SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

ஹோம்-செஃப்களை இணைக்கும் ஃபூட்ஃபுல்லி!

2021-03-03@ 17:42:05

நன்றி குங்குமம் தோழி

வீட்டிலிருந்தே சம்பாதிக்க நினைக்கும் பெண்களும் ஆண்களும் பலர் இன்று ஹோம்-செஃப் ஆக இருக்கின்றனர். ஆனால் பல பிரதான உணவு டெலிவரி நிறுவனங்கள் தங்கள் தளத்தில் இருக்கும் உணவு தயாரிக்கும் நிறுவனங்களிடம் பல விதிமுறைகள் சொல்வதால் தனியாகச் சமைப்பவர்களால் இந்த நிறுவனங்களுடன் ஈடுகொடுத்து வேலை செய்ய முடிவதில்லை. அவர்களுக்காக தொடங்கப்பட்டதுதான் FoodFully.

ராம் - அர்ச்சனா தம்பதியினர், திருமணத்திற்குப் பின் உணவுத்துறையில் ஏதாவது செய்ய வேண்டும் என்ற ஆர்வத்தில் இருந்துள்ளனர். ஆனால் ராம் ஆடை உற்பத்தித் துறையில் தொடர்ந்து இயங்கி வந்ததால், உணவுத்துறையில் ஈடுபடும் வாய்ப்பு கிடைக்கவில்லை. இருந்தாலும், இருவரும் புதிதாகப் பல உணவுகளைத் தேடிச் சாப்பிடும் பழக்கம் உடையவர்கள்.

லாக்டவுன் சமயத்தில் பல உணவகங்கள் தங்கள் சேவையை நிறுத்தி வைத்திருந்ததால் ஹோம் கிச்சன் எனப்படும் வீட்டிலேயே குறிப்பிட்ட சில உணவு வகைகளை மட்டும் தயாரிக்கும் ஹோம் செஃப்களிடமிருந்து இருவரும் ஆர்டர் செய்து உணவுகளை சுவைத்து வந்துள்ளனர். அப்போது அந்த உணவுகள் உணவகங்களையே மிஞ்சுமளவு ருசியாகவும் ஆரோக்கியமாகவும் இருப்பதை உணர்ந்தனர்.

இந்த கொரோனா காலத்தில் இப்படிப் பல ஹோம் செஃப்களிடமிருந்து உணவு ஆர்டர் செய்து, அவர்களுடன் இருவருக்கும் பேசும் வாய்ப்பு அமைந்துள்ளது. அப்போது, சில வீட்டு செஃப்கள், பிரதான உணவு டெலிவரி செயலிகள், ஆர்டர் வந்த அரை மணி நேரத்திற்குள் அனைத்து உணவையும் தயாரிக்கும்படியும், அனைத்து உணவு வகைகளையும் தயாராக வைத்திருக்கும்படியும் கூறுவதால், தங்கள் தனிப்பட்ட வாழ்க்கை பாதிப்பதாக கூறியுள்ளனர். சிலர் தாமாகவே டெலிவரி செய்ய முயலும் போது, அரை நாள் உணவு டெலிவரி செய்யவே நேரம் போதாமல் இரவு உணவு சமைப்பதை கைவிடுவதாகவும் தெரிவித்துள்ளனர்.

மேலும் ஒவ்வொரு முகவரியைக் கண்டுபிடிப்பதில் தொடங்கி, பாதுகாப்பும் முக்கிய பிரச்சனையாக இருப்பதாகவும் கூறியுள்ளனர்இதில் குறிப்பாகப் பெண்கள் பலர் ஹோம்-கிச்சன் அமைத்திருப்பதால் அவர்களுக்குத் தகுந்த மாதிரி நேரமும் அதே சமயம் வருமானமும் தேவைப்பட்டுள்ளது. அதே போல ஒவ்வொரு நாளும் ஒரே நேரம் வேலையை ஆரம்பிப்பதிலும் அவர்களுக்குச் சிரமம் இருந்துவந்துள்ளது. அதனால் இது போன்ற தொழில்முனைவோருக்காக ஆரம்பிக்கப்பட்டதுதான் ஃபூட்ஃபுல்லி.

“பல ஹோம்-செஃப்களுக்கு ருசியான உணவு சமைப்பதில்தான் ஆர்வமும் நேரமும் இருக்கும். அவர்களுக்கு வாடிக்கையாளர்களைச் சமாளித்து, லாஜிஸ்டிக்ஸ், உணவு டெலிவரி எனப் பல வேலைகளைச் செய்வது சிரமமாகிவிடுகிறது. அதே போல வாடிக்கையாளர்களும் சூடான சுவையான உணவை நேரத்திற்குப் பெற வேண்டும். இந்த இடைவெளியைச் சரிசெய்யும் வேலையை தான் நாங்க செய்றோம்” என்கிறார் ஃபூட்ஃபுல்லி நிறுவனர் ராம்.

‘‘எனக்குத் தெரிந்த ஹோம்-குக்குகளிடம், உங்கள் உணவை டெலிவரி செய்ய நான் ஒரு தளத்தை உருவாக்கித் தருகிறேன். அதில் உங்களுக்கு அரை மணி நேரத்தில் உணவு தயாரிக்க வேண்டும் என்ற கெடுபிடிகள் இருக்காது. ஒரு நாளைக்கு முன் ஆர்டர் செய்து அடுத்த நாள் டெலிவரி செய்யும் வசதியும் அல்லது ஆர்டர் செய்தவுடன் டெலிவரி செய்யும் இரு வசதிகள் இருக்கும். உங்களுக்கு விருப்பமான திட்டங்களில் இணைந்து செயல்படலாம் எனக் கூறினேன். எங்கள் தளத்தில் இணைந்த ஒரு வாரத்திலே பல ஹோம்-செஃப்களுக்கு இது பிடித்துவிட்டது.

கடந்த டிசம்பர் மாதம் ஆரம்பிக்கப்பட்ட இந்த நிறுவனத்தில் இப்போது எங்களுடன் நாற்பது செஃப்கள் இருக்கின்றனர். அதில் 90% பெண் தொழில்முனைவோர்கள்’’ எனக் கூறும் ராம், தொடர்ந்து, “எங்கள் தளத்தில் இணைந்திருக்கும் அனைத்து ஹோம்-செஃப்களும், நம் இந்திய உணவு வகைகளில் தொடங்கி, பேக்கரி உணவுகள், இனிப்பு கார வகைகள், இத்தாலியன், சைனீஸ், லங்கன் என அந்த துறையில் சிறப்பாகச் சமைக்கும் திறமைசாலிகள். இவர்கள் அனைவரும் ஃபூட்ஃபுல்லியில் ஒன்றாக சங்கமிக்கின்றனர். இதில் நிதி ஆதாயம் மட்டுமில்லாமல், பல மணி நேரம் மிச்சமாவதாகவும், தேவையற்ற பதற்றம் குறைவதாகவும் ஹோம்-குக்குகள் தெரிவித்துள்ளனர்.

இப்போது சந்தா செலுத்தித் தொடர்ந்து உணவு பெறும் திட்டத்தையும் அறிமுகப்படுத்தியுள்ளோம். குறைந்த செலவில் ருசியான வீட்டு உணவைச் சாப்பிட நினைப்பவர்களுக்கு மூன்று வேளை உணவு வழங்கி வருகிறோம்” என்றார்.சில சமயம் பெண்கள் தங்கள் அடுக்குமாடிக் குடியிருப்புகளில் சமைக்கும் போது, பக்கத்து வீட்டில் வசிப்பவர்கள் அங்கு டெலிவரி ஆட்கள் கூடுவதையும், இரைச்சலாக இருப்பதாகக் குற்றம் சாட்டப்படுகிறது. இதற்கும் ஒரு ஐடியா வைத்துள்ளனர் ராம்-அர்ச்சனா தம்பதியினர்.

“எங்கள் நிறுவனத்தின் நோக்கமே ஹோம் செஃப்களை இணைத்து அருகிலேயே க்ளவுட் கிச்சனை உருவாக்குவதுதான். அதாவது குறிப்பிட்ட இடங்களில் உணவு தயாரிக்கச் சமையலறைகளை உருவாக்கி அதில் பொதுவான உணவு பொருட்களை அனைவரும் பயன்படுத்திச் சமைக்கும்படியும், சமைத்த உணவை பேக்கிங் செய்யவும் ஏற்பாடு செய்துத்தரப்படும். இதன் மூலம் பலமடங்கு செலவைக் குறைத்து உணவு வீணாவதையும் தடுக்க முடியும்.

எங்கள் செஃப்கள் அனைவருமே உணவு தயாரித்து வழங்க அங்கீகரிக்கப்பட்ட சான்றிதழ்களை வைத்துள்ளனர். சான்றிதழ்கள் இல்லாத சமையல் நிபுணர்களுக்கும் சான்றிதழ் பெற உதவிகளைச் செய்கிறோம். எங்களுடன் இணைந்திருக்கும் செஃப்கள், வேறு உணவு டெலிவரி நிறுவனங்களுடனும் இணைந்து செயல்படலாம்” என்கிறார் அர்ச்சனா. இவர், செஃப்களுடன் தொடர்பிலிருந்து அவர்களை ஃபூட்ஃபுல்லியில் இணைத்து தேவையான உதவிகளை வழங்கி வருகிறார்“எதிர்காலத்தில் நட்சத்திர உணவகங்களுக்குப் போட்டியாக நம் ஹோம் குக்குகளை உருவாக்குவதே எங்கள் நோக்கம்.

ஹோம் கிச்சனில் ஒவ்வொரு வாடிக்கையாளரின் தேவைக்கேற்ப பிரத்யேகமான உணவைத் தயாரித்துக்கொடுக்க முடியும். சிலர் இரண்டு உணவுகளில் ஒரு உணவில் மட்டும் உப்பு பாதியாக வேண்டும் எனக் கேட்பார்கள். சிலர் சர்க்கரை இல்லாமல், முட்டை இல்லாமல் உணவைக் கேட்பார்கள். இப்படி வாடிக்கையாளர்களின் சுவை, ஒவ்வாமை, ஆரோக்கியத்திற்கு ஏற்ற உணவை ஹோம் கிச்சனில் சமைத்துத் தர முடியும்” என்கிறார்கள் இருவரும்.

பிரதான உணவு டெலிவரி நிறுவனங்கள் ECR, OMRல் சில இடங்களுக்கு விநியோகிப்பதில்லை. ஆனால் நாங்க சென்னையில் அனைத்து இடங்களுக்கும் சென்று உணவு வழங்கி வருகிறோம். வெகு விரைவிலேயே ஃபூட்ஃபுல்லி என்ற செயலியை அறிமுகப்படுத்த இருக்கிறோம்’’ என்ற தம்பதியின் ஆன்லைனில் ஆர்டர் செய்ய முடியாதவர்களுக்கும், தொலைபேசி மூலமும் ஆர்டர் எடுத்து உணவினை வழங்கி வருகின்றனர்.

தொகுப்பு: ஸ்வேதா கண்ணன்

படங்கள்: ஜி.சிவக்குமார்

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • 23-04-2021

  23-04-2021 இன்றைய சிறப்பு படங்கள்

 • oxygen-22

  ஆக்சிஜன் வாயு கசிந்து விபத்து: நாசிக் மருத்துவமனையில் மூச்சுத்திணறி 24 நோயாளிகள் பரிதாப மரணம்..!!

 • oxyyge11

  ஆக்சிஜன் சிலிண்டர் நிரப்பும் மையங்களுக்கு படையெடுக்கும் மக்கள்; இரவு, பகலாக நீண்ட வரிசையில் காத்திருப்பு; இந்தியாவில் அவலநிலை!!

 • koronaasadaaa1

  குவியல் குவியலாக கொரோனா சடலங்கள் எரிப்பு.. ஆம்புலன்சில் காத்து கிடைக்கும் நோயாளிகள்.. கண்ணீர் ததும்ப வைக்கும் படங்கள்!!

 • black-girl22

  அமெரிக்காவில் போலீசாரின் துப்பாக்கிச் சூட்டில் கருப்பின சிறுமி பலி!: வெடித்தது பெரும் போராட்டம்..!!

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்