SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

Theatre for Change இது குரலற்றவர்களுக்கான மேடை!

2021-03-11@ 17:34:57

நன்றி குங்குமம் தோழி

சுஜாதா பாலகிருஷ்ணன்

பெங்களூரில் வசித்து வரும், 64 வயதாகும்  சுஜாதா பாலகிருஷ்ணன், ஆசிரியர், உளவியல் ஆலோசகர், நாடக பயிற்சியாளர், நடிகர் எனப் பன்முக திறமைகள் கொண்ட பல்துறை நிபுணர்.  தனியார் பள்ளிகளில் முப்பது ஆண்டுகளுக்கும் மேலாக வரலாறு ஆசிரியராகவும், ஆலோசகராகவும் பணியாற்றிய பின், சுஜாதா ஐம்பது வயதைக் கடந்திருந்த நிலையில் தன் நீண்ட நாள் ஆசையான நாடக நடிகையாகும் கனவை நிறைவேற்ற முடிவு செய்தார்.

“சிறு வயதிலிருந்தே நாடக மேதைகள் மனோகர், சோ போன்றவர்களின் நாடகங்களைப் பார்த்து வளர்ந்தேன். ஒருமுறைமனோகர் இயக்கிய ‘லங்கேஷ்வரா’ என்ற நாடகத்தில், சீதையை ராவணனின் மகளாக அவர் சித்தரித்து நாடகத்தை இயக்கியிருந்தார். அந்த நாடகத்திற்கு பலதரப்பட்டவர்களின் பாராட்டுகளுடன், பலத்த எதிர்ப்பும் எழுந்தது.

அப்போதுதான் ஒரு கதையை அதிலிருக்கும் பலதரப்பட்ட கதாபாத்திரங்களின் பார்வையிலிருந்து பார்க்க ஆரம்பித்தேன். இதனால் சிறுமியாக இருக்கும் போதே சமூகம் சார்ந்த பல கேள்விகளையும் கேட்க ஆரம்பித்தேன். இப்படித் தொடர்ந்து நாடகங்கள் மூலம் சமூக பிரச்சனைகளை அறியும் வாய்ப்பு எனக்குக் கிடைத்தது. பள்ளி நாட்களில் ஏராளமான மேடைகள் ஏறி, பாட்டு, நடனம், பேச்சு எனப் பல்வேறு நிகழ்ச்சிகளிலும் எந்த தயக்கமும் பயமும் இல்லாமல் கலந்துகொள்வேன்.

பல படங்களை விரும்பி பார்ப்பேன். குறிப்பாக ஜெயலலிதாவின் படங்கள் எனக்கு ரொம்பவே பிடிக்கும். படம் பார்த்துவிட்டு அவர்கள் அணிந்த உடையை வாங்கி தைத்து கண்ணாடி முன்னால் வசனங்கள் பேசி பழகுவேன். இப்படி நடிப்பு மீது மிகுந்த ஈடுபாடு இருந்த போதும், கண்டிப்பான குடும்ப சூழ்நிலையில் வளர்ந்ததால், அந்த கனவை பின் தொடர முடியாமல் போனது.

திருமணம் என் வாழ்க்கையில் ஒரு திருப்புமுனையாக இருந்தது. எனக்குப் பிடித்த உடைகளை அணியவும், பிடித்தபடி வாழவும் ஆரம்பித்தேன். என் பிறந்த வீட்டில் இல்லாத சுதந்திரம், புகுந்த வீட்டில் எனக்குக் கிடைத்தது. எனக்கான சுதந்திரத்தை யாரிடமும் கேட்டு வாங்கவேண்டியதில்லை என்பதை அங்குதான் உணர்ந்தேன். திருமணமாகி குழந்தைகள் வளர்ந்து இருபது வருடம் கழித்து, கல்லூரியில் உளவியல் படித்து முடித்தேன்.

முப்பது வருடங்கள் ஆசிரியராக இருந்த போது பலதரப்பட்ட மக்களுடனும் குழந்தைகளுடனும் பழகும் வாய்ப்பு எனக்குக் கிடைத்தது. அப்போது மாற்றுத்திறனாளி குழந்தைகளை நம் சமூகம் அணுகும் விதம் பெரும் திகைப்பையும் கோபத்தையும் உண்டாக்கியது.

பலரும் உணர்ச்சி திறன் அற்றவர்களாக இருப்பதை பார்க்க முடிந்தது. இதனால் இப்படி உடல் - குறைபாடு காரணமாக ஒடுக்கப்படும் குழந்தைகளை முன்னிலைப்படுத்த முடிவு செய்தேன். சமூக மாற்றத்தின் கூரிய ஆயுதமாக நாடகம் இருப்பதை உணர்ந்து ஐம்பது வயதிற்கு மேல் மீண்டும் மேடை ஏறி நடிக்க முடிவெடுத்தேன்” என்கிறார்.

ஐம்பது வயதில் நாடகத்தில் நடிக்க வேண்டும் என்ற சுஜாதா முடிவெடுத்த போது அதற்கான வாய்ப்புகள் மிகவும் குறைவாக இருந்ததாகக் கூறுகிறார், “நான் நாடகங்களில் நடிக்க தொடங்கிய ஆரம்ப காலத்தில் வாய்ப்புகளே கிடைக்காது. அனைத்து நாடகத்திலும் முப்பது வயதிற்கு குறைந்த நடிகர்களையே தேர்வு செய்தனர். வயதானவர்களின் கதையைச் சொல்லவோ கேட்கவோ இங்கு யாருமே இருக்கவில்லை. குறிப்பிட்ட சிலருக்கே வாய்ப்புகள் தொடர்ந்து கிடைத்து வந்தன. ஆனால் நம் நாட்டில் பாமர மக்களின் கதையையும் உரிமையையும் கோரவே நாடகங்கள் தோன்றி வளர்ந்தன.

அதனால் என் சொந்த நாடகக் குழுவை ஆரம்பிக்கும் முயற்சியில் இறங்கினேன். அந்தக் குழுவில் வயது, பாலினம், கல்வி, சமூகம், உடல் இயலாமை என எந்த வேறுபாடும் இல்லாமல் அனைத்து தரப்பினரின் குரலையும் பதிவு செய்ய முடிவுசெய்தேன். எனவே, 2015ல் Theatre for Change என்ற நாடகக் குழுவை உருவாக்கி அதில் முதல் முறையாக ‘உடான்’ என்கிற நாடகத்தை நடத்தினோம். இந்த நாடகத்தின் முக்கிய கதாபாத்திரத்தில், ஆட்டிசம் பாதித்த குழந்தையை நடிக்கவைத்து, மாற்றுத்திறனாளிகளைச் சுற்றியிருந்த தடைகளை உடைத்தோம்.

வயதால் வாய்ப்பு மறுக்கப்பட்டவர்களுக்கு வாய்ப்பளிக்கும் விதமாக, 68 வயதான ஒரு நடிகை எங்களுடைய நாடக மேடையில் முதன்முதலில் நடித்தார்’’ என்று கூறும் சுஜாதா தன் நாடகக் குழு உறுப்பினர்களும் பல தரப்பட்ட வகுப்புகளைச் சேர்ந்தவர்களாகவும், ஒடுக்கப்பட்ட சமுதாயத்தின் குரலாகவும் இருக்க வேண்டும் என்பதில் உறுதியாக இருக்கிறார்.

“Theatre for Change பணம் சம்பாதிக்கும் நோக்கத்தில் உருவாக்கப்பட்டதில்லை. என் நாடகங்களுக்கு நான் கட்டணம் வசூலிப்பதில்லை. எந்தவொரு கலை வடிவத்திலும் சமூக விமர்சனமோ அல்லது அரசியல் செயல்பாடோ இல்லாவிட்டால் அது தோற்றுப்போகும் என்பதை நான் உறுதியாக நம்புகிறேன்.

அதனால், நாடகங்கள் பொழுதுபோக்கிற்காக மட்டும் இல்லாமல், மக்களிடம் சமூகத்திற்கான செய்தியைக் கொண்டு சேர்க்க வேண்டும் என விரும்பினேன். அதனால், ஒவ்வொரு நாடகத்தின் இறுதியிலும் ஒரு கேள்வி-பதில் பகுதியை ஒருங்கிணைக்க ஆரம்பித்தோம். இதன் மூலம் நாம் சமூகத்திற்குச் சொல்ல நினைக்கும் கருத்துகளை எளிதாகக் கொண்டுசேர்க்க முடிந்தது.

ஆனால் மகளிர் கல்லூரியிலும், மகளிர் அமைப்பிலும் கூட பெண்கள், அவர்களுக்கான பிரச்சனையை வெளிப்படையாகப் பேசத் தயங்குகின்றனர். ஒவ்வொரு முறையும் பொறுமையாக அவர்களைப் பேசத் தூண்டுவேன். ஒருவர் தைரியமாகப் பேச ஆரம்பித்ததும், பெண்கள் பலரும் முன்வந்து தங்கள் கருத்துகளையும் அனுபவங்களையும் பகிர்வர்.

உளவியல் ஆரோக்கியம் சார்ந்த பிரச்சனைகளை வீட்டில் பகிரமுடியாத நிலைமையில்தான் இன்று பல இளைஞர்கள் வாழ்ந்து வருகின்றனர். உடல் பிரச்சனையைக் கூட தனி நபராக மருந்து சாப்பிட்டு குணப்படுத்திவிட முடியும். ஆனால், உளவியல் சார்ந்த பிரச்சனைகளுக்கு இந்த குடும்ப அமைப்பு, சமுதாயத்தின் ஆதரவு தேவை. பெண்கள்... மாதவிடாய், உளவியல் ஆரோக்கியம் எனப் பரவலான தங்கள் நண்பர்களுடன் கூட பேசத் தயங்கும் விஷயங்களை எங்கள் மேடையில் பேசியுள்ளனர்.

கடந்த ஆண்டு நவம்பர் 9 உலக தத்தெடுப்பு தினத்தில், குழந்தைகளை தத்தெடுத்த பெற்றோர்கள், தாத்தா-பாட்டிகள், சகோதரர்கள் எனக் குடும்பத்தினருடன், தத்தெடுக்கப்பட்டவர்களும் இணைந்து அவர்களின் கதையை, அனுபவத்தை, அவர்கள் கடந்து வந்த சவால்களையும் ஒரு வீடியோ தொகுப்பாக Theatre for Change வெளியிட்டோம். இந்த பிரச்சனையை அணுக முக்கிய காரணம், சில மாதங்களுக்கு முன் என் பேத்தியை என் மகள் தத்தெடுத்ததுதான்.

ரத்த சொந்தம், ரத்த பாசம் என்கிற அடிப்படையில் குடும்ப அமைப்பு இயங்குவதைவிட, அது அன்பால் கட்டமைக்கப்பட்டதாக இருக்க வேண்டும் என்பதை சொல்லவே இந்த வீடியோ தொகுப்பை வெளியிட்டோம்” என்றவர் இந்தாண்டு சர்வதேச மகளிர் தினத்திற்காக, தமிழ், கன்னடம், இந்தி என வெவ்வேறு மொழிகளில், பெண்களை மையமாகக் கொண்டு ஐந்து குறும்படங்களை வழங்கவுள்ளனர்.

மும்பை, ஹைதராபாத், சென்னை என அவரது நாடகங்கள் நடக்கும் இடங்களிலெல்லாம், அந்த இடங்களைச் சார்ந்த நடிகர்கள் நடிக்க உள்ளனர். இதன் மூலம் அங்கு வசிக்கும் மக்களுடன் எளிதில் இணைந்து மாற்றத்தை உருவாக்க முடியும் என்பது சுஜாதாவின் நம்பிக்கை.

“ஐம்பது வயதைக் கடந்தவர்கள் முதலில் வாழ்க்கையே முடிந்துவிட்டதாக நினைப்பதை நிறுத்த வேண்டும். இளமையில் செய்ய முடியாத, நிறைவேற்றப்படாத பல கனவுகளை ஐம்பதிற்கு மேல் சுலபமாக நிறைவேற்றலாம். என் குழுவில், ஐம்பது வயதைக் கடந்து, கடமைகளை முடித்து நடிக்க வேண்டும் என்ற ஆசையில் பலர் இணைந்துள்ளனர். அதேபோல, ஒரு கல்வியாளராக, மாற்றுத்திறனாளி குழந்தைகள் பொதுவான பள்ளிகளிலிருந்து தனிமைப்படுத்தப்பட்டுச் சிறப்பு பள்ளிகளில் அடைக்கப்படுவதையும் கண்டித்து வருகிறேன்.

இந்த உலகம் அனைவருக்குமானது. இந்த சமூகத்துடன் சேர்ந்து சமத்துவமாக வாழ்வது அனைவரது உரிமை. அந்த உரிமையை மாற்றுத்திறன் கொண்ட குழந்தைகளிடமிருந்து பறிக்க வேண்டாம். குரலற்றவர்களுக்கு ஒரு மேடை அமைத்து, அவர்களது கதையை உரக்கச் சொல்லும் ஒரு கருவியாக மட்டுமே  Theatre for Change இருக்க விரும்புகிறது. எங்க மேடையில் பல பெண்கள் தங்களின் கதையை பகிர்ந்துள்ளனர். மேலும் மக்கள் பேச தயங்கும் விஷயங்களை நாங்கள் ஆழமாக ஆராய்வோம்’’ என்றார் சுஜாதா.

தொகுப்பு: ஸ்வேதா கண்ணன்

படங்கள்: ஜி.சிவக்குமார்

மேலும் செய்திகள்

LikeGamezop
Like Us on Facebook Dinkaran Daily News
 • vice-ele-6

  குடியரசு துணைத் தலைவர் தேர்தல்: ஜனநாயக கடமையாற்றிய பிரதமர் நரேந்திர மோடி, காங். எம்.பி. ராகுல் காந்தி..!!

 • cong-protest-5

  விலைவாசி உயர்வை கண்டித்து நாடு முழுவதும் காங்கிரஸ் போராட்டம்: ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி உள்ளிட்டோர் கைது..!!

 • school-girls-isro-5

  இஸ்ரோவின் ராக்கெட்டுக்கு மென்பொருள் தயாரித்த அரசுப்பள்ளி மாணவிகளை நேரில் வாழ்த்திய அமைச்சர் அன்பில் மகேஷ்..!!

 • america_nancy

  சீனாவின் எதிர்ப்பை மீறி தைவான் சென்ற அமெரிக்க சபாநாயகர்..!!

 • icelanddd111

  ஐஸ்லாந்து நாட்டில் எரிமலை வெடித்து சிதறி நெருப்பு ஆறு பாய்கிறது!!

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்