SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

வெளித்தெரியா வேர்கள்

2021-07-20@ 17:13:22

நன்றி குங்குமம் தோழி

டாக்டர் ஷீலா சிங் பால்

கிரேக்க வார்த்தையான ‘paidia’ என்பதற்கு விளையாட்டு என்ற பொருளும், ‘paideia’ என்பதற்கு கற்பித்தல் என்பதும் பொருள் என்கின்றனர். பீடியா (paedia) என்ற கற்பித்தலையும், விளையாட்டையும் ஒன்று சேர்த்த நமது நாட்டின் முதல் paediatrician டாக்டர் ஷீலா சிங் பால்! தனது அயராத உழைப்பால், உடல்நலமற்ற குழந்தைகளை மீண்டும் விளையாடச் செய்ததோடு, குழந்தைநல மருத்துவத்தை கற்பிக்கவும் செய்தவர்.

மருத்துவர்களிலேயே கடினமான வேலை குழந்தைகள் நல மருத்துவராக இருப்பதுதான். ஏனென்றால், தனக்கு எது வந்தாலும் தாங்கிக்கொள்ளக் கூடிய பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளுக்கு உடல்நிலை சரியில்லாமல் இருப்பதை மட்டும் தாங்கிக்கொள்ளவே மாட்டார்கள். மற்ற மருத்துவர்கள் எல்லாம் நோயாளிகளைக் குணப்படுத்தினால் போதும். ஆனால், குழந்தைகள் நல மருத்துவர் மட்டும் எப்போதும் நோயாளிக்கு மட்டுமன்றி அவர்களது பெற்றோர்களின் கவலைகளுக்கும், எதிர்பார்ப்புகளுக்கும் சேர்த்தே சிகிச்சை அளிக்க வேண்டியிருக்கும். இவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்த ஒரு துறையை ஒரு நாட்டிற்குள் முதன்முதலாகக் கொண்டுவந்து, அதனை ஒரு முழுமையான அமைப்பாக மாற்றிட, ஒருவர் எத்தனை முயற்சிகளை  மேற்கொண்டிருக்க வேண்டும்..?

டாக்டர் ஷீலா சிங் பால்..! இந்தியாவின் முதல் குழந்தைகள் நல மருத்துவர் என்ற பெருமைமிக்க இவர் பிறந்தது, 1916ம் ஆண்டு, பீகார் மாநிலத்தின் ஜாரியாவில் (தற்போதைய ஜார்கண்ட்). அவரது யூதப் பெற்றோர்கள், 1900களில் ஜாரியாவில் நிலக்கரி வியாபாரத்திற்காக இந்தியாவில் குடியேற, அவர்களது மகள் சிறுமி ஷீலா தெரேசா மார்ட்டினும் இங்கேயே வளர வேண்டியதாகிவிட்டது. நல்ல வசதியான குடும்பத்தில் பிறந்த புத்திசாலிப் பெண்ணான ஷீலாவுக்கு, முறையான கல்வியை லோரிட்டோ கான்வென்ட் மற்றும் இசபெல்லா கல்லூரியில் அளித்ததுடன், ஷீலாவிற்குப் பிடித்தமான மருத்துவத்துறையை பயிலவும் வைத்தனர் அவளது பெற்றோர்.

டெல்லியின் லேடி ஹார்டிங் பெண்கள் மருத்துவக் கல்லூரியில் மருத்துவம் பயின்ற ஷீலா மார்ட்டின், தனது கிளினிக்கல் பயிற்சியின்போது ஊட்டச்சத்து குறைபாடுகள் (Protein Energy Malnutrition) காரணமாக பல குழந்தைகள் தீவிர சிகிச்சையில் அனுமதிக்கப்படுவதையும், அவற்றில் பெரும்பான்மைக் குழந்தைகள் மரணிப்பதையும் வேதனையுடன் பார்த்ததாலேயே, தன்னுடைய துறையாக குழந்தைகள் நலத்தை தேர்வு செய்தேன் என்கிறார். ஆம். குழந்தைகள் நலம்தான் தனக்கான துறை என்பதை இளநிலை மருத்துவத்தின் போதே முடிவு செய்த டாக்டர் ஷீலா, பின்னர் கொல்கத்தாவின் லேடி டஃப்ரின் விக்டோரியா மருத்துவமனையில் பயிற்சியில் இருந்தபோது சந்திக்க நேரிட்ட ஒரு சிறுவனின் டெட்டனஸ் என்ற கொடூரமான நோய்த்தொற்றின் பாதிப்புகள் அவரது முடிவை இன்னும் உறுதியாக்கின.

மேற்படிப்புக்காக இங்கிலாந்து சென்ற ஷீலா, பெருமைமிகு  ‘தி ராயல் காலேஜில்’ சேர்ந்தபோது அவர் தேர்ந்தெடுத்தது குழந்தை நல மருத்துவத்தைத் தான். படிக்கும்போதே, வெப்ப மண்டல நாடுகளின் நோய்த்தொற்று மற்றும் அவற்றிற்கான நவீன சிகிச்சை முறைகள் பற்றி ஆய்வுகள் செய்ததுடன், தடுப்பூசிகளின் நோய்தடுப்பு முறை பற்றிய அறிவியலிலும் கவனத்தை செலுத்தி DTM என்ற நோய்த்தொற்றிற்கான சிறப்புப் பட்டத்தையும் பெற்ற பிறகு, தாயகம் திரும்ப முடிவெடுத்தாலும் விதி அவ்வளவு சுலபமாய் அவரை விடவில்லை.

புறப்படும் முன் தனது தந்தை கேட்டுக் கொண்டதன் பேரில் ஃபிரான்ஸில் உறவினர்களை சந்திக்கச் சென்ற ஷீலா, சென்ற இடத்தில் ஒரு பிணைக் கைதியாக மாட்டிக் கொண்டார். ஆம்.. இரண்டாம் உலகப் போரின்போது, 1942ம் ஆண்டு ஏற்பட்ட யூதர்களின் ஹோலாகாஸ்டில் ஒரு விபத்து போல சிக்கிக்கொண்ட டாக்டர் ஷீலா, ஃபிரான்ஸ் நாட்டின் ட்ரான்சி கேம்ப்பில் அடைக்கப்பட்டார். தகவல்களை அறிந்த அப்போதைய இந்திய செஞ்சிலுவை இயக்கத்தின் தலைவரான ராஜகுமாரி அம்ரித், டாக்டர் ஷீலா நாடு திரும்புவதற்கான ஏற்பாடுகளை மேற்கொள்ள பெரும் சிரமங்களுக்குப் பிறகு திரு பல்வந்த் சிங் என்ற காவல்துறை அதிகாரியின் உதவியுடன் இந்தியா வந்தடைந்தார் டாக்டர் ஷீலா.

1943ல் தனது இருபத்தி ஏழாம் வயதில், அதே பல்வந்த் சிங்கைத் திருமணம் செய்து கொண்ட டாக்டர் ஷீலா பால் சிங்கிற்கு, கணவர் மூலமாகவே இந்திய ராணுவத்தில் சிறப்பு மருத்துவராக பணிபுரியும் வாய்ப்புக் கிடைத்தது.சில ஆண்டுகள் அங்கு பணிபுரிந்தபின், தான் பயின்ற லேடி ஹார்டிங் மருத்துவக் கல்லூரியில் தானே ஒரு பேராசிரியராகப் பொறுப்பேற்ற பெருமைமிகு கணத்தை மகிழ்ச்சியுடன் நினைவுகூறும் டாக்டர் ஷீலா சிங், அதன்பின் தனது துறையில் வியத்தகு மாற்றங்களை ஏற்படுத்தினார். தனக்குத் தெரிந்த சிறந்த கொடையாளர்களிடமிருந்து நிதித் திரட்டியவர், அந்தப் பணத்தில் டெல்லியின் முக்கியப் பகுதியில் ஆசியாவிலேயே மிகப்பெரிய குழந்தைகளுக்கான பிரத்யேக அரசு மருத்துவமனையான ‘‘கலாவதி சரண் குழந்தைகள் மருத்துவமனை”யை உருவாக்கியதோடு, தனது கடின உழைப்பாலும், பெரும் முயற்சிகளாலும் அதை மேன்மேலும் வளரச் செய்தார்.

தனது பேராசிரியர்களின் வழிகாட்டுதல்களுடன்தினமும் நூற்றுக்கணக்கான குழந்தைகளுக்கு மருத்துவ சிகிச்சை, குழந்தைகளுக்கான தீவிர சிகிச்சைப் பிரிவு, மருத்துவர்களுக்கும், மருத்துவப் பணியாளர்களுக்கும் சிறப்புப் பயிற்சிகள், குழந்தைநலப் பிரிவில் தொற்றுநோய் மற்றும் ஊட்டக்குறை சார்ந்த ஆராய்ச்சிகள் என கலாவதி சரண் மருத்துவமனையை தொய்வின்றி முன்னேற்றிக் கொண்டிருந்தார். தனது வெளிநாட்டுத் தொடர்புகள் மூலம் டாக்டர் லிபோவ், டாக்டர் ஓசிபோவ் போன்ற சிறப்பு மருத்துவர்களை ரஷ்ய நாட்டிலிருந்து வரவழைத்து, தனது மாணவர்களுக்கு சிறப்புப் பயிற்சிகள் வழங்கி குழந்தைகள் நலத்துறைக்கு வலிமை சேர்த்துக் கொண்டிருக்கும்போதே இன்னொரு முக்கியமான விஷயத்தையும் அவர் கையிலெடுத்தார்.

இந்தியாவில் அப்போது குழந்தைகளிடையே போலியோ பாதிப்புகள் அதிகம் இருக்க, இந்தியாவில் போலியோ ஒழிப்புக் குழுவைத் தொடங்கிய ஷீலா, ரஷ்யாவிலிருந்து வரவழைக்கப்பட்ட போலியோ சொட்டு மருந்தினை குழந்தைகளுக்கு தரச்செய்தது மட்டுமன்றி, ஏற்கனவே போலியோ நோயால் கை கால்கள் செயலிழந்த குழந்தைகளுக்கான இயன்முறை மருத்துவ சிகிச்சையைத் தொடங்க அதற்கான எலக்ட்ரானிக் கருவிகளையும் தருவித்தார்.

போலியோ மட்டுமின்றி, குழந்தைகளை பாதிக்கும் அம்மை நோய், காசநோய் போன்ற தொற்று நோய்களுக்கும் முறையான சிகிச்சைகளை வழங்கிய டாக்டர் ஷீலா, நோய் குறித்த விழிப்புணர்வை பெற்றோர்களுக்கு தொடர்ந்து ஏற்படுத்தியும் வந்தார். கூடவே, யூபிஎஸ்சியின் முக்கிய உறுப்பினராகவும் செயல்பட்டவர், ஆசிய அளவில் பல்வேறு மருத்துவ மாநாடுகளை நடத்தி மருத்துவர்களை மேம்படுத்தியதோடு, உலக சுகாதார அமைப்பு மற்றும் யுனிசெஃப் போன்ற இயக்கங்களின் தேசிய உறுப்பினராகவும் இருந்தார். அனைத்திற்கும் மேலாக, குழந்தைநல மருத்துவப் படிப்பை இந்தியாவிற்குள் கொண்டுவரச் செய்து, அடுத்த தலைமுறையைக் காக்கும் பணிக்கு வித்திட்டார். இந்திய குழந்தைநல மருத்துவர்கள் அமைப்பு (IAP) ஒன்றைத் துவங்கி நாடெங்கும் குழந்தைநலம் சார்ந்த அனைத்து செயல்பாடுகளுக்கும் மூல விதையாகத் திகழ்ந்தவரும் இவர்தான்.

“குணமடைந்த குழந்தை மீண்டும் விளையாடுவதைப் பார்த்து, பெற்றோர் வடிக்கும் ஆனந்தக் கண்ணீரைக் காட்டிலும் சிறந்ததொரு பரிசு குழந்தைநல மருத்துவருக்கு இல்லை..” என்கிற டாக்டர் ஷீலாவின் அர்ப்பணிப்பு உணர்வுக்கு இந்தியா மட்டுமின்றி, ரஷ்யா உள்ளிட்ட பல நாடுகளும் பல முறை விருதுகளை வழங்கி சிறப்பித்தது. தொற்றுநோய் மற்றும் ஊட்டமின்மை குறித்த இவரின் பல்வேறு ஆராய்ச்சிகளை சர்வதேச மருத்துவ இதழ்கள் தொடர்ந்து பிரசுரித்தன.

வறுமைக் கோட்டிற்கு கீழே வாழ்ந்த மக்களின் நலனுக்காக தனது வாழ்வைச் செலவிட்டவர், தனக்கென தனி கிளினிக்கூட வைத்துக் கொள்ளவில்லை. தனது தனிப்பட்ட வாழ்வில், தத்தெடுத்த மகளான பிரியா சிங்கின் அசல் பெற்றோர் குறித்த சர்ச்சைகள், கணவருடனான விவாகரத்தென அனைத்தையும் தாண்டி, தன்னை முழுமையாக குழந்தைகள்நல மருத்துவத்துக்காகவே அர்ப்பணித்துக் கொண்டவர். தனது பணி ஓய்வுக்குப் பிறகும் லூதியானாவின் கிறிஸ்துவ மருத்துவக் கல்லூரியில் பேராசிரியராக இணைந்து, மருத்துவப் பணியையும், கற்பித்தல் பணியையும்  தொடர்ந்தவர், ஜனவரி 2001ல் உடல்நலக் குறைவால் தனது 85ம் வயதில் இயற்கை எய்தினார்.

தொகுப்பு: அன்னம் அரசு

படங்கள்: ஜி.சிவக்குமார்

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • china-1000-rains

  சீனாவில் 1,000 ஆண்டுகளில் இல்லாத அளவு கொட்டி தீர்த்த பெருமழை!: தண்ணீரில் தத்தளிக்கும் மக்கள்..!!

 • girlss_saydi

  சவுதி அரேபியாவில் உள்ள மெக்கா, மதினாவில் பாதுகாப்பு பணியில் முதல் முறையாக பெண் ராணுவத்தினர்!!

 • amesaann11

  அமேசான் நிறுவனர் ஜெப் பெசாஸின் முதல் விண்வெளி சுற்றுலா பயணம் : மெய்சிலிர்க்க வைக்கும் படங்கள்!!

 • marina-sculptures22

  மெரினாவின் அழகை மெருகூட்டும் பிரம்மாண்ட உலோக சிற்பங்கள்!: சென்னை மாநகராட்சியின் சிறந்த முயற்சி..!!

 • 5starrrr

  5 -ஸ்டார் ஹோட்டல்.. பிரார்த்தனை கூடம், குழந்தைகளுக்கு பாலூட்டும் அறை : விமான நிலையம் பாணியில் குஜராத் ரயில் நிலையம்!!

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்