SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

கிச்சன் டிப்ஸ்

2021-07-28@ 17:11:45

நன்றி குங்குமம் தோழி

*முட்டை கோஸ், பீன்ஸ், பட்டாணி போன்ற காய்கறிகளை நன்றாக குழைந்து வேகவைக்க, முதலில் உப்புப் போடாமல் வேகவைத்து, வெந்த பிறகு உப்பு சேர்த்தால் நன்கு குழைந்து வெந்துவிடும்.

*இட்லி பொடி அரைக்கும் போது, ஒரு டேபிள் ஸ்பூன் சீரகத்தை வறுத்து, பருப்புடன் சேர்த்து அரைத்தால் நல்ல மணமாகவும், சுவையாகவும் இருக்கும்.

*வடை, போண்டா போன்றவற்றை எண்ணெயில் பொரிக்கும் போது, அதிக எண்ணெய் குடிக்காமல் இருக்க, எண்ணெய் காயும்போது சிறிது உப்பு போட்டால் எண்ணெய் குடிக்காமல் இருக்கும்.

*பன்னீர் மசாலா செய்யும் போது, பன்னீரை வறுத்தவுடன் உப்புத் தண்ணீரில் சிறிது நேரம் போட்டால் பன்னீர் பஞ்சு போல் மிருதுவாக இருக்கும்.

- ஏ.எஸ்.கோவிந்தராஜன், சென்னை.

*தேங்காய்ப்பால் எடுக்கும்போது சிறிது சமையல் உப்பைச் சேர்த்தால் நிறைய பால் வரும்.

*அப்பம் செய்ய மாவு சேர்க்கும்போது சிறிது சுக்கைத் தட்டிப் போட்டால் ருசியாக இருக்கும் வயிறை உப்பவும் விடாது.

*புளித்த தோசை மாவில் சுக்குப்பொடி கலந்து ஊத்தப்பம் செய்தால் சுவையாக இருக்கும். எளிதில் ஜீரணமாகும்.

*சப்பாத்திக்காக கோதுமை மாவைப் பிசையும்போது சிறிது நெய் அல்லது நல்லெண்ணெய் கலந்து பிசைய வேண்டும். அப்படி பிசைந்து அரை மணி நேரம் கழித்துப் பயன்படுத்தினால், சப்பாத்தியானது சுவையாகவும், மிருதுவாகவும் இருக்கும்.

- கே.பிரபாவதி, கன்னியாகுமரி.

*வாழைப்பூவை நறுக்கி வேக வைக்கும்போது ஒரு டீஸ்பூன் வெந்தயம் சேர்த்தால் துவர்ப்பு தெரியாது. உடம்புக்கும் நல்லது.

*தட்டை செய்ய பச்சரிசியை விட, புழுங்கல் அரிசி சிறந்தது. புழுங்கலரிசியைக் களைந்து, உலர்த்தி, மாவாக்கி சலித்துவிட்டு தட்டை செய்தால் சுவையும், கரகரப்பும் கூடும்.

*பஜ்ஜி மாவில் கற்பூரவல்லி இலைகளை அரைத்துச் சேர்த்தால் மணமாக இருப்பதோடு, வயிற்றுக்கோளாறும் வராது.

- ஆர்.பத்மப்ரியா, ஸ்ரீ ரங்கம்.

*ஊற வைத்த அவலுடன் நெல்லிக்காய், உப்பு, இஞ்சி சேர்த்தரைத்த விழுதை சேர்த்துக் கிளறவும். அதனுடன் தேங்காய்த்துருவல், கறிவேப்பிலை சேர்த்துக் கலந்தால் ‘ஆம்லா அவல்’ தயார்.

*செம்பருத்திப்பூக்களை சிறியதாக நறுக்கி, உப்பு, நீர் சேர்த்துக் கொதிக்க விடவும். கொதித்ததும் அதனுடன் மாம்பழ விழுதை சேர்க்கவும். நெய்யில் கடுகு, காய்ந்த மிளகாய் தாளித்து சேர்க்கவும். ‘செம்பருத்திப்பூ’ கொத்சு தயார்.

*வறுத்த சேமியாவுடன், மிளகு, சீரகத்தூள், வறுத்த உளுந்தம்பருப்பு, பெருங்காயம், கெட்டித்தயிர், உப்பு, இஞ்சித்துருவல், நறுக்கிய பச்சை மிளகாய் சேர்த்து கலந்து அரை மணி நேரம் ஊற வைத்து, இட்லித்தட்டில் ஊற்றி ஆவியில் வேக வைத்து எடுக்கவும். ‘சேமியா இட்லி’ மிகவும் அருமையாக, வித்தியாசமாக இருக்கும்.

- எஸ்.வளர்மதி, கன்னியாகுமரி.

*சாம்பார் அதிக நேரம் கெட்டுப் போகாமல் இருக்க, பருப்பு வேகும்போது 2 கிராம்பு சேர்த்தால் கெடாது.

*இட்லி பொடி அரைக்கும்போது சிறிது வேர்க்கடலை சேர்த்து அரைத்தால் சுவையாக இருக்கும்.

*டீ தயாரிக்கும்போது சிறிது புதினா இலையை போட்டால் புத்துணர்ச்சியும், சுவையும் இருக்கும்.

- ஆர்.பிரகாசம், திருவண்ணாமலை.

*எள்ளடை மாவில் பூண்டு உரித்து நசுக்கிப் போட்டு கலந்து எள்ளடை சுடுங்கள். மணமாகவும், சுவையாகவும் இருக்கும்.

*கொழுக்கட்டைக்கு மாவு கிளறும்போது நீருடன் ஒரு கரண்டி பால் விட்டுக் கிளறினால் கொழுக்கட்டை விரிந்து போகாமல் இருக்கும்.

*சப்பாத்தி மாவு பிசையும்போது கால் டம்ளர் பால் விட்டுப் பிசைந்தால் ஒருதுளிகூட எண்ணெய் விடாமலே ‘புஸ்’ என்று மிருதுவான சப்பாத்தி கிடைக்கும்.

- ஹெச்.ராஜேஸ்வரி, சென்னை.

* பருப்பு உசிலிக்கு அரைத்த பிறகு அதை இட்லித்தட்டில் ஆவியில் வேக வைத்து பிறகு உசிலி செய்தால், எண்ணெய் அதிகம் பிடிக்காது. உடம்பிற்கும் நல்லது.

*பாகற்காய் பிட்லை செய்வதற்கு முன் அரிந்த பாகற்காயை எண்ணெய் விட்டு வாணலியில் வதக்கி பிறகு தயாரியுங்கள். கசப்பே தெரியாது.

*கார்த்திகை பண்டிகையின் போது அவல் மற்றும் பொறி உருண்டை செய்வது வழக்கம். அப்போது, பிடிப்பதற்கு முன் இரு கையிலும் நெய் தடவிக்கொண்டு பிடிக்க சுலபமாக இருப்பதுடன், உருண்டைகள் வாசனையாகவும் இருக்கும்.

- இந்திரா, திருச்சி.

*எண்ணெய் பலகாரங்களை டப்பாவில் வைக்கும்போது உப்பை துணியில் முடிந்து அதனுள் போட்டு வைத்தால் காரல் வாடை வராது.

*கறிவேப்பிலையை அலுமினியப் பாத்திரத்தில் போட்டு மூடி வைத்தால் வாடிப்போகாமல் பச்சை பசேல் என்று அப்படியே இருக்கும்.

- தஞ்சை ஹேமலதா, தஞ்சை.

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • tngovt05

  சென்னை துறைமுகம் சட்டமன்ற தொகுதியில் வசிக்கும் 250 வசிக்கும் குடும்பங்களுக்கு இலவச அரிசி மளிகை பொருட்கள் மற்றும் தலா ஆயிரம் ரூபாய் உதவி தொகை வழங்கப்பட்டது.

 • Chennai 05

  சென்னையில் அதிக பனி பொழிவில் செல்லும் வாகனங்கள்

 • Governer

  கடற்படை தினத்தையொட்டி சென்னை தீவுத்திடல் உள்ள போர் நினைவு சின்னத்தில் கவர்னர் ஆர்.என்.ரவி மரியாதை

 • planet Vaikundam

  ஜொலிக்கும் பூலோக வைகுண்டம்

 • 04-12-2021

  04-12-2021 இன்றைய சிறப்பு படங்கள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்