SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

மகன் பிடித்த பூனைக்கு 3 கால்

2020-11-04@ 17:11:05

நன்றி குங்குமம் தோழி

என்ன செய்வது தோழி

அன்புடன் தோழிக்கு,

மாநில அரசுப் பணியில் இருந்து ஓய்வு பெற்றவள். அடுக்குமாடி குடியிருப்பின் கீழ்தளத்தில் கூட்டுக் குடும்பமாக வசித்து வருகிறேன். என்னுடன் அண்ணன், தம்பி, தம்பி மனைவி , தம்பியின் 2 மகன்கள் ஆகியோர் வசிக்கின்றனர். எனக்கு 1986ம் ஆண்டு பெரியோர்களால் நிச்சயிக்கப்பட்ட திருமணம் நடந்தது. அப்போது நான் வேலை ஏதும் செய்யவில்லை.  மகன் பிறந்த பிறகுதான் எனக்கு அரசுப் பணி கிடைத்தது. ‘கணவர்....’ அவரை அப்படி  சொல்வதற்கே அசிங்கமாகவும், அவமானமாகவும் இருக்கிறது. நான் ஏன் அப்படி சொல்கிறேன் என்பதை என் கடிதத்தை படிக்க, படிக்க உங்களுக்கே புரியும். அவர் விற்பனை பிரதிநிதியாக வேலை செய்தார். அதுமட்டுமல்ல பணி நிமித்தமாக அடிக்கடி வெளியூர்களுக்கும், வெளி மாநிலங்களுக்கும் பயணம் செல்வார். அதனால் மாதத்திற்கு ஒருமுறைதான் வீட்டுக்கு வருவார். அப்படித்தான் 1992ம் ஆண்டு ‘வேலை விஷயமாக போகிறேன்’ என்று சொல்லிவிட்டு சென்றவர் திரும்பி வரவில்லை.
அந்தக்காலத்தில் இப்போது உள்ளது போல் தொலைத் தொடர்பு வசதிகள் இல்லாததால் வேகமாக விசாரிக்க முடியவில்லை. எத்தனையோ முயற்சிகள் செய்தும் அவரை கண்டுபிடிக்க முடியவில்லை.

ஆனாலும் எங்கள் தேடுதலை நிறுத்தவில்லை. ஆனால் பலன்தான் கிடைக்கவில்லை. ஆண்டுகள் உருண்டோடியதுதான் மிச்சம்.  அவருக்கு என்ன ஆனதோ, ஏது ஆனதோ என்றுதான் மனம் பதறிக் கொண்டே இருந்தது. என் பெற்றோரும், உடன் பிறந்தவர்களும், ‘உன் கணவரை நினைத்து உன் உடலை கெடுத்துக் கொள்ளாதே.... இருக்கிற ஒரு மகனை நன்றாக வளர்க்க வேண்டும்.... அதைப்பற்றி யோசி.... உன் கணவரை நினைத்து பிள்ளையை கவனிக்காமல் விட்டு விடாதே... உன் கணவருக்கு ஒன்றும் ஆகியிருக்காது நன்றாக இருப்பார். கட்டாயம் உன்னை தேடி வருவார். கவலைப்படாதே. உன் பிள்ளையை கவனி’ என்று அறிவுரை சொன்னார்கள். தோழிகளும் அதையே சொன்னார்கள். அதனால் அவரை மறந்து, பிள்ளையின் நல் வாழ்க்கையே எனது நம்பிக்கை,  எதிர்காலம் என்று வாழ ஆரம்பித்தேன். அவன் விருப்பமே என் விருப்பமாக மாறியது.

இந்நிலையில் 2019ம் ஆண்டு காணாமல் போன கணவர் குறித்த தகவல் கிடைத்தது. ஆம். அவர் எங்களை விட்டு 1992ம் ஆண்டு பிரிந்து சென்ற போதே திருச்சியில் வேறு ஒரு பெண்ணை திருமணம் செய்துள்ளார். அவளுடன் குடும்பம் நடத்தி 2 குழந்தைகளும் இருக்கிறார்கள் என்று தெரிய வந்தது. அவருக்காக உருகிக் கொண்டும், அவர் நினைவில் வாழ்ந்து கொண்டிருந்த எனக்கு பெரும் அதிர்ச்சியாக இருந்தது. அவர் மீதிருந்த அன்பெல்லாம் கோபமாக மாறியது. அவர் சட்டையை பிடித்து உலுக்கி கேள்வி கேட்க வேண்டும் என்று ஆத்திரஆத்திரமாக வந்தது. ஆனால் அந்த வாய்ப்பையும் அவர் எனக்கு கொடுக்கவில்லை. ஆம். 10 ஆண்டுகளுக்கு முன்பே 2009ம் ஆண்டே நோய்வாய்ப்பட்டு இறந்து விட்டாராம்.

திருமணமும், அதனால் வந்த கணவராலும் என் வாழ்க்கை வீணாகிப்போனது. என் பிள்ளையாவது எனக்கு ஆறுதலாக இருப்பான் என்று என் மொத்த
அன்பையும் கொட்டிதான் அவனை வளர்த்தேன். அவன் பிடித்த முயலுக்கு இல்லை... இல்லை பூனைக்கு மூணே கால் என்று அடம் பிடிக்கிறான். இன்ஜினியரிங் கல்லூரியில் அவனை சேர்த்தேன். அந்த படிப்பை பாதியில் விட்டு விட்டான். கால்பந்து பயிற்சியாளருக்கு படிக்கப்போகிறேன் என்று அடம் பிடித்தான். எனக்கு வேறு வழி தெரியவில்லை. அவன் விருப்பத்தை மீற முடியவில்லை. அவன் விருப்பப்படி வெளிநாட்டுக்கு அனுப்பி வைத்தேன். அதற்காக வங்கியில் அடமானக் கடன் வாங்கினேன். அதை உணர்ந்து அவனும் கால்பந்து பயிற்சியாளர்களுக்கான பட்டப்படிப்பை சிறப்பாகவே முடித்து விட்டு வந்தான். ஆனால் அது தொடர்பான வேலைக்கு போக மறுக்கிறான்.

இப்படித் தான் 2 ஆண்டுகளுக்கு முன்பு, ஒரு பெண் பூனை குட்டியை வீட்டிற்கு கொண்டு வந்தான். நான் ‘அதெல்லாம் வேண்டாம்’ என்று எவ்வளவோ தடுத்தும் கேட்கவில்லை. ‘பாவம்மா... இருக்கட்டும்’ என்று சொல்லி வளர்க்க ஆரம்பித்தான். அதன்பிறகு தெருவில் செல்லும் குட்டி பூனைகளை எல்லாம் வீட்டிற்கு தூக்கி வந்து வளர்க்க ஆரம்பித்தான். ஒரு கட்டத்தில் பூனைகள் எண்ணிக்கை பெருகி விட்டன. அந்த பூனைகளையும் வெளியில் செல்ல அனுமதிப்பதில்லை.  வீட்டின் ஜன்னல்கள், கதவுகளை பூட்டி விடுவான். ஒருகட்டத்தில் எப்போதுமே கதவு, ஜன்னல்களை பூட்டியே வைக்க ஆரம்பித்தான். திறக்க சொன்னால் பிரச்னை செய்வான். பூனைகளை வீட்டில் வைத்துக் கொள்ளாதே , ‘எல்லாவற்றையும் எங்கேயாவது கொண்டு போய் விடு’ என்று சொல்வேன். அவனோ, ‘இடம் பார்த்துக் கொண்டு இருக்கிறேன். விரைவில் கொண்டு போகிறேன்’ என்று சொல்வான். ஆனால் எதுவும் செய்யமாட்டான்.

பூனைகளின் எண்ணிக்கை பெருகி வீட்டில் மட்டுமல்ல குடியிருப்பு முழுவதும் துர்நாற்றம் வீச ஆரம்பித்து விட்டது. பொறுக்க முடியாமல் கூட வசித்த தம்பி குடும்பமும் தனி குடித்தனம் போய் விட்டது. அந்த அடுக்குமாடியில் உள்ள மற்ற குடியிருப்பு வாசிகளும் எங்களிடம் சண்டை போட்டனர். போலீசிலும் புகார் கொடுத்து விட்டனர். அதனால் 2019ம் ஆண்டு 2 கட்டங்களாக பூனைகளை அகற்றிவிட்டோம். அன்று முதல் எங்களிடம் என் மகன் பேசுவதில்லை. நானும், குடும்பத்தாரும் சேர்ந்துதான் பூனைகளை கொண்டு போய் விட காரணம் என்று நினைக்கிறான். என்னையும் புறக்கணிக்கிறான். எவ்வளவு பேசினாலும் பதில் சொல்வதில்லை. ஒருகட்டத்தில் என்னை வீட்டுக்குள் அனுமதிக்கவில்லை. ஜன்னல் வழியாக நான் ஏதாவது பேச முயன்றால், அநாகரீகமான வார்த்தைகளை பேசி வேதனைப்படுத்துகிறான்.

அடிப்படையில் என் மகன் மிகவும் நல்லவன். நன்றாக படிப்பான். பெரியவர்களை மதித்து நடப்பான். நான் ஏதாவது சத்தமாக பேசினால் கூட மெதுவாக பேசச் சொல்வான். யாருடைய மனதையும் புண் படுத்தமாட்டான். இப்படி நல்ல குணங்கள் நிறைந்த என் மகன் பூனைகள் வெளியேற்றிய பிறகு தலைகீழாக மாறிவிட்டான். இது தொடர்பாக என் மகனிடம் பேசி நிலைமையை சரி செய்ய சொல்லி என் தம்பியிடம் கேட்டேன். அவனோ, ‘உன் மகன் அந்த வீட்டிலேயே இருக்கட்டும். அப்புறம் அவன் அப்பா போல் எங்காவது சென்று விட்டால் என்ன செய்வது’ என்று கூறுகிறான். மொத்தத்தில் என் குடும்பத்தில் உள்ளவர்கள், உன் பிரச்னையை நீதான் தீர்த்துக்கொள்ள வேண்டும் என்று கூறிவிட்டனர். மகன் கம்ப்யூட்டரில் ஏதோ வேலை செய்து அவனது தேவைகளை கவனித்துக் கொள்கிறான்.

நான் மிகவும் சிரமங்களுடன் தங்கையின் வீட்டில் தங்கியுள்ளேன். தனி ஆளாக இருந்து கொண்டு என்னால் ஒன்றும் செய்ய முடியவில்லை. மகனின் படிப்புக்காக வங்கியில் வாங்கிய கடனையும் எனது ஓய்வூதியத்தில் இருந்து அடைத்து வருகிறேன். என் மகன் பிரச்னை தொடர்பாக மனநல மருத்துவர், மனநல ஆலோசகரிடம்  போய் கேட்டால்,  நேரில் அழைத்து வரச் சொல்கிறார்கள். அவன் வெளியே வர மறுக்கிறான். என்ன செய்வது என்றே தெரியவில்லை.
இந்த இக்கட்டான சூழ்நிலையில் நான் என்ன செய்ய வேண்டும் என்று எனக்கு வழிகாட்டுங்கள். உங்களை இருகரம் கூப்பி வேண்டுகிறேன் தோழி.

இப்படிக்கு
பெயர் வெளியிட விரும்பாத வாசகி.


நட்புடன் தோழிக்கு,

கணவர் இல்லாத சூழ்நிலையில், தனியாக நின்று உங்கள் பிள்ளையை நன்றாக வளர்த்து ஆளாக்கி உள்ளீர்கள். ஆனால் இன்று உங்கள் மகன் இருக்கும் நிலையை கேட்டு மிகவும் வருத்தமாக இருக்கிறது.  திடீரென காணாமல் போன கணவர் எங்கிருக்கிறார், என்னவானார் என்று தெரியாத நிலை. இருக்கிறாரா, இல்லையா என்று தெரியாமல் பல ஆண்டுகள் தவித்திருப்பீர்கள். அவ்வளவு கஷ்டங்களுக்கு இடையில் உங்கள் பிள்ளைக்காக வாழ்ந்துள்ளீர்கள். வலியையும், விரக்தியையும் தள்ளி வைத்து விட்டு உங்கள் மகனின் எதிர்காலத்திற்காக உழைத்துள்ளீர்கள். ஒரு நல்லத் தாயாக அவனை அன்புடனும், பாசத்துடனும் வளர்த்திருக்கிறீர்கள். அவனும் செல்லமான, வசதியான குழந்தையாகவே வளர்ந்திருப்பது தெரிகிறது. அவன் விரும்பியதை எல்லாம் நிறைவேற்றி இருக்கின்றீர்கள்.

உங்கள் பொருளாதார நிலையையும் மீறி அவனை வெளிநாட்டுக்கு அனுப்பி படிக்க வைத்திருக்கிறீர்கள். எல்லாம் முடிந்தது பிள்ளைக்கு திருமணம், பேரப்பிள்ளைகள் என்று கனவுகளுடன் இருந்த நிலையில் மகனின் மாற்றம். கூடவே காணாமல் போன கணவர் குறித்த விவரமும் தெரிந்திருக்கிறது. அவர் காணாமல் போன பிறகு ஏற்பட்ட வேதனையை விட, அவரால் ஏமாற்றப்பட்டது தெரிந்த வேதனையும், வலியும் அதிகமாகத்தான் இருக்கும். நீங்கள் சொன்னதை எல்லாம் ஏன் பட்டியல் போட்டு மீண்டும் சொல்கிறேன் என்று நீங்கள் யோசிக்கலாம். இத்தனை போராட்டங்களை கடந்து இருக்கிறீர்கள். சாதித்து இருக்கிறீர்கள் என்பதை சுட்டிக் காட்டத்தான். இன்றும் உங்கள் மகனை மீட்பதற்கான போராட்டத்தில் இருக்கிறீர்கள். அதிலும் நீங்கள் வெற்றி பெறுவீர்கள்.
 ஏராளமான செல்லப்பிராணிகளை வீட்டிலேயே அடைத்து வைப்பதும், அவற்றை வெளியில் விடாமல் இருப்பதும் சரியானதல்ல.... இயல்பான செயலும் அல்ல. பூனைகளை வெளியேற்றியதில் எந்த தவறுமில்லை. செல்லப் பிராணிகளை அடைத்து வைப்பது மனிதத்தன்மையல்ல.

அவற்றை வெளியேற்றியது குறித்து உங்களுக்கு குற்ற உணர்ச்சி தேவையில்லை. அவற்றுக்கும் சுதந்திரம் தேவைதானே. அப்பா இல்லாமல் வளரும் பிள்ளை என்று மகனது எல்லா விருப்பங்களையும் தட்டாமல் நிறைவேற்றி உள்ளீர்கள். பிள்ளைகளிடம் கண்டிப்புடன் இருப்பதில் தவறில்லை. அவர்களின் எல்லா ஆசைகளையும் நிறைவேற்றியாக வேண்டும் என்பதும் சரியானதல்ல. சொல்லப்போனால் அப்பா இல்லாத பிள்ளையிடம் கூடுதல் கவனத்துடனும், எச்சரிக்கையுடனும் இருப்பது கட்டாயம். மகனின் பிரச்னைக்காக மனநல மருத்துவரை அணுகிய உங்கள் முயற்சி சரியானது. ஆனால் அவரை மனநல மருத்துவரிடம்  நேரில் அழைத்துச் செல்லாமல், அவரிடம் பேச வைக்காமல் தீர்வு காண்பது சிரமம்.

எனவே உங்கள் மகனிடம் கனிவாகவும், அன்பாகவும் பேசி வெளியில் வரவழைக்க முயற்சி செய்யுங்கள். ‘எனக்கு தெரிந்தவர்கள் வீட்டில், நிறைய பூனைகள் இருக்கிறது. அவர்களிடம் பூனைகளை தருவார்களா கேட்டு பார்க்கலாம் வா’ என்று சொல்லி மகனை டாக்டரிடம் அழைத்துச் செல்லுங்கள். அதற்கு முன்பு சம்பந்தப்பட்ட மனநல மருத்துவரிடம் இதுகுறித்து பேசி விடுங்கள். உங்களால் அப்படி செய்ய முடியவில்லை என்றால், உங்கள் மகனின் நெருங்கிய நண்பர்கள் மூலமாக முயற்சி செய்யலாம். அவர்களை உங்கள் மகனிடம் பேச வையுங்கள். நண்பர்களால் உங்கள் மகனின் மனதை மாற்ற முடியும் என்று நினைக்கிறேன்.
உங்கள் மகனின் செயல்களுக்கு, கவலைகளுக்கு காரணங்கள் இருக்கலாம். ஆனால் அவற்றை நியாயப்படுத்த முடியாது. ஆனால் அவர் பிரச்னைகள் என்று நினைப்பவை குறித்து மற்றவர்களிடம் பேசியாக வேண்டும். அவரது குழந்தைப்பருவம் குறித்தும் தெரிந்தாக வேண்டும். எனவே மனநல மருத்துவரிடம் கட்டாயம் அழைத்துச் செல்லதான் வேண்டும்.

உங்கள் மகனிடம் எதை பேசினால், எதை சொன்னால், எதை செய்தால் அவர் ‘சரி’ என்று சொல்வார் என்பது மற்றவர்களை விட தாயான உங்களுக்குதான் அதிகம் தெரியும். அதை செய்யுங்கள். அதை செய்துதான் ஆக வேண்டும். அவரை வெளியில் வரவழைக்க பொய்தான் சொல்ல வேண்டும் என்றால்... அது தவறில்லை. கூடவே அப்புறம் பார்த்துக் கொள்ளலாம், எல்லாம் தன்னால் சரியாகும் என்று பிரச்னையை தள்ளிப் போடுவது சரியானதல்ல. முயற்சி செய்யுங்கள், அதையும் விரைவாக செய்யுங்கள் கட்டாயம் தீர்வு கிடைக்கும். மீண்டும் சொல்கிறேன் எத்தனையோ பிரச்னைகளில் இருந்து மீண்ட நீங்கள்
இதிலிருந்தும் கட்டாயம் மீளுவீர்கள்.

தொகுப்பு: ஜெயா பிள்ளை

என்ன செய்வது தோழி
பகுதிக்கான கேள்விகளை எழுதி
அனுப்ப வேண்டிய முகவரி

‘என்ன செய்வது தோழி?’
குங்குமம் தோழி,
தபால் பெட்டி எண்: 2924
எண்: 229, கச்சேரி சாலை,
மயிலாப்பூர், சென்னை - 600 004


வாசகிகள் கவனத்துக்கு,

பிரச்னைகள் குறித்து எழுதும் போது பிரச்னைகளுடன் முழு விவரங்களையும் குறிப்பிடுங்கள்.  சம்பவங்களை, காரணங்களை தெளிவாக... ஏன் விரிவாக கூட எழுதுங்கள். அப்போதுதான் தீர்வு சொல்பவர்களுக்கு வசதியாக இருக்கும். பெயர், முகவரி போன்றவற்றைதான் தவிர்க்க சொன்னோம். விவரங்களை அல்ல...

தொகுப்பு: அன்னம் அரசு

படங்கள்: ஜி.சிவக்குமார்

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • ramukudi

  குடியரசு தின விழாவில் பாரம்பரியத்தை பறைசாற்றும் கண்கவர் நிகழ்ச்சிகள் :மாமல்லபுரம் கடற்கரை கோவில், ராமர் கோவில் அலங்கார ஊர்திகள் பங்கேற்பு!!

 • autoooo_maaa

  சாலைகளில் படுத்து மறியல்... மாட்டு வண்டி, டிராக்டர்கள், ஆட்டோக்களில் பேரணி : விவசாயிகளுக்கு ஆதரவாக தமிழர்கள் ஆவேசப் போராட்டம்!!

 • vilaaaa_neeemm

  அலங்கார ஊர்திகளின் அணிவகுப்பு, சாகசங்கள், பாரம்பரிய நடனங்களோடு குடியரசு தின விழா கோலாகலம் : விழாக்கோலம் பூண்டது மெரினா!!

 • 26-01-2021

  26-01-2021 இன்றைய சிறப்பு படங்கள்

 • sun-dong25

  அற்புதங்களை கண்டு ரசிக்க 2 கண்கள் போதாது!: விஞ்ஞானிகளால் கூட நம்ப முடியாத சன் டூங் குகையின் ஆச்சரிய படங்கள்..!!

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்