SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

கற்பித்தல் என்னும் கலை

2021-02-10@ 17:49:10

நன்றி குங்குமம் தோழி

புத்தகம், பாடம், எழுதுதல், படித்தல் போன்ற வார்த்தைகளை கேட்டுக்கொண்டிருந்தாலே, பிள்ளைகளில் பலருக்கு கோபம்தான் வரும். இவற்றிலிருந்து விடுபட்டு மனதிற்கும், உள்ளத்திற்கும் உற்சாகத்தைத் தரக்கூடியவைதான் உல்லாச யாத்திரைகள். புத்துணர்ச்சி தரக்கூடியவை, பலவிதமான கலை நிகழ்ச்சிகள், விளையாட்டுத்துறை சார்ந்த போட்டிகள் என்பன. இவை அனைத்திற்கும் பாலம் போன்று விளங்குவன நம் பாரத நாட்டில் கொண்டாடப்படும் பண்டிகைகள்.

இவை நமக்கு பிறரிடம்  அன்பு செலுத்தவும், கொடுத்து உதவுதலும், பிறரை மதித்தலும் போன்ற நற்குணங்களை ஊக்குவிக்கின்றன. பொதுவாக, அவரவர் வீட்டில் குடும்ப உறுப்பினர்களுடன் நம் பாரம்பரிய சடங்குகளைச் செய்து சந்தோஷப்படுவோம். குறிப்பாக அவரவர் கொண்டாடும் பண்டிகைகள் குடும்பத்திற்கு குடும்பம் மாறுபடலாம்.

எத்தனை மாற்றங்கள் காணப்பட்டாலும் நாங்கள் பிள்ளைகளுடன் அனைத்துப் பண்டிகைகளையும் ஒன்றாகக் கொண்டாடுவோம். சிறிய குடும்பத்தில் கொண்டாடுவதே சந்தோஷம் தருகிறதென்றால், ஆயிரக்கணக்கான  மாணவர்களுடன் கொண்டாடுவதென்றால் எவ்வளவு சுவாரஸ்யம் என்பதை யூகித்துக் கொள்ளுங்கள். எந்தவித பாகுபாடின்றி, இனம், மொழி இவற்றைக் கடந்து பாச வெள்ளத்திலும், அன்புப்பாலத்திலும் நம்மைக் கட்டிப்போடுவது பண்டிகைதான்.

பிள்ளைகளைப் பொறுத்தவரை, பள்ளிக்கு விடுமுறை விடுவதால் கிடைக்கும் சந்தோஷம் ஒருபுறம், விடுமுறைக்கு முன்னால் பண்டிகையைப் பற்றி பேசிப்பேசி நாளை ஓட்டுவதில் மற்றொரு சந்தோஷம். குறிப்பிட்ட பண்டிகை அவர்களால் கொண்டாடப்படாது என்றாலும் போகும்பொழுதும், வரும்பொழுதும் பார்க்கும் ஆசிரியர்கள், மாணவர்கள் என அனைவருக்கும் வாழ்த்துச் சொல்வதிலேயே நாளை கழித்து விடுவார்கள். தீபாவளிப் பண்டிகை நேரம். ஒருநாள், ஒரு வகுப்பறையில் ‘டமார்’ என்று சப்தம் கேட்டது. அனைவரும் அலறியடித்துக்கொண்டு ஓட ஆரம்பித்தனர்.

சிறிது நேரத்தில் ஒரே பரபரப்பு. பிள்ளைகள் ஒருவரையொருவர் சாடிக் கொண்டனர். ஒருவன் சொல்ல ஆரம்பித்தான் ‘‘மிஸ், நேற்றுகூட அவன் பாத்ரூமில் ஊசி வெடி வெடித்தான்’ மற்றொருவன்,  ‘ஏய் உன்னை சுடப் போறேன்’ என்றான் மிஸ்’’ இப்படி பலப்பல குரல்கள் ஒலித்தன. எதை நம்புவது? எது பொய் என்று ஒரே குழப்பம். அனைவரையும் வரிசையாக அழைத்துச்சென்று விளையாட்டு மைதானத்தில் அமரச் செய்தோம். இரண்டு, மூன்று ஆசிரியர்கள் ஒவ்வொரு புத்தகப் பையையும் ஆராய்ந்தோம்.

ஒரு பையிலிருந்து எங்களுக்கு வெடிச்சரம், கேப், கேப் வெடிக்கும் சிறுவர் துப்பாக்கி போன்றவை கிடைத்தன. அவற்றை எடுத்தபின், ஒன்றுமே கூறாமல் அனைவரையும் வகுப்பிற்கு அனுப்பி விட்டோம். யாருடைய பையிலிருந்து அவற்றை எடுத்தோமோ, குறிப்பிட்ட மாணவனை தனியே மற்றவர்களுக்குத் தெரியாமல் மாலையில் அழைத்தோம். அவன் வரும்பொழுதே, உடலில் இருந்த நடுக்கமும், பயமும் எங்களுக்குப் புரிந்துவிட்டது.

‘‘நீ கொண்டு வந்ததை எங்களிடம் தந்துவிட்டு வீட்டிற்குப் போகும்பொழுது திரும்பப் பெற்றிருக்கலாமே? ஏன் வகுப்பறையில் வைத்துக்கொண்டாய்?’’ என்றோம். அவன் சொன்னான், ‘‘மிஸ் என் வீட்டில் இதெல்லாம் வாங்கித்தருவதில்லை; மற்றவர்கள் வெடிப்பதை ஆசையாகப் பார்ப்பேன்.

அதைக்கண்ட என் பக்கத்து வீட்டு நண்பன், நான் பள்ளிக்கு வரும் சமயம் இவற்றை எனக்குப் பரிசாகக் கொடுத்தான். ஆர்வக் கோளாறில், என் பையிலேயே வைத்துக்கொண்டேன். அதை எப்படிப் பயன்படுத்த வேண்டும்  என்று பார்ப்பதற்கு முயற்சித்தேன். அதன் பலன் இவ்வளவு விபரீதமாகி விட்டது மிஸ்! தயவு செய்து என்னை மன்னித்து விடுங்கள், ப்ளீஸ்!’’ என்றான்.

அவர்கள் வீட்டில் இத்தகைய பண்டிகைகள் கொண்டாட மாட்டார்களாம்.  அதனால்தான் வெடி, மத்தாப்பூ போன்றவை வாங்கித் தரமாட்டார்களாம். இப்பொழுது இவன் செய்த காரியம் தெரிய வந்தால், நல்ல அடி-உதை கிடைக்குமாம். இவற்றைத் திரும்பத் திரும்ப சொல்லி அழுது கொண்டிருந்தான். ‘‘சரி நாங்கள் சொல்ல மாட்டோம், பத்திரமாக வீட்டுக்குப் போ’’ என்று சொல்லியனுப்பினோம். பாவம், அந்தப்பிள்ளை மனதில் எவ்வளவு ஆதங்கம் நிறைந்திருக்கிறது.

மற்றவர்கள் சந்தோஷமாக வெடிப்பதைப் பார்த்தவுடன் அவனுக்குள் ஆசை வந்திருக்கிறது. அவ்வளவுதான்! பிள்ளைகள் ஒரு விஷயம் செய்யக்கூடாது என்று சொன்னால், அதில் என்னவோ ‘திரில்’ இருக்கிறது. அவசியம் அதை செய்து பார்க்க வேண்டும் என்று நினைப்பார்கள். வீட்டில் மற்றவர்களோடு சேர்ந்து வெடித்து மகிழ சந்தர்ப்பம் கிடைத்திருந்தால், இவனும் இப்படிச் செய்திருக்க மாட்டான் என்று புரிந்துகொண்டோம். இரண்டு, மூன்று நாட்கள் கழித்து அவனுக்குப் பிறந்தநாள் வந்தது.

நாங்கள் அவனுக்கு வேண்டிய பட்டாசு, இனிப்புகள், விளையாட்டுப் பொருட்களுடன் சென்று வாழ்த்திவிட்டு வந்தோம். அவன் முகத்தில் அதுவரை கண்டிராத மகிழ்ச்சியைக் கண்டோம். மறுநாள் வந்து சந்தோஷமாகச் சொன்னான். ‘‘மிஸ், அம்மா தங்கைக்கும் கொஞ்சம் மத்தாப்பு தந்தாங்க, ரெண்டு பேரும் கொளுத்தினோம்!’’மனதிற்கு நிம்மதி  கிடைத்தது.

ஒரு அப்பாவிச் சிறுவன் ஆசையை நிறைவேற்றினோமென்று! அம்மாவும், பிள்ளை பட்டாசு வெடிப்பதால் எந்தப் பாரம்பரியமும் கெடாது என்பதை புரிந்துகொண்டிருப்பார். யாருக்கும் மனக்கஷ்டம் தராமல் பையனுக்கும் வழிகாட்டினோம். இதுதான் நம் நடைமுறையில் நடைபெறுவது. பிரச்னையின் தொடக்கம் எங்கேயென்று ஆராய்ந்து, அதனால் பிள்ளைகளுக்கும் எவ்வித பாதிப்பும் ஏற்படாமல், அவரவர் கொள்கைகளில் தலையிடாமல், மனம் புண்படாமல், சுமுகமான வகையில் கையாள்வது என்பதுதான் அனைத்திற்கும் ஏற்றத்தீர்வு என்பதை மேற்கொண்டோம்.

கிறிஸ்துமஸ் பண்டிகை காலங்களுக்கு, பிள்ளைகள் அனைவரும் அவரவர் விருப்பப்படி ஏதேனும் நன்கொடை தர முன்வருவர். பிறருக்கு அதாவது ஏழைகளுக்கு உதவ, கற்க வேண்டும் என்பதற்காக ஒரு ஏற்பாடு என்றுகூட சொல்லலாம். ஒரு குறிப்பிட்ட தேதி, நாள் நன்கொடை தரலாம் என்று சொல்லுவார்கள். காலையில் வழிபாடு முடிந்தவுடன், பெரிய வகுப்பைச் சேர்ந்த மாணவர்கள் சிலர் வரிசையில் வந்து வண்டியில் வாங்கிச் செல்வார்கள். எல்லோரிடமும் வசூலித்த பிறகு, வசூலானத் தொகையை பெரிய வகுப்பு மாணவர்களே ஒன்று சேர்த்து எண்ணி முடிப்பார்கள்.

எவ்வளவு தொகை கிடைத்தது  என்பதை உடன் ‘மைக்’ மூலம் தெரிவித்து விடுவார்கள். பின் சுற்றியுள்ள முதியோர் இல்லங்கள், குழந்தைகள் ஆசிரமம், உடல் ஊனமுற்றவர் வசிக்கும் இடம் போன்ற இல்லங்களை கணக்கெடுத்து, அங்குள்ள எண்ணிக்கையின் அடிப்படையில், பணம் பகிர்ந்து அளிக்கப்படும்.

ஒவ்வொரு  நாளும் இரண்டிரண்டு வகுப்புகள் அந்த இடங்களுக்குச் சென்று வருவார்கள். முதியோர் இல்லமென்றால் பழவகைகள், சிறுபிள்ளைகளென்றால் பிஸ்கெட்டுகள், விளையாட்டுப் பொருட்கள் என நிறைய சேகரித்து எடுத்துச் செல்வதும் பழக்கம். குறிப்பாக ‘கேன்சர்’ நோயாளிகளை பார்க்கச் செல்லும்பொழுது, அவர்களுக்குத் தேவையான நிறைய காட்டன் துணிமணிகள் சேகரித்து எடுத்துச் செல்வர். நிறைய பெற்றோர்கள் தாங்களே முன்வந்து, பொருட்களைத் தருவர்.

இவற்றைக் குறிப்பிட்ட இனத்தவர்கள் சேர்ந்து செய்கிறார்கள் என்று சொல்லவே முடியாது. காரணம், பள்ளி என்பது  மதம், ஜாதி, மொழி அனைத்துக்கும் அப்பாற்பட்டது. அனைவரும் இங்கு சரிசமம்தான். அதேபோல், இந்திய மொழிகளில் பல மொழி பேசும் பிள்ளைகளும் உள்ளனர். மொழி தெரியாமல் வரும் மாநிலத்தவரைக்கூட, இனிய தமிழில் உரையாடச் செய்வது என்பது எங்களுக்கு  கைவந்த கலை.

எப்பொழுதுமே ‘இதைச் செய்யாதே’, ‘அதைச் செய்யாதே’ என்று சொல்லுவதைவிட செய்ய வேண்டியதை நாம் பின்பற்றி முன் உதாரணமாகத் திகழ்ந்தால் போதும்! அதுவே நடைமுறைக் கல்வி என்பதாகும். கலை நிகழ்ச்சிகளில் ‘ரங்கோலி’ ஒரு முக்கிய இடத்தைப் பிடிக்கும். ‘ரங்கோலி’ நடத்த எல்லா வராண்டாக்களையும் பயன்படுத்துவர். சிறிய மழலைப்பிள்ளைகளுக்கு வகுப்பு இல்லாத நேரத்தில் நடைபாதை முழுவதும் ரங்கோலிகள் இடம் பெறும். காலகட்டத்திற்கேற்ற தலைப்புகள் தேர்ந்தெடுத்து தரப்படும்.

இப்பொழுது எப்படி அனைத்திலும் ‘கொரோனா’ தலைப்பாக இருக்கிறதோ அதுபோன்று காலகட்டத்தில் நடைபெறும் நிகழ்வுகளை மையமாகக் கொண்டிருக்கும். அமெரிக்காவில்கூட ‘ரங்கோலி’யை ரசிப்பவர்கள் ஏராளம். அது ஒரு கலையாக அவர்களால் ரசிக்கப்படுகிறது. சமீபத்தில் வந்திருந்த அமெரிக்கர்கள் நம் மார்கழி மாத கோலங்களையெல்லாம்கூட படம் பிடித்துச் சென்றனர். ஒவ்வொரு ‘ரங்கோலி’ வரைய இரண்டு மூன்று மாணவ-மாணவியர் வீதம் மைதானம் களைகட்டும்.

ஒருமுறை சில மாணவர்கள் ஓணம் விருந்திற்குச் சென்றனராம். ‘ஓணம் சத்யா’ என்று விருந்தைச் சொல்வார்கள். பெரிய தலைவாழை இலை போட்டு அயிட்டங்கள் பரிமாறப்படும். இலை நிறைந்து காணப்பட்டதால், எதை முதலில் சாப்பிடுவது என்றே புரியவில்லையாம். ஒரு பையன் பாயசத்தை பருப்பு என்று நினைத்து சாதத்தில் கலந்துகொண்டானாம்.

பருப்பை கூட்டென்று நினைத்து தொட்டுக் கொண்டானாம். சாப்பிடும்பொழுது அவன் முகம் சுளித்ததை, அவன் நண்பர்கள் திரும்பச் சொல்லி பேசும்பொழுதெல்லாம் அவன் அழுதே விடுவானாம். ஆனால் அதற்குப் பிறகு ‘ஓணம் சத்யா’ சாப்பிடுவதற்காகவே ஒவ்வொரு ஓணத்திற்கும் அவர்கள் வீட்டிற்குச் சென்றானாம். அதேபோல், ‘ரம்ஜான்’ வருமுன்பே, நண்பர்கள் ‘பிரியாணி’ பற்றி பேசிக்கொள்வார்களாம்.

நிறைய எடுத்து வந்து ஏழைகளுக்குக் கொடுத்து மகிழ்வார்கள். ஆக வருடம் முழுவதும் ஏதேனும் பண்டிகைகள் வரும். பிள்ளைகளுக்கு நிறைய உற்சாகமும் கிடைக்கும். வேறு உத்தியோகங்களில் இவற்றையெல்லாம் பார்த்து ரசிக்க முடியுமா என்பது சந்தேகம்தான். பலதரப்பட்ட பிள்ளைகளோடு செலவிடும் நாட்கள் நமக்கும் போதிய அனுபவங்களைக் கற்றுத்தந்தன. ஒரு பக்கம் பள்ளி விழாக்கள், மறுபக்கம் நம் பாரம்பரிய விழாக்கள், இடையிடையே தேசிய திருவிழாக்கள் என வாழ்க்கையே விழாக்களில்தான் செலவிடப்பட்டது என்றால் அதுதான் உண்மை.

தொகுப்பு: சரஸ்வதி ஸ்ரீநிவாஸன்

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • suna1122

  கண்ணை கசக்கும் சூரியனோ.... சூரியனின் தெளிவான புகைப்படத்தை பகிர்ந்த வானியல் புகைப்பட வல்லுநர்!!!

 • ambedkar

  சட்டமேதை அம்பேத்கரின் 65வது நினைவு நாள்: குடியரசுத்தலைவர் ராம்நாத் கோவிந்த், பிரதமர் நரேந்திர மோடி உள்ளிட்டோர் மலர்தூவி மரியாதை..!!

 • AIADMK

  பன்னீர்செல்வம், பழனிசாமி போட்டியின்றி தேர்வு

 • animal-snake-6

  சென்னை பாம்பு பண்ணையில் உள்ள பிரத்யேக விலங்குகளுக்கு உணவு அளித்து மகிழும் பார்வையாளர்கள்..!!

 • trichy 06

  திருச்சி ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயிலில் வைகுண்ட ஏகாதசி விழாவின மூன்றாம் நாளாக அர்ச்சுன மண்டபத்தில் எழுந்தருளியுள்ள ஆழ்வார்கள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்