SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

திருமணம் என்பது யாதெனில்!

2021-07-19@ 17:33:43

நன்றி குங்குமம் தோழி

‘டெர்பி’ விஜய் - ராக்கி தம்பதியின் சக்ஸஸ் ஸ்டோரி.

‘‘ஒரு ஆண் ஒரு பெண்ணை திருமணம் செய்கிறான். ஆனால் ஒவ்வொரு பெண்ணும் ஒரு குடும்பத்தை திருமணம் செய்கிறாள்”! இதுதான் விஜய் கபூர் மற்றும் ராக்கி கபூர் தம்பதியின் மந்திரம்.இந்த மந்திரத்தை ஒருவருக்கொருவர் புரிந்துகொண்டதாலேயே இருவரும் இன்று சிறந்த ஜோடியாக வலம் வருகின்றனர். ஆனால் இவர்களே விவாகரத்து, நீதிமன்றம், வழக்கு என சந்தித்துள்ளனர் என்பதே ஆச்சர்யம்.

விஜய் கபூர்... பிரபல டெர்பி ஜீன்ஸ் கம்யூனிட்டியின் உரிமையாளர். ‘ஏன் விவாகரத்து வரை போனீர்கள், அதை எப்படி சரி செய்தீர்கள்?’ என்னும் கேள்வியுடன் இருவருக்கும் ஹாய் சொன்னோம். ‘‘ ‘Derby gentleman’s outfit இப்படித்தான் டெர்பி ஆரம்பம்.  கொஞ்சம் கொஞ்சமா 200 சதுர அடி 500... ஆயிரம் சதுரடின்னு ஆச்சு. இன்னைக்கு 45 கிளைகள் தமிழ்நாடு, கேரளா, ஆந்திரா என எல்லா பகுதியிலும் இருக்கு. உங்க டிரெஸ் எல்லாம் நல்லா இருக்கு நீங்க ஏன் பிராண்ட் ஆரம்பிக்கக் கூடாதுன்னு என்னுடைய கஸ்டமர் கேட்ட கேள்விதான், ‘மேட் இன் இந்தியா ‘டெர்பி ஜீன்ஸ் கம்யூனிட்டி’ ஆரம்பிச்சோம்.

இடையில ஒரு சின்ன சறுக்கல். என் வீட்டை கூட விற்கும் அளவுக்கு போனேன். எந்தப் பிரச்சனை எனக்கு வந்தாலும் நான் என்ன தப்பு செய்தேன் அப்படின்னுதான் நான் எப்பவுமே யோசிப்பேன். பிறவியிலேயே எனக்கு அந்த குணம் இருந்தது. எனக்கு மிகப்பெரிய பிளஸ். அதுதான் என் திருமண வாழ்க்கையிலே ஏற்பட்ட பிரச்னைகளுக்கும் தீர்வு கொடுத்துச்சு’’ என்னும் விஜய் கபூர் பேசிக்கொண்டிருக்கும் போதே இடையில் நினைவலைகள் தலை தூக்க தன் திருமண வாழ்க்கைக் குறித்து பேசத் துவங்கினார் ராக்கி கபூர்.

‘‘என் பள்ளி கால தோழர்தான்  விஜய் கபூர். அஞ்சு வருடங்கள் காதலிச்சு திருமணமும் செய்துகிட்டோம். நான் பிசியோதெரபிஸ்ட் படிச்சு முடிச்சு மேற்படிப்புக்காக லண்டன் யுனிவர்சிட்டியில் கூட எனக்கு அட்மிஷன் கிடைச்சது. ஆனா நான் விஜய்யை திருமணம் செய்துக்கிட்டு ஒரு நல்ல ஹவுஸ்வைஃப் ஆகிட்டேன். என் அப்பாவுக்கு என் மேலே அவ்வளவு கோபம். குறிப்பா அவங்க பஞ்சாபி, நாங்க பெங்காலி. அதிலே ஒரு கோபம். எனக்கு காதல் கண்ணைக் கட்டிடுச்சு. என்னை மறந்து நான் காதலிச்சேன். அதனாலேயே நான் யார் என்கிறதைக் கூட மறந்து ஒரு ஹவுஸ் ஒயிஃப் வாழ்க்கையை என்னால் சுலபமா ஏத்துக்க முடிஞ்சது. ஆனால் நாளுக்கு நாள் நானே நிறைய ஏத்துக்கிட்டு, பரவாயில்லை இருக்கட்டும் என்கிற மனநிலையிலேயே வாழ்க்கையை வாழ ஆரம்பிச்சிட்டேன்’’ என்றார்.

‘‘ராக்கியின் அப்பா ஒரு டெய்லரைப் போய் காதலிக்கிறேன்னு அவரிடம் கேட்டார்’’ என்று விஜய் தொடர்ந்து பேசினார். ‘‘அதை எல்லாம் மீறி தி பெஸ்ட் டாக்டரை, சிறப்பான பெண்ணை என் மனைவி... இல்லை ஹவுஸ் ஒயிஃப்பாக மாற்றினேன். விளைவு ஏழு வருடங்கள் இனிப்பான சந்தோஷமான திருமண வாழ்க்கை எனக்கு மட்டும், அவங்களுக்கு இல்லை. ஏழாவது வருடம் என் மனைவி என்கிட்ட விவாகரத்து நோட்டீசை கொடுத்தாங்க. ஒரு நிமிடம் தூக்கி வாரிப் போட்டது. என்ன நடக்குதுன்னு புரியலை. ஏன், என்னாச்சுன்னு அவ்வளவு கேள்விகள். சத்தம் போடலை,  கூச்சலிடலை, தேவையில்லாம வார்த்தைகளை நாங்க கொட்டிக்கல.

மறுபடியும் நான் என்ன தப்பு செய்தேன்னுதான் யோசிச்சேன். நீதிமன்றம் வரையிலும் கூட போனோம். ஆனால் ஒரு நிமிஷ மன்னிப்பு போதுமே அப்படின்னு தோணுச்சு. இன்னைக்கு எங்க ரெண்டு பேரையும் பார்த்து பெஸ்ட் ஜோடின்னு பாராட்டுறாங்க. எனக்காக அவங்களும் அவங்களுக்காக நானும் முடிஞ்ச அளவுக்கு நேரங்களை ஒதுக்கி ஒவ்வொரு வருஷமும் இந்த வயசிலேயும் ஹனிமூன் டிரிப் போறோம். அவங்க 20 புத்தகங்கள் வெளியிட்டிருக்காங்க. குழந்தை பேறு பயிற்சிக்கான கிளினிக் வெச்சிருக்காங்க. முக்கிய பிரபலங்கள் அவங்களுக்கு கிளையன்ட்ஸ். எங்களுக்கு ஒரு பையன் விக்கி கபூர், நியூயார்க்ல ஃபிலிம் டெக்னாலஜி படிக்கிறார்’’ என்ற விஜயை இடைமறித்தார் ராக்கி.

‘‘எங்க உலகமே எங்க பையன்தான்! பெண்கள் செய்கிற தவறும் இதுதான். திருமணத்துக்கு பிறகு பெண்களுடைய மொத்த உலகமும் கணவர், குழந்தை, கணவரின் குடும்பம் இப்படி தன்னைத் தானே கொஞ்சம் கொஞ்சமா மாத்தி, தியாகம் செய்து மொத்தமா ஒரு நாள் திரும்பிப் பார்த்தா அங்கே அவ இருக்க மாட்டா. அவ யார் என்கிற அடையாளமே அழிஞ்சு, முழு வாழ்க்கையும் அவ குடும்பம், கணவன், குழந்தை மட்டும்தான் இருக்கும். இந்தத் தவறை நானும் செய்தேன். இதிலே இன்னொரு பிரச்னை என்னன்னா இவங்க உலகமே கணவர், குழந்தை என்று இருப்பார்கள். ஆனால் அவர்கள் தங்களுக்கான உலகத்தில் பிசியாக இருப்பார்கள். கடைசியில் இவங்க தனியாகி வெறுமையான வாழ்க்கைக்குள்ள போயிடறா. நானும் தனியானேன். அதுதான் விவாகரத்துக்கு முடிவு செய்தேன்’’ என்றார்.

‘‘22 வருஷம் ஒரு வீட்டில் வாழ்ந்த ஒரு பெண் கல்யாணம் பண்ணிட்டா அடுத்த நிமிஷம் இன்னொரு குடும்பம், கலாச்சாரம், பழக்கங்கள் இப்படி எல்லாத்தையும் மாத்திக்கிட்டு வாழணும். இதுதான் இந்தியத் திருமணங்களுடைய விதி. இதை சரியா ஒவ்வொரு ஆணும் புரிஞ்சிக்கிட்டாலே அவளுக்குரிய மரியாதையைக் கொடுப்பான். உழைக்கிறேன், கோடி கோடியா கொடுக்கறேன் இதைத் தாண்டி உனக்கு என்ன வேணும்னு கேட்கறவன் நல்ல ஆண் இல்லை, அது ஆணாதிக்கம். குழந்தைய நீ பாரு, மாமியார் கூட சண்டையா நீங்களே அடிச்சுக்கோங்க, சேர்ந்துக்கோங்க அப்படின்னு ரிமோட்டும் கையுமா உட்கார்றதுக்கு பேர் ஆண்மை இல்லை. இத்தனை வருஷமா கூட இருந்த உன்னாலேயே உன் அம்மா கிட்ட பேச முடியாதப்போ நேத்து நுழைஞ்ச பொண்ணு, உன்னை நம்பி வந்தவ என்ன செய்வா. இதை எல்லாம் அலசினேன் மன்னிப்புக் கேட்டேன், டெர்பி வளர்ந்துச்சு நாங்களும் வளர்ந்தோம்!’’ என்ற விஜய் காதல் பார்வையுடன் ராக்கியை நோக்க...

‘‘நாம நாமளா இருக்கணும், நமக்குன்னு ஒரு வாழ்க்கை, அடையாளம், பிடிச்சது, பிடிக்காதது இப்படி எவ்வளவோ இருக்கு. பெண்கள் கிட்ட இருக்கற சிறப்பே எக்காலத்துக்கும், எந்த சூழலுக்கும் தன்னை மிகப் பிரமாதமா மாத்திப்பாங்க. அதுதான் பிரச்னையும் கூட’’ என ராக்கியின் வார்த்தைகள் அழுத்தமாக வந்து விழுந்தன.

‘‘கிச்சன், குழந்தை, கணவர் இதுதான் ஆனந்தம்ன்னு இந்திய கலாச்சாரம் வகுப்பெடுத்து வெச்சிருக்கு. அதன்படி இதுவே போதும்னு ஒவ்ெவாரு பெண்ணும் வாழ்ந்து கொண்டு இருக்கா. உன் கணவர் ஒரு பெரிய பிஸினஸ் மேன், உங்க குழந்தைகள் நீ கொடுத்த அன்பால் சமூகத்திலே அந்தஸ்தா இருக்காங்க. எல்லாம் சரி நீ யார்? இதற்கான கேள்விதான் எனக்கு கொஞ்சம் சீக்கிரமே எழுந்திடுச்சு. பல பெண்களுக்கு 50 வயதுக்கு அப்பறம்தான் தோணுது. அப்போ வருத்தப்பட்டு என்ன பயன். நான் சீக்கிரமே சுதாரிச்சேன் அதனால் நான் இன்னைக்கு என் வேலையிலும் வெற்றியோடு செயல்படறேன். நான் விவாகரத்து கேட்ட போது விஜய் கோபப்பட்டிருந்தாலோ அல்லது சரி சொல்லியிருந்தாலோ வாழ்க்கை வேற திசையிலே போயிருக்கும். அவர் அவர் தவறை சரி செய்தார், நான் என் தவறை சரி செய்ய ஆரம்பிச்சேன்’’ என ராக்கி சற்று மூச்சு விட தொடர்ந்தார் விஜய்.

‘‘ஒவ்வொரு பெண்ணும் ஒரு ஆண் கிட்ட எதிர்பார்க்கறது அவளுக்கான அங்கீகாரம். அவ யார் என்கிறதை புரிஞ்சுக் கொள்ளணும். இந்தியாவில் மட்டும்தான் ஒரு பெண்ணுடைய கனவும், அவ அடையாளமும் இரண்டாம் பட்சமா பார்க்கப்படுது. ராக்கியின் கோபம் நியாயம்தானே. நான் என் பிஸினஸிலே வெற்றிகரமா ஓடிட்டு இருக்கேன். ஆனா லண்டன்ல அட்மிஷன் கிடைச்ச ஒரு டாக்டர் அவங்களை நான் என்ன செய்தேன்.

அவங்க கனவு, அடையாளம் எதையும் கண்டுக்காம ஹவுஸ் ஒயிஃப் ஆக்கினேன். அந்தத் தவறை சரி செய்தேன். அவங்களுடைய கனவுக்கும் என்னால் என்ன முடியுமோ சப்போர்ட் செய்தேன். அவங்களுடைய ஒவ்வொரு புத்தகமும் டாப் செல்லிங் புத்தகங்கள். ஒருவேளை அவங்களும் சொல்லாம, நானும் கண்டுக்காம இருந்திருந்தா இன்னைக்கு ராக்கி ஒரு நல்ல ஹவுஸ் ஒயிஃபா, அம்மாவா இருந்திருப்பாங்க. அவங்க அடையாளமும் காணாம போயிருக்கும். அது எனக்கு வெற்றி. ஆனால் என்னுடைய குடும்பத்துக்கு வெற்றி இல்லை.ஒருவர் தியாகத்திலே இன்னொருத்தர் வாழ்றது இல்லை திருமண பந்தம். ஆண்- பெண் இருவரும் அவங்க அவங்க உலகத்தை வடிவமைச்சு குடும்பத்தையும் வடிவமைக்கிறதிலேதான் திருமண வாழ்க்கை அர்த்தம் பெறும்’’ என்றார்.

செய்தி: ஷாலினி நியூட்டன்

படங்கள்: ஆ.வின்சென்ட் பால்

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • china-1000-rains

  சீனாவில் 1,000 ஆண்டுகளில் இல்லாத அளவு கொட்டி தீர்த்த பெருமழை!: தண்ணீரில் தத்தளிக்கும் மக்கள்..!!

 • girlss_saydi

  சவுதி அரேபியாவில் உள்ள மெக்கா, மதினாவில் பாதுகாப்பு பணியில் முதல் முறையாக பெண் ராணுவத்தினர்!!

 • amesaann11

  அமேசான் நிறுவனர் ஜெப் பெசாஸின் முதல் விண்வெளி சுற்றுலா பயணம் : மெய்சிலிர்க்க வைக்கும் படங்கள்!!

 • marina-sculptures22

  மெரினாவின் அழகை மெருகூட்டும் பிரம்மாண்ட உலோக சிற்பங்கள்!: சென்னை மாநகராட்சியின் சிறந்த முயற்சி..!!

 • 5starrrr

  5 -ஸ்டார் ஹோட்டல்.. பிரார்த்தனை கூடம், குழந்தைகளுக்கு பாலூட்டும் அறை : விமான நிலையம் பாணியில் குஜராத் ரயில் நிலையம்!!

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்