SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

வெளித் தெரியா வேர்கள்

2021-01-07@ 17:23:17

நன்றி குங்குமம் தோழி

அமெரிக்கா, இங்கிலாந்து, ரஷ்யா, இந்தியா என ஒவ்வொரு நாடும் அதன் கோவிட் வேக்சின் ஆராய்ச்சி மற்றும் தயாரிப்பை முதலில் கொண்டு வருவதில் முனைப்புடன் இருக்கின்றன. அதிலும் ஃபைஸர் தனது மூன்றாம் கட்ட ஆய்வில் முன்னேற்றம் அடைந்திருப்பது, கோவிட்டுக்கு எதிரான போரில் நிச்சயம் வெற்றிச் செய்தி என்பதில் மாற்றமில்லை..

ஆனால், நாற்பதாண்டு காலமாக நம்மோடு இருக்கும் ஹெச்.ஐ.வி. மற்றும்  நூறு வருடங்களுக்கும் மேல் நம்மோடு வாழும் கேன்சர் நோய்களுக்கு தடுப்பு இல்லை. சாதாரண சளிக்காய்ச்சல் வராமல் தடுக்கக் கூட நம்மிடையே தடுப்பு மருந்து இல்லை.ஆனால், ‘முன்பு போல் இல்லாமல், மிகக் குறுகிய காலத்தில், கோவிட் பெருந்தொற்றுக்கு எதிராகத் தடுப்பூசிகள் கண்டறியப்பட்டுள்ளது என்பதால் இதன் தரம் குறித்து சந்தேகம் தேவையில்லை. ஏனெனில் இந்த ஆராய்ச்சிகளில் குறுக்குவழிகள் எதுவும் பயன்படுத்தப்படவில்லை’ என்ற உறுதியினை வழங்கி, நம் அச்சத்தை போக்குகிறார் சென்னையைச் சேர்ந்த மருத்துவரான டாக்டர் ககன்தீப் காங். இது குறித்து பலர் சொன்னாலும், டாக்டர் ககன்தீப் காங் சொல்வதை ஏன் நாம் நம்ப வேண்டும் என்கிற நமது கேள்விக்கு பதிலளிக்கிறது ரோட்டா வைரஸ்.

ரோட்டா வைரஸ்

கோவிட் வைரஸ் போல, திடீரென காட்டுத் தீயாகப் பரவாமல், நிதானமாகப் பரவுவதுடன், ஐந்து வயதிற்கு உட்பட்ட குழந்தைகளை மட்டும் தாக்கி, ஏறத்தாழ ஒன்றரை லட்சம் இளந்தளிர்களை உலக அளவில், சென்ற ஆண்டு கொன்று குவித்தது இந்த ரோட்டா வைரஸ். சுகாதாரமற்ற உணவு, பாதுகாப்பற்ற குடிநீர் மூலம் பரவும் ரோட்டா வைரஸ், தொடர் வயிற்றுப் போக்கு, வாந்தியின் காரணமாக உடலில் நீரிழப்பை ஏற்படுத்தி லட்சக்கணக்கான குழந்தைகளை பாதித்தது. அதிலும் நமது நாட்டில் இரண்டு வயதிற்குட்பட்ட குழந்தைகள் பாதிக்கப்பட்டது அதிக வேதனை.

நாட்டின் வருங்காலத் தூண்களான குழந்தைகளை இப்படிக் கொன்று குவித்த இந்த நோய் தொற்றை, போலியோ போலவே சொட்டு மருந்தின் மூலம் தடுக்கமுடியும் என்பதை உணர்ந்த டாக்டர் ககன்தீப் உடனடியாக களமிறங்கினார். இந்திய மண்ணிற்கேற்ற வகையில், ‘ரோட்டாவேக்’ என்ற சொட்டு மருந்தினை முழுமையாக ஆய்வு செய்து, ஐந்து வயதிற்குட்பட்ட குழந்தைகளுக்கு பரிந்துரைத்ததுடன், அதனை தேசிய தடுப்பூசி அட்டவணையிலும் இடம்பெறச் செய்தார். இதில் பல்லாயிரக்கணக்கான குழந்தைகள் இவரால், இந்த நோயிலிருந்து காப்பாற்றப்பட்டனர்.

யார் இந்த ககன்தீப் காங். இவருக்கும் சென்னைக்கும் தொடர்புதான் என்ன?

சிம்லாவில் பிறந்த ககன்தீப் காங் தந்தை இந்திய ரயில்வேயில் பொறியாளர். பணி நிமித்தம் ஏற்பட்ட மாற்றலில், நான்கு திசைகளிலும் சுற்றிய ககன்தீப், தான் படிக்கும் பள்ளியையும் அடிக்கடி மாற்ற வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. இதில் பல்வேறுபட்ட மக்களையும், பலவகை கலாச்சாரங்களையும் சிறுவயது முதல் கவனித்து, இந்தியாவின் புவியியல் அமைப்பை உணர்ந்தார். ஆசிரியராகப் பணியில் இருந்த தனது தாயிடம் தேசத்தின் வரலாற்றையும் அறிந்தார். ஆங்கிலத்திலும், கணிதத்திலும் இவருக்கு ஈடுபாடு இருந்தாலும், அறிவியல் மீது ஏற்பட்ட ஆர்வத்தில், சிறுவயது முதலே வீட்டில் ஒரு ஆய்வுக்கூடம் வைத்திருந்தாராம். இது அவரின் மருத்துவ விஞ்ஞானியாகும் கனவைத் தூண்டியிருக்கிறது.

இந்தியாவின் ஏதோ ஒரு மூலையில் கண்ட இவரின் பள்ளிக் கனவு, பின்னாளில் வேலூர் சி.எம்.சி மருத்துவக் கல்லூரி மூலமாக நனவானது. இளநிலை மற்றும் முதுகலைப் படிப்பை சி.எம்.சி. யில் முடித்தவர், சமுதாய நலனுக்காக செயல்படும் சி.எம்.சி. மருத்துவக் கல்லூரியின் ‘வெல்கம் ட்ரஸ்ட்’ ஆய்வகத்தில் தன்னையும் இணைத்து நுண்ணுயிரியல் ஆராய்ச்சியைத் தொடர்ந்தார்.

ஒரு மருத்துவராக மட்டுமே நான் இருந்தால், என்னிடத்தில் வரும் நோயாளிகளின் நோயை மட்டுமே தீர்க்க முடியும். ஆனால் நான் ஒரு மருத்துவ விஞ்ஞானியாக இருந்தால், ஒட்டுமொத்த சமுதாயத்திற்குமே உதவியாக இருக்க முடியும் என்றவர், ‘குழந்தைகளின் வயிற்றுப்போக்கும், பாக்டீரியாக்களும்’ பற்றிய தனது ஆய்வில் முனைவர் பட்டம் பெற்றார்.

ஒவ்வொரு முறையும் அவர் தனது ஆய்வில், மைக்ராஸ்கோப்பின் வழியே அவர் கண்டது உருண்டையான வைரஸை. வட்ட வடிவின் காரணமாக ‘ரோட்டா’ என பெயர் பெற்றிருந்த அந்த வைரஸ், அமெரிக்கா போன்ற மிதமான சீதோஷ்ண நாடுகளில் பரவி, ஆண்டிற்கு 4,50,000 வரை உயிரிழப்புகளை ஏற்படுத்தியது. இந்தியாவிலும் இந்த வைரஸ் இருக்கிறது என்பதை தனது ஆராய்ச்சியின் மூலம் அறிந்தவர் அந்த நொடியில் அதிர்ந்தே போனார் ரோட்டா வைரஸ், டிசம்பர், ஜனவரி குளிர் மாதங்களிலும், நெரிசல் அதிகம் உள்ள இடங்களிலும், அதிவேகமாகப் பரவி, ஊட்டச்சத்து குறையுள்ள இரண்டு வயதிற்கு உட்பட்ட குழந்தைகளைத் தாக்கி, ஆண்டுக்கு சுமார் 1,30,000 உயிரிழப்புகளை ஏற்படுத்தியது. இதனை அடையாளம் கண்டபின், உடனடித் தீர்விற்கான ஆய்விலும் தன்னை முழுமையாக ஈடுபடுத்தினார்.

தன்னுடைய முதுநிலை ஆராய்ச்சி படிப்பிற்காக இங்கிலாந்து, அமெரிக்கா போன்ற நாடுகளுக்குப் பயணித்து, ஆய்வுகளை மேற்கொண்டதில், ரோட்டா வைரஸ் தடுப்பு சொட்டு மருந்து சிறப்பாகச் செயல்படும் என்பதை அறிந்து, தாய்நாடு திரும்பினார். பல்வேறு அமைப்புகளுடன் தன்னை இணைத்துக் கொண்டவர், ரோட்டா வைரஸ் தடுப்புமருந்தைக் கண்டறிய முனைப்புடன் செயலாற்றினார்.

எய்ம்ஸ் மருத்துவப் பல்கலைக்கழகத்தில் தொடங்கப்பட்ட இந்த ரோட்டா வைரஸ் வேக்சின் ஆய்வு, பின்பு ககன்தீப் குழுவினரால் மிகப்பெரிய அளவில் நாடெங்கும் மேற்கொள்ளப்பட்டு இறுதியில் வெற்றி பெற்றது. ‘ரோட்டா வைரஸ் தடுப்பு மருந்தின் செயல்திறன் பற்றிய முடிவுகள் வெளியிடப்பட்ட நாள் என் வாழ்வில் எப்போதும் மறக்க முடியாத நாள்’ எனக் கூறும் ககன்தீப், தொடர்ந்து விடாமுயற்சியோடு, ‘பாரத் பயோடெக்’ நிறுவனம் உற்பத்தி செய்த, ரோட்டாவேக் சொட்டு மருந்தினை நடுத்தர மற்றும் விளிம்பு நிலை குழந்தைகளுக்கு கிடைக்கவும் ஆவன செய்தார்.

‘தடுக்க முடியும் எனில், அதையும் மீறி, எந்தக் குழந்தையும் நோய்த் தொற்றால் இறந்துவிடக் கூடாது’ எனும் ககன்தீப், அதையே செயலிலும் செய்து காட்டினார். தனது விடாமுயற்சியால் ஐந்து வயதிற்குட்பட்ட குழந்தைகளுக்கு, ரோட்டா வைரஸ் தடுப்பூசியை தேசிய தடுப்பூசி அட்டவணையில் சேர்க்க வைத்தார். இந்திய அரசு மற்றும் பில்கேட்ஸின் மெலிண்டா ஃபவுண்டேஷன் நிதி உதவியுடன், இந்தியா முழுவதும் குழந்தைகளுக்கு இலவசமாக தடுப்பு மருந்து வழங்கப்பட்டு வருகிறது.

ஒரு மருத்துவர் மருத்துவ ஆராய்ச்சியாளராக மாறியதின் விளைவு, இன்று பல குடும்பங்களில் காரணம் தெரியாமலே  இறந்த லட்சக்கணக்கான குழந்தைகள் காப்பாற்றப்பட்டு இருக்கிறார்கள். ‘மேட் இன் இண்டியா’ தடுப்பு மருந்து குழந்தைகளின் உயிரைக் காப்பதுடன், பல குடும்பங்களின் தலைமுறைகளை சந்தோஷமாக வாழ வைத்திருக்கிறது..

‘எந்தத் துறையிலும் தடைகள் உண்டு. அதிலும் பெண்கள் என்றால் சொல்லவே வேண்டாம்’ எனத் தான் சந்தித்த தடைகள் குறித்துப் பேசும் ககன்தீப், தனது ஆராய்ச்சிக் குழுவில் பெண்களையே அதிகமாகச் சேர்த்து ஊக்கப்படுத்துகிறார். இவர் சாதனையைப் பாராட்டி, ‘இந்தியத் தடுப்பூசிகளின் தாய்’ என அழைத்தபோது, ‘இது என் மருத்துவக் குழுவின் ஒட்டுமொத்த சாதனை’ என மறுத்தவாரே புன்னகைக்கிறார்.

வேலூர் சிஎம்சி மருத்துவக் கல்லூரியின் பேராசிரியர், தேசிய தடுப்பூசிகள் ஆய்வு அமைப்பு மற்றும் இந்திய அரசின் உயிரி தொழில்நுட்பவியல் அமைப்பு, ஐ.சி.எம்.ஆர் செயல் உறுப்பினர் போன்ற பதவிகளை வகிக்கும் இவர், தனது பல்வேறு ஆராய்ச்சிகளுக்கிடையே முன்னூறுக்கும் அதிகமான மருத்துவ அறிவியல் விளக்கங்கள் மற்றும் ஆய்வுகளை உலகெங்கும் உள்ள முன்னோடி மருத்துவ இதழ்களில் எழுதி வருகிறார்.

ஐன்ஸ்டீன், ஐசக் நியூட்டன் போன்ற உலகப் புகழ்பெற்ற விஞ்ஞானிகள் உறுப்பினராக இருந்த இந்த அமைப்பில், நானும் ஓர் உறுப்பினராக இருக்கிறேன் என்பது எனக்குப் பெருமைதான் என்றாலும், உண்மையில் எனது மக்களுக்கு பணி செய்வதுதான் இன்னும் எனக்குப் பெருமை என்கிறார் நம் அருகாமை ஆளுமை.

ஐசிஎம்ஆர், ரான்பேக்சி, அபாட்,

இன்ஃபோசிஸ் என இந்திய அமைப்புகளும். நிறுவனங்களும் மட்டுமன்றி, சர்வதேச அளவிலும் விருதுகள் வழங்கப்பட்டு, கௌரவிக்கப்படாலும், உலகெங்கும் உள்ள அறிவியலாளர்களுக்கான பெருமைமிக்க குழுமமான, “தி ராயல் சொசைட்டி” தேர்ந்தெடுத்த முதல் இந்தியப் பெண்மணி டாக்டர் ககன்தீப் தான் என்பது உண்மையிலேயே மிகவும் பெருமையான விஷயம்தான்.

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • 25-02-2021

  25-02-2021 இன்றைய சிறப்பு படங்கள்

 • jayyaaaa_bdaayy

  73 கிலோ கேக் வெட்டுதல்.. 73 லட்சம் மரக்கன்றுகள் நடுதல்.. மெழுகுசிலை அருங்காட்சியகம் : ஜெயலலிதா பிறந்த நாள் தடபுடலாக கொண்டாட்டம்!!

 • golfer-woods

  அமெரிக்காவில் பிரபல கோல்ப் வீரர் டைகர் உட்ஸ் சென்ற கார் விபத்தில் சிக்கியது..!!

 • penguin24

  உலகிலேயே முதன்முதலாக கண்டறியப்பட்டுள்ள மஞ்சள் நிற பென்குயின்!: புகைப்படங்கள்

 • 24-02-2021

  24-02-2021 இன்றைய சிறப்பு படங்கள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்