SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

மேக்கப்...கலை வடிவமாக பார்க்கவேண்டும்!

2021-02-03@ 17:35:42

பெண்களுக்கு அழகு சார்ந்த விஷயங்கள், அழகினை பராமரிக்க எந்த மாதிரியான உணவு பழக்கவழக்கங்கள், சருமத்தை பாதிக்காத அழகு சாதனங்கள், உடலுக்கு ஏற்ற உடைகள் மற்றும் ஆபரணங்கள் அணிவது, அழகுக் கலை சார்ந்த பயிற்சிகள்... என பிசியாக இயங்கிக் கொண்டிருக்கிறார் அழகுக் கலை நிபுணர் சோபியா விஷ்வநாதன். ‘‘பியூட்டிஷியன் துறையில் பத்து ஆண்டுகளுக்கு மேல் அனுபவம். அந்த அனுபவம் கொண்டு ஆறு வருடங்களாக வகுப்புகளும் எடுத்து வருகிறேன். சிறு வயதிலிருந்தே கிரியேட்டிவ் லைனில் ரொம்ப ஈடுபாடு இருந்ததால் பெயிண்டிங் போன்ற விஷயங்களும் கத்துக்கிட்டேன்.

திருமணமாகி குழந்தை பிறந்த பிறகு, காஸ்மாட்டாலஜி பயிற்சி எடுத்த பிறகு, ‘Elegant Saloon and Spa’ என்ற பெயரில் பார்லர் துவங்கினேன்’’ என்று கூறும் சோபியா, சர்வதேச அளவில் புகழ் பெற்ற மேக்கப் நிபுணரிடம் முறையாக பயின்று இருக்கிறார். அந்த பயிற்சி பட்டரையில் முதல் மாணவியாக வந்து தங்கபதக்கமும் பெற்றுள்ளார். “அழகுக் கலை... ஒரு கடல் மாதிரி, இதில் கற்றுக் கொள்ள நிறைய இருக்கு. ஒவ்ெவாரு முறை புதிய முறைகளை அறிமுகம் செய்வாங்க. அவற்றை தேடித் தேடி பயிற்சியும் எடுத்துக் கொள்கிறேன்.

எந்தத் துறையாக இருந்தாலும் அப்டேட்டாக இருக்கணும். இவ்வாறு நான் புதிதாக கற்றுக் கொள்ளும் விஷயங்களை மாஸ்டர் கோர்ஸ் என்று  பதினைந்து நாள் பயிற்சி அளித்து வருகிறேன். மேக்கப் என்றால் முகத்தை அழகுப்படுத்துவது மட்டுமில்லை, ஒரு சேலையை எப்படி அயர்ன் செய்து பர்பெக்டாக கட்டணும் என்பதும் இந்த கலையை சார்ந்ததுதான். மேலும் ஒரு நிகழ்ச்சிக்கு போகும் போது என்ன மாதிரி உடை அணியணும் அதற்கான அணிகலன்கள் என்ன என்பது குறித்தும் சொல்லித் தருகிறேன். இன்றைய தலைமுறையினருக்கு மேக்கப் குறித்து ஒரு ஆர்வம் இருக்கிறது.

காரணம் முன்பு போல் இல்லாமல் மேக்கப் ஒரு கலை வடிவமாக மாறியுள்ளது’’ என்றவர் இதனை பகுதிநேர வேலையாகவும் செய்யலாம் என்றார்.
‘‘இல்லத்தரசிகள்தான் என்னிடம் பயிற்சி எடுத்துக் கொள்ள வருகிறார்கள். வீட்டில் சும்மா இருக்க பிடிக்காமல் ஏதாவது கற்றுக்கொண்டு அதன் மூலம் வருமானம் பார்க்கவேண்டும் என்ற விருப்பத்தில்தான் வருகிறார்கள். பயிற்சிக்கு பிறகு அழகு நிலையம் வைக்க வேண்டும் என்ற அவசியம் இல்லை. பகுதி நேரமாகவும் இதனை செய்யலாம். மாதம் இரண்டு மூன்று நிகழ்ச்சிகள் மற்றும் திருமணங்கள் என்று செய்தால் போதும் ஈசியாக சம்பாதிக்கலாம்.

ஆரம்பத்தில் மேக்கப் சாதனங்களுக்காக முதலீடு செய்யணும். அதன் பிறகு போட்ட முதலீட்டை இரு மடங்கிற்கு மேலாக பெறலாம். கடைகளில் பல பிராண்ட் சாதனங்கள் உள்ளன. அதனால் வாங்கும் போதே தரமானதாக வாங்கிவிட்டால், ரிசல்டும் தரமாக கொடுக்க முடியும். வீட்டிலிருக்கும் பெண்களுக்கும் இது மிகவும் வசதியாக இருக்கும். வெளியே அலைய தேவையிருக்காது. பெண்களில் பலர் தங்களுக்கு செய்து பார்த்து கொண்டும் கற்றுக் கொள்கிறார்கள். ஒரு மணப்பெண்ணின் மனதை கவர்ந்துவிட்டால் போதும், அவர்கள் மூலமாகவே நிறைய பிசினஸ் பார்க்கலாம்’’ என்றார்.

‘‘முன்னெல்லாம் திருமணம் என்றால் மணப்பெண்ணுக்கு மட்டும்தான் அலங்காரம் செய்வாங்க. இப்ப அப்படி இல்லை. வீட்டில் உள்ள அனைவருமே மேக்கப் போட்டுக்கொள்ள விரும்புகிறார்கள். கல்யாணம் போன்ற விசேஷம் மட்டுமில்லை, பிறந்தநாள், காதுகுத்து, நிச்சயதார்த்தம், புதுமனை புகுவிழா... என அனைத்து விழாக்களுக்கும் மேக்கப் ேபாடுவதை வழக்கமாக கொண்டுள்ளனர். மணப்பெண்ணுக்கு நிகராக மற்றவர்களும் இருக்க வேண்டும் என்று நினைப்பதால், அவர்களும் மேக்கப், உடை மற்றும் ஆபரணங்களுக்கு அதிக முக்கியத்துவம் தருகிறார்கள். அதனால் இதன் தேவைகள் அதிகமாகிக் கொண்டே போகிறது. நகரம் மட்டுமின்றி, சின்ன சின்ன கிராமத்திலும் மேக்கப் குறித்த விழிப்புணர்வு அதிகரித்துள்ளது. இன்று HD மேக்கப், ஹேர் பிரஷ் மேக்கப் தான் டிரண்ட்.

அதையும் நாங்கள் செய்கிறோம். ஒவ்வொருவரின் முக அமைப்பு மற்றும் சருமத்திற்கு ஏற்ப செய்வதால், இது ஒரு கலையாக மாறியுள்ளது” என்று கூறும் சோபியா, ‘‘சரும பராமரிப்புக்கு வெளியே கிரீம்கள் தடவினால் மட்டும் போதாது, உணவு முறைகளையும் பின்பற்ற வேண்டும்” என்கிறார். ‘‘செயற்கையாக கிரீம்கள் பயன்படுத்தினாலும், இயற்கை அழகுக்கு ஈடாகாது. எவ்வளவுதான் விலை உயர்ந்த க்ரீம் பயன்படுத்தினாலும் நாம் எடுத்துக் கொள்ளும் உணவும் முக்கியம். அது சரியா அமையும் போதுதான் அதற்கான முழு பலனை பார்க்க முடியும்.

அழகு என்பது நம் உண்ணும் உணவிலும் இருக்கிறது. பழச்சாறுகள், காய்கறிகள்  அதிகம் எடுத்துக் கொள்ள வேண்டும். ஜூஸ் போட்ட பழங்கள் மீதமானால், அதை சருமத்தில் பேக்காக பயன்படுத்தலாம். இதில் எந்த சைட் எபெக்ட்டும் வராது. சருமத்தில் மினுமினுப்பு ஏற்படும். தண்ணீர் நிறைய குடிக்கணும், துரித மற்றும் எண்ணெயில் பொரித்த உணவுகளை தவிர்க்க வேண்டும். பழங்கள் மற்றும் பச்சைக் காய்கறிகளும், கீரை வகைகளையும் நிறைய எடுத்துக்கணும். இது பழக்கமாக மாறும்போது இப்போது மட்டுமல்ல, எப்போதுமே ஆரோக்கியமாகவும், அழகாகவும் இளமையாகவும் இருக்க முடியும்.

உணவுப் பழக்கங்களை பின்பற்றுவது போல், சருமத்தையும் பாதுகாப்பாக வைத்துக் கொள்ளவது அவசியம். இரவு படுக்கும் முன் க்ளென்சிங் கொண்டு மேக்கப்பை கலைத்து விடவேண்டும். சருமம் வறண்டு போகாமல் இருக்க மாய்சரைசர் கிரீம்களை பயன்படுத்தலாம். சருமத்திற்கு ஏற்ற பேஸ்வாஷ் உபயோகிக்க வேண்டும். சருமத்தில் உள்ள சின்ன துவாரங்கள் மூலம் அழுக்கு சேராமல் பாதுகாக்க டோனர் பயன்படுத்தலாம். இதை தொடர்ந்து செய்து வந்தால் சருமம் மிருதுவாகவும் இளமையாகவும் இருக்கும்’’ என்று ஆலோசனை வழங்கினார் சோபியா விஷ்வநாதன்.

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • pak-123

  பாகிஸ்தான்,ஆப்கானிஸ்தானில் நிலநடுக்கம்: 9 பேர் பலி

 • cherry-blossom-tokyo

  டோக்கியோ, வாஷிங்டன், பெய்ஜிங்கில் செர்ரி மலரும் பருவம் தொடக்கம்..!!

 • baaagh11

  பாக்தாத் சர்வதேச மலர் திருவிழாவின் மனதை கொள்ளை கொள்ளும் படங்கள்!!

 • somaliya-dead-2

  சோமாலியாவில் நிலவும் பஞ்சம்: கடந்த ஆண்டு மட்டுமே 43,000 பேர் உயிரிழப்பு

 • aus-fish-21

  ஆஸ்திரேலியாவின் டார்லிங் ஆற்றில் திடீர் வெப்பநிலை மாற்றத்தால் லட்சக்கணக்கான மீன்கள் உயிரிழப்பு..!!

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்