SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

உடலுக்கும் மனதிற்கும் இதமளிக்கும் களிமண் தெரபி!

2020-11-19@ 16:04:18

நன்றி குங்குமம் தோழி

எம்.பி.ஏ முடித்து, எச்.ஆராக பல வருடங்கள் கார்ப்பரேட் உலகில் பயணித்த மாலினிக்கு அந்த இயந்திர வாழ்க்கை சலிப்பூட்டத் தொடங்கியது. சுவையில்லாத வாழ்க்கையைக் கொஞ்சம் சுவாரஸ்யமாக்க மண்பாண்ட கலையை தன்னுடைய 40 வயதில் முதல் முறையாகக் கற்றுக்கொண்டவர் இப்போது பல கலைப் பொருட்கள் செய்ய பயிற்சி அளித்து வருகிறார்.

‘‘சின்ன வயசுல இருந்தே களிமண் வைச்சு விளையாட ரொம்ப புடிக்கும். ஆனா என் வீட்ல மெரினா பீச்ல கூட விளையாடவிட மாட்டாங்க. கொஞ்சம் வளர்ந்ததும் அந்த ஆசை குறைஞ்சு போனாலும், முழுசா மறையல. படிப்பு முடிச்சு ஒரு பெரிய பன்னாட்டு நிறுவனத்துல கைநிறைய சம்பளத்துடன் வேலை. ஆனா சரியா சாப்பிடக் கூட நேரமிருக்காது. நல்லா சம்பாதிச்சு, கடமைகள் எல்லாம் முடிச்சதும் எதுக்கு சம்பாதிக்கிறோம், எதுக்கு வேலைக்கு போறோம்னே புரியல.அந்த நேரம்தான் நமக்காக வாழ்வதைவிட, சமூகத்துக்கு பயன்படும்படி வாழ்வதில் மகிழ்ச்சியும் நிம்மதியும் கிடைக்கும்னு புரிஞ்சுது. அதுக்கு முதல் படியா பல வருஷமா அடக்கி வச்சிருந்த ஆசையை இப்போ செய்யலாமேனு ரகு சாமுவேல் என்ற கைதேர்ந்த ஆசிரியரிடம் மண்பாண்ட கலையை கத்துக்கிட்டேன் என்றார்.”

தன் தாய்க்கு சிறுநீரகத்தில் பிரச்சனை ஏற்பட, பதினெட்டு வயதிலேயே தாயைக் காப்பாற்றச் சிறுநீரக தானம் செய்துள்ளார் மாலினி. இதனால் அதிகப்படியான எடையைத் தூக்க முடியாமல் போனது. ஆனால், மண்பாண்டங்களை செய்ய ஆரம்பித்த சில மாதங்களிலேயே உடல் ஆரோக்கியம் பெருகுவதை உணர்ந்ததாக கூறும் இவர், ‘‘மண்பாண்ட கலை பொழுதுபோக்கைத் தாண்டி, நல்ல உடற் பயிற்சியும் தருகிறது. களிமண்ணைப் பிசைந்து பொருட்கள் உருவாக்கும் போது, தசைகள் வலுவடைகின்றன. நம்பிக்கையும் மன அமைதியும் கிடைக்கிறது என்றார்.”

இந்த பலன்களை நேரடியாக அனுபவத்தில் அறிந்ததும், இதை முழுநேரமாக மக்களுக்கு கொண்டு சேர்க்க முடிவுசெய்து, ‘ஆர்டிஸ்டிக் பாட்டரி ட்ரெய்னிங் அகாடமி’ என்ற பயிற்சி மையத்தை உருவாக்கினார். அந்த சமயம், சிறப்புக் குழந்தைகளுக்கான பள்ளியில் ஒரு விழாவிற்குத் தலைமை தாங்கும் விருந்தினராக அழைப்பு வந்தது. அங்குச் சென்ற போது இந்த மண்பாண்ட கலையை இக்குழந்தைகளுக்கு அறிமுகப்படுத்தினால், பல நன்மைகள் உருவாகும் என்பதை உணர்ந்து, அதே பள்ளியில் சிறப்புக் குழந்தைகளை எப்படி அணுகுவது... எப்படி உரையாடுவது என்பதைக் கற்றுக்கொண்டார்.

‘‘குழந்தைகள் இயற்கையாகவே க்ரியேடிவ்வாக, நல்ல கற்பனைத்திறனுடன் கலை சார்ந்த விஷயங்கள் மூலம் தங்களை வெளிப்படுத்துபவர்களாக இருப்பார்கள். வளர வளர தங்களை வெளிப்படுத்திக் கொள்ளும் தேவை அதிகரிக்கும். மண்பாண்ட கலையில் சரி-தவறு என எந்த விதிமுறையும், வரையறையும்  கிடையாது. குழந்தைகள் தங்களுக்குத் தோன்றியதைக் காட்சிகளாக வெளிப்படுத்தி பொருட்களை இதில் உருவாக்க முடியும். மண்பாண்ட கலை ஒரு விளையாட்டாக மட்டும் இல்லாமல் முழுமையான உடல் உளவியல் ஆரோக்கியத்தையும் வழங்குகிறது.

ஆட்டிசம் போன்ற நோயால் பாதிக்கப்பட்ட சிறப்புக் குழந்தைகள், எப்போதும் துறுதுறுவென பரபரப்பாக  இருப்பார்கள். அடிக்கடி கவனச்சிதறல் ஏற்பட்டு, ஒரு விஷயத்தை முழுமையாக கற்க அவர்களுக்கு அதிக நேரம் ஆகும். ஆனால் களிமண் தெரபி மூலம், அவர்கள் கவனத்தை ஈர்த்து அவர்களை அமைதியாக்க முடியும்’’ என்ற மாலினி சிறப்புக் குழந்தைகளுக்கும் மண்பாண்ட கலையைக் கற்றுத்தரப் பிரத்யேகமான வகுப்புகளை
வடிவமைத்துள்ளார்.

‘‘சிறப்பு குழந்தைகளுக்கு கற்பிக்க  அதீத பொறுமை வேண்டும். ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு விதமான கற்றல் திறன் இருக்கும். இதனால் அவர்களுக்கு எளிமையாக அதே சமயம் சலிப்பூட்டாதவாறு கற்றுக் கொடுக்க வேண்டும். சில வகுப்புகளிலேயே அக்குழந்தைகளின் மனநிலை அமைதியாகி, கவனிப்பு திறன் அதிகரிக்கும். தள்ளாடி தளர்ச்சியுடன் நடப்பவர்களும் சமநிலையில் நடக்க ஆரம்பிப்பார்கள். கை மற்றும் கண் ஒருங்கிணைப்பு மேம்படும், கையெழுத்து அழகாகும். குழந்தைகளின் கம்யூனிகேஷன் திறனும் அதிகரிக்கும். விரல்களுக்கு நல்ல பயிற்சி தந்து நரம்புகளையும் வலுவாக்கும்” என்கிறார் மாலினி.   

‘‘வேறு எந்த கலையிலும் இல்லாத சிறப்பம்சமாக, பஞ்ச பூதங்களில் ஒன்றான பூமியுடன் தொடர்புடையதாக இக்கலை இருக்கிறது.  களிமண்ணைப் பதப்படுத்த கால்களை கொண்டு நன்கு பிசைய வேண்டும். இதை வெட்ஜிங் என ஆங்கிலத்தில் கூறுவார்கள். இதன் மூலம் உடலில் ரத்தவோட்டம் அதிகரித்து, முழுமையான உடற்பயிற்சி கிடைக்கிறது. உடலில் இருக்கும் மூலாதார சக்கரத்தையும் செயல்படச் செய்து மனதிற்கு அமைதியை வழங்கும்’’ எனக் கூறும் மாலினி, களிமண் கலையில் இருக்கும் நன்மைகளை கூறுகிறார்.

‘‘களிமண் ரத்த அழுத்தத்தைக் குறைக்கும். உடலில் இருக்கும் சூட்டைத் தணிக்கும். உளவியல் ரீதியாக மனதிற்கு வலிமை தரும். சவால்களை ஏற்றுக்கொள்ளவும் எதிர்கொள்ளவும் தைரியம் பிறக்கும். படைப்பாற்றலை மேம்படுத்தி, சிந்தனைத் திறனை அதிகரிக்கும். இலக்கை நோக்கிப் பயணிக்க உதவும். மேலும், மன அழுத்தத்திலிருந்து மீளவும் இது உதவுகிறது.

ஓவியம் போன்ற கலைகளை நாம் பிரெஷ் அல்லது பேனா போன்ற பொருட்களைக் கொண்டு உருவாக்குகிறோம். ஆனால் மண்பாண்டத்தில் பொருட்களை உருவாக்க, நேரடியாக நம் கைகளைப் பயன்படுத்துகிறோம். களிமண்ணை கைகளாலேயே வடிவமைக்கும் போது, நாம் கட்டுப்பாட்டில் இருப்பது போன்ற உணர்வு ஏற்படும். எந்த பிரச்சனையாகக் கவலையாக இருந்தாலும், அந்த நிலையை நம்மால் மாற்றியமைக்க முடியும் என்ற நம்பிக்கை இதில் பிறக்கும். எந்த தாமதமுமின்றி, உடனடியாக நினைத்ததை அடையும் மனதிற்கு பொறுமை இருக்காது. ஆனால், களிமண்ணில் ஒரு பொருளை செய்து முடிக்க அதிக நேரமும் பொறுமையும் தேவை. ஒரு பொருளை நம் கைகளிலேயே இயற்கையாக உருவாக்கி, அது முழுமையடையும் வரை காத்திருந்து பெறுவது பெரும் மகிழ்ச்சியைத் தரும்.

பெண்களுக்கு நாற்பது வயதிற்கு மேல் ஹார்மோன் பிரச்சனைகளால் ஏற்படும் மனநிலை மாற்றங்களையும் மண்பாண்ட கலை மூலம் சரியாக்க முடியும். பல பெண்கள் அதீத கோபம், எதற்கெடுத்தாலும் அழுகை என இருப்பவர்களுக்கு, உணர்ச்சிகளைக் கட்டுப்படுத்தவும் இது தியானத்திற்கு நிகரான பயன்களைத் தரும்.

மண் பாத்திரங்களில் சமைப்பதால் ஏற்படும் நன்மைகள் நாம் அனைவரும் அறிந்ததே. மண் பாத்திரத்தில் சமைக்கும் போது, அதில் இருக்கும் ஊட்டச்சத்துகள் நம் உடலுக்கு அப்படியே செல்கின்றன. உணவின் சுவையும் மனமும் அதிகரிக்கிறது. குறைந்த எண்ணெயில் சமையல் செய்ய முடியும். களிமண்ணில் செய்த நகைகள் நமக்கு அழகு சேர்ப்பதுடன், நம் உடலின் வெப்பத்தையும் கட்டுப்பாட்டில் வைத்திருக்கும்’’ என்று கூறுகிறார் மாலினி.

எந்த பக்கவிளைவும் இல்லாத இயற்கையாகச் சருமத்தை பொலிவுடன் ஆரோக்கியமாக வைத்திருக்கக் களிமண் உதவுகிறது. ஒவ்வொருவரின் சருமத்தைப் பொருத்து அதற்கேற்ற களிமண் ஃபேஸ்பேக் வகையை மாலினி தயாரிக்கிறார். இதுமட்டுமில்லாமல், வயிற்றுப் பிரச்சனைகளை போக்க, பிரத்யேகமாகத் தயாரிக்கப்பட்ட களிமண் கலவையை வயிற்றில் சில நிமிடங்கள் தடவினாலே, கடுமையான வயிற்றுப்போக்கும் இருபதே நிமிடத்தில் குணமாகும் என்கிறார்.

‘‘நான் சில வருடங்கள் கார்ப்பரேட் நிறுவனங்களில் வேலை செய்ததால், அங்கு பணிபுரிபவர்களின் அழுத்தம் எனக்குத் தெரியும். அதனால் பல உலகளாவிய பன்னாட்டு நிறுவனங்களில் கார்ப்பரேட் வர்க்‌ஷாப் நடத்தி வருகிறேன். மேலும், குழந்தைகளின் பிறந்தநாள் விழாக்களிலும், பள்ளி - கல்லூரிகளிலும் வர்க்‌ஷாப் செய்து வருகிறேன்.

ஜிம் போன்ற உடற்பயிற்சி நிலையங்களில் செய்யும் பயிற்சியை நம்மால் வீட்டில் செய்ய முடியாது. ஆனால் மண்பாண்ட கலையில், ஒரு பக்கெட் களிமண் இருந்தாலே போதும், அடிப்படை நுட்பங்களைக் கற்றுக்கொண்டு, வாழ்நாள் முழுக்க நல்ல பொழுதுபோக்குடன், ஆரோக்கியம் கிடைப்பதுடன், தொழில் ரீதியாக நல்ல வருமானமும் தரும். இதில் சிற்பங்கள், நகைகள், தொட்டிகள், சமையல் பாத்திரங்கள் என அனைத்து பொருட்களும் உருவாக்கி விற்கலாம்” என்கிறார் மாலினி கல்யாணம்.

செய்தி: ஸ்வேதா கண்ணன்

படங்கள்: ஆ.வின்சென்ட் பால்

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • sheep25

  ரோமத்தின் எடை மட்டும் 35 கிலோ... 5 வருடங்களாக தவித்த செம்மறி ஆட்டுக்கு கிடைத்த மறுவாய்வு..!!

 • 25-02-2021

  25-02-2021 இன்றைய சிறப்பு படங்கள்

 • jayyaaaa_bdaayy

  73 கிலோ கேக் வெட்டுதல்.. 73 லட்சம் மரக்கன்றுகள் நடுதல்.. மெழுகுசிலை அருங்காட்சியகம் : ஜெயலலிதா பிறந்த நாள் தடபுடலாக கொண்டாட்டம்!!

 • golfer-woods

  அமெரிக்காவில் பிரபல கோல்ப் வீரர் டைகர் உட்ஸ் சென்ற கார் விபத்தில் சிக்கியது..!!

 • penguin24

  உலகிலேயே முதன்முதலாக கண்டறியப்பட்டுள்ள மஞ்சள் நிற பென்குயின்!: புகைப்படங்கள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்