SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

வட்ஜ்தா

2021-07-20@ 17:33:07

நன்றி குங்குமம் தோழி

ஹை    ஃபா அல் மன்சூர் எழுதி இயக்கிய 2012 சவுதி அரேபிய திரைப்படம், வட்ஜ்தா. இது சவுதி அரேபியாவின் முதல் பெண் இயக்குனர் தயாரித்து, அந்நாட்டில்  படமாக்கப்பட்ட முதல் முழுத் திரைப்படமாகும். வட்ஜ்தா உலகம் முழுவதும் பல திரைப்பட விழாக்களில் ஏராளமான விருதுகளை வென்றுள்ளது. ஆஸ்கர் விருதுகளுக்கு பரிந்துரைக்கப்பட்ட முதல் சவுதி அரேபிய திரைப்படமும் இதுதான். 2013 லாஸ் ஏஞ்சல்ஸ் திரைப்பட விழாவில் சிறந்த சர்வதேச அம்சத்திற்கான பரிசையும், வெனிஸ் திரைப்பட விழாவில் அமைதிக்கான சினிமா பரிசு உட்பட மூன்று விருதுகளையும் வட்ஜ்தா பெற்றுள்ளது.

2000களில், தலைநகர் ரியாத்தில் தன் தாயுடன் வசித்து வரும் பத்து வயது சிறுமி வட்ஜ்தாவின் கதையை மையமாகக் கொண்டு இப்படம் நகர்கிறது. துறுதுறுவென வளரும் வட்ஜ்தா மேற்கத்திய பாப் இசையைக் கேட்கிறாள், ஸ்போர்ட்ஸ் ஷூ அணிந்து பள்ளிக்குச் செல்கிறாள், நெயில் பாலிஷ் அணிகிறாள், சில சமயம் தன் தலையை சரியாக மறைக்காமலும் வெளியில் செல்கிறாள். இதெல்லாம் சவுதி அரேபிய கலாச்சாரப்படி ஒழுக்கத்திற்கு எதிரான செயல்கள். மதக் காவலர்கள் எதிர்க்கும் செயல்கள்.

அவள் பள்ளிக்குச் செல்லும் வழியில் அப்துல்லா எனும் சிறுவனின் நட்பு கிடைக்கிறது. ஒரு முறை அப்துல்லா தன் சைக்கிளில் வட்ஜ்தாவை துரத்திச் சென்று அவளை வெறுப்பேற்றுகிறான். இதனால் வட்ஜ்தா தானும் ஒரு சைக்கிள் வாங்கி அப்துல்லாவை சைக்கிள் பந்தயத்தில் தோற்கடிக்க வேண்டும் என்று முடிவு செய்கிறாள். இந்த விஷயத்தை தன் தாயிடம் வட்ஜ்தா கூறியதும், பெண்கள் சைக்கிள் ஓட்டுவதா என உடனே அவர் மறுப்பு தெரிவித்து, சைக்கிளுக்கு தடை போடுகிறார்.

சவுதி அரேபியாவில் பெண்கள் குறிப்பிட்ட வேலைகளில் பணிபுரிய அனுமதியிருந்தாலும், அவர்கள் வாகனம் ஓட்ட அனுமதி இல்லை. இதனால்  வேலைக்குச் செல்லும் பெண்கள் அனைவரும் டாக்சியில்தான் பயணிக்கிறார்கள். வட்ஜ்தாவின் தாயும் அப்படித்தான் வேலைக்குச் செல்கிறார். ஆனால் தினமும் டாக்சி ஓட்டுனருடன் பிரச்சனை ஏற்படுகிறது. டாக்ஸி வராவிட்டால், அன்று பெண்களால் வேலைக்குச் செல்ல முடியாது. இந்த சட்டங்கள் பெண்களுக்கு பெரும் இன்னல்களைக் கொடுத்தாலும், அதை ஏற்று வாழ இவர்கள் பழகிக்கொண்டுள்ளனர்.

இதற்கிடையே வட்ஜ்தாவின் தந்தைக்கு இரண்டாம் திருமணம் செய்ய ஏற்பாடுகள் நடந்து வருகிறது. வட்ஜ்தாவின் தாயால் இனி குழந்தை பெற முடியாது என்பதால் ஆண் குழந்தைக்காக வேறு ஒரு திருமணம் செய்ய தந்தையின் குடும்பத்தினர் முயல்கின்றனர். வட்ஜ்தாவின் தாயோ, தன் கணவர் தன்னை காயப்படுத்தும் எந்தவொரு செயலையும் செய்யமாட்டார் என உறுதியாக நம்புகிறார்.

வட்ஜ்தா, இந்த கவலைகள் எதுவும் இன்றி சைக்கிள் வாங்கும் கனவில் இருக்கிறாள். அவளுக்கு பிடித்த, அந்த பச்சை சைக்கிளின் விலை 800 ரியால்கள். அந்த பணத்தை தானே சம்பாதிக்க முடிவு செய்து, நண்பர்களுக்கு பாப் இசை கேசட்டுகள், ஃப்ரெண்ட்ஷிப் பேண்ட் போன்ற பொருட்களை விற்கிறாள். ஆனால் ஒரு நாள் பள்ளி தலைமை ஆசிரியர் இதைக் கண்டுபிடித்து, வட்ஜ்தாவை கண்டிக்கிறார். அவளது அம்மாவுக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டு வட்ஜாவிற்கு மேலும் சிக்கல் உண்டாகிறது.  

வட்ஜ்தா சற்றும் மனம் தளராமல், சைக்கிள் வாங்குவதில் உறுதியாக இருக்கிறாள். பள்ளியில் திடீரென குர்ஆன் போட்டி அறிவிக்கப்பட்டு, அதில் வெற்றிப்பெறுபவருக்கு ஆயிரம் ரியால் பரிசுத்தொகையும் அறிவிக்கப்படுகிறது. அதில் கலந்துகொள்ளும் வட்ஜ்தா போட்டியை வென்று சைக்கிள் வாங்குகிறாளா? அவளது தந்தைக்கு இரண்டாம் திருமணம் நடக்கிறதா என்பது மீதிக் கதை. 10 வயது வட்ஜ்தா ஆசைப்படுவது சாதாரண சைக்கிளைத்தான் என்றாலும், மறைமுகமாக அவள் சுதந்திரத்தையே விரும்புகிறாள். சைக்கிள் தான் அவளது சுதந்திரம். அங்கு பெண்கள் ஒடுக்கப்பட்டவர்களாக இருந்தாலும், பலவீனமானவர்களாக இல்லை. வெளியில் கண்ணுக்குத் தெரியாதவர்களாக இருந்தாலும், வீட்டிற்குள் சிந்தனையுள்ளவர்களாக பாட்டுப்பாடி, நடனமாடி வாழ்க்கையை கொண்டாடுகின்றனர்.

மூன்று கோடி மக்கள் வாழும் ஒரு நாட்டில், பெண்களுக்கு எதிரான ஒடுக்குமுறையை, பத்து வயது சிறுமியின் வாயிலாக அழகாக இயக்குனர் விவரித்துள்ளார். படத்தில் வரும் ஒவ்வொரு காட்சியும் அங்கு வாழும் பெண்கள் சந்திக்கும் ஒடுக்குமுறையை கூறுகிறது. உலகில் பல நாடுகளில் வசிக்கும் பெண்கள் சாதாரணமாக கடந்து செல்லும் பல உரிமைகளும் சவுதி அரேபியாவில் வாழும் பெண்களுக்கு மறுக்கப்பட்டுள்ளன. சத்தமாக பேசுவது, சிரிப்பது எனத் தொடங்கி ஆண் துணையில்லாமல், தனியாக வெளியே செல்வது வரை பல தடைகள். இயக்குனர் அல் மன்சூர் இப்படத்தின் சில காட்சிகளை காரிலிருந்தபடி இயக்கினாராம். ஒரு பெண் சுதந்திரமாக திரைப்படத்தை இயக்கினால் தேவையில்லாத போராட்டங்கள் வெடித்து திரைப்படம் முழுமையடைவதில் பிரச்சனையாகும் என்பதால், காரிலிருந்து பல காட்சிகளை இயக்கியுள்ளார்.

2013ல் சவுதி அரேபிய அரசு, பெண்கள் சைக்கிள் ஓட்டுவதை அனுமதித்திருந்தாலும், அதில் பல கட்டுப்பாடுகளையும் விதித்துள்ளது. அவர்கள் அபயா எனப்படும் இஸ்லாமிய பெண்கள் அணியும் உடையை அணிந்து, குறிப்பிட்ட பூங்காக்கள் மற்றும் கடற்கரைகளில் மட்டும் தங்கள் குடும்பத்தைச் சேர்ந்த ஓர் ஆண் துணையுடன் சைக்கிள் ஓட்டலாம் என்றது அந்த சட்டம். பின் 2019ல் பெண்களுக்கு ஓட்டுனர் உரிமம் வழங்கப்பட்டு கார் ஓட்ட அனுமதி அளிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

ஜூன் 2017ல் இளவரசர் முகமது பின் சல்மான் சவுதி அரேபியாவில் ஆட்சிக்கு வந்த பின், பெண்களுக்கு சாதகமான பல திருத்தங்கள் கொண்டு வந்து உலகளவில் கவனத்தைப் பெற்றார். 2019ல் பெண்கள் பாஸ்போர்ட் வாங்கவும், வெளிநாடுகளுக்குப் பயணம் செல்லவும், ஆண் பாதுகாவலர்களின் அனுமதி தேவையில்லை என்றார்.

பெண்களின் உடையும் இங்கு கண்டிப்புடன் கடைப்பிடிக்கப்படுகிறது. அங்கு ஒரு பெண் ஜீன்ஸ் அணிந்து சென்றாலே, விவாத மேடைகளில் காரசாரமான எதிர்ப்புகள் எழும். சவுதியில் பெரும்பாலான பொதுத்  துறை நிறுவனங்களில், கல்லூரிகளில் ஆண்களுக்கும் பெண்களுக்கும் தனித்தனியான நுழைவு வாயில் அமைக்கப்பட்டிருக்கும். ஆனால், 2019ல் உணவகங்களில் இனி ஆண்களும் பெண்களும் ஒரே நுழைவாயிலை பயன்படுத்தலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

2018ற்கு மேல் சவுதி அரேபியாவில் பெண்களின் உரிமைகளை காக்கும் விதத்தில் பல சட்டங்கள் நிறுவப்பட்டுள்ளன. அவர்களை விளையாட்டுப் போட்டிகளில் அனுமதிப்பதில் தொடங்கி, குறிப்பிட்ட பணிகளிலும் கூடுதலாக ஈடுபடலாம் என விதிமுறைகள் தளர்த்தப்பட்டுள்ளன.  இரண்டாண்டுகளுக்கு முன், பெண்கள் திருமணத்தையும் விவாகரத்தையும் பதிவு செய்ய ஆண் பாதுகாவலரின் அனுமதி தேவையில்லை என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. இப்படி மாற்றத்திற்கான நம்பிக்கையையும், அடுத்த தலைமுறை இளைஞர்களுக்கு சுதந்திரமான எதிர்காலத்தையும் கொஞ்சம் கொஞ்சமாக சவுதி அரேபியா உருவாக்கிக்கொண்டிருக்கிறது.

தொகுப்பு: ஸ்வேதா கண்ணன்

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • china-1000-rains

  சீனாவில் 1,000 ஆண்டுகளில் இல்லாத அளவு கொட்டி தீர்த்த பெருமழை!: தண்ணீரில் தத்தளிக்கும் மக்கள்..!!

 • girlss_saydi

  சவுதி அரேபியாவில் உள்ள மெக்கா, மதினாவில் பாதுகாப்பு பணியில் முதல் முறையாக பெண் ராணுவத்தினர்!!

 • amesaann11

  அமேசான் நிறுவனர் ஜெப் பெசாஸின் முதல் விண்வெளி சுற்றுலா பயணம் : மெய்சிலிர்க்க வைக்கும் படங்கள்!!

 • marina-sculptures22

  மெரினாவின் அழகை மெருகூட்டும் பிரம்மாண்ட உலோக சிற்பங்கள்!: சென்னை மாநகராட்சியின் சிறந்த முயற்சி..!!

 • 5starrrr

  5 -ஸ்டார் ஹோட்டல்.. பிரார்த்தனை கூடம், குழந்தைகளுக்கு பாலூட்டும் அறை : விமான நிலையம் பாணியில் குஜராத் ரயில் நிலையம்!!

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்