SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

எருமைப் பண்ணை தொழிலில்... மாதம் 6 லட்சம் ஈட்டும் இளம்பெண்!

2021-02-23@ 17:41:20

எந்த தொழிலாக இருந்தாலும், மனசாட்சிக்கு பயந்து, யாரையும் ஏமாற்றாமல் செய்தால் கண்டிப்பாக அதன் பலனை நம்மால் சுவைக்க முடியும் என்கிறார் 22 வயது நிரம்பிய ஷ்ரத்தா தவான். இவர் தன் அப்பா கைவிட்ட எருமைப் பண்ணை தொழிலை தன் திறமையால் லாபகரமாக நடத்தி வெற்றி கண்டுள்ளார்.
‘‘மகாராஷ்டிரா, அகமது நகரில் இருந்து 60 கிலோமீட்டர் பயணித்து வந்தால் நிகோஜ் என்ற கிராமம் வரும்.

அதுதான் என்னுடைய ஊர். எங்களுடையது சாதாரணமான குடும்பம். வீட்டில் உள்ள இரண்டு எருமை மாடுகளைக் கொண்டு தான் அப்பா பால் விற்பனை செய்து வந்தார். அவர் மாற்றுத்திறனாளி என்பதால், ஒரு கட்டத்திற்கு மேல் அவரால் தொடர்ந்து வேலையில் ஈடுபடமுடியவில்லை. அப்ப எனக்கு 11 வயசு. வீட்டில் வருமானம் இல்லை என்பதால் அப்பா செய்து வந்த பால் வியாபாரத்தை நான் எடுத்து நடத்த ஆரம்பித்தேன்.

ஆரம்பத்தில் எனக்கு அசிங்கமாகவும், தயக்கமாகவும் இருந்தது. அந்த சமயம் நான் இந்த பொறுப்பை சுமக்காமல் இருந்திருந்தால்... என் குடும்பம் இவ்வளவு தூரம் உயர்ந்து இருக்குமான்னு தெரியாது. என் தோழிகள் எல்லாரும் பள்ளிக்கு செல்ல... நான் பால் விற்பனை செய்துவிட்டு பள்ளிக்கு செல்வேன். வேலை, படிப்பு இரண்டையும் அந்த சிறிய வயதில் சமாளிப்பது கொஞ்சம் கஷ்டமாகத் தான் இருந்தது.

உழைக்காமல் எந்த பலனும் அடைய முடியாது என்பதில் நான் ரொம்பவே உறுதியாக இருந்தேன். இரண்டு மாடுகள் கொண்டு தான் நான் இந்த தொழிலில் ஈடுபட்டேன். தொழில் வளர்ந்து லாபம் வளர வளர மாடுகளின் எண்ணிக்கையும் அதிகமானது’’ என்று கூறும் ஷ்ரத்தா இரண்டு மாடிக் கட்டிடத்தில் 80க்கும் மேற்பட்ட எருமைகளுடன் ஒரு பண்ணை அமைத்துள்ளார்.

‘‘முதலில் இரண்டு மாடுகள் மட்டுமே இருந்த போது அதை பராமரிக்க கஷ்டமாக இல்லை. ஆனால் கால்நடைகளின் எண்ணிக்கை அதிகரிக்க பல சவால்களை எதிர்கொள்ள வேண்டியிருந்தது. தீவனங்களின் விலை அதிகரித்ததால், லாபம் பெரிய அளவில் பாதித்தது. கொட்டகையை ஒரு நாளைக்கு இரண்டு முறை சுத்தம் செய்ய வேண்டும். விலங்குகளுக்கும் சுகாதார பரிசோதனைகள் மேற்கொள்ள வேண்டும்.

அவைகளுக்கு கால்சியம் குறைபாடு அல்லது உடல்நிலை பிரச்னை இருந்தால் உணவில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும்’’ என்று கூறும் ஷ்ரத்தா தற்போது இயற்பியலில் முதுகலைப் பட்டம் படித்து வருகிறார். இவரின் தம்பி கால்நடை வளர்ப்பு துறையில் பட்டம் பெற்று அக்காவிற்கு உதவியாக இருக்கிறார்.

‘‘பட்டப்படிப்பு முடித்த போது, நகரங்களில் உள்ள தனியார் நிறுவனங்களில் வேலை வாய்ப்பு வந்தது. அதற்கு செல்ல முடியவில்லை என்ற வருத்தம் இல்லை. பால் விற்பதால் நான் தாழ்ந்துவிட்டதாக நினைக்கவில்லை. நான் இந்த பொறுப்பினை நிராகரித்து இருந்தால்... இன்று என்னால் ஒரு நிறுவனத்தில் இவ்வளவு சம்பாதிக்க முடிந்திருக்குமான்னு தெரியல. இந்த பண்ணையை மேலும் மேம்படுத்த வேண்டும். அதுதான் என்னுடைய லட்சியம்’’ என்று கூறும் ஷ்ரத்தா விரிவுரையாளராகவும் ஆன்லைனில் மாணவர்களுக்கு பாடங்களை நடத்திவருகிறார்.

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • military-helicopter5

  துருக்கியில் ராணுவ ஹெலிகாப்டர் தரையிறங்க முயன்ற போது கீழே விழுந்து வெடித்து சிதறியதில் 11 பேர் பலி..!!

 • 05-03-2021

  05-03-2021 இன்றைய சிறப்பு படங்கள்

 • 100farmmmm

  100 நாட்களை எட்டிய டெல்லி விவசாயிகள் போராட்டம்.. 200 பேர் பலி.. மத்திய அரசு கோரிக்கைகளுக்கு பணியுமா ?

 • train4

  கலிபோர்னியாவில் சரக்கு ரயில் தடம் புரண்டு விபத்து!: சீட்டுக்கட்டு போல் சரிந்து கிடக்கும் 35 பெட்டிகள்..!!

 • mars-4

  செவ்வாய்க்கு மனிதனை அனுப்பும் திட்டத்திற்கு பின்னடைவு!: தரையிறங்கிய சில நொடிகளில் சுக்குநூறாக வெடித்து சிதறியது "ஸ்டார் ஷிப்" ராக்கெட்..!!

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்