SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

ஆளுமைப் பெண்கள்! விஞ்ஞானி சுபத்ரா

2021-03-04@ 18:01:24

நன்றி குங்குமம் தோழி

ஆளுமை... ஒருவரின் ஒழுங்கமைந்த, இயங்கியல் பண்புகளும், அவை தோற்றுவிக்கும் தோரண நடத்தைகள், உணர்வுகள், சிந்தனைகளையும் குறிப்பது. ஒருவரைத் தனித்துவமானவராகவும், அவர்களின் எண்ணங்கள், உணர்வுகள், நடத்தைகள் எல்லாமும் ஒன்றிணைக்கப்பட்டது என வரையறுக்கலாம். ஒருவரின் உள்ளிருந்து உருவாகி அவருடைய வாழ்க்கைக் காலம் முழுதும் சீராக அமைய ஆளுமை மிகவும் அவசியம். அத்தகைய ஆளுமைப் பெண்களைப் பற்றி ஒவ்வொரு இதழிலும் பார்க்கலாம்.

மதுரையில் சாதாரண லாரி டிரைவரின் மகளாகப் பிறந்து, உலகில் பல நாடுகளுக்குப் பயணித்து தன் ஆளுமைப் பண்புகளால் மிகப் பெரிய கம்பெனிகளை நிர்வகித்தவர் சுபத்ரா. தனது திறமை நம் நாட்டுக்கு உபயோகப்பட வேண்டும் என சூரிய ஒளியில் இருந்து மின்சாரம் தயாரிக்கும் ‘ஆதித்யா எனர்ஜி’ என்ற நிறுவனத்தை அமைத்து அதனை நிர்வகித்து வருகிறார்.

‘‘என்னோட அம்மா, அப்பா பெரிய அளவில் படிக்கல. அதனால நான் நல்லா படித்து வேலைக்கு போகணும்ன்னு விரும்பினாங்க. என்னை டிப்ளமோ இன் பாலிமர் டெக்னாலஜி பிரிவில் படிக்க வைச்சாங்க. அதை முடிச்சிட்டு பி.டெக் கெமிக்கல் இன்ஜினியரிங் படித்தேன். படிப்பு முடிச்ச கையோடு எனக்கு ISROவில் விஞ்ஞானியாக வேலைக் கிடைச்சது. அங்கு தான் என்னுடைய லட்சிய பணி துவங்கியதுன்னு சொல்லணும்.

எண்ணெய் மற்றும் எரிவாயு செயல்முறை வடிவமைப்பின் பொறியியல் பிரிவில் 17 ஆண்டுகள் பொறியாளராக பணியாற்றினேன். அதுமட்டுமில்லாமல் அங்கு பல்வேறு பெட்ரோ கெமிக்கல் மற்றும் எண்ணெய் சார்ந்து புதிய திட்டங்களை வெற்றிகரமாக நிறைவேற்றியுள்ளேன்’’ என்று கூறும் சுபத்ரா தென்கிழக்கு ஆசியா, ஐரோப்பா, மத்திய ஆசியா, ஆப்பிரிக்கா மற்றும் பல்வேறு நாடுகளில் உள்ள பசுமை மற்றும் பிரவுன்ஃபீல்ட் திட்டங்களுக்கு கருத்து முன்மொழிந்தது மட்டுமில்லாமல்... பொறியியல் வடிவமைப்பு திட்டங்களிலும் ஈடுபட்டுள்ளார்.

சமூக பங்களிப்பு

நான் படிச்சு இப்ப நல்லா சம்பாதிக்கிறேன். அதனால் என்னால் முடிந்தவரை என்னைச் சார்ந்த சமூகத்திற்கு உதவி செய்ய வேண்டும் என்ற எண்ணம் இருந்தது. முதலில் நாம் ஒரு அடி எடுத்து வைத்தால் தான் நம்மை பின்பற்றி பலர் செய்வார்கள். அதனால் ‘வருண் ஆதித்யா’ என்ற பெயரில் அறக்கட்டளை ஒன்று நிறுவினேன். இதன் மூலம் தமிழ் மொழி மற்றும் கலாச்சாரத்தை மேம்படுத்துதல், பொருளாதாரத்தில் பின்தங்கிய குடும்பங்களில் உள்ள பெண்களுக்கு படிப்பு மற்றும் வேலைவாய்ப்பு ஏற்படுத்தி தருகிறேன்.

அது மட்டுமில்லாமல் உலகளாவிய சமூக தொண்டு நிறுவனங்களில் உறுப்பினராக இணைந்து அதன் மூலம் என்னால் முடிந்த உதவிகளை செய்து வருகிறேன். இதில் முக்கியமாக பூமி வெப்பமடைவதை குறைக்க மரங்களை நடவு செய்தல், சுத்தமான குடிநீர் வழங்குதல் குறித்த திட்டங்கள், ஏழை மாணவர்களுக்கு வழிகாட்டுதல், மனநலம் குன்றிய குழந்தைகளின் நலன் காத்தல், தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் மூலம் ஏழை மாணவர்களுக்கு கணினி வகுப்புகள் மற்றும் புத்தகம் விநியோகித்தல், மலேசியா வாழ் தமிழர்களுக்காக தமிழ் வளர்ச்சியினை குறித்து கலாச்சார நிகழ்வுகள் என பல சமூகம் சார்ந்த வேலையில் ஈடுபட்டு வருகிறேன்.

குறிக்கோள்

பொறியியல் மற்றும் அறிவியலைப் படிக்க அதிக பெண்களை ஊக்குவிக்கவும், அவர்களை பணியில் இணைக்க வேண்டும் என்பது தான் என்னுடைய குறிக்கோள். உலகின் எதிர்காலத்தை வடிவமைப்பதில் ஆண்களுடன் சம பங்காளிகளாகவும் பெண்கள் வளர வேண்டும். பெண்களுக்கு தொழில் திட்டமிடல் மிகவும் முக்கியமானது. தங்கள் தொழில்நுட்ப திறனை நிரூபிக்க ஆண்களைவிட கடினமாக உழைக்க வேண்டும். ஒவ்வொரு பெண்ணும் தன்னுடைய வாழ்க்கையில் பல திருப்பங்களை சந்திக்கிறார்கள், பல சவால்களை எதிர்கொள்கிறார்கள். இப்போது பல பெண்கள் வேலைக்கு செல்வது மட்டுமில்லாமல், தன் குடும்பத்தையும் பார்த்துக் கொள்கிறார்கள்.

முதலில் இயற்பியல் துறையில் பட்டம் பெற்று IAS தேர்வு எழுத விரும்பினேன். ஆனால் டிப்ளமோ பாலிமர் டெக்னாலஜி  படித்தேன். படித்து முடித்ததும் தான் அந்த பிரிவில் பெண்களுக்கான வேலைவாய்ப்பு மிக கடினம் என அறிந்தேன். அதனால் வேதியியல் துறையில் பொறியியலில் பட்டம் பெற்று எண்ணெய் மற்றும் எரிவாயு துறையில் வேலைக்கு சேர்ந்தேன். இந்த துறையில் இன்று வரை 15% பெண்கள் மட்டுமே உள்ளனர். அவர்களில் பெரும்பாலானவர்கள் சாதாரண வேலையாட்களாக மட்டுமே இருக்கிறார்களே தவிர தலைமைப் பொறுப்பில் இல்லை என்று நினைக்கும் போது கொஞ்சம் வருத்தமாக உள்ளது.

அதே சமயம் பெண்கள் முக்கிய பொறுப்பில் இருக்கும் போது பல விதமான மனஅழுத்தத்திற்கு தள்ளப்படுகிறார்கள். நானும் இந்த பிரச்னையை சந்தித்திருக்கிறேன். குறிப்பாக இரண்டு ஆண்டுக்கு ஒருமுறை வேறு இடத்திற்கு வேலை மாற்றம் ஏற்படும். அதுவே பெரிய அளவில் என்னை பாதிக்கும். அந்த சமயத்தில் மனம் தளராமல் இருப்பது அவசியம்.

மேலும் என்னுடைய வேலைப் பளுவுக்கு மத்தியிலும் எனக்கான ஒரு குறிப்பிட்ட நேரத்தை ஒதுக்கிக் கொள்ள பழகிக் கொண்டேன். அந்த நேரம் என் குடும்பத்திற்காகவும் எனக்காகவும் ஒதுக்கிக் கொள்வேன். அப்படி இருந்தால் தான் நம்மால் பேலன்சாக வாழ்க்கையை நகர்த்த முடியும். குறிப்பாக முக்கிய பொறுப்பில் இருக்கும் போது, நமக்கு கீழ் வேலைப் பார்க்கும் சக ஊழியர்களை மரியாதையாக நடத்த தெரியணும். காரணம் பெண் உயர் பதவியில் இருக்கும் போது அது இரட்டை முனைகள் கொண்ட வாள் போன்றது’’ என்றார் சுபத்ரா.

தேசிய மற்றும் உலக அளவில் பெற்ற விருதுகள்.

*இன்ஸ்டிடியூட் ஆப் இன்ஜினியர்சில் சிறந்த பெண் பொறியாளர் விருது
*இந்திய மாநாட்டின் செயல்முறை வடிவமைப்பு, பொறியியல் மற்றும் பங்களிப்புக்கான சிறந்த பெண்கள் தலைமைத்துவ விருது    
*திருவள்ளூர் இன்ஸ்டிடியூட் ஆப் இன்ஜினியர்களால் தொழில் நிபுணத்துவ ஐகான் விருது
*I2OR வழங்கிய சிறந்த பொறியாளர் விருது
*தென்னிந்திய சாதனை பெண்கள் விருதுகள் 2020
*ELS edification UK and FWW India வழங்கிய சிறந்த மனிதநேய விருது.

படங்கள்: ஜி.சிவக்குமார்

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • 23-04-2021

  23-04-2021 இன்றைய சிறப்பு படங்கள்

 • oxygen-22

  ஆக்சிஜன் வாயு கசிந்து விபத்து: நாசிக் மருத்துவமனையில் மூச்சுத்திணறி 24 நோயாளிகள் பரிதாப மரணம்..!!

 • oxyyge11

  ஆக்சிஜன் சிலிண்டர் நிரப்பும் மையங்களுக்கு படையெடுக்கும் மக்கள்; இரவு, பகலாக நீண்ட வரிசையில் காத்திருப்பு; இந்தியாவில் அவலநிலை!!

 • koronaasadaaa1

  குவியல் குவியலாக கொரோனா சடலங்கள் எரிப்பு.. ஆம்புலன்சில் காத்து கிடைக்கும் நோயாளிகள்.. கண்ணீர் ததும்ப வைக்கும் படங்கள்!!

 • black-girl22

  அமெரிக்காவில் போலீசாரின் துப்பாக்கிச் சூட்டில் கருப்பின சிறுமி பலி!: வெடித்தது பெரும் போராட்டம்..!!

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்