SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

ஆழ்கடலுக்குள் கல்யாணம்

2021-02-25@ 17:46:40

நன்றி குங்குமம் தோழி

சென்னையில் நீலாங்கரை அருகே வங்காள விரிகுடாவில் ஆழ்கடலுக்குள் திருமணம் என்கிற அழைப்பிதழைப் பார்த்ததுமே பரபரப்பு பற்றிக்கொண்டது. ஆழ்கடலில் நீந்த பயிற்சி அளிப்பவரும், டெம்பிள் அட்வென்சர்ஸ்  ஸ்கூபா டைவிங் பள்ளியை இயக்கி வருபவருமான அரவிந்திடம் பேசினோம்.

‘நான் டாக்டராக நினச்சேன் என்னால முடியல, நீயாவது டாக்டரா வா’ எனச் சொல்கிற மாதிரிதான் இந்தக் கல்யாணமும். 2010ல் எனக்குத் திருமணம் நடந்தது. இதேமாதிரியே கடலுக்குள் திருமணம் செய்ய ஆசைதான். ஆனால் என் மாமனார் அதற்கு சம்மதிக்கல. பொண்ணைத் தரமாட்டேன்னு கறாரா சொல்லிட்டாரு. அதனால் என் ஆசையை இன்று என் ஒன்றுவிட்ட சகோதரர் கல்யாணத்தில் நிறைவேற்றிக் கொண்டேன், சிரித்தவாறே பேச ஆரம்பித்தார் அரவிந்த்.

மணமகன் சின்னதுரைக்கும் ஸ்கூபா டைவிங் நன்றாகத் தெரியும். அவர் கல்யாணம் செய்துள்ள மணமகள் ஸ்வேதாவுக்கு லைட்டா ஸ்விம்மிங் மட்டுமே தெரியும் அவ்வளவுதான். கடலுக்குள் கல்யாணம் என்று முடிவானதுமே, ஸ்வேதாவை கடலில் இறக்கி பயிற்சி கொடுக்க ஆரம்பித்தோம். மூன்றே நாளில் கடல் பயம் தெளிந்து ஃப்ரீயா நீந்த ஆரம்பித்து விட்டார். பிறகு தேதி குறிப்பிடாமலே கல்யாண அழைப்பிதழை தயார் செய்து, கடல் அமைதிக்காக காத்திருந்தோம்.

2ம் தேதி அதிகாலை நான்கு மணிக்கு ‘கடலம்மா அமைதியா இருக்கா நண்பா..’ என நீலாங்கரை அருகில் வசிக்கும் நண்பனிடமிருந்து அழைப்பு. கல்யாண ஏற்பாட்டுடன் தடபுடலாய் களமிறங்கினோம். கடலுக்குள் டும்..டும்..டும்.. சத்தம் மட்டும்தான் இல்ல. மற்றபடி, 60 அடி ஆழத்தில் மணமக்கள் மாலை மாற்றி.. மணமகன் தாலி கட்ட.. பூச்செண்டை கைகளில் ஏந்தி.. மகிழ்ச்சியை பரிமாறி.. மலர்களைத் தூவ.. சிறப்பாகக் கல்யாணம் முடிந்தது. கல்யாணம் முடிந்து திரும்பிய மணமக்களை கரையில் காத்திருந்த உறவினர்களும் நண்பர்களும் ஆரவாரத்தோடு வரவேற்றனர்.

மேடை அலங்கார வளைவுகளை தென்னை மர ஓலையில் வளைத்து, மல்லிகை, டேலியா போன்ற நேச்சுரல்ஸ் மலர்களால் நிறைத்து.. ஆர்ச் வடிவில் கடலுக்குள் கொண்டு சென்றோம். மணமக்கள் அணிந்திருந்த மாலையும் நேச்சுரல். மாலைகள் தண்ணீரில் மிதக்காமல் இருக்க ஆங்காங்கே கனமான குண்டுகளை மலர்களில் கட்டி தொங்கவிட்டோம். தாலியும் அதே கான்செப்ட்தான். என் மனைவி தருன்ஸ்ரீ  ப்ரைடல் மேக்கப் டிசைனர் என்பதால், மணமக்கள் உடை அலங்காரத்தை முழுமையாக அவரிடம் ஒப்படைத்துவிட்டேன்.

மணமகள் கழுத்தில் மணமகன் தாலி கட்டியபோது மேலிருந்து ரோஜாமலர்களை கூடையில் தூவினோம். கூடையில் இருந்த ஒவ்வொரு ரோஜாமலரும் சின்ன சின்ன வெயிட்களில் இணைக்கப்பட்டிருந்தது. வாட்டர் ப்ரூஃப் கேமராவையும் உள்ளே இறக்கி புகைப்படம், வீடியோ என எல்லாமே சக்சஸ்தான். கோஸ்ட்காட் அனுமதியோடு நடந்த இந்த திருமணத்தில், மணமக்கள் பாதுகாப்பிற்காக கடலுக்குள் அவர்களைச் சுற்றி 8 ஸ்கூபா டைவர்ஸ் உடன் இருந்தனர். இதற்குமுன் சர்ப்ரைஸ்காக அண்டர்வாட்டர் புரோபஷல்ஸ்களை நிகழ்த்தி இருக்கிறேன். அண்டர்வாட்டர் திருமணம் தமிழ்நாட்டில் இதுவே முதல் முறை என்றவரைத் தொடர்ந்தார் அரவிந்தின் மனைவியும், ப்ரைடல் மேக்கப் ஆர்டிஸ்டுமான தருன்ஸ்ரீ.

இந்த அனுபவம் எனக்கும் ரொம்பவே எக்ஸைட்டெடாக இருந்தது. உடை விஷயத்தில் என் ஐடியாவை அப்படியே எடுத்துக்கொண்டு, முழு சுதந்திரம் கொடுத்தார்கள். வெல் ப்ளான்டா யோசித்து, கவனம் செலுத்தி ஒரு ரிகெர்ஷல் எடுத்தோம். கடலுக்கடியில் மணமக்கள் உடை கலைந்து தூக்கிக்கொள்ளாமல் இருக்க, வெல்க்ரோவால் பக்காவாக உடலுடன் உடைகளை ஒட்டி பல இடங்களில் சேஃப்டி பின்களால் பாதுகாப்பு செய்தே, மணக்கோலத்தில் இருவரையும் கச்சிதமாக தயார் செய்தேன். உடையலங்காரம் நீருக்குள் கொஞ்சம் கூட கலையாமல் ரொம்பவே சக்சஸாக முடிந்தது’’ என முடித்துக் கொண்டார்.

கடலுக்குள் தாலிகட்டிய மணமகன் சின்னதுரையிடம் பேசியபோது, ‘‘நான் லைசென்ஸ்ட் ஸ்கூபா டைவர். கடந்த பதினைந்து ஆண்டுகளாக ஸ்கூபா டைவிங் செய்து வருகிறேன். எனக்கு ஊர் திருவண்ணாமலை. ஸ்வேதாவுக்கு கோயம்புத்தூர். இருவருமே சாஃப்ட்வேர் புரொபஷனல்ஸ். மேட்ரிமோனியல் வெப்சைட் மூலமாக எங்கள் திருமணம் முடிவானது. திருமணம் முடிவானது குறித்து என் கஸின் அரவிந்திடம் பேசியபோது, விழிப்புணர்வு நோக்கத்திற்காக, ‘நீ ஏன் அண்டர் வாட்டர் ஓசன் மேரேஜ் செய்யக்கூடாது’ எனக் கேட்க, இருவீட்டு பெற்றோர்களிடமும் இது குறித்து பேசினோம். ஆரம்பத்தில் ரொம்பவே பயந்தார்கள்.

மணமகள் ஸ்வேதாவின் பெற்றோர் முதலில் மறுத்தாலும், நானும் அரவிந்த் அண்ணாவும் ஸ்கூபா டைவில் துறையில் பல ஆண்டுகள் பயணிப்பதையும், அதற்கான பாதுகாப்பு, பாதுகாப்பு உபகரணங்கள் குறித்தும், மாற்றுத் திறனாளிகளையும் ஸ்கூபா டைவிங் செய்ய வைக்கிறோம் என்பதையும், அரவிந்த் நடத்தி வரும் டெம்பிள் அட்வென்சர் குறித்த வீடியோக்களை காண்பித்த பிறகே அரைகுறையாக சம்மதித்தார்கள்.

திருமணத்திற்கு முன்பு மணமகள் ஸ்வேதாவுக்கு கடலில் நீந்த பயிற்சி வழங்கப்பட்டது. அவர் கம்ஃபெர்ட்டா ஃபீல் பண்ணுவதையும், கடலுக்குள் அவர் டைவ் செய்யும் வீடியோவையும் பெற்றோர்களிடத்தில் போட்டுக் காட்டி மேலும் அவர்களைத் தைரியப்படுத்தினோம். அவர்களும் முழு மனதுடன் சம்மதித்த பிறகே கடலுக்குள் திருமணத்தை உறுதி செய்தோம்.

திருமணத்தன்று, கரையில் இருந்து 5 கிலோ மீட்டர் தூரம் போட் மூலமாக கடலுக்குள் பயணித்து, அங்கிருந்து 60  அடி ஆழத்தில் உள்ளே இறங்கினோம். கடல் உள்ளே தரையில் நின்றவாறே எங்கள் திருமணம் சிறப்பாக முடிந்தது என்றவரிடம், எதற்காக இந்த கான்செப்ட் என்ற நமது கேள்விக்கு? 12 வருடமாக கடலில் நீந்துகிறேன். நான் நீந்த ஆரம்பித்தபோது கடலுக்குள் இவ்வளவு பிளாஸ்டிக் கழிவுகளைப் பார்த்ததே இல்லை.

கொரோனா லாக்டவுன் நேரத்திலும் இவ்வளவு பிளாஸ்டிக் கழிவுகள் கடலுக்குள் இல்லை. அப்படியென்றால் நாம் இயற்கையை புரிந்துகொள்ளாமல் எவ்வளவு தவறு செய்கிறோம். நம்முடைய பொறுப்பின்மையால், கடலையும் ஆபத்தான கழிவுகளால் நிரப்பி இயற்கையை பாழாக்கி வருகிறோம். நாம் தூக்கிப்போடும் பிளாஸ்டிக் கழிவுகள் கடலைச் சென்று சேர்கிறது என்ற விழிப்புணர்வுக்காகவே கடலுக்குள் கல்யாணம்’’ என விடைபெற்றவரைத் தொடர்ந்து பேசினார் மணமகள் ஸ்வேதா.

‘‘எங்களைச் சுற்றி கலர் கலரான மீன்கள்.. ஸ்டார் ஃபிஷ்கள்.. க்யூட்டான கடல் குதிரைகள்.. பெரிய வகை மீன்கள்.. கிளிஞ்சல்கள் சுற்றிவர.. எங்கள் திருமணம் கடலுக்குள் சிறப்பாகவே முடிந்தது’’ என பரவசம் காட்டியவரிடம்.. கணவர் கடலுக்குள் குதின்னா குதிச்சுருவீங்களா? ஆர்ப்பரிக்கும் கடலைப் பார்க்க பயமில்லையா என்றதுமே, பலமாகச் சிரித்தவர்.. ‘‘கடலில் இறங்கிய இரண்டு மூன்று மணி நேரத்திலே நமது உடல் கடல் நீருக்கு அடாப்ட் ஆகி, பயம் போய்விடும்.

பிறகு கடலை ஃப்ரெண்ட்லியா பார்க்கவும் நேசிக்கவும் ஆரம்பிச்சுருவோம்’’ என்றவர், ‘‘இதற்கு முன்புவரை எனக்கு பேஸிக் ஸ்விம்மிங் மட்டுமே தெரியும். அதுவும் ஸ்விம்மிங் பூலைப் பயன்படுத்தி மட்டுமே நீந்தி இருக்கேன்’’ என்கிறார் விரல்களை உயர்த்தி. மணமக்கள் விதவிதமாக அட்வென்ச்சர் ப்ரீ வெட்டிங் சூட்களை நிகழ்த்தி சமூக வலைத்தளங்களில் பரபரப்பை ஏற்படுத்திக் கொண்டிருக்க.. விழிப்புணர்வு நோக்கத்திற்காக.. நம் அருகாமையில் கடலுக்கு அடியில் தாலி கட்டி புரட்சி செய்த மணமக்களை வாழ்த்தி விடைபெற்றோம்.

தொகுப்பு: மகேஸ்வரி நாகராஜன்

படங்கள்: ஜி.சிவக்குமார்

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • 21-04-2021

  இன்றைய சிறப்பு படங்கள்

 • nasa-helicopter-20

  செவ்வாய் கிரகத்தில் வெற்றிகரமாக பறந்த ஹெலிகாப்டர்!: புதிய வரலாற்று சாதனை படைத்து அசத்திய நாசா விஞ்ஞானிகள்..!!

 • vaccine-cake-20

  ஹங்கேரியில் களை கட்டுகிறது தடுப்பூசி கேக் விற்பனை!: ஃபைசர், மாடர்னா, ஆஸ்ட்ரா ஜெனிகா கேக் வகைகளுக்கு மவுசு அதிகம்..!!

 • egypt-20

  எகிப்தில் பயணிகள் ரயில் தடம் புரண்டு கோர விபத்து!: 11 பேர் உடல் நசுங்கி பலி.. 98 பேர் படுகாயம்..!!

 • dell_aacccc

  கொரோனா அச்சம் காரணமாக டெல்லியில் ஒரு வாரம் லாக்டவுன் : பல்லாயிரக்கணக்கில் வெளியேறிய வெளிமாநில தொழிலாளர்கள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்