SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

பெண்களுக்குச் சொத்துரிமை பாதுகாப்பு கவசம்!

2020-11-23@ 16:29:44

நன்றி குங்குமம் தோழி  

1956ல் ‘இந்து வாரிசுரிமைச் சட்ட’த்தின் படி ஆண் வாரிசுகளுக்கு மட்டுமே சொத்துக்களில் பங்குள்ளது என்று கூறியது. வருடங்கள் மாறி, பெண்கள் படிப்பிலும், வேலையிலும் முன்னேறிய நிலையில், பல போராட்டங்களுக்குப் பின் 2005ஆம் ஆண்டு அதே சட்டம் திருத்தப்பட்டு, பரம்பரை சொத்தில், பெண்களுக்கும் உரிமை உண்டு என மாற்றப்பட்டது.

இருப்பினும், சில குழப்பங்கள் நீடித்தன. ஆகஸ்ட் 11, 2020 அன்று உச்ச நீதிமன்றம், 2005 ஆம் ஆண்டுக்கு முன் பிறந்த பெண்களுக்கும், தீர்மானத்திற்கு முன் தந்தை இறந்திருந்தாலும் சொத்தில் சம உரிமை அளித்து அதிரடி தீர்ப்பை அறிவித்தது. இந்த திருத்தத்திற்கு முன் அப்பெண் இறந்திருக்கும் பட்சத்தில், அவளுடைய சொத்துக்களை அவள் வாரிசுகளுக்கு வழங்கவும் நீதிபதி அருண் மிஸ்ரா தலைமையிலான அமர்வு முடிவு செய்தது. இந்த தீர்மானம், பாலின சமத்துவத்தை அழுத்தமாக நம் குடும்பங்களில் பதிவு செய்யும் நேரத்தில், பெண்களுக்குச் சொத்துரிமை வழங்குவதால் குடும்ப வன்முறை குறையும் என 1994ல் ஆதாரங்களுடன் கூறியவர் பீனா அகர்வால். இந்தியப் பொருளாதார நிபுணரான இவர், மான்செஸ்டர் பல்கலைக்கழகத்தில் பொருளாதார பேராசிரியராக பணியாற்றுகிறார்.

இவர் 2005 ஆம் ஆண்டில், பாலின சமத்துவத்திற்காக இந்து வாரிசு சட்டத்தைத் திருத்த வலியுறுத்தி பிரச்சாரத்தை மேற்கொண்டார். 2008ல் பத்ம விருது வழங்கப்பட்டது. 1994ல் இவர் எழுதிய, A Field of One’s Own: Gender and Land Rights in South Asia என்ற புத்தகம், தென் ஆசியாவிலேயே பாலினம் மற்றும் சொத்துரிமை பற்றிய மிகப் பெரிய ஆய்வாகவும், உலகளவில் பல ஆராய்ச்சிகளுக்கு முன்னோடியாகவும் விளங்குகிறது. அதில், பெண்களைப் பாதிக்கும் மிக முக்கியமான காரணியாகச் சொத்துரிமையைக் குறிப்பிடுகிறார் பீனா அகர்வால்.

இந்தியக் கிராமங்களில் நிலங்கள்தான் மக்களின் பெரிய சொத்தாகவும், விவசாயிகளுக்கு வருமானத்தைத் தரும் முக்கிய வளமாகவும் இருக்கிறது. பொருளாதாரத்தில் வலுவான குடும்பங்களைச் சேர்ந்த பெண்களும், அவர்கள் பெயரில் நிலம்-வீடு இல்லாத நிலையில் அதிகாரமற்று, பொருளாதார ரீதியாகவும் சமூக ரீதியாகவும் பாதிக்கப்படக் கூடியவர்களாகவே இருக்கின்றனர் என பீனா குறிப்பிடுகிறார். 2000-2001ல் இவர், பிரதீப் பாண்டாவுடன் இணைந்து திருவனந்தபுரம் மாவட்டத்தில் திருமணமான பெண்களிடம் ஒரு ஆய்வை மேற்கொண்டு, குடும்ப வன்முறைக்கும் - பெண்களிடமுள்ள நிலையான சொத்துக்கள் குறித்து ஆராய்ந்தனர். அதில் 34% பெண்கள் நிலம், வீடு அல்லது இரண்டையுமே வைத்திருந்தனர். 6% நிலமும், 14% வீடும், 15% நிலம், வீடு இரண்டையுமே வைத்திருந்தனர்.

அதே போல ஆய்வில் கலந்துகொண்ட அனைத்து பெண்களில், 36% உடல் ரீதியான வன்முறையைச் சந்திப்பதாகவும், 65% உளவியல் ரீதியான வன்முறையைச் சந்திப்பதாகவும் கூறினர். சொந்தமாக நிலம், வீடு இல்லாத பெண்கள் 49% உடல் ரீதியான வன்முறையில் பாதிக்கப்பட்டுள்ள போது, நிலம் வைத்திருக்கும் பெண்கள் 18%, வீடு வைத்திருக்கும் பெண்கள் 10%, நிலம்-வீடு இரண்டையும் வைத்திருந்தால் 7% பெண்களுக்கு இந்த பாதிப்பு ஏற்படுவதில்லை் என ஆய்வு உறுதி செய்தது. அதே போல் சொத்து இல்லாத பெண்கள் 84% சதவீதத்தினருக்கு உளவியல் வன்முறையும்,  நிலம்-வீடு இரண்டையும் வைத்திருப்பவர்களுக்கு 16% உளவியல் வன்முறையும் நடந்துள்ளன. பேராசிரியர் பீனா கணித்தது போலவே, பெண்களிடம் சொத்துரிமை இருக்கும் பட்சத்தில், குடும்ப வன்முறையும் குறைந்தே காணப்படுகிறது.

இதுதவிர, அதே ஆய்வில் வேலைக்குச் செல்லும் பெண்களைவிட, சொத்து-வேலை என இரண்டுமே இருக்கும் பெண்கள் குடும்ப வாழ்க்கையில் பெரிய பிரச்சனைகளைச் சந்திப்பதில்லை என்பதும் உறுதிசெய்யப்பட்டது. மேலும் கணவனைவிட நல்ல வேலையில் இருப்பவர்களை விட அதிகம் சொத்துள்ள பெண்களுக்கு இப்பிரச்சனைகள் இல்லை என அதிர்ச்சி தகவல்களும் வெளியாகியுள்ளன. ‘‘பெண்களிடம் சொத்திருந்தால் மட்டுமே குடும்ப வன்முறையைக் கட்டுப்படுத்தமுடியும் என்றில்லை. ஆனால் பெண்களின் பாதுகாப்பிற்குச் சொத்து முக்கியமானது’’ என்கிறார் பேராசிரியர் பீனா.

‘‘பலருக்கும் சொந்தமாக வீடு வாங்கும் வசதிகள் இருக்க வாய்ப்பில்லை. அதனால், அரசாங்கம் வறுமையை ஒழிக்கும் திட்டத்தின் கீழ், வீடுகள் அல்லது நிலங்கள் வழங்கும் போது, அதை அக்குடும்ப பெண்களின் பெயரில் வழங்கலாம். பெண்கள் குழுவாக இணைந்து ஒரு நிலத்தை வாங்கலாம். ஆந்திராவில், இந்த திட்டம் மூலம் பெண்கள் ஒரு குழுவாக நிலத்தை வாங்கி, அதில் விவசாயம் செய்து சுயமாகச் சம்பாதிக்கின்றனர்’’ என்பதையும் குறிப்பிடுகிறார்.

‘‘இந்த சொத்துரிமை தீர்மானம் பெண்களுக்கான அடிப்படை உரிமை. இது குடும்பங்களில் பெண்களுக்கான முக்கியத்துவத்தையும், அதிகாரத்தையும் மதிப்பையும் வழங்குகிறது. குடும்பத்தின் முக்கிய முடிவுகளில் பெண்களின் பங்களிப்பும், பெண்கள் தங்கள் குழந்தைகளுக்கான எதிர்கால திட்டத்தையும், சேமிப்பையும் செய்ய இது உதவும்” என்கிறார் சென்னை உயர்நீதிமன்ற வழக்கறிஞர் விஜயலட்சுமி.

பெண்கள் குடும்ப வன்முறையால் பாதிக்கப்பட்டாலும், தனியாக வாழ வழியில்லாமலும், குழந்தைகளின் எதிர்காலம் பாதிக்கப்படும் என்று எண்ணி வன்முறையினை தாங்கிக் கொள்கின்றனர். உடல் ரீதியாகத் தாக்கப்படும் தாய்களைப் பார்த்து வளரும் குழந்தைகளுக்கு அது மனதளவில் பெரிய பாதிப்பை ஏற்படுத்தும். இந்த தீர்மானம் பெண்கள் துன்புறுத்தல்களைச் சகித்துக்கொள்ளத் தேவையில்லை என உறுதியளித்துள்ளது.

1970களில் பீகாரில் போத் கயா பகுதியிலுள்ள இரண்டு கிராமங்களைச் சேர்ந்த பெண்களுக்கு முதல் முறையாக அவர்கள் பெயரில் நிலங்கள் வழங்கப்பட்டபோது, “எங்களுக்கு நாக்கு இருந்தும் பேச முடியவில்லை. கால்கள் இருந்தும் நடக்கமுடியவில்லை. ஆனால் இப்போது எங்களுக்கு நிலம் இருப்பதால் பேசவும், நடக்கவும் வலிமை கிடைத்துவிட்டது” என்று கூறியுள்ளனர். பெண்களுக்கு சொத்துரிமை கிடைப்பதன் மூலம், அவர்களுக்கான அதிகாரம் கிடைக்கிறது. நிலையான சொத்துகள் பெண்களுக்கு அரணாக அமைந்து பொருளாதார-சமூக சுதந்திரத்தை வழங்குகிறது’’ என்றார் பீனா அகர்வால்.

தொகுப்பு: ஸ்வேதா கண்ணன்

படங்கள்: ஜி.சிவக்குமார்

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • nailssss_SSS

  உலகின் மிக நீளமான நகங்களைக் வளர்த்திருக்கும் பெண்மணி!!!

 • gujrat-acc20

  குஜராத்தில் கோர விபத்து: தூங்கிக் கொண்டிருந்தவர்கள் மீது சரக்கு லாரி ஏறியதில் குழந்தை உட்பட 16 பேர் உடல் நசுங்கி பலி..!!

 • odisaa_satueesss

  ஒடிசா கடற்கரையில் மணற் சிற்பக் கலைஞர் சுதர்ஷன் பட்நாயக் அமைத்துள்ள கண்கவர் மணற் சிற்பங்கள்!!

 • 20-01-2021

  20-01-2021 இன்றைய சிறப்பு படங்கள்

 • asusiiiee_dravviii1

  ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக இளம் இந்திய அணி இமாலய வெற்றி :... வேற லெவல் சாதனை என குவியும் பாராட்டுக்கள்!!

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்