SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

மாற்றுத்திறனாளிகளுக்கு முழுமையான கையேடு!

2021-02-22@ 17:28:27

இந்திய மக்கள் தொகையில், இரண்டு சதவீதத்திற்கும் அதிகமான மாற்றுத்திறனாளிகள் இருப்பதாக அதிகாரப்பூர்வ புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன. ஆனால் அவர்களுக்கான சமூகப் பாதுகாப்பும், சட்ட பாதுகாப்பும் நம் நாட்டில் வெறும் காகிதங்களில் மட்டுமே உள்ளது. பொதுமக்கள் மட்டுமில்லாமல் பல அரசு அதிகாரிகளுக்குக் கூட மாற்றுத்திறனாளிகளின் உரிமைகள் தெரியவில்லை.

இப்பிரச்சனைக்குத் தீர்வாக மாற்றுத்திறனாளிகளுக்கு உதவக்கூடிய அனைத்து சட்டங்களையும், உரிமைகளையும் தொகுத்து ஒரு புத்தகமாக வெளியிட்டுள்ளார் வழக்கறிஞர் முனைவர். அபிநயா. ” KNOW YOUR RIGHTS - LEGAL GUIDE FOR EMPOWERMENT OF INDIVIDUALS WITH DISABILITY”  என்ற  பெயரில் ஆங்கிலத்தில் வெளியாகி இருக்கும் இந்த புத்தகத்தில் 18 அத்தியாயங்கள் உள்ளன, ஒவ்வொன்றும் மாற்றுத்திறனாளிக்கும் வழங்க வேண்டிய உரிமைகள், பொறுப்புகள், கடமைகள், தீர்வுகள் பற்றி விரிவாக விவாதிக்கிறது. அனைவருக்கும் புரியும்படியான எளிய மொழியில், பள்ளி மாணவர்களும் படித்துத் தெரிந்துகொள்ளும்படியாக இந்த புத்தகத்தை வழக்கறிஞர் அபிநயா எழுதி தொகுத்துள்ளார்.

தற்போது National Institute for Empowerment of Persons with Multiple Disabilities (NIEPMD) நிறுவனத்தில் பகுதி பேராசிரியராகவும், சி.எஸ்.ஆர் சேவைகளுக்கான மூத்த ஆலோசகராகவும் பணியாற்றிவருகிறார். ‘‘பல மாற்றுத்திறனாளிகள் அவர்களுக்கான அடையாள அட்டையைக் கூட வாங்குவதில்லை. 40 சதவீதத்திற்கும் அதிகமான உடல் குறைபாடு உள்ளவர்களுக்கு அட்டை வழங்கப்படுகிறது. இதை யூனிக் டிஸ்-எபிளிட்டி ஐடி என்றும் (UDID) 70% அதிகமான குறைபாடு இருந்தால் அவர்கள் முழு மாற்றுத்திறனாளிகளாக அறிவிக்கப்படுவர். இந்த அடையாள அட்டை மூலம் பல சலுகைகளும், உரிமைகள் எளிதில் கிடைக்கும். இது மாற்றுத்திறனாளிகளுக்கான ஆதார் அட்டை போன்றது. கல்வி, வேலை, மருத்துவம் என இந்தியா முழுவதும் பயன்படுத்திக்கொள்ளலாம்.

இணையம் மூலமாக விண்ணப்பிக்கலாம்” எனக்கூறும் அபிநயா, தொடர்ந்து மாற்றுத்திறனாளிகளுக்கான சில முக்கிய உரிமைகளைப் பகிர்கிறார்.
‘‘மாற்றுத்திறனாளிகளுக்கு வேலையில் 3% முதல் 5%   வரை இட ஒதுக்கீடு வழங்கவேண்டும் என்ற சட்டம் உள்ளது. தனியார் நிறுவனங்களில் வேலை செய்யும் ஒருவர், திடீரென உடல் குறைபாடு ஏற்பட்டு மாற்றுத்திறனாளியாகும் போது, அவரை அந்த வேலையிலிருந்து நீக்காமல், அதே சம்பளத்தில் வேறு வேலைக்கு மாற்ற வேண்டும் என்பது விதிமுறை.

அதே போல அனைவருக்கும் சமமான கல்வி என்ற திட்டத்தின்படி, மாற்றுத்திறன் கொண்ட குழந்தைகளுக்கும் Inclusive education வழங்கவேண்டியது நம் கடமையாகும். பள்ளி, கல்லூரிகளில், ஒரு மாணவரை மாற்றுத்திறனாளி என்கிற காரணத்திற்காக நிராகரிக்க முடியாது. அவர்கள் மற்ற மாணவர்களுடன் சேர்ந்து பயிலும் வசதியைக் கல்வி நிறுவனம் உருவாக்கித் தரவேண்டும். இந்து வாரிசு சட்டம் 1956ன் படி, மாற்றுத்திறனாளிகளுக்கும் அவர்களுக்குரிய பூர்வீக சொத்தை வழங்கவேண்டும் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. சுயமாக முடிவெடுக்க முடியாத மனநலம் பாதித்தவராக இருக்கும் போது அவரை கவனித்துக்கொள்ளும் பாதுகாவலர், அவரின் நலனுக்காகச் சொத்தை விற்கவும் வாங்கவும் உரிமை அளிக்கப்படும்.

மற்றபடி உடல் இயலாமை அல்லது உடல் குறைபாடு கொண்டவருக்கு தன் சொத்தின் மீது முழு அதிகாரமும் உண்டு. பொதுமக்கள் வந்து செல்லக்கூடிய மருத்துவமனைகள், வங்கிகள் போன்ற முக்கிய கட்டிடங்கள் மாற்றுத்திறனாளிகள் எளிதில் அணுகக்கூடிய விதத்தில் மாற்றியமைக்க வேண்டும் என்று சட்டம் சொல்கிறது. படிக்கட்டுகளுடன், சரிவு பாதைகள் லிஃப்டுகள் அமைத்து வீல்சேரில் செல்லும் வசதியை உருவாக்க வேண்டும். ஆனால் இதுபோன்ற அரசு நிறுவனங்களில் வெறும் பத்து சதவீதம் மட்டுமே மாற்றுத்திறனாளிகள் பயன்படுத்தும் விதத்தில் உள்ளதாகக் கணக்கெடுப்பில் கூறப்பட்டுள்ளது” என்கிறார்.

மாற்றுத்திறனாளிகள், பெண்கள் மற்றும் ஒடுக்கப்பட்ட மக்களுக்காக இலவசமான சட்ட ஆலோசனைகள் வழங்கி வரும் அபிநயா, சிறப்புக் குழந்தைகள் பள்ளிக்கு சென்று வர மூன்று சிறப்புப் பேருந்துகளை தனியார் நிறுவனங்கள் உதவியுடன் பெற்று தந்துள்ளார். ‘‘இந்த புத்தகத்தில், சட்டங்களுடன் சில வழக்குகளையும் எடுத்துக்காட்டாக மேற்கோள் காட்டி இருப்பதால், மக்கள் எதிர்காலத்தில் இந்த புத்தகத்தைக் கொண்டே தங்கள் உரிமையைப் பெற உதவியாக இருக்கும்’’ என்று கூறும் அபிநயா இதனை தமிழில் மொழிபெயர்க்கும் முயற்சியில் ஈடுபட்டு வருகிறார்.

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • 29-05-2021

  29-05-2120 இன்றைய சிறப்பு படங்கள்

 • 27-05-2021

  27-05-2021 இன்றைய சிறப்பு படங்கள்

 • 15-05-2021

  15-05-2021 இன்றைய சிறப்பு படங்கள்

 • 13-05-2021

  13-05-2021 இன்றைய சிறப்பு படங்கள்

 • 11-05-2021

  11-05-2021 இன்றைய சிறப்பு படங்கள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்