SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

கற்பித்தல் என்னும் கலை

2020-11-18@ 16:43:26

நன்றி குங்குமம் தோழி

கோடை விடுமுறைக்கு, இந்த முறை எங்கு செல்லலாம் என்று குடும்பத்துடன் ஆலோசனை நடத்துவதே ஒரு சுகம். எப்பொழுது வீட்டு தினசரி வேலைகளிலிருந்து சிறிது மாற்றம் கிடைக்கும் என்று அந்த சமயத்திற்காக காத்திருக்கும் அம்மாக்கள், நம் குடும்பம் சந்ேதாஷமாக விடுமுறையை கழிக்க வேண்டும் என்று ஆசைப்படும் அப்பாக்கள், தான் எங்கெல்லாம் செல்லப்போகிறோம், என்னவெல்லாம் பார்க்கப் போகிறோம் என்று நண்பர்களுடன் பெருமையாகப் பேசிக் கொள்பவர்கள் பிள்ளைகள். இதுதான் அழகான குடும்ப உறவு என்பது.

இதே போன்ற மற்றொரு உறவுதான் ஆசிரியரும், மாணவரும் பயணிப்பது என்பது. ஆம். பாட சம்பந்தப்பட்ட ஆய்வுகளுக்காக, பாடக்கருத்துக்களின் அடிப்படையில் சில இடங்களைப் பார்ப்பதற்கு மாணவர்களுடன் பயணிப்பதுண்டு. அது பெரும்பாலும், ஒரு நாள் ‘பிக்னிக்’ என்றுகூட சொல்லலாம். பள்ளிப்படிப்பு முடிப்பதற்கு முன், ஞாபகார்த்தமாக சில நீண்ட பயணங்கள் மேற்கொள்வதுண்டு. பள்ளி, புத்தகம், வீட்டுப்பாடம், தேர்வு அனைத்தையும் மறக்கும் விதத்தில் சரித்திரப் புகழ் பெற்ற இடங்களுக்கும் செல்வதுண்டு.

ஒருவார காலம்கூட ஆகலாம். ஒரு சில மாதங்களுக்கு முன்பாகவே ஏற்பாடுகள் ஆரம்பமாகி விடும். ‘டிராவல்ஸ்’ மூலம் எல்லாம் தயாராகி விடும். அதிலிருந்து பிள்ளைகள் கற்பனையில் வாழ ஆரம்பித்து விடுவார்கள். படிப்பில் கவனம் குறைய ஆரம்பிக்கும். அந்த சமயம் பெற்றோர்கள், நீ மதிப்பெண் எடுக்காவிடில், டூர் போக முடியாது என்று பயமுறுத்தியே படிக்க வைப்பதுண்டு. அப்படியாக ஒரு வாரம் முதல் பத்து நாட்கள் வரைகூட வடஇந்தியப்பயணம் மேற்கொள்வதுண்டு. அதுபோன்ற பயணங்களின்போதுதான், பிள்ளைகளின் விட்டுக்கொடுத்துப் பழகும் தன்மை, பிறருக்கு உதவுதல், இரக்கம், அன்பு, பணிவு போன்ற அனைத்து குணங்களும் நன்கு வெளிப்படும். ஒருவரையொருவர் புரிந்து பழகவும் வாய்ப்பாக அமையும்.

இரு பாலர் படிக்கும் பள்ளிகளில் பெரும்பாலும் பெண் ஆசிரியைகள் மற்றும் ஆண் ஆசிரியர்கள் இருபாலரும் உடன் செல்வார்கள். சுமார் இருபது பிள்ளைகளை கண்காணிக்க ஒரு ஆசிரியர் அல்லது பதினைந்து பிள்ளைகளுக்கு ஒரு ஆசிரியர் என்ற கணக்கில்கூட ஏற்பாடு செய்வார்கள். பெரும்பாலும், அனுபவம் வாய்ந்த ஆசிரியர்கள்தான் உடன் செல்வதுண்டு. பதினாறு பதினேழு வயது பிள்ளைகள் ஓரளவு விவரம் தெரிந்தவர்கள் மற்றும் வயதுக்கு வந்த பெண்கள் என்பதால், ஓரளவு அனுபவம் பெற்றவர்கள் அவர்களை நன்கு வழிநடத்திச் செல்வர். ஒரு தாய், தந்தைபோல், தன் குழந்தைகளை வழிநடத்துவதுபோல் அவர்கள் நல்லது கெட்டதை எடுத்துச் சொல்லி புரிய வைப்பார்கள். அந்த விதத்தில் எங்களுக்கு நிறையவே அனுபவம் கிடைத்தது.

செப்டம்பர் மாதம் புறப்படுவதற்கு, ஜூன் மாதமே முன்னேற்பாடுகள் தொடங்கிவிடும். டிக்கெட்டுக்கு பணம் கொடுத்துவிட்டால் போதும், அதிலிருந்து மாணவர்கள் கற்பனையில் மிதக்க ஆரம்பிப்பார்கள். யார் யார் பக்கத்தில் அமருவது, அவர்களுடன் எந்தெந்த நண்பர்கள் உடன் இருப்பார்கள் போன்ற அனைத்தும் விவாதிக்கப்படும். மேலும் கூட யார் யார், எந்த ஆசிரியர்கள் வரப்போகிறார்கள் என்பதில் அவர்களுக்கு ஆர்வம் அதிகம். அவர்களுடன் சரிசமமாகப் பழகுபவர்கள் என்று தெரிந்தால், மிகவும் சந்தோஷப்படுவார்கள்.

சில ஆசிரியர்கள் ரொம்பவும் சரிக்குச் சமமாகப் பேச விரும்பாமலும் இருப்பதுண்டு. அந்த மாதிரி சந்தர்ப்பங்களில், பிள்ளைகளுடன் நெருங்கிப்பழகும் சந்தர்ப்பங்கள் நிறையவே அமைந்தன. அவர்கள் ஒருவருக்கொருவர் உடைகளை மாற்றிக்கொள்ளக்கூட தயங்க மாட்டார்கள். ஒரு மாணவன் நீண்ட தூர பயணத்திற்கு பணம் செலவழிக்க முடியாத நிலை. அவனுக்கே தெரியாமல், நண்பர்கள் ஆளுக்கு ஒரு தொகை போட்டு அவன் பெயரையும் கொடுத்திருந்தனர். பயணத்திற்குமுன், பயணம் பற்றியும், எங்கு தங்கப்போகிறோம், வெளியில் செல்லும்பொழுதெல்லாம் எப்படி நடந்துகொள்ள வேண்டும் என்பது பற்றியெல்லாம் அவர்களுக்கு குறிப்புகள் வழங்கப்படும்.

அதற்காக, ஆசிரியர் ஒலிபெருக்கியில் அந்த மாணவன் பெயரையும் அறிவித்தார். அவனோ, ‘நான் பணம் செலுத்தவுமில்லை, வருவதற்கும் சம்மதக்கடிதம் தரவேயில்லையே!’ என்றான். நண்பர்கள் கைதட்டி அவனுக்கு இன்ப அதிர்ச்சியைத் தந்தனர். நண்பர்கள் முன்பே ஆசிரியர்கள் மூலம் அவன் பெற்றோர் சம்மதத்தை வாங்கியிருந்தனர். அவர்களின் நட்பு எத்தனை ஆழமானது! ரயிலில் தனக்குப் பிடிக்காத விஷயங்கள், ஏன் பிடிக்காது என்பது பற்றியெல்லாம் மனம் திறந்து தங்கள் கருத்துக்களை பகிர்ந்துகொண்டனர். ஒவ்வொருவர் பைகளில் இனிப்புக்கடைகளே காணப்பட்டன. ‘சென்ட்ரல் ஸ்டேஷனில்’ தொடங்கிய இனிப்பு வினியோகம் இரவு தூங்கும் வரை ஓயவில்லை. பார்க்காத, அதுவரை ருசித்திராத இனிப்புக்களைப் பார்த்தோம். ஆசிரியர்களும், பிள்ளைகளுக்குப் பிடிக்கும் தின்பண்டங்களை வீட்டில் செய்தும், சிலவற்றை வாங்கிக்கொண்டும் போனோம்.

எப்பொழுதுமே, ஒரு பள்ளி விழாவோ, போட்டியோ நடந்தால், அதன் பொறுப்பிலுள்ள ஆசிரியர்கள் பங்கேற்கும் அனைவருக்கும் இனிப்புகளும், பரிசுப் பொருட்களும் தந்து ஊக்கப்படுத்துவதுண்டு. இரவெல்லாம் குழுக்களாக அமர்ந்துகொண்டு, எங்கள் வயதையும் ஆசிரியர் என்பதையும் மறந்து அரட்டை அடித்தோம். தினமும் அதிசய இடங்களைக் கண்டுகளித்தபின் சில மணி நேரம் ‘ஷாப்பிங்’ செல்வது வழக்கம். அப்பொழுது கண்காட்சி நேரம். விதவிதமான அரங்குகள். செருப்புகளுக்கான சிறப்புக் கடைகள் ஒருபக்கம். வரிசையாக பார்த்துக்கொண்டு வந்தோம்.

ஒரு பையன் திடீரென ‘தொலைபேசி பூத்’ அருகே சென்று திரும்பினான். பல வருடங்களுக்குமுன் நம்மிடம் கைபேசிகள் கிடையாது. நானும் சக ஆசிரியைகளும் அழகான காலணிகளைத் தேர்வு செய்துகொண்டிருந்தோம். அப்பொழுது ‘போன் பேச’ச்சென்ற மாணவன் சொன்னான் ‘மிஸ், நான் இந்தக் காலணியைத்தான் உங்களுக்கு அன்பாக வாங்கித்தர நினைத்தேன். ஆனால், என் அம்மா ஆசிரியருக்குக் காலணியை அன்பளிப்பாகத் தரக்கூடாது என்றார்கள். அதனால் சும்மா இருந்துவிட்டேன்’ என்று முடித்தான். அவனின் அபரிமித அன்பு வெளிப்பட்டதுடன், நாம் எதையெல்லாம் விரும்பி அணிகிறோம் என்பதை எவ்வளவு அறிந்து வைத்திருக்கிறான் பாருங்கள். நாம் அவர்களைத் தெரிந்து வைத்திருப்பதுபோன்று, அவர்களும் நம் நடை, உடை, பாவனையைப் புரிந்து வைத்திருக்கிறார்கள் என்பது அன்று மிகவும் மனதைத் தொட்ட நிகழ்வாக அமைந்தது.

அதுபற்றிப் பேசத்தான் அவன் ‘தொலைபேசி பூத்’திற்குச் சென்றிருந்தானாம். ஒரு ஆண்பிள்ளை, நம் பிள்ளை வயதில் இருப்பவன் நமக்குப் பிடித்தனவற்றையெல்லாம் தெரிந்து வைத்துள்ளான். அதை நினைத்துப் பார்க்கும்பொழுது, நம் அடுத்த பிள்ளையாகத்தான் பாவிக்கத் தோன்றுகிறது. ஒரு பெண் மாணவி கண்காட்சியில் நிறைய அலங்காரப் பொருட்கள் வாங்கினாள். கழுத்து மணி, வளையல்கள் மற்றும் பலவிதமான ஆடம்பரப் பொருட்களை அடுக்கிக்கொண்டிருந்தாள். திடீரென என்னிடம், ‘‘உங்களைப்போன்ற என் அத்தைக்கு இது சரியாக இருக்குமா, அழகாக இருக்குமா வைத்துப்பாருங்கள் மிஸ்’’ என்றெல்லாம் கூறி என்னையே சில பொருட்களைத் தேர்ந்தெடுக்க வைத்தாள். முழுப் பயணமும் நிறைவடைந்து, ஊருக்கு ரயிலில் திரும்பிக்கொண்டிருந்தோம். என்னருகில் வந்து சிறிய பாக்கெட் ஒன்றைத் தந்து, ‘என் சிறிய அன்புப்பரிசு’ என்றாள்.

அவள் முகம், தயவு செய்து மறுக்காதீங்க என்று சொல்வதுபோல் ெதரிந்தது. நான் அவள் அத்தைக்கென்று, எதை தேர்ந்தெடுத்துக்கொடுத்தேனோ அவைதான் அந்தப் பொருட்கள். ‘நான்தான் அத்தையா’ என்று கேட்டேன். ‘அதற்கும் மேல்’ என்றாள் அவள். கண்களில் கண்ணீரைத் துடைத்துக்கொண்டேன். பிள்ளைகள் எப்பொழுதும் ஒரு இடத்திற்குச் செல்லும்பொழுது அதிகப்படியான உற்சாகத்தில் திளைப்பார்கள். தூங்கக்கூட மாட்டார்கள். இரவெல்லாம் விளையாடிக்கொண்டும், பேசிக்கொண்டும் இருப்பார்கள்.

அவர்களைப் பொறுத்தவரை ‘நட்பு’தான் உலகம். முழுமையாக மகிழ்ச்சியை அனுபவித்துவிட்டுத் திரும்பும்பொழுது களைத்து ஓய்ந்து விடுவார்கள். அனைவரும் அமைதியாக ஓய்வெடுக்க ஆரம்பித்தனர். இப்படியெல்லாம் வாழ்க்கையில் சந்தர்ப்பங்கள் அமையுமென்றால், அது பிள்ளைகளுடன் செலவழிக்கும் சமயம் மட்டும்தான். நாங்கள் பொதுவாக பிள்ளைகளிடமிருந்து, எதையும் பெறுவதை விரும்புவதில்லை. பிள்ளைகள் மனதை காயப்படுத்தக் கூடாது என்கிற நோக்கில் பார்த்துத்தான் நடந்துகொள்வோம். பிறந்தநாள் போன்ற வேறு சந்தர்ப்பங்களில் எங்கள் நன்றியுணர்வைக் காட்டத் தவற மாட்டோம். ஆசிரியர் தினத்தன்றுகூட பெரும்பாலான பிள்ளைகள் அவர்களுக்கு இயன்ற சிறிய பொருட்களை அழகாக உறையிட்டுத் தருவார்கள் என்பதால், ‘ஒரு பூ மூலம் அன்பு செலுத்தினால் போதும்!’ என்று எடுத்துரைப்போம்.

பள்ளிகளில் நடைபெறும் ‘கார்னிவெல்’ திருவிழா மிகவும் அற்புதமாக இருக்கும். சில மாதங்களுக்கு முன்பே ஏற்பாடுகள் தொடங்கிவிடும். அரங்கம் முழுவதும் அறைகள் வடிவத்தில் மாறி விடும். ஒவ்வொரு வகுப்பிலும் விதவிதமான தின்பண்டங்கள் விற்பனைக்கு வைப்பர். பெரிய வகுப்புப் பிள்ளைகள் பீட்சா, பர்கர் போன்ற அயிட்டங்களுக்கான ஒரு பெரிய கடையை போடுவர். உடனுக்குடன் சூடுபடுத்தித்தருவர். பிள்ளைகள் அன்றைய தினம் வீட்டில் உணவு சாப்பிட மாட்டார்கள். மொத்தமாக குறிப்பிட்டத் தொகைக்கு ‘டோக்கன்’ எடுத்து விடுவர்.

வேண்டிய பொழுது வேண்டியதை விரும்பிச் சாப்பிடுவர். ‘பிரியாணி’ முதல் ‘மசாலா தோசை’ வரை கடைகளில் உண்டு. சில பெற்றோர்கள் பெரிய அளவில் வீட்டில் சமைத்து அனுப்பி வைப்பர். ஆசிரியர்களும் அவரவர் முடிந்த பொருட்களை விற்பனைக்குத் தரலாம். குறைந்த விலையில் அல்லது மொத்த விற்பனைக்கடைகளில் வாங்கி வந்து, சில்லரையில் விற்கலாம். இதன் நோக்கம், கிடைக்கும் லாபம் அல்லது அதிகப்படியான பணம். அனாதைக் குழந்தைகளுக்கும், முதியோர் இல்லங்களுக்கும் கொண்டு சேர்ப்பதுதான். பிள்ளைகளுக்கு அந்த வயதிலேயே உதவும் மனப்பான்மை வரவேண்டும் என்பதற்காக நடைமுறையில் நடத்திக்காட்டும் செயல் என்று சொல்லலாம். அதனால்தான், அவர்களை வைத்தே கணக்கிடப்படுதல் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் அனைத்து கணக்கீடுகளையும் மறுநாளே பிரார்த்தனை நேரத்தில் அறிவிப்பார்கள். உடன் ஊரிலுள்ள ஆசிரமங்களுக்கு அது பகிர்ந்து அளிக்கப்படும்.

உதவிக்கரம் நீட்டும் செயல் என்பதால் அனைவருமே எதாவது ஒரு விதத்தில் உதவி செய்ய விரும்புவர். கைவேலைப்பாடு பொருட்கள், ஊனமுற்றவர் செய்யும் கலைப்பொருட்கள் போன்றவையும் இடம் பெறும். மேனிலை படிக்கும் பிள்ளைகள், ஆசிரியர்கள், உயர்நிலை பயிலும் மாணவ-ஆசிரியர்கள் மற்றும் பிரைமரிப் பிள்ளைகள், ஆசிரியர்கள் என்று குழுக்களாகப் பிரிந்து குதூகலமாகச் செயல்படுத்துவர். ஆயிரம் பேர் சேர்ந்து நடத்தும் ஒரு திருமணம் போன்று, இதுவும் விழாக்கோலம் கொண்டு காட்சியளிக்கும். திருவிழாக்களில் காணப்படும் பலூன் கடைகள் போன்று, முகப்பிலேயே பலூன் கடைகள், ராட்டினம் சுற்றுதல் போன்ற விளையாட்டுக்களும் உண்டு. ஏதோ கற்பித்தோம்-முடித்தோம் என்றில்லாமல், அனைத்திலும் பயணிப்பதும் ஒரு ‘கலை’தான்.

தொகுப்பு: சரஸ்வதி ஸ்ரீநிவாஸன்

படங்கள்: ஜி.சிவக்குமார்

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • hongkomgggg_1111

  ஹாங்காங்கில் மனிதர்களை போல முக பாவனைகள், செயல்களை அப்படியே பிரதிபலிக்கும் ரோபோக்கள் உருவாக்கம்

 • china-gold25

  அதிர்ஷ்ட சாலிகள்!: சீன தங்க சுரங்க விபத்தில் 2000 அடி ஆழத்தில் சிக்கி தவித்த 11 பேர் 14 நாட்களுக்கு பிறகு மீட்பு..!

 • 25-01-2021

  25-01-2021 இன்றைய சிறப்பு படங்கள்

 • 24-01-2021

  24-01-2021 இன்றைய சிறப்பு படங்கள்

 • 22-01-2021

  22-01-2021 இன்றைய சிறப்பு படங்கள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்