உட்கார்ந்தால் எழுந்திருப்பதை இமாலய அவஸ்தையாகவும் அவர் அனுபவித்து வந்திருந்தார். அவரைப் பார்த்ததும் எனக்கே மலைப்பு தட்டியது. அதே சமயம் இது தான் உனக்கு சந்தர்ப்பம். இவரை சரியாக்கி உனது ஆளுமையை நிரூபி என மூளைக்குள் காலிங்பெல் ஒலித்தது. சவாலாக ஏற்று அவருக்கு சிகிச்சையும், பயிற்சியும் தொடங்கினேன்.

கால் நூற்றாண்டாக நொடிந்து போயிருந்த அவரால், ஒரு மாத பயிற்சிக்குப் பின் ஆசனம் இட்டு தரையில் அமர முடிந்தது. தினமும் இரண்டரை மணி நேர வகுப்பாக அவருக்கு அளித்த பயிற்சி முடிந்த பின் தானாக எழுந்திருப்பதும், அமருவதுமாக தன்னுடைய வாழ்க்கையை மிகவும் சந்தோஷமாக வாழ்ந்து வருகிறார். அதைப் பார்க்கும் போது, எனது பிறப்புக்கான ஏதோ ஒன்றை சாதித்த பெரும் நிம்மதி எனக்குள் உண்டானது.

அதுபோல, கர்ப்பம் தரிக்க முடியாமல் அதன் காரணமாக மன அழுத்தம் உள்பட பல்வேறு குடும்ப சிக்கல்களுக்கு உள்ளாகும் பெண்களுக்கு தியானம் மற்றும் யோகாவுடன் கூடிய பிரத்யேக வகுப்பு சொல்லித்தருகிறேன். ரத்த புற்றுநோயால் அவதிப்பட்ட 50 வயது முதியவருக்கு கீமோ தெரபி தொடர்ந்து செய்ததன் விளைவாக மேலும் பல இன்னல்களுக்கு உடலளவில் உள்ளானார். அவருக்கும் யோகா நல்ல பலனை கொடுத்துள்ளது.

சிகிச்சையை தொடங்கிய ஆரம்ப கட்டத்திலேயே யு-டியூப், இன்ஸ்டாகிராம், ஃபேஸ்புக், டிவிட்டர் என சமூக வலைத்தளங்களிலும் அது பற்றி தகவல்களை தொடர்ந்து பதிவேற்றி வந்தேன். அதன் மூலமாகவும் உடல், மன நலன் தேவைப்படும் பலரும் என்னை தேடி வருகிறார்கள். கணவருடன் சேர்ந்து அளித்து வரும் இந்த சேவையை மனித குலத்துக்கான தொண்டாக கருதும் அதே வேளையில், இந்த சேவை மூலமாக ஆளுமை பெண்ணாக உருவெடுத்து இருப்பதும் எனக்கு பெருமையாக உள்ளது’’ என்று கூறும் தேன்மொழி, சுய சக்தி எனும்
விருதினை பெற்றுள்ளார்.

இந்தாண்டு இறுதிக்குள் தனக்கென ஒரு குழு அமைத்து, அதன் மூலம் பலர் இவரின் சிகிச்சை மூலம் பலன்களை அடைய ேவண்டும் என்பதில் மிகவும் தீவிரமாக செயல்பட்டு வருகிறார் தேன்மொழி. ‘‘ஆஸ்துமா, கிட்னி ஃபெயிலியர், தைராய்டு பிரச்னை, மனஉளைச்சல் என பலவகைப்பட்ட உடல் பிரச்னைகளுக்கும் எளிய தீர்வை யோகாசனம் மூலம் பெற முடியும்’’ என்கிறார் ஆணித்தரமாக தேன்மொழி.

தொகுப்பு: தி.ஜெனிஃபா

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • pak-123

    பாகிஸ்தான்,ஆப்கானிஸ்தானில் நிலநடுக்கம்: 9 பேர் பலி

  • cherry-blossom-tokyo

    டோக்கியோ, வாஷிங்டன், பெய்ஜிங்கில் செர்ரி மலரும் பருவம் தொடக்கம்..!!

  • baaagh11

    பாக்தாத் சர்வதேச மலர் திருவிழாவின் மனதை கொள்ளை கொள்ளும் படங்கள்!!

  • somaliya-dead-2

    சோமாலியாவில் நிலவும் பஞ்சம்: கடந்த ஆண்டு மட்டுமே 43,000 பேர் உயிரிழப்பு

  • aus-fish-21

    ஆஸ்திரேலியாவின் டார்லிங் ஆற்றில் திடீர் வெப்பநிலை மாற்றத்தால் லட்சக்கணக்கான மீன்கள் உயிரிழப்பு..!!

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்