SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

காம்ரேட் அம்மா

2021-07-20@ 17:09:22

நன்றி குங்குமம் தோழி

காம்ரேட் மைதிலி சிவராமன் குறித்து அவரது மகள்

கம்யூனிஸ சித்தாந்தங்களால் ஈர்க்கப்பட்ட ‘காம்ரேட் மைதிலி சிவராமன்’ தன் வாழ்நாள் முழுவதும் களப் போராளியாகவே இருந்தவர். தனது வாழ்க்கையின் நாற்பதாண்டுகளைப் போராட்டக் களங்களில் கழித்த தலைவர். கடந்த பத்தாண்டுகளுக்கும் மேலாக அல்சைமர் எனும் மறதி நோயால் பாதிக்கப்பட்டவர், கடந்த மே-30 அன்று கொரோனா நோய் தொற்றில் காலமானார். காம்ரேட் மைதிலி சிவராமன் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலக் குழு உறுப்பினர்.

ஒரே சமயத்தில் ஆறு நிறுவனங்களின் சிஐடியு தொழிற்சங்கத் தலைவராக இருந்தவர். அனைத்திந்திய ஜனநாயகச் சங்கத்தின் அகில இந்தியத் தலைவர். உழைக்கும் பெண்கள் ஒருங்கிணைப்புக் குழு தமிழ்நாட்டில் உருவாக்கப்பட்டபோது அதன் முதல் அமைப்பாளராகச் செயல்பட்டவர். அவரது ஒரே மகள் பேராசிரியர் கல்பனா. தன் அம்மா மைதிலியுடனான தன் நினைவுகள் மற்றும் அவரது 40 ஆண்டுகால அரசியல் வாழ்வை ‘காம்ரேட் அம்மா’ என்கிற பெயரில் புத்தகமாகப் பதிவு செய்துள்ளார் மத்தியதர குடும்பம் ஒன்றில் பிறந்து வளர்ந்த மகத்தான ஆளுமையான தன் அம்மா குறித்து, கல்பனா புத்தகத்தில் இப்படியாக எழுதியுள்ளார். ‘என் அம்மா ஒரு அசாதாரண மனுசி.

சமையல் கரண்டியுடன் அம்மாவை நான் பார்த்ததே இல்லை. எங்கள் குடும்பம் மற்றவரின் குடும்பத்தைப் போல் எப்போதும் இருந்ததில்லை. எனது குழந்தைப் பருவ ஞாபகத்தில் அவரின் டைப்ரைட்டர் இசைதான் எப்போதும் என்னைத் தாலாட்டும். என்னைப் பொறுத்தவரை அம்மாவின் இயல்பு என்பது, கட்டுரைகள் எழுதுவதும், டைப் செய்வதும், செய்தித் தாளிலிருந்து தினமும் குறிப்பெடுப்பதும், பொதுக் கூட்டங்களில் பேசுவதும், வீட்டிற்கு வந்த நண்பர்களுடன் ஆவேசமாக அரசியல் விவாதிப்பதும்தான். பொதுவாக மனிதர்கள் உருவாக்கும் சுவர்களைத் தகர்த்தெறிந்து அடிமனதில் அவர் எப்போதும் புரட்சியாகவே இருந்தார், வாழ்ந்தார் என்கிறார் பேராசிரியர் கல்பனா.

பல கம்யூனிஸ்டு குடும்பங்களைப் போலவே எங்கள் வீட்டின் சுவர்களை மார்க்ஸ், லெனின், மாவோவின் புகைப்படங்கள் அலங்கரிக்க, நான் இவர்களை மார்க்ஸ் தாத்தா, லெனின் தாத்தா, மாவோ தாத்தா என்று அழைக்கப் பழகினேன். எனது சிவராமன் தாத்தாவையும், ஏகாம்பரம் தாத்தாவையும் விட இவர்களைக் கண்டே அதிசயித்தேன் என்கிறார் இவர்.என் பெற்றோர் சாதி மறுப்புத் திருமணம் செய்திருந்தனர். அம்மாவின் திருமண வாழ்க்கை தோழமையும், நட்பும் கலந்தது. அப்பாவை விட அம்மா இரண்டு வயது பெரியவர்.

அப்பா கருணாகரன் என்ஜினியர். அம்மாவின் அப்பா சிவராமன், என் அப்பாவை மகளின் வருங்காலக் கணவராக முதலில் சந்தித்தபோது, ‘மைதிலி உங்களுக்கு ஒரு சராசரி மனைவியாக இருக்கமாட்டாள். வீட்டுக்கு லேட்டாக வருவாள். யார் யாரோ அவளை போன் போட்டு அடிக்கடி பேசுவாங்க. அவளைத் தேடி வீட்டுக்கு போலிஸெல்லாம் வரும். இதெல்லாம் நீங்க இப்போதே தெரிஞ்சிக்கணும். அப்புறம் உங்க பொண்ணு சரியில்லன்னு என்னிடம் புகார் சொல்லக்கூடாது’ என்றாராம். தொழிற்சங்கப் போராட்டங்களில் அம்மா தீவிரமாக ஈடுபட்ட போது ஏற்பட்ட அனுபவங்களின் அடிப்படையில் தாத்தா இந்த முன்னெச்சரிக்கைகளை அப்பாவிற்கு விடுத்துள்ளார்.

அம்மாவும் அப்பாவும் இணைந்து உருவாக்கிய எங்கள் வீடு ஒரு திறந்த வெளி. கட்சித் தோழர்களும், இடதுசாரி சிந்தனையுள்ள நண்பர்களும் எப்போதும் வீட்டிற்கு வந்துகொண்டிருப்பார்கள். எங்களைச் சூழ்ந்திருந்த உலகத்தின் மீது அம்மா ஏற்படுத்திய தாக்கத்தை என்னால் சிறு வயதிலிருந்து பார்க்கமுடிந்தது. என் இரண்டு மூன்று வயதில் பாட்டி எனக்கு இராமாயணம், மகாபாரதம் கதை சொல்ல, அம்மா கீழ்வெண்மணியின் ‘பொல்லாத பண்ணையாரு’ கதையைச் சொன்னார்.

ஒருநாள் காலை திடீரென்று எங்கள் வீட்டிற்கு அருகிலிருந்த குடிசைப் பகுதியிலிருந்து பெண்கள் காலி குடங்களைத் தூக்கிக்கொண்டு தெருவில் கூடியிருந்தனர். பள்ளிக்கு என்னைத் தயார்படுத்திய அம்மா அடுத்த நொடியே வெளியே ஓடிப் போய் அவர்களைப் பார்த்து ‘அங்கியே உக்காருங்க! பஸ்ஸு போக  விடாதீங்க! கலையாதீங்க!’ என்று தண்ணீருக்கான அந்த கூட்டத்தை மறியல் போராட்டமாக மாற்றும் முயற்சியில் இறங்கிவிட்டார். என் முடியை சீவிப் பின்னிக்கொண்டிருந்த அம்மா மாதர் சங்கத் தலைவியாக சட்டென்று உருமாறியது எனக்கு எந்த அதிர்ச்சியும் தரவில்லை. ஏனென்றால் அதுவே அம்மாவின் இயல்பு. பல நாட்கள் நள்ளிரவிலும், பிரச்சினையில் சிக்கிய பெண்கள் அம்மாவைத் தேடி எங்கள் வீட்டிற்கு வருவார்கள்.

தூக்கக் கலக்கத்தில் இருக்கும் எனக்கு அம்மாவின் குரல் கேட்கும்  என்கிறார் குழந்தை பிராயத்து நினைவுகளில் மூழ்கி.‘தாயின் கவனம் இல்லாமல் வாடும் குழந்தை’ என்ற பெயர் எனக்கு உண்டு. தன் குழந்தைக்கும், வீட்டிற்கும் செய்யவேண்டியதைச் செய்யாமல் அரசியல் கூட்டங்களிலேயே ஆனந்தமாக நாட்களைக் கழிக்கும் மைதிலி என்று உறவுகளால் அம்மா விமர்சிக்கப்படுவார். ‘நான் ஒரு ஆணாக இருந்து இந்த வேலைகளைச் செய்திருந்தால் யாருக்கும் என் மீது கோபம் இருக்காது. பெண் மீது தான் இவ்வளவு எதிர்பார்ப்புகள்’ என்று அம்மா என்னிடம் வருத்தப்பட்டிருக்கிறார் என்கிறார் கல்பனா.

அம்மாவின் தந்தை சிவராமன் சென்னையில் பொறியாளராக இருந்ததால், அம்மா படித்து வளர்ந்தது சென்னையில்தான். அந்தக் காலத்தில் பெண்களுக்கு பொதுவாக கல்லூரி படிப்பு முடிந்தவுடனே திருமணம் நடந்துவிடும். ஆனால் அம்மாவுக்கு இது நேரவில்லை. மாநிலக் கல்லூரியில் பி.ஏ அரசியல் அறிவியல்(honours) படித்தவர், சென்னை பல்கலைக் கழகத்தில் முதல்  மதிப்பெண் பெற்று பல்கலைக்கழகத்தின் காண்டெத் மெடலை (Candeth medal) வென்றார்.

டெல்லியின் மதிப்புமிக்க இந்தியன் இன்ஸ்டிட்யூட் ஆப் பப்ளிக் அட்மினிஸ்டிரேசன் (IIPA) நிறுவனத்தின் பொது நிர்வாகத்தில் முதுகலை டிப்ளமோ முடித்தவர், கல்வி உதவித் தொகை பெற்று, 1963ல்  தன் 23ம் வயதில் மேல் படிப்புக்காக அமெரிக்கா சென்றார். அங்கு நியூயார்க் மாநிலம் சிரக்யூஸ் பல்கலைக்கழகத்தில், பொது நிர்வாகப் பிரிவில் எம்.ஏ பட்டம் பெற்றவர், அந்த மாநில அரசின் நிதிப் பிரிவிலும் பணியாற்றினார். பிறகு ஐக்கிய நாடுகள் சபையின் இந்திய தூதரகத்தில் ஆராய்ச்சியாளராக சில ஆண்டுகள் பணியாற்றினார்.

1960ல் அமெரிக்காவில் நடந்த வியட்நாம் போருக்கு எதிரான போராட்டங்கள், மார்ட்டின் லூதர் கிங், மால்கம் எக்ஸ் போன்றோரின் தலைமை போன்றவை தாக்கத்தை உருவாக்கி, அவரை கம்யூனிஸ்டாக மாற்றிய காலம் அது. அமெரிக்க அதிகாரிகளுக்கு தெரியாமல் எதிரி நாடாக கருதப்பட்ட கியூபாவிற்குச் செல்வதற்கு அமெரிக்காவிலிருந்து மெக்சிகோ சென்று அங்கிருந்து கியூபா சென்றார். மெக்சிகோவில் சில நாட்களும், கியூபாவில் சில நாட்களும் பயணித்து நிலைமையை உணர்ந்தார்.

1968ல் இந்தியா திரும்பியவரிடம், ‘நீ ஏன் அமெரிக்காவிலேயே நிரந்தரமாக இருக்க விரும்பவில்லை?’ என்று என் பெரியம்மா கேட்டபோது, ‘ஐக்கிய நாடுகள் சபையில் நான் இருந்தபோது, அமெரிக்கா பல சின்ன நாடுகளை மோசமாக நடத்துவதையும், ஆதிக்கம் செலுத்துவதையும் நேரடியாகப் பார்த்தேன். அப்படிப்பட்ட அமெரிக்காவில் நான் ஏன் இருக்க வேண்டும்?’ என்று பதில் சொல்லியிருக்கிறார் அம்மா. கம்யூனிஸ்ட் கட்சியின் போராட்டங்களுக்குத் தன் மகள் செல்வதை மைதிலியின் தந்தை சிவராமன் விரும்பவில்லை. கட்சிப் பணிகளுக்குச் சென்றுவிட்டு, தாமதமாக வீட்டுக்குத் திரும்பும் மைதிலிக்கு அவரது தந்தை கதவைத் திறக்க மாட்டாராம். வீட்டில் சாப்பாடு போடக் கூடாது என கறாராக பாட்டியிடம் சொல்லிவிடுவாராம்.

தீவிரமான களப்பணியாளராக அம்மா தன்னை அர்ப்பணித்தது கீழ்வெண்மணி சம்பவத்துக்குப் பிறகே. 1968 டிசம்பர் 25 கீழ்வெண்மணி கிராமத்தில் கூலி உயர்வு கேட்டுப் போராடியதால், ஏழை விவசாயக் கூலிகள் 44 பேர் உயிரோடு கொளுத்தப்பட்டனர். இதை உலகின் கவனத்துக்குக் கொண்டு சென்றதில் அம்மாவுக்கு முக்கியப் பங்குண்டு. 1970-களில் எம்.ஆர்.எஃப், சிம்சன், டிவிஎஸ், மெட்டல் பாக்ஸ், அசோக் லேலண்ட், டேப்லெட் இந்தியா, பாலு கார்மென்ட்ஸ் போன்ற தொழிற்சங்கங்களின் போராட்டத் தலைவராகத் தொழிலாளிகளோடு சேர்ந்து களத்தில் இருந்திருக்கிறார்.

அப்போது முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம், தி இந்து இதழின் ஆசிரியர் என்.ராம் உள்ளிட்டோருடன் இணைந்து ராடிக்கல் ரிவ்யூ என்ற ஆங்கில இதழை நடத்தியுள்ளார். தீவிர இடதுசாரி சிந்தனைகளை உள்ளடக்கிய புகழ்பெற்ற இதழாக இது வெளியானது. வாச்சாத்தி வழக்கு, சிதம்பரம் பத்மினி வழக்கு, பிரேமானந்தா வழக்கு என பாதிக்கப்பட்டவர்களின் பக்கமிருந்து சட்டப் போராட்டம் நடத்தி உண்மைகளை ஆவணப்படுத்தியதுடன், அவற்றை பிரதான பத்திரிகைகளில் கட்டுரைகளாகவும் எழுதினார்.

ரேஷன் தட்டுப்பாடு, தண்ணீர் பிரச்சினை, கழிப்பறை வசதி, பெண்கள் மீதான வன்முறை, திரைப்படங்களில் ஆபாசம், பெண் உரிமை உள்ளிட்ட பெண்களின் பல்வேறு பிரச்சினைகளுக்கும் முன்னணிப் போராளியாக களம் கண்டவர் அம்மா. கொஞ்சம் கொஞ்சமாக உடல் நலம் குன்றிய அம்மாவுக்கு 2007-ல் அல்சைமர் (Alzheimer’s Disease) நோய் என்று கண்டுபிடித்தோம். அல்ஸைமரால் பாதிக்கப்பட்ட ஒருவர், தான் எளிதாக தினமும் செய்யும் சின்னச் சின்ன விசயங்களைக் கூட மறந்துபோகத் தொடங்குவர். இது இயல்பாய் வயதாகும் போது நமக்கெல்லாம் ஏற்படும் ஞாபக மறதியோ, தடுமாற்றங்களோ கிடையாது. அல்சைமர் மனித மூளையின் படிப்படியான சாவு.

அம்மாவுக்கு மறதி நோய் அதிகரித்த நிலையில், 2010-ல் அப்பா, அம்மா, நான் மூவரும் சுற்றுலா பயணிகளாக சீனா சென்றோம். ஷாங்காய் நகரில் கம்யூனிஸ்ட் கட்சியை தோற்றுவித்த உறுப்பினர்களின் முதல் சந்திப்பு நடந்த வீட்டிற்கு சென்ற போது, மாவோ படத்தைப் பார்த்ததும், அம்மா மிகுந்த உற்சாகத்துடன் தனது கையை உயர்த்தி ‘ரெட் சல்யூட்’ கொடுத்தார். அம்மாவுக்கு பிடித்த தலைவர் பிடல் காஸ்ட்ரோ. பல நேரங்களில் நான் சொல்லும் விசயங்கள் புரியாமல் அம்மா எந்த எதிர்வினையும் கொடுப்பதில்லை. ஆனால் நவம்பர் 2016-ல் பிடல் காஸ்ட்ரோ இறந்த தகவலை அம்மாவிடம் சொன்னபோது, கண்களில் நீர் வழிய, கண்களை இறுக்கி மூடி, முகத்தை திருப்பிக் கொண்டு என்னைப் பார்க்க மறுத்தார் என்கிறார் கல்பனா.

எப்போதும் பிரகாசிக்கும் என் ஹீரோ மைதிலி வீட்டிலேயே அடைபட்டு கணவர் மற்றும் மகளை நாடுபவராக மாறியது எனக்கு மிகுந்த வலியைத் தந்தது என்கிற கல்பனா, அம்மாவின் ஞாபகங்கள் அல்சைமரால் அழிக்கப்பட்ட போதும், அவரது அடிப்படை அடையாளம் அழியவில்லை. 1960-70களில் ராடிக்கல் ரிவ்யூ, மெயின்ஸ்ட்ரீம், செமினார் போன்ற பத்திரிகைகளில் வெளிவந்த அம்மாவின் கட்டுரைகள் அழுத்தமானவை. இந்தக் கட்டுரைகளில் அப்போது நிலவிய அரசியல் மற்றும் சமூக நிகழ்வு போக்குகளை அம்மா ஆழமாக அலசியிருக்கிறார்.

1990-களின் பிற்பகுதியிலும், 2000-த்தின் முற்பகுதியிலும் பிரபல ஆங்கில மற்றும் தமிழ் தினசரி பத்திரிகைகளுக்கு அம்மா நிறையவே எழுதினார். ‘வெண்மணி ஒரு காலத்தின் பதிவு’, ‘ஆண் குழந்தைதான் வேண்டுமா?’, ‘கல்வித் துறையில் வறுமையால் நசுக்கப்படும் குழந்தைகள்’ உள்ளிட்ட பல நூல்களையும் அம்மா எழுதியுள்ளார்.சின்ன வயதில் இருந்தே அம்மாவை ஒரு தலைவியாக.. செயல் வீராங்கனையாக.. புரட்சியாளராகப் பார்த்த எனக்கு, தன்நிலையை மறந்து, பொதுவாழ்க்கையில் இருந்தே காணாமல் போகக்கூடிய அம்மாவை ஏற்றுக்கொள்ள முடியவில்லை என  நினைவு அஞ்சலி கூட்டத்தில் தன் உணர்வுகளை மகளாய் நா தழுதழுக்க பதிவு செய்துள்ளார் பேராசிரியர் கல்பனா.இறுதிவரை களப்போராளியாக தன்னை நிலைநிறுத்திக்கொண்ட காம்ரேட் மைதிலி சிவராமனுக்கு ரெட் சல்யூட்.

தொகுப்பு: மகேஸ்வரி நாகராஜன்

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • china-1000-rains

  சீனாவில் 1,000 ஆண்டுகளில் இல்லாத அளவு கொட்டி தீர்த்த பெருமழை!: தண்ணீரில் தத்தளிக்கும் மக்கள்..!!

 • girlss_saydi

  சவுதி அரேபியாவில் உள்ள மெக்கா, மதினாவில் பாதுகாப்பு பணியில் முதல் முறையாக பெண் ராணுவத்தினர்!!

 • amesaann11

  அமேசான் நிறுவனர் ஜெப் பெசாஸின் முதல் விண்வெளி சுற்றுலா பயணம் : மெய்சிலிர்க்க வைக்கும் படங்கள்!!

 • marina-sculptures22

  மெரினாவின் அழகை மெருகூட்டும் பிரம்மாண்ட உலோக சிற்பங்கள்!: சென்னை மாநகராட்சியின் சிறந்த முயற்சி..!!

 • 5starrrr

  5 -ஸ்டார் ஹோட்டல்.. பிரார்த்தனை கூடம், குழந்தைகளுக்கு பாலூட்டும் அறை : விமான நிலையம் பாணியில் குஜராத் ரயில் நிலையம்!!

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்