SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

கற்பித்தல் என்னும் கலை

2021-02-25@ 17:44:56

நன்றி குங்குமம் தோழி

கற்பித்தல் என்னும் உன்னதமானப்பணி நமக்குக் கற்றுத்தருவது ஏராளம். புத்தகக் கல்வியை படித்துத் தேர்ந்து, நாம் அவற்றை பிள்ளைகள் மனதில் விதைத்து, ‘அறிவு’ என்னும் செடியை வளர்க்கச் செய்வதுதான் நம் நோக்கம். அத்தகையப் பணியில் ஈடுபடும்பொழுதுதான், நம் நடைமுறைக்குத் தேவையான வாழ்க்கைக் கல்வியை கற்க ஒரு ஆரம்பமாக அது அமைந்துவிடுகிறது. எத்தனையெத்தனை விதவிதமான சோகக் கதைகள்! துயரங்கள்! பணம் மட்டுமே வாழ்க்கையாகாது என சில அனுபவங்களைக் கண்டோம்.

பணத்தினாலேயே பிரச்னைகள் ஏற்பட்டு, குடும்பங்கள் பாதிக்கப்பட்டு, அதன்மூலம் அக்குடும்பத்தில் பாதிக்கப்பட்ட பிள்ளைகளையும் கண்டோம். பணமில்லாமல் வறுமையில் பாதிக்கப்பட்ட பிள்ளைகளின் மனநிலையையும் கண்டோம். அனைத்துத்தர பிள்ளைகளின் வாழ்விலும் அன்பு, சரியான அணுகுமுறை, மனம் புரிந்து நடத்தல், மிகச்சிறிய நல்ல விஷயங்களைக்கூட சுட்டிக்காட்டி ஊக்கப்படுத்துதல் போன்றவையே சிறந்த ‘டானிக்’ போன்று அமைகின்றன.

ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் பாதிக்கபபடும் பிள்ளைகளை நம் பிள்ளைகளாகவும், அவர்கள் பெற்றோரை தன்னைப்போன்றும் நிறுத்திப்பார்த்தால்தான், நிலைமை புரிந்து நம்மால் கையாள முடியும். நிறைய பெற்றோர்கள், ‘ஆசிரியர்-பெற்றோர்’ கூட்டத்திற்கு வரவே அச்சப்படுவார்கள். ‘‘எங்கே நிறைய குறைகளைச் சொல்லி விடுவார்களோ, மற்றவர் எதிரே நமக்கு சங்கடம் ஏற்படுமோ?’’ போன்ற அச்சங்கள் எழும். ஆனால் அனைத்தையும் தாண்டி நம் அணுகுமுறை நியாயமாக இருந்துவிட்டால், என்றும் அவர்கள் மனதில் நாம் இடம் பிடிப்போம்.

குடும்ப ‘பந்தம்’ போன்று, பள்ளிக்கூட ‘பந்தம்’ என்பதும் செய்யும் சேவைப் பணியுடன் சம்பந்தப்பட்டது என்றுதான் சொல்ல வேண்டும். ஒரு ஆசிரியை ஏதோ உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டாராம். அறுவை சிகிச்சை தருவதற்காக அவருக்கு மயக்க மருந்து தரப்பட்டதாம். அரைகுறை மயக்கத்தில் அவர் பிள்ளைகள் பெயரையெல்லாம் சொல்லிக்கொண்டிருந்தாராம். மேலும் ‘ஏய் வகுப்பில் விளையாடாதே! சரியாக பாடத்தை கவனி!’ என்றெல்லாம் புலம்பித் தீர்த்து விட்டாராம்.

சிகிச்சை முடிந்தபின் மருத்துவர்கள் அவரிடம், ‘நீங்கள் ஆசிரியரா’ என்று கேட்க அவருக்கு ஒன்றும் புரியவில்லையாம். பின் நடந்தவற்றை மருத்துவர் கூற, ஆசிரியருக்கு அப்படியொரு வியப்பு ஏற்பட்டதாம். அப்படியானால், பிள்ளைகளின் நினைவு ஆசிரியர் மனதில் எவ்வளவு ஆழத்தில் பதிந்திருந்தால், இவ்வளவு தூரம் பாதிக்கப்பட்டிருக்கும்!

இத்தகைய நிகழ்வை ஆசிரியர் சக நண்பர்களிடம் பகிர்ந்துகொண்டிருந்தார். அப்பொழுது மற்றொருவர் சொன்னார், ‘‘அடக்கடவுளே! போன வருடம் நான் ‘டைபாய்டு’ ஜுரத்தில் ‘ரைம்ஸ்’களை உளறிக்கொண்டிருந்ததாக என் அம்மா சொன்னார். வெளியில் இந்த விஷயத்தைச் சொல்லவே எனக்குக் கூச்சமாக இருந்தது. இப்பொழுது நன்றாகப் புரிகிறது. இதற்குக் காரணம் நாம் பிள்ளைகள் மேல் வைத்துள்ள நெருக்கமான பந்தம்தான் என்பது.

 ‘‘இதுபோன்ற அனுபவ ஆராய்ச்சிகள் அவ்வப்பொழுது நடந்துகொண்டுதான் இருக்கும். உண்மையில், இரவு நேரம் போக அதிகப்படியான பகல் நேரம் பிள்ளைகளுடன் ஒன்றி விடுவதால்தான், அவர்கள் அடிமனதில் வாழ்ந்து கொண்டேயிருக்கிறார்கள் என்று கூறலாம். பொதுவாக பெற்றோர் தங்கள் முதல் பிள்ளையை எங்கு சேர்த்து விடுகிறார்களோ, அங்கேயே இரண்டாவது பிள்ளையையும் சேர்க்க விரும்புவார்கள்.

ஒரே இடத்தில் இருவரும் படித்தால், நடைபெறும் விஷயங்களைத் தெரிந்துகொள்ள வசதியாக இருக்கும். போக்குவரத்து செலவு குறையும் அல்லது ஒரே சமயம் கொண்டுவிட்டு அழைத்துவர வசதியாக இருக்கும். சில இடங்களில் கட்டண சலுகைகள்கூட கிடைக்க வாய்ப்புண்டு. இதுபோல் நிறைய சகோதர, சகோதரிகளை காண முடியும். இப்படியாக, ஒரே குடும்பத்தைச்சேர்ந்த ஆறு பிள்ளைகளுக்குக்கூட கற்பித்த வாய்ப்புகள் ஏராளம்.

புதிதாக ஒரு வகுப்பிற்குள் நுழைந்தால், சில மாணவர்கள் முகத்தைப் பார்த்தாலே, அவர்கள் யாருடைய சகோதரன் அல்லது சகோதரி என்று சுலபமாகக் கண்டுபிடித்து விடலாம். ஒரு குறிப்பிட்ட மாணவன் அல்லது மாணவி பெயரைக் குறிப்பிட்டு, ‘நீ அவர்கள் உடன்பிறப்பா’ என்றால் ஆமாம் என்பார்கள். சில நேரங்களில் பள்ளிப்படிப்பு முடித்து, வெளியே சென்றுவிட்ட மாணவர்களின் தம்பி, தங்கைகள்கூட சிறிய வகுப்புகளில் படித்துக்கொண்டிருப்பார்கள்.

ஆனால் அண்ணன் மாதிரி தங்கையோ, அக்கா மாதிரி தம்பியோ படிப்பில் இருப்பார்கள் என்று சொல்லவே முடியாது. மூத்த சகோதர, சகோதரிகளின் தரத்துடன் இளையவர்களை ஒப்பிடவே முடியாது. அது கூடவும் கூடாது. பல சமயங்களில் இரு துருவங்கள்போலக்கூட அவர்களின் படிப்பு  முறை மாறுபடலாம்.

அண்ணன் ‘மக்காக’ இருப்பவனுக்குத் தம்பி புத்திசாலியாக இருப்பான். புத்திசாலியான அண்ணன் அல்லது அக்காவிற்கு சரியாகப் படிக்காத தங்கையோ, தம்பியோகூட அமைவதுண்டு. இவற்றையெல்லாம் நாம் எளிதாகக் கண்டுபிடித்து விடலாம். ஆனால் ஒரே உருவ அமைப்பு கொண்ட இரட்டையர்களில், அவர்களை நாம் அடையாளப்படுத்திக் கொள்ளவே பல நாட்கள் ஆகும்.

‘நிறைய இரட்டையர்களை ஒரே இடத்தில் கண்டோம்’ என்று சொன்னால் அத்தகைய இடம் பள்ளிக்கூடம்தான் என்று சொல்ல முடியும். மூன்று வயது எல்.கே.ஜி. வகுப்பு முதல் பன்னிரெண்டாம் வகுப்பு வரையிலான பல்வேறு இரட்டைக் குழந்தைகளைக் கண்டது ஒரு அற்புதமான நிகழ்வுதான். ஒருவர் பள்ளிக்கு வர இயலாவிடில், மற்றொருவர் வருவதும் கேள்விக்குறிதான்.

 இதில் தண்டனை பெறும்பொழுதுதான் மிக சங்கடமான நிலை ஏற்படும். ‘பழி ஓரிடம், பாவம் ஓரிடம்’ என்பார்களே, அது இத்தகைய சூழல்தான் என்று சொல்லலாம். நிறைய இரட்டையர்கள் நடனம், பாடல் போன்றவற்றை சேர்ந்தே கற்றுக்கொள்வார்கள். சில இரட்டையர்களை ஒருசில அடையாளங்களை வைத்து கண்டுபிடித்துவிடலாம்.

‘பையன்-பெண்’ இரட்டையர்களாக இருந்துவிட்டால், அது சுலபமான ஒன்று. இரண்டும் ஆண்பிள்ளைகள் அல்லது இரண்டும் பெண்பிள்ளைகள் என்று இருக்கும் பொழுதுதான், அடையாளப்படுத்துவதில் நமக்கு சிரமமாக இருக்கலாம். உயர வித்தியாசமோ, பார்க்க எடை வித்தியாசமோ இருக்குமானால் எளிதில் அடையாளப்படுத்தி விடலாம்.

ஒரே முகவாடை, ஒரே உருவ அமைப்பு என்று இருந்துவிட்டால், மற்றவர்களுக்கு அடையாளம் காண, சில நாட்கள் ஆகும். அப்படியாக, ஒரு யு.கே.ஜி. வகுப்பு சகோதரிகள் அழகு தேவதை களாகவே காணப்பட்டனர். இருவரும் ஒரே ‘பெஞ்சில்’தான் அமர்வார்கள். புதிதாக வந்த ஒரு ஆசிரியை ஒரு சகோதரியை திட்டியிருந்தார்போல் தெரிந்தது. வகுப்பின் நடுவே ஓடிக்கொண்டேயிருந்ததால், மற்றவர்கள் கவனம் பாதிக்கப்பட்டதாம். அதனால் தன் இடத்திலேயே உட்காரும்படி கூறியிருக்கிறார். அந்தக் குட்டிப்பெண் அதைப்பற்றி கண்டுகொள்ளவே இல்லையாம். ஆனால் அவளின் இரட்டை சகோதரி ஏதோ ஆசிரியர் கோபிப்பதாக நினைத்து அழுதிருக்கிறாள்.

அத்துடனில்லாமல் வீட்டில் சென்று தாயிடம் புலம்பியிருக்கிறாள். ஒரு சில நாட்கள் கழித்து, ‘தான் பள்ளிக்குப் போகப்போவதில்லை’ என்று அழுதாளாம், தாய் மிகவும் வேதனைப்பட்டு ஒருநாள் இவ்விஷயத்தை நேரே வந்து விளக்கினார். இதில் எந்தப்பெண் ஓடிக்கொண்டிருந்தாளோ, அவளுக்கு எதுவும் புரியவில்லை.

அமைதியாக இருந்த குழந்தை அழுதுகொண்டிருந்ததாம். அப்புறம், அவளிடம் மெல்லப்பேசி, சாக்லேட் தந்து, அவர்களை எதுவும் கோபிக்கவில்லை என்று புரிய வைத்து, வேறு இடத்தில் அமர்த்தியிருந்தார்கள். ஆசிரியரும் ஒன்றும் கோபிக்கவில்லை. ‘‘எழுந்து ஓடிக்கொண்டே இருக்காதே’’ என்றுதான் சிறிது சப்தமாகப் பேசியிருக்கிறார்.

அவ்வளவுதான். உண்மையில் ஆசிரியரும் அன்பானவர். பிள்ளைகளை மிகவும் நேசிப்பவர்தான். கட்டுக்கோப்புடன் பிள்ளைகளை பாதுகாக்க வேண்டும் என்பதுதான் அனைவரின் நோக்கமும்கூட. மேலும் இத்தகைய பிள்ளைகளைப் பார்க்கும்பொழுது யாருக்குமே கோபம் வராது. மாறாக அணைத்துக் கொள்ளத்தான், முத்தம் தரத்தான் அனைவருக்குமே ஆசை. இந்நிகழ்வில் இரண்டாவது குழந்தை தானே வருத்தப்பட்டு அழுததுதான் சிறப்பு.

பெரிய வகுப்பில் படிக்கும் இருபிள்ளைகள். இருவரும் ஒரே மாதிரிதான் காணப்படுவார்கள். அவர்கள் பள்ளி முடித்துச் செல்லும்வரை என்னாலும் அடையாளம் காண முடியவில்லை. பெயரைக்கூப்பிட்டு, அருகில் வந்தவுடன் விஷயத்தைச் சொல்வது வழக்கம். இருவரின் கையெழுத்துக்கூட ஒரே மாதிரி அழகாகயிருக்கும்.

படிப்பிலும் இருவரும் சுட்டிகள்தான். வகுப்பிலுள்ள மற்ற மாணவர்கள் அவர்களை எளிதில் அடையாளம் கண்டுகொள்வார்கள். ஒருமுறை ஒருவன் ரொம்ப நாட்களுக்கு உடல்நலம் பாதிக்கப்பட்டு விடுமுறை எடுத்தான். மற்றொரு சகோதரனும் இடையிடையே விடுமுறை எடுத்து விடுவான். பின் முதல்வனுக்கு பூரண குணமானவுடன், இருவரும் சரியாக வந்துகொண்டிருந்தனர்.

ஒரு கணிதத் தேர்வு முடிந்தவுடன் ஆசிரியர், தேர்வு மதிப்பெண்களை கொடுத்தார். இருவரில் யார் தப்புத்தப்பாக வாய்ப்பாடுகளை செய்திருந்தான் என்று புரியாமல், இரட்டையரில் ஒருவனை கையசைத்துக் கூப்பிட்டார். பின் தேர்வுத்தாளை அவனிடம் காட்டி பிழைகளை சுட்டிக்காட்டினார். அவனும் வாய் திறக்காமல் தன் இடத்தில் போய் அமர்ந்துவிட்டான். சிறிது நேரத்தில் வகுப்பறை முழுவதும் சிரிப்பொலி கேட்டது. திடீரென சிரிப்பு வெடித்ததால், ஆசிரியர் ஒன்றும் புரியாமல் திகைத்தனர். பின் ஒரு மாணவன் எழுந்து வந்து சிரித்ததற்கான காரணத்தை விளக்கினான்.

தப்பு செய்துள்ளதாக ஆசிரியர் கூறிய பையன் நூற்றுக்கு நூறு மதிப்பெண்ணாம்.  இரட்டையரில் மற்றொரு பையன்தான் தப்பு தப்பாக வாய்ப்பாடு எழுதியிருந்தானாம்.  இது தெரிந்தவுடன் மாணவர்கள் சிரித்திருக்கிறார்கள். பொதுவாக பதிவேட்டு எண்ணைக்கண்டு அனைத்தையும் சரியாகத்தான் செய்வோம்.

முகஜாடை புரியாமல் போவதால் சமயங்களில் இவனை-அவனாகவும், அவனை-இவனாகவும் நினைப்பதால் ஏற்படும் உற்சாக சந்தர்ப்பங்கள் இவை. இதுபோன்று நிறைய சந்தர்ப்பங்கள் எங்களை சிரிப்பில் திக்கு முக்காடச்செய்துள்ளன. பதினைந்து ஜோடி இரட்டையர்களை வைத்து பலவிதமான போட்டிகள் நடத்தியுள்ளோம். அவர்கள்கூட, அதை உற்சாகமாக அனுபவித்ததுண்டு. ஒரே இடத்தில் பார்த்து ரசிப்பது என்பது பள்ளியாகத்தான் இருக்க முடியும்.

இத்தகைய மலரும் நினைவுகளை அசைபோடும்பொழுது எனக்கு மற்றொரு நிகழ்வு ஞாபகத்திற்கு வந்தது. சிறிய வகுப்பாசிரியர் ஒருவர், வயதிலும் சிறியவர்தான். இரண்டு குழந்தைகள். திடீரென காய்ச்சல் அதிகமாகி, எதிர்பாராத நிலையில் உயிரிழந்தார். அனைவரின் அன்பைப் பெற்றவர். படித்த பிள்ளைகள், பெற்றோர், ஆசிரியர் என அனைவரும் உடலைப் பார்க்கச் சென்றனர். என்ன அழகான தோற்றம், மனதை விட்டு நீங்காதவர். எல்லோரும் புரண்டு அழுது கொண்டிருக்க, அவர் உடல் அருகில் நின்றுகொண்டு அழுதுகொண்டிருந்தவரைப் பார்த்தால் எங்களுக்கு தூக்கி வாரிப்போட்டது.

இறந்த உருவம் எப்படி அருகில் நின்றுகொண்டும் இருக்கிறது என்று யோசித்தேன். அப்பொழுதுதான் தெரிந்தது. இறந்தவரும், நின்று கொண்டிருந்தவரும் இரட்டைச் சகோதரிகளாம். என்ன ஆச்சரியம்! ஒரு வயது வரை ஒன்றுபோல் காணப்பட்டாலும், திருமணமாகி  அவருக்கும் இரண்டு பிள்ளைகள் இருக்க உருவ அமைப்பு மாறாமல் இருந்திருக்கிறார்கள் என்றால், என்ன ஒரு கடவுள் படைப்பு.

இதுவும் ஒரு புதுமையான அனுபவம் என்றுதான் கூறவேண்டும். பிரச்னைகளை எதிர்கொண்டாலும் சரி, இதுபோன்ற விஷயங்களை அறிய வாய்ப்பு கிடைத்தாலும் சரி, நாம் நிறைய விஷயங்களை வாழ்க்கையில் தெரிந்துகொள்கிறோம் என்பதுதான் நிஜம். கற்பிக்கப்போனாலும் கற்றுக்கொள்ள வயது கிடையாது.

தொகுப்பு: சரஸ்வதி ஸ்ரீநிவாஸன்

படங்கள்: ஜி.சிவக்குமார்

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • ambedkar

  சட்டமேதை அம்பேத்கரின் 65வது நினைவு நாள்: குடியரசுத்தலைவர் ராம்நாத் கோவிந்த், பிரதமர் நரேந்திர மோடி உள்ளிட்டோர் மலர்தூவி மரியாதை..!!

 • AIADMK

  பன்னீர்செல்வம், பழனிசாமி போட்டியின்றி தேர்வு

 • animal-snake-6

  சென்னை பாம்பு பண்ணையில் உள்ள பிரத்யேக விலங்குகளுக்கு உணவு அளித்து மகிழும் பார்வையாளர்கள்..!!

 • trichy 06

  திருச்சி ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயிலில் வைகுண்ட ஏகாதசி விழாவின மூன்றாம் நாளாக அர்ச்சுன மண்டபத்தில் எழுந்தருளியுள்ள ஆழ்வார்கள்

 • sandart-18----

  ஒடிசாவில் கண்களுக்கு விருந்து படைக்கும் சர்வேதேச மணற்சிற்ப திருவிழா!: பார்வையாளர்கள் பிரம்மிப்பு..!!

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்