SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

அந்த மூன்று நாட்கள்... ஓட வேண்டாம், ஓய்வெடுங்கள்!

2021-07-29@ 17:06:29

நன்றி குங்குமம் தோழி

‘பீரியட்ஸ் அப்போ ஜிம்முக்கு போலாமா?’,
‘மென்சஸ் அப்ப ட்ரெட்மில்ல ஓடலாமா?’


‘என்னால மாதவிடாய் காலத்திலயும் நிறைய உடற்பயிற்சி செய்ய முடியுது. ஆனா, அப்படிச் செய்யலாமா?’

இப்படி உடற்பயிற்சி கூடங்களுக்கு செல்லும் பெண்களில் பலர் என்னிடம் கேட்பதுண்டு. இது தொடர்பாக இன்னும் பல சந்தேகங்கள் பலருக்கும் எழலாம். அதிலும் குறிப்பாக, மாதவிடாய் காலத்தில் உடற்பயிற்சி செய்யலாமா? அப்படி செய்தால் என்னென்ன பாதிப்புகள் ஏற்படும்? இதற்கு மாற்று உடற்பயிற்சி என்ன? இவற்றின் மீதுள்ள கட்டுக்கதைகள் என்னென்ன? என்பது போன்ற அனைத்தையும் பற்றி இக்கட்டுரை வாயிலாக தெரிந்துகொள்ளலாம்.

மாதவிடாய் காலம்

*ஆரோக்கியமான மாதவிடாய் உதிரப்போக்கானது பெரும்பாலும் மூன்று முதல் ஐந்து நாட்களுக்குள் வந்து முடிந்துவிடும்.

*இதில் இரண்டு அல்லது மூன்று நாட்களுக்கு அதிக  உதிரப்போக்கு இருக்கும்.

*மாதவிடாயின் காரணமாக வரும் வயிற்றுவலி முதல் நாளிலோ அல்லது அதற்கு அடுத்த நாட்களிலோ அதிகமாக ஏற்படலாம். இது ஒவ்வொரு பெண்களுக்கும் மாறுபடும்.

மாதவிடாய் காலத்தில் தோன்றும் உடலியல் பிரச்னைகள்

*Muscle Cramps என்று சொல்லப்படும் ஒருவகை தசைப் பிடிப்புகள் உண்டாகும். இதனால் அடி வயிற்றில் அவ்வப்போது வலி வரும்.

*மாதவிடாய் காரணமாக வரும் முதுகு வலி, குதிக்கால் வலி, உடல் வலி என உடல் மூட்டுகளிலும், தசைகளிலும் வலி ஏற்படும். இது ஒவ்வொரு பெண்களுக்கும் மாறுபடும்.

*Mood swings என்று சொல்லப்படும் மன நிலை மாற்றங்கள் ஏற்படும். இதனால் காரணமில்லாமல் கோபம் கொள்வது, பிறர் மீது எறிந்து விழுவது போன்றவை நிகழலாம்.

*மிகவும் களைத்து, சோர்ந்து காணப்படுவர்.

*மாதவிடாய் சுழற்சி முழுவதும் கருவறை ஹார்மோன்களின் சமநிலையின்மை தோன்றும்.

*மாதவிடாய் சுழற்சி காலத்தில் நீரிழப்பு (dehydration) உண்டாகும்.

*மாதவிடாய் நேரத்தில் செரிமானம் குறைவது, வாந்தி வருவது போன்ற உணர்வுகள் ஏற்படும். இதனால் வயிறு உப்பசமாய் இருப்பது ஆகியவை உண்டாகும்.

உடற்பயிற்சியின் பலன்கள்

*உடற்பயிற்சி செய்வதால் மூளையின் அடியில் உள்ள பிட்யூட்டரி சுரப்பி தூண்டப்படுகிறது. இதனால் அதிலிருந்து எண்டார்பின் ஹார்மோன்கள் உற்பத்தி ஆவதால் உடல் வலி குறையும், மனநிலையில் நல்ல மாற்றங்கள் ஏற்படும்.

*இந்த Feel good ஹார்மோன்ஸ் உடலில் அழற்சியை குறைக்கும், ரத்த ஓட்டத்தை அதிகரிக்கும், பலத்தை (energy) தரும்.

*இவ்வகையான நல்ல பலன்கள் இருப்பினும் மாதவிடாய் காலத்தில் அதிக உடற்பயிற்சி செய்வது நன்மை இல்லை.

செய்ய வேண்டியவை

*உடல் வலி, வயிற்று வலி இல்லையெனில் அல்லது குறைவாக இருக்கிறது என்றால் எளிய உடற்பயிற்சிகளான நடப்பது, சீராக ஓடுவது (Jogging) போன்றவை செய்யலாம்.

*உடலில் உள்ள தசைகளுக்கு மென்மையான தளர்ச்சி பயிற்சிகள் (stretches) செய்யலாம்.

*முக்கியமாக வயிறு, முதுகு, கால்கள் ஆகிய பகுதிகளுக்கு தங்கள் குடும்ப இயன்முறை மருத்துவரின் ஆலோசனை பெற்று தசை தளர்ச்சி பயிற்சிகள் செய்யலாம். இதன் மூலம் வயிறு மற்றும் முதுகு வலி சற்று குறையும்.

*ப்ரி மென்ஸ்ட்ருவல் சிண்ட்ரோம் (pre menstrual syndrome) என்பது மேலே சொன்ன அறிகுறிகள் (உடல் வலி, மன நிலை மாற்றங்கள், வயிறு உப்பசம்) மாதவிடாய் வருவதற்கு மூன்று நாட்கள் முன்பிருந்தே தெரியத் தொடங்கும். அப்போது எப்போதும் போல் செய்யும் உடற்பயிற்சிகளை செய்யலாம். அதில் நல்ல பலன் இருக்கும். உடல் வலி குறைந்து, மனநிலை அமைதியாக இருக்கும்.

*நடைப்பயிற்சி பிடிக்காதவர்கள் எளிய வகை யோகா, எளிய உடல் அசைவுகள் கொண்ட நடனம் ஆகியவை செய்யலாம்.

*தேவையான தூக்கம், ஓய்வு, நீர் அருந்துவது போன்றவற்றை செய்ய வேண்டும்.

*நடைப்பயிற்சி செய்தவர்கள் நிறைய தண்ணீர் அருந்த வேண்டும் என்பதை நினைவில் வைத்துக்கொள்ள வேண்டும்.

செய்யக் கூடாதவை

*க்ராஸ் ஃபிட் (Cross fit), அதிக பலு தூக்குவது, கிக் பாக்சிங் (kick boxing) போன்ற உடற்பயிற்சிகளை தவிர்ப்பது சிறந்தது.

*புது வகையான இதுவரை செய்திடாத உடற்பயிற்சிகளை செய்ய வேண்டாம்.

*வயதான மெனோபாஸ் ஆகாத பெண்கள், வலிமை இல்லாத கர்ப்பப்பை உடையவர்கள் மாதவிடாய் நாட்களில் உடற்பயிற்சியை தவிர்க்க வேண்டும்.

*குழந்தை பெற்ற தாய்மார்களும் சில வருடங்களுக்கு மாதவிடாய் நாட்களில் உடற்பயிற்சி செய்யக் கூடாது.

சில கட்டுக்கதைகள்

‘மாதவிடாயின் போது உடற்பயிற்சி செய்வது’ சார்ந்த கட்டுக்கதைகள் ஏராளம் உள்ளது நம்மிடையே. அதில் குறிப்பாக, உடற்பயிற்சி செய்தால் ரத்தப் போக்கு அதிகரித்து விடும் என்பதையும், ரத்தப் போக்கு குறைந்து மாதவிடாய் சீக்கிரம் நின்று விடும் என்பதையும், மாதவிடாயின்போது அதீத உடற்பயிற்சி செய்வதன் மூலம் வயிற்று வலி முற்றிலும் தெரியாது என்று சிலர் நம்புவதையும் சொல்லலாம்.

எனவே நாள் தவறாமல் உடற்பயிற்சி செய்யும் பெண்களால் மாதவிடாய் காலத்தில் முற்றிலும் முடங்கி இருக்க முடியாது என்பதால் எளிய உடற்பயிற்சிகள், நடைப்பயிற்சிகள் மூலம் தினசரி குதூகலத்தை ‘அந்த நாட்களிலும்’ கூட்டிக் கொள்ளலாம்.

உடற்பயிற்சி என்பது கர்ப்பப்பை சார்ந்த பல நோய்களிலிருந்து நம்மை காக்கும் கேடயமாய் இருந்தாலும், மாதவிடாய் நாட்களுக்கு தேவை ஓய்வென்பதை ஒவ்வொரு பெண்களும் மனத்தில் நிறுத்திக்கொள்ள வேண்டும்.

கோமதி இசைக்கர் இயன்முறை மருத்துவர்

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • SYDNEYY111

  தொடர் கனமழை : சிட்னி நகரத்தை சூழ்ந்த வெள்ளம்.. 50 ஆயிரம் மக்கள் வீடுகளை விட்டு வெளியேற அறிவுறுத்தல்..

 • Mexico_Mayor

  மெக்சிகோவில் விநோதம்.! பெண் முதலையை முத்தம் கொடுத்து மணந்த மேயர்!!

 • manipurlandaa1

  தோண்ட தோண்ட சடலங்கள்.. மணிப்பூரில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 42 ஆக உயர்வு!!

 • America_Truck

  அமெரிக்காவில் டெக்சாஸ் மாகாணத்தில் லாரி ஒன்றில் 53 அகதிகள் சடலமாக மீட்பு... 16 பேர் கவலைக்கிடம்!!

 • wild-fire-california-30

  கலிபோர்னியாவில் மீண்டும் பற்றி எரியும் காட்டுத் தீ..135 ஏக்கர் வனப்பகுதி தீக்கிரை..!!

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்