SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

குறை கூறுபவர்களையும் திருப்திப்படுத்த வேண்டும்!

2021-03-02@ 18:06:17

நன்றி குங்குமம் தோழி

வீட்டில் விசேஷம் என்றால் முதலில் ஆலோசிப்பது உணவு பற்றிதான். அதன் சுவை, தரம், விலை போன்றவைகளின் அடிப்படையில் யார் சிறப்பாக கொடுக்கிறார்கள் என்கிற பட்டியலிட்டு அதில் சிறந்தவர்களை தேர்வு செய்கிறோம். ‘‘அப்படி ஒரு பட்டியலே போடத் தேவையில்லை... நாங்கள் இருக்கிறோம்’’ என்கிறார் ‘சென்னை கேட்டரிங்’ நிறுவனர் புண்ணியமூர்த்தி.

“சாமை அரிசியில் சாம்பார் சாதம், குதிரைவாலியில் குழிப்பணியாரம், வரகு அரிசியில் தயிர்சாதம், கம்பு தோசை, முடக்கத்தான் தோசை, வாழைத்தண்டு பொரியல், தாமரைத் தண்டில் கூட்டு… என ஆரோக்கியமாக நம் பாரம்பரிய உணவுகளோடு செய்து கொடுக்கிறோம். 65 வகையான உணவு வகைகள் நம்மிடம் உண்டு. அதில் எது தேவையோ அதை தயார் செய்கிறோம். சென்னை சிட்டியிலேயே அதிக எண்ணிக்கையில் பத்திரிகை வைத்து அழைக்கப்படும் திருமண நிகழ்வுகளில் சென்னை கேட்டரிங்தான் அங்கம் வகிக்கும் என்பதை பெருமையோடு சொல்லிக் கொள்கிறேன்” என்று கூறும் புண்ணிய மூர்த்தி விவசாய குடும்ப பின்னணியிலிருந்து வந்தவர். சமையல் தொழில் மீது தீராத ஆர்வம் கொண்டவராக தன்னை மாற்றிக் கொண்டவர், இன்று அதில் நம்பர் ஒன் இடத்தில் இருக்கிறார்.

‘‘எந்த ஒரு தொழிலாக இருந்தாலும் அதன் மீது விருப்பம் வரும் போதுதானே அதில் ஈடுபாடு அதிகமாகும். எனக்கு தெரியாத தொழிலில் இன்று நிலை நின்றிருக்க காரணம் இதுவே. அதனால் ஒவ்வொன்றாக கற்றுக் கொண்டேன். கற்றுக் கொண்டும் இருக்கிறேன். சென்னையிலேயே நம்ம பண்றதுதான் பெரிய கேட்டரிங். அதற்கு உதாரணம் 2016ல் நடந்த திருமணம் ஒன்றில் 70,000 பேருக்கு சமைத்தோம். அவ்வளவு பேருக்கு சமைத்து, ‘சுவையாக இருக்கிறது’ என்று வந்தவர்களிடம் பெயர் வாங்கவும் வேண்டும்.

அதற்கு நாங்கள் செய்யும் ஒவ்வொரு உணவுக்கும் ஒரு சிறப்பு சமையல் கலைஞரை நிர்ணயிப்போம். அதாவது பொரியலுக்கு ஒருத்தர், பனீர் பட்டர் மசாலாக்கு ஒருத்தர், சாம்பாருக்கு ஒருத்தர் என இப்படி ஒவ்வொன்றுக்கும் ஒவ்வொரு ஆள். ஒரே ஆளிடம்  நாலு வேலையை கொடுத்தால் அதில் ஒரு வேலையை அவரால் சரியாக செய்ய முடியாமல் போனால், அத்தனை பேர் செய்த வேலையும் வீணாகி விடும். எனவே எதில் யார் சிறந்தவர்கள் என்பதை தெரிந்து அதை அவரிடம் கொடுக்கிறோம். இப்படி செய்யும் போது சம்பளம் அதிகமாகும்.

இதனால் எங்கள் சென்னை கேட்டரிங்கில் மற்றவர்களை விட கொஞ்சம் பணம் வித்தியாசம் வரும். ஆனால் எதற்காக என்று, புரிந்தவர்களுக்கு
புரிந்து விடும். அப்படி நாங்கள் எடுத்து சமையல் செய்து கொடுத்தவர்கள் இன்று நெருங்கிய நண்பர்களாகவும், ஏன் உறவுக்காரர்கள் மாதிரியும் ஆகியுள்ளனர்” என்று கூறும் புண்ணியமூர்த்தியின் ‘சென்னை கேட்டரிங்’ கடைகள், மேற்கு மாம்பலம் மற்றும் வானகரத்தில் அமைந்துள்ளது.

‘‘எங்கள் சமையல் குறித்து ஏதாவது குறை சொல்ல வேண்டும் என்று இருப்பவர்களையும் சந்தோஷப்படுத்தி, திருப்தி படுத்துவதுதான் நாங்கள் செய்யும் வேலைக்கு நற்சான்று” என்று கூறும் புண்ணிய மூர்த்தியின், சென்னை கேட்டரிங் புதிய வரவு ‘திருவையாறு அல்வா’.

“எங்களிடம் இருபது பேருக்கு மேல் நிரந்தரமாக வேலை செய்கிறார்கள். கொரோனா காலத்தில் ஆட்களுக்கு வேலை இல்லாத காரணத்தால் சென்னை மேற்கு மாம்பலத்தில் ‘சென்னையில் திருவையாறு அல்வா’ என்ற பெயரில் கடை ஆரம்பித்தோம். இதன் சிறப்பு என்னவென்றால் பதினைந்து நிமிடத்தில் செய்யக் கூடிய அல்வாவை ஒன்றரை மணி நேரத்தில் செய்வது. அப்படி செய்யும் போது ஐந்து லிட்டர் நெய் ஊற்றி கிண்டுகிறோம் என்றால், அத்தனை நெய்யும் வெளியே தள்ளி அல்வாவின் சுவையை மட்டுமே கொடுக்கும். இதுதான் மற்றவர்களுக்கும் நம்மளுக்கும் உள்ள வித்தியாசம்.

கொஞ்சம் வேலை அதிகம். அதே போல் பல வகையான புட்டு உணவும் நம்முடைய ஸ்பெஷல், ராகி புட்டு, அரிசி புட்டு, சோள புட்டு, அவல் புட்டு, மூங்கில் அரிசி புட்டு... என பல வகையுண்டு. அல்வாவிற்கு எவ்வளவு முக்கியத்துவம் தருகிறோமோ அதே போல் தான் எல்லா உணவு வகைகளுக்கும் மெனக்கெடுகிறோம். அதனால் தான் தனித்து நிற்கிறோம்” என்றார் புண்ணியமூர்த்தி.

செய்தி: அன்னம் அரசு

படங்கள்: ஆ.வின்சென்ட் பால்

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • 23-04-2021

  23-04-2021 இன்றைய சிறப்பு படங்கள்

 • oxygen-22

  ஆக்சிஜன் வாயு கசிந்து விபத்து: நாசிக் மருத்துவமனையில் மூச்சுத்திணறி 24 நோயாளிகள் பரிதாப மரணம்..!!

 • oxyyge11

  ஆக்சிஜன் சிலிண்டர் நிரப்பும் மையங்களுக்கு படையெடுக்கும் மக்கள்; இரவு, பகலாக நீண்ட வரிசையில் காத்திருப்பு; இந்தியாவில் அவலநிலை!!

 • koronaasadaaa1

  குவியல் குவியலாக கொரோனா சடலங்கள் எரிப்பு.. ஆம்புலன்சில் காத்து கிடைக்கும் நோயாளிகள்.. கண்ணீர் ததும்ப வைக்கும் படங்கள்!!

 • black-girl22

  அமெரிக்காவில் போலீசாரின் துப்பாக்கிச் சூட்டில் கருப்பின சிறுமி பலி!: வெடித்தது பெரும் போராட்டம்..!!

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்