SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

அன்பாலே அழகாகும் வீடு

2021-07-28@ 17:20:04

நன்றி குங்குமம் தோழி

செட்டிநாடு மேன்ஷன் வீடுகளை உங்கள் அப்பார்ட்மென்டிற்குள் கொண்டு வரலாம்!

தமிழ்நாட்டின் செட்டிநாடு பகுதி, அழகான வீடுகளுக்கும் சுவையான உணவுக்கும் பிரபலமானது. நூறாண்டு பழமைவாய்ந்த இந்த வீடுகளை மக்கள் காலப்போக்கில் மறந்து போயிருந்தாலும், இப்போது மீண்டும் நகரங்களில் செட்டிநாடு பாணியில் நவநாகரீக வீடுகள் கட்டமைக்கப்பட்டு வருகின்றன. செட்டிநாட்டில் மட்டுமே பிரபலமான இந்த வீடுகள், இப்போது நாடு முழுவதும் சுற்றுலா வரும் மக்கள் மூலம் அவர்களின் வீட்டிற்குள்ளும் செட்டிநாடு கட்டமைப்பு வாசம் செய்ய ஆரம்பித்துள்ளது.

சுமார் 96 கிராமங்களை உள்ளடக்கிய செட்டிநாடு அரண்மனை வீடுகள், வரலாற்று சிறப்பு மிக்கது. இந்த வீடுகள் ஒவ்வொன்றும் நூறாண்டுகளுக்கு முன்பு இருந்த கட்டடக்கலை, தொழில் நுட்பம் வாழ்க்கை முறையை தாங்கி இன்றும் பிரமாண்டமாக நிற்கிறது. 1850-1950களில் கட்டப்பட்ட இந்த வீடுகள் ஒவ்வொன்றும் ஒவ்வொரு கட்டடக் கலையை பறைசாற்றும் விதமாக அமைக்கப்பட்டுள்ளது. இங்கு வசித்து வந்த செட்டியார்கள், வணிகத்திற்காக தென்கிழக்கு ஆசியாவில் உள்ள பல நாடுகளில் வணிகம் செய்துள்ளனர்.

கிட்டத்தட்ட இருபதாம் நூற்றாண்டின் ஆரம்பம் வரை இவர்கள் அனைவரும் பெரும் செல்வந்தர்களாக வாழ்ந்தனர். அந்த காலகட்டத்தில், தென்னிந்தியாவின் பொருளாதாரத்திற்கு இவர்களது பங்கு மிக முக்கியமானதாக இருந்தது.இவ்வாறு வணிகம் செய்து வந்தவர்கள் தங்களின் சொந்த ஊரான காரைக்குடியினைச் சுற்றி அற்புதமான கலைவடிவில் அரண்மனையை போன்ற வீடுகளை கட்ட தொடங்கினர். இந்த மேன்ஷன் வீடுகளில் வழக்கமாக 60க்கும் மேற்பட்ட அறைகள் இருக்கும். மூன்று தலைமுறைகளையும் தாண்டி அனைவரும் ஒரே குடும்பமாக வசித்து வந்தனர். பல நாடுகளிலிருந்தும் சிறந்த கட்டடக்கலை பொருட்களை வரவழைத்து, தங்கள் வீடுகளின் ஒவ்வொரு அங்குலத்தையும் அழகாக அலங்கரித்தனர்.

முற்றம், வீடு முழுக்க ஜன்னல்கள், பிரமாண்டமான கதவுகள், செங்கல் சுவர்கள், டெரக்கோட்டா கூரைகள் என இயற்கையுடன் ஒன்றி இந்த வீடுகள் கட்டப்பட்டுள்ளன. வீட்டின் நுழைவுவாயிலிலிருந்து பார்த்தால், வீட்டின் கொள்ளைப்புறம் தெரியும்படி அதன் வாசல் வடிவமைக்கப்பட்டுள்ளன. வீட்டுக்குள் எங்கு திரும்பினாலும் ஜன்னல்களும் தூண்களும் நிறைந்திருக்கும். முகப்பில், இருபுறமும் திண்ணைகள் அமைந்திருக்கும். திண்ணைகளுக்கு நடுவே, செதுக்கப்பட்ட சிற்பக் கலையுடன் பிர மாண்டமான மரக்கதவு இருக்கும். வீடுகளின் உட்புற சுவர்கள், முட்டையின் வெள்ளைக் கரு, சுண்ணாம்பு, கடற் சிப்பிகள் என பல பொருட்களின் கலவையாக கட்டப்பட்டு இருப்பதால், நூறாண்டுகள் பழமையானாலும் அதன் பளபளப்பு மாறாமல் அப்படியே இருக்கும்.

இத்தாலி தூண்கள், பெல்ஜியம் விளக்குகள், பர்மா தேக்குகளாலும், ஆத்தங்குடி டைல்ஸ் என உலகின் பல மூலைகளிலிருந்தும் கட்டுமான பொருட்களைக் கொண்டு இந்த வீடுகள் எழுப்பப்பட்டுள்ளது.  இவ்வளவு சிறப்பு வாய்ந்த இந்த வீடுகள் பல இப்போது பூட்டி வைக்கப்பட்டுள்ளன. அல்லது வீட்டின் சில பகுதிகள் வாடகைக்கு விடப்பட்டுள்ளன. காரணம் இன்றைய தலைமுறையினர் பெரும்பாலும் நகரத்தில் அல்லது வெளிநாட்டில் வேலை செய்வதால், தங்கள் வீட்டின் ஒரு பகுதியை மட்டும் சுற்றுலா பயணிகள் கண்டு ரசிப்பதற்காக அனுமதித்துள்ளனர். அதனால் தற்போது மீண்டும் செட்டிநாடு வீடுகள் மீது மக்களின் கவனம் திரும்பியுள்ளது.

இவர்கள் பல மாநிலங்களில் வசித்து வந்தாலும், தங்கள் பூர்வீக வீடு மீது தனி உரிமையும் அக்கறையும் கொண்டுள்ளனர். பெங்களூரைச் சேர்ந்த கட்டிட வடிவமைப்பாளர் ஜோதிகா பலேரி, பழமையான சிறப்புடன் மார்டன் வீடுகளை வடிவமைத்து வருகிறார். குறிப்பாக சிறிய அடுக்குமாடிக்குடியிருப்பு வீடுகளுக்குள் செட்டிநாடு அரண்மனையின் அழகியலை கொண்டு வருவதில் கைதேர்ந்தவர். நகரங்களில் வீடுகளின் அளவு சுருங்கி வருவதால், மக்கள் குறைந்த செலவில் தங்களின் வீட்டை அழகாக அலங்கரிக்க விரும்புகிறார்கள். நவீன வடிவிற்குள் பாரம்பரியத்தை புகட்டி சுற்றுச்சூழலுக்கு உகந்த வகையில், பழைய பொருட்களை மறுபயன்பாடு செய்து ஜோதிகா வீடுகளை வடிவமைத்து வருகிறார்.

“2006ல் முதன் முறையாக பெங்களூரைச் சேர்ந்த ஒரு இளம் ஜோடி, சொந்த ஊரில் இருக்கும் தங்களது பூர்வீக வீடு இடிக்கப்படுவதாகவும், அதிலிருக்கும் தூண்கள் பயன்படாமல் தூக்கி எறியப்படுவதாகக் கூறினார்கள். பொதுவாகவே நாங்கள் நவீன வீடுகளாக இருந்தாலும், அதில் பழமையான பொருட்களை மறுபயன்பாடு செய்வது வழக்கம். அதனால் தூண்களைக் கொண்டு வாருங்கள் என்றேன். நான்கு தூண்கள் வந்திறங்கின. அந்த செட்டிநாட்டு வீட்டுத் தூண்களைப் பார்க்கவே மலைப்பாக இருந்தது.

எனது பூர்வீகம் தமிழகமாக இருந்தாலும், பெங்களூரில் செட்டிலாகியதால் அங்கிருக்கும் பாரம்பரியம் பற்றி எனக்கு அதுவரை தெரியவில்லை. செட்டிநாடு வீடுகளைப் பற்றி கேள்விப்பட்டிருக்கேன். ஆனால் அந்த தூண்களைப் பார்த்த பிறகு அதன் கட்டட அமைப்பு குறித்து முழுமையாக ஆய்வில் இறங்கினேன். நூறாண்டுகளுக்கு முன்பு இவ்வளவு கலை மற்றும் நவீனத்துடன் வீடு கட்ட முடியுமா என ஆச்சரியமாக இருந்தது. அவர்கள் கொண்டு வந்த நான்கு தூண்களையும் என்னுடைய வீட்டின் வரவேற்பு அறை மற்றும் பால்கனியில் பொருத்தினேன். வீட்டிற்கு புதிய கம்பீரத்தை கொடுத்தன’’ என்றவர் அதன் பிறகு அடுக்குமாடி குடியிருப்பை செட்டிநாட்டு முறையில் வடிவமைக்க ஆரம்பித்தார்.

‘‘2012ல் பெங்களூரில் ஒருவர் என்னை அணுகி, தன் முழு அப்பார்ட்மென்டையுமே செட்டிநாடு ஸ்டைலில் வடிவமைக்க சொன்னார். அந்த கட்டிடக் கலை எனக்குப் பல பெருமைகளையும் புகழையும் கொடுத்தது. பூர்வீக செட்டிநாடு வீட்டின் மரக் கதவுகளை பூஜை அறைக்குப் பொருத்தி, பெரிய ஊஞ்சலை சோஃபாவிற்கு மாற்றாக பயன்படுத்தி, செட்டிநாடு மரச்சாமான்களைக் கொண்டும் அலங்கரித்தேன். புதிதாக கட்டப்போகும் வீடுகளை சுலபமாக செட்டிநாடு ஸ்டைலில் வடிவமைக்க முடியும். ஆனால் ஏற்கனவே கட்டி முடிக்கப்பட்ட வீடாக இருந்தால், அதில் ஒரு சில மாற்றங்கள் மட்டுமே செய்ய முடியும்.

ஆத்தங்குடி டைல்ஸை விரும்புவோர், கட்டப்பட்ட வீட்டில் முழுவதுமாக தரையை மாற்ற முடியாது. ஆனால் சுவர்களை அலங்கரிக்க பயன்படுத்தலாம். ஆத்தங்குடி டைல்ஸ் பொதுவாகவே நம்மூர் கைவினைஞர்களால் தயாராகிறது. இவர்களை ஆதரிக்க வேண்டும் என்ற நோக்கத்தில் இன்று பலர் ஆத்தங்குடி டைல்ஸையே விரும்புகிறார்கள். இதுபோல, இப்போது யாருமே தங்காத பூர்வீக வீடுகளிலிருக்கும் பொருட்கள், கதவு, தூண்கள் போன்றவற்றையும் நம் நவீன வாழ்க்கைக்கு தகுந்தார் போல மாற்றி உபயோகிக்க முடியும்” என்கிறார்.

ஜோதிகா பலேரி, 2021ம் ஆண்டின், “Innovative Interior Designer” விருதை வென்றுள்ளார். இருபது வருட அனுபவத்துடன் இந்தியாவில் பல மாநிலங்களில் இவரால் வடிவமைக்கப்பட்ட வீடுகளும் அலுவலகங்களும் இருக்கின்றன. அந்த காலத்துக் கட்டிடங்கள் நூறாண்டுகள் வரை புதிது போலவே இருக்கும் போது, இப்போது கட்டப்படும் வீடுகள் பத்தாண்டிற்குள் விரிசல் விழுகின்றன. ஜோதிகா பலேரி, பழைய கட்டுமான ஸ்டைலில், பாரம்பரியத்தை பிரதிபலிக்கும் பாணிகளில் வீடுகளை நவநாகரீக வசதிகளுடன் வடிவமைப்பதை குறிக்கோளாக கொண்டு இயங்கி வருகிறார்.

தொகுப்பு: ஸ்வேதா கண்ணன்

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • cycle_sephiee1

  முட்டுக்காடு டூ மாமல்லபுரம்.. முதல்வர் ஸ்டாலின் உற்சாக சைக்கிள் பயணம்.. மக்களோடு டீ குடித்து அசத்தல்; செல்பி எடுத்து மகிழ்ந்தார்!!

 • iceberg-boat-23

  இது படகா...இல்ல பனிப்பாறையா...?: பிரான்ஸ் ஓவியரின் கில்லாடி ஐடியா..!!

 • thailand-taxi-23

  தாய்லாந்தில் காய்கறித் தோட்டங்களாக மாறிய டாக்சிகள்!: அட்டகாச புகைப்படங்கள்

 • haiti-refugees-21

  ஹைத்தியில் பாதுகாப்பில்லை, வேலையில்லை!: அமெரிக்காவில் தஞ்சமடைய எல்லையில் குவிந்த அகதிகள்..!!

 • drone-21

  புதுசு புதுசா கண்டுபிடிக்குறாங்கப்பா!: கம்போடியாவில் ஆள் ஏற்றி செல்லும் ட்ரோனை உருவாக்கி மாணவர்கள் அசத்தல்..!!

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்