SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

ஸ்கேட்டர் கேர்ள்

2021-07-28@ 17:26:08

நன்றி குங்குமம் தோழி

நாம் செய்யும் ஒரு சின்ன உதவி, ஒருவரின் வாழ்க்கையையே மாற்றும் என்ற சிந்தனையின் அடிப்படையில் ஸ்கேட்டர் கேர்ள் திரைப்படம் ஆரம்பிக்கிறது. ராஜஸ்தானில் கேம்பூர் என்ற இடத்தில் 14-15 வயது பிரேர்னா வசித்து வருகிறாள். வறுமையாலும், சாதிய பாகுபாடாலும் ஒடுக்கப்பட்ட குடும்பம். பெண்கள் எந்த கனவும், ஆசையும் இல்லாமல் 16 வயதில் திருமணத்தை முடித்து கணவரின் பேச்சுக்கு கட்டுப்பட்டு வாழ்வதே உன்ன தமான வாழ்க்கை என்று நம்பும் சூழலில் வளர்கிறாள்.

பிரேர்னாவும் அந்த வாழ்க்கைக்குத் தன்னை கொஞ்சம் கொஞ்சமாக பழகிக்கொள்ள ஆரம்பிக்கும் சமயத்தில், லண்டனிலிருந்து வரும் ஜெசிகாவின் அறிமுகம் அவளது வாழ்க்கையின் திசையை மாற்றுகிறது. 20 ரூபாய் பாட புத்தகத்தை எப்படி வாங்குவது என தவிக்கும் பிரேர்னாவுக்கு, 20 ரூபாய்க்கு தண்ணீர் பாட்டிலை சாதாரணமாக காசு கொடுத்து வாங்கும் ஜெசிகா மீது வியப்பும் ஆர்வமும் உண்டாகிறது.

பிரேர்னாவும், அவளது தம்பி அங்குஷும் பியரிங் போர்டு எனப்படும் ஸ்கேட்டிங் போர்டு போன்ற ஒரு விளையாட்டு பொருளில் விளையாடுகின்றனர். ஆனால் அதன் உண்மையான பெயர் ஸ்கேட்டிங் போர்ட் என அவர்களுக்கு தெரியவில்லை. கிராமத்தில் இருக்கும் மற்ற குழந்தைகளும் இது போன்ற பழைய பாட்டில், மரப்பலகை, குச்சிகளைக் கொண்டு தங்களுக்கான விளையாட்டுப் பொருட்களை அவர்களே உருவாக்கி விளையாடுவதை வழக்கமாக கொண்டுள்ளனர்.

பிரேர்னா மற்றும் அவள் தம்பி உருவாக்கிய ஸ்கேட்டிங் போர்டை பார்க்கும் ஜெசிகா உடனே இதை வீடியோ எடுத்து தன் நண்பர்களுடன் பகிர்கிறாள். அக்கிராமத்திற்கு அருகில் பள்ளியில் பாடமெடுக்கும் ஜெசிகாவின் நண்பரும் தன்னார்வலருமான எரிக் இந்த வீடியோவைப் பார்த்து, ஸ்கேட்டிங் போர்டுடன் கேம்பூருக்கு வருகிறார். தனது ஸ்கேட்டிங் போர்டில் பல சாகசங்களை குழந்தைகளுக்கு செய்து காட்டுகிறார். யுடியூபில் ஸ்கேட்டிங் வீடியோக்களையும் காண்பிக்கிறார்.

பிரேர்னாவையும் அழைத்து ஸ்கேட்டிங் செய்ய வைக்கின்றனர் இருவரும். முதல் முறையாக பிரேர்னாவிற்கு கைத்தட்டல்கள் கிடைக்கிறது. அவளுக்குள் ஒரு கனவு விதைக்கப்படுகிறது. ஸ்கேட்டிங் மீதான ஆர்வம் அதிகரிக்கிறது. அந்த ஆர்வம் பிரேர்னாவை துணிச்சலாக பல முடிவுகளை எடுக்க தூண்டுகிறது. இவர்களின் ஆர்வத்தைக் கண்டு, கிராமத்தில் இருக்கும் குழந்தைகளுக்கு ஸ்கேட்டிங் போர்டு வாங்கித் தருகிறார் ஜெசிகா. இதன் மூலம் ஆண்கள்-பெண்கள், மேல் சாதி-கீழ் சாதி என எந்த பாகுபாடும் இல்லாமல் குழந்தைகள் அனைவரும் ஒன்றாக விளையாடுகின்றனர். ஆனால் ஊருக்குள் இவர்களால் தொல்லை ஏற்படுவதாக அக்கிராம மக்கள் சேர்ந்து தெருக்களில் ஸ்கேட்டிங் செய்வதை தடை செய்கின்றனர்.

இதனால் ஜெசிகா தானே ஒரு ஸ்கேட்டிங் பார்க் உருவாக்க முயற்சிக்கிறார். கேம்பூரில் சாதி வாரியாக தண்ணீர் பம்புகள், இருப்பிடங்கள் அமைந்திருந்தாலும், இந்த ஸ்கேட்டிங் பார்க்கில் மட்டும் எந்த பாகுபாடும் இல்லை. அங்கு குழந்தைகள் அனைவருமே ஒன்றாக விளையாடலாம். அதே சமயம் பிரேர்னாவின் ஸ்கேட்டிங் கனவு நிறைவேறுமா என்பதை நோக்கி மீதி கதை நகர்கிறது.

பிரேர்னாவின் தாய், தனக்கு கிடைக்காத சுதந்திரம் தன் மகளுக்கு கிடைக்கட்டும் என்று நினைக்கிறார். ஆனால் கணவரின் அடக்குமுறைக்குள் அடங்கியே வாழ்கிறார். குடும்பத்தில் அவரது கருத்துகளோ, ஆலோசனைகளோ ஏற்றுக் கொள்ளப்படுவதே கிடையாது. இந்த சூழலில் வளரும் பிரேர்னாவிற்கு முப்பது வயதாகியும் திருமணம் செய்து கொள்ளாத ஜெசிகாவின் வாழ்க்கை ஆச்சரியத்தையே தருகிறது. தனக்கும் கனவு காணும் உரிமை இருக்கிறது என்பதை அறிந்ததும் அவளுக்கு வியப்பை ஏற்படுத்துகிறது.

பிரேர்னாவின் தம்பியாக வரும் அங்குஷ், தன் அக்காவின் கனவிற்கு துணையாக நிற்கிறான். ஆணாதிக்க சமுதாயத்தில் வளர்ந்தாலும், இன்னும் அதன் தாக்கம் அவன் மீது படரவில்லை. தன் சகோதரியிடம் அன்பாகவும், அவளது ஆசைகளை நிறைவேற்றவும் விரும்புகிறான்.இப்படத்தின் இயக்குனர் மஞ்சரி மக்கிஜானி, எழுத்தாளர், இயக்குனர், தயாரிப்பாளர் எனப் பல முகங்களை கொண்டவர். தி லாஸ்ட் மார்பிள் மற்றும் தி கார்னர் டேபிள் ஆகிய குறும்படங்களை இயக்கி விருதுகள் வென்றவர்.

இவர், புகழ்பெற்ற இயக்குனர்கள் கிறிஸ்டோபர் நோலன் (டன்கிர்க், தி டார்க் நைட்), பேட்டி ஜென்கின்ஸ் (வொண்டர் வுமன்) மற்றும் விஷால் பரத்வாஜ் (7 கூன் மாஃப்) போன்றோரிடம் உதவி இயக்குனராக பணியாற்றியுள்ளார். இவரது சகோதரி வினதி மக்கிஜானி, இப்படத்தை தயாரித்துள்ளார். சகோதரிகள் இருவரும் இணைந்தே இப்படத்தின் திரைக்கதையை உருவாக்கியுள்ளனர்.

ராஜஸ்தானின் கிராமங்களில் சாதிய பாகுபாடும் வேற்றுமையும் வேரூன்றி இருந்தாலும், இயக்குனர் அதை மேலோட்டமாகவே கையாண்டிருக்கிறார். அங்கு அனைத்து சாதி குழந்தைகளும் ஒன்றாக விளையாடுவது, பள்ளிக்குச் செல்வது போன்ற நிகழ்வுகள் உண்மைக்கு புறம்பாக இருப்பதாகவும் பலர் கூறி வருகின்றனர். இந்த திரைப்படத்திற்காக கட்டப்பட்ட ஸ்கேட் பார்க்கில் இப்போது அந்த கிராமத்தின் குழந்தைகள் தினமும் ஸ்கேட்டிங் செய்து வருகின்றனர். சுற்றுலா பயணிகள் வந்து போகும் இடமாகவும் அது மாறிவருகிறது. தொடர்ந்து அங்கு விளையாட்டுப் போட்டிகளும் நடக்கின்றன. தற்போது, ஸ்கேட் போர்டிங் 2021 ஒலிம்பிக்ஸ் விளையாட்டில் முதல் முறையாக அங்கீகரிக்கப்பட்டுள்ளதும் குறிப்பிடத்தக்கது.

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • cycle_sephiee1

  முட்டுக்காடு டூ மாமல்லபுரம்.. முதல்வர் ஸ்டாலின் உற்சாக சைக்கிள் பயணம்.. மக்களோடு டீ குடித்து அசத்தல்; செல்பி எடுத்து மகிழ்ந்தார்!!

 • iceberg-boat-23

  இது படகா...இல்ல பனிப்பாறையா...?: பிரான்ஸ் ஓவியரின் கில்லாடி ஐடியா..!!

 • thailand-taxi-23

  தாய்லாந்தில் காய்கறித் தோட்டங்களாக மாறிய டாக்சிகள்!: அட்டகாச புகைப்படங்கள்

 • haiti-refugees-21

  ஹைத்தியில் பாதுகாப்பில்லை, வேலையில்லை!: அமெரிக்காவில் தஞ்சமடைய எல்லையில் குவிந்த அகதிகள்..!!

 • drone-21

  புதுசு புதுசா கண்டுபிடிக்குறாங்கப்பா!: கம்போடியாவில் ஆள் ஏற்றி செல்லும் ட்ரோனை உருவாக்கி மாணவர்கள் அசத்தல்..!!

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்