SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

வீட்டு வேலை தொழிலாளர்கள் சந்திக்கும் பிரச்னைகள்..!

2020-12-03@ 17:05:54

கொரோனா பாதிப்பால், ஸ்தம்பித்து இருந்த உலகம், மீண்டும் இயல்பு நிலைக்கு நகர ஆரம்பித்துவிட்டது. இருந்தாலும் பலரின் வாழ்வாதாரம் மீளாத துயரத்தில் உள்ளது. குறிப்பாக இடம்பெயர் தொழிலாளர்கள் பல பிரச்னைகள் மற்றும் சவால்ககளை சந்தித்து வருகிறார்கள். இவர்களின் நலனைக் கருத்தில் கொண்டு அரசு மற்றும் உள்ளூர் நிர்வாகங்கள் நிவாரண உதவி திட்டங்கள், செயல்முறை நிகழ்ச்சிகள் மூலம் ஆதரவு அளித்துவருகின்றன. ஆனால் பெருவாரியான தொழிலாளர்கள் இத்தகைய செயல் திட்டத்திலிருந்து விடுபட்டுள்ளனர்.

அதில் எந்தவித பாதுகாப்பும் இல்லாமல் விடுபட்டவர்களில் பெரும்பாலானோர் வீட்டு வேலை செய்யும் பெண் தொழிலாளர்களே! இந்தியா முழுவதும் சுமார் 5 கோடி பெண்கள் வீட்டு வேலை செய்பவர்கள் என்று கணக்கிடப்பட்டுள்ளது. அவர்கள் சந்திக்கும் பிரச்னைகள், சவால்கள் பற்றி பொது சமூகத்திற்கு விழிப்புணர்வு ஏற்படுத்தவும், மத்திய-மாநில அரசுகளுக்கு இவர்களின் நிலையை கவனத்தில் கொண்டு செல்வதோடு அவர்களுக்கான பாதுகாப்பு, வாழ்வாதாரம் குறித்த கொள்கைகள் மற்றும் சட்ட திட்டங்களை உடனடியாக நிறைவேற்ற வேண்டும் என்ற எண்ணத்தில் ‘ஆக்‌ஷன் எய்ட் இந்தியா’ அமைப்பினர் வீட்டு வேலை செய்பவர்கள் மத்தியில் ‘மிஸ்ட்கால்’ பிரச்சாரத்தை முன் வைத்துள்ளனர்.

”கொரோனா காலத்தில் ஒரு விதமான அச்சம் இருந்தது. அதில் வீட்டுவேலை செய்பவர்கள்தான் முதலில் பாதிப்படைந்தார்கள்” என்கிறார் ஆக்‌ஷன் எய்ட் இந்தியா அமைப்பின் இணை இயக்குநர் எஸ்தர் மரியசெல்வம். ‘‘பொது முடக்கம் ஓரளவு தளர்வுக்கு வந்தபின் மற்றவர்கள் வேலைக்கு திரும்பமுடிந்தது. ஆனால் வீட்டு வேலை செய்பவர்கள் பழையபடி செல்வது பெரிய சவால்தான். உலக அளவில் 25 பெண் தொழிலாளர்களில் ஒருவர் வீட்டுவேலை செய்பவராக இருக்கிறார். உரிமையாளருக்கும், அவர்களுக்கு கீழ் வேலை செய்பவர்களுக்குமான ஒரு ஒழுங்கு முறை இல்லாத தொழிலாகவே இருக்கிறது. இவர்களின் வேலை குறித்து எந்தவித பதிவுகளும் இல்லை.

அதனால் இவர்களின் வேலை நேரம், சம்பளம் போன்ற விஷயங்களும் முறையானதாக இருப்பதில்லை. ஒரு பக்கம் கொரோனாவினாலும் மறுபக்கம் மத்திய அரசு அவசர அவசரமாக கொண்டுவந்த தொழிலாளர் சட்டங்களினாலும் இவர்கள் அதிகமாக பாதிக்கப்படுகிறார்கள்.  வளரும் நாடுகள், வளர்ந்த நாடுகள் என உலகம் முழுவதும் குழந்தை தொழிலாளர்களை தவிர்த்து வீட்டுவேலை செய்பவர்களின் எண்ணிக்கை 67 மில்லியன் என்றாலும் இது அதிகரித்துகொண்டுதான் இருக்கிறது. ஓட்டுனர், சமையல்காரர், தோட்ட வேலை செய்பவர் என ஆண்கள் இருந்தாலும், 80% என்ற அளவில் பெண்களே அதிக அளவில் வீட்டு வேலை செய்பவர்களாக உள்ளனர்.

இதில் பெரும்பாலானோர் வீட்டில் ஆண்கள் வேலைக்கு செல்வதில்லை” என்று கூறும் எஸ்தர் இவர்கள் சந்திக்கும் பிரச்சினைகளை அடுக்கினார். ”கொரோனா நேரத்தில் நிறைய பேருக்கு சம்பளம் கொடுக்காமல் இருக்கவும், அவர்களை வேலையை விட்டு தூக்கியதற்கு பல இடங்களில் காரணமாக அமைந்தது உரிமையாளருக்கும் வேலை உத்திரவாதம் இல்லாததுதான். இதனால் வாடகை கட்ட முடியாமல் முன்பணத்தில் இருந்து கழித்தும், வட்டிக்கும் சிலர் கடன் வாங்கியுள்ளனர். பால், காய்கறி போன்ற அத்தியாவசிய பொருட்கள் கூட வாங்க முடியாத சூழல் 51% பெண்களுக்கு ஏற்பட்டுள்ளது. வேலைக்கு செல்லும் இடத்தில் இவர்கள் உடல் மற்றும் மனரீதியாகவும் பல பிரச்னைகளுக்கு ஆளாகிறார்கள்.

வேலைக்கு வரும் பெண்களை சமூகத்தின் அங்கமாக பார்ப்பதோடு நம் வீட்டில் அம்மா, மனைவி எல்லோரும் வேலை செய்வதை போலவே இவர்கள் மீதும் அந்த சமமான மரியாதை கொடுக்க வேண்டும்” என்று கூறுபவர், வீட்டு வேலை செய்பவர்கள் சார்பாக சில கோரிக்கைகளை முன்வைக்கிறார்.  ”கொரோனா பெருந்தொற்று நோய் முடிவுக்கு வரும் வரை வீட்டுவேலை தொழிலாளர்களுக்கு ஏப்ரல் மாதத்தில் இருந்து கணக்கிட்டு மாதந்தோறும் ரூ.10,000 நிவாரண பணமாக வழங்கணும்.

இவர்களை “தொழிலாளி” என்று தொழிலாளர் நலத்துறை அல்லது நலவாரியத்தில் பதிவு செய்திட வேண்டும். காவல் சரிபார்ப்பு, படிவம், குடியிருப்போர் நல சங்கத்தின் கடிதம், தொழிற் சங்க உறுப்பினர் அடையாள அட்டை, வேலை ஏற்பாடு செய்து தரும் நிறுவனங்களின் கடிதம், குடிமை சமூக நிறுவனங்களின் கடிதம் மற்றும் இதர அமைப்புகள் தரும் கடிதம் ஆகியவற்றில் ஏதேனும் ஒன்றைப் பெற்று வாரியத்தில் பதிவு செய்ய வேண்டும். மத்திய மாநில அரசுகள் வீட்டுவேலை தொழிலாளர்களுக்கு ஒருங்கிணைந்த சமூகப் பாதுகாப்பு திட்டம் ஒன்றை உருவாக்க வேண்டும்.

வேலை பாதுகாப்பு மற்றும் பணியிட பாதுகாப்பை உறுதி செய்திட அனைத்து குடியிருப்போர் நல சங்கங்களுக்கும், அமைப்புகளுக்கும் அரசாங்கம் உடனடியாக அறிக்கை அனுப்ப வேண்டும். தமிழக அரசு நிர்ணயித்த வீட்டு வேலை தொழிலாளர்களுக்கான குறைந்த பட்ச ஊதியம் குறைவாக உள்ளது. தற்போதுள்ள ஊதியம் 1 மணி நேரத்திற்கு ரூ.37-ஐ ரூ.70 என்று மாற்றணும். வீட்டு வரிவசூல் 1% நிதியை இவர்களின் நலனுக்காக ஒதுக்கிட வேண்டும்” என்றார்.

தொகுப்பு: அன்னம் அரசு

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • 18-04-2021

  18-04-2021 இன்றைய சிறப்பு படங்கள்

 • niger-scl-15

  நைஜரில் பள்ளியில் ஏற்பட்ட தீயின் கோரப்பிடியில் சிக்கி 20 மாணவர்கள் உடல் கருகி பரிதாப பலி..!!

 • maharastra-15

  தீவிரமடையும் கொரோனா பரவலால் மஹாராஷ்டிராவில் முழு ஊரடங்கு!: மூட்டை முடிச்சுகளுடன் வெளியேறிய புலம்பெயர் தொழிலாளர்களின் புகைப்படங்கள்..!!

 • 15-04-2021

  22-11-2018 இன்றைய சிறப்பு படங்கள்

 • 15-04-2021

  15-04-2021 இன்றைய சிறப்பு படங்கள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்