SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

கொரோனாவால் பிரபலமாகும் கேரவன் பயணங்கள்!

2020-11-04@ 17:06:17

நன்றி குங்குமம் தோழி

கொரோனா லாக்டவுனால் ஆறேழு மாதங்களுக்கு மேலாக வீட்டிலேயே அடைந்துகிடக்கும் மக்கள், மன அழுத்தத்தில் உள்ளனர். தற்போது படிப்படியாக தளர்வுகள் அறிவிக்கப்பட்டு வரும் நிலையில் வீட்டை விட்டு வெளியேற  வேண்டும் என்ற எண்ணமும் அதிகரித்துள்ளது. சுற்றுலா செல்ல வேண்டும் என்ற ஆர்வமிருந்தாலும், மக்கள் அதிகம் கூடும் இடங்களாக இல்லாமல், ரயில், விமானப் பயணங்களையும் தவிர்த்துப் பாதுகாப்பாகப் பயணிக்க வேண்டும் என்பதிலும் மக்கள் திடமாகவே உள்ளனர். அதன் ஒரு தீர்வாக, கேரவன் விடுமுறைகள் பிரபலமடைந்து வருகின்றன. கூட்டம் குறைவாக இருக்கும் மலைப் பிரதேசங்களிலும், காடுகளுக்கு நடுவிலும், ஆரோக்கியமான, பாதுகாப்பான  பயணங்களுக்கு கேரவன்கள் பயன்படுகின்றன. வெளிநாடுகளில் பிரபலமான இந்த வண்டிகள் இப்போது இந்தியாவிலும், மெதுவாக வளர்ந்து வருகிறது.

பெங்களூரை சேர்ந்த ‘ட்ரிப்பி வீல்ஸ்’ என்ற கேரவன் சுற்றுலா நிறுவனம், இந்த நோய்த் தொற்று காலத்திலும் இயங்கி வருகின்றனர். இந்த கேரவன்களில் படுக்கை வசதி மட்டுமில்லாமல் நமக்கு விரும்பிய உணவை சமைத்தும் கொள்ளலாம். நெரிசலைத் தவிர்த்து, மக்களின் தொடர்பையும் குறைத்து, குடும்பத்துடன் பாதுகாப்பாகப் பயணம் செய்யமுடியும் என்பதால், இந்த கேரவன் பயணங்கள் இந்த பேரிடர் காலத்தில் மக்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளன.
வெளிநாடுகளில் இருப்பது போல, இங்கு கேரவன்கள் எளிதாக இயங்க சில தடைகள் இருந்தாலும், இரவில் கேரவன்களை நிறுத்தி ஓய்வெடுக்க, பல தங்கும் விடுதிகளுடன் இந்த நிறுவனங்கள் ஒப்பந்தம் செய்துள்ளனர். இதனால் இரவில் எந்த பயமுமின்றி பாதுகாப்பாக வண்டிக்குள் ஓய்வெடுக்க முடியும். வெறும் விடுமுறைக்கால பயணங்களுக்கு மட்டும் இல்லாமல், மருத்துவ தேவைக்கான பயணங்களுக்கும், வயதானவர்களுடன் தொலைதூர பயணங்கள் செல்லவும் கூட இந்த கேரவன்கள் பயன்படுகின்றன.  

சென்னையில், ரிலாக்ஸ் கேரவன்கள் நிறுவனத்தை இயக்கி வரும் ‘கேரவன் அருணாச்சலம்’ கூறும் போது, “கொரோனாவால் எங்கள் வியாபாரம் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது உண்மைதான். இதிலிருந்து மீண்டு வர ஒரு வருடம் வரை ஆகலாம். பொதுவாகவே சாதாரண வண்டிகளை விட கேரவன்களை பராமரிப்பது சிரமம்தான். எங்களுடைய ரிலாக்ஸ் கேரவன்களில், இருக்கைகள், படுக்கைகள், கழிவறை வசதி, டி.வி, ஏ.சி எனச் சகல வசதிகளும் உள்ளன. இவற்றை ஒவ்வொரு பயணத்திற்குப் பின் சுத்தம் செய்து பராமரிக்கவே பல மணி நேரம் ஆகும் என்றார்.”கொரோனா காலத்தில் பாதுகாப்பாகப் பயணிக்க எடுத்துள்ள நடவடிக்கைகள், “ஒவ்வொரு பயணத்திற்கு முன்பும் பின்பும் சூடான நீராவிக் கொண்டு வண்டி சுத்தம் செய்யப்படுகிறது. சுற்றுலாவிற்கு பின், இரண்டு நாட்கள் வண்டிகள் வாடகைக்கு அனுப்பப்படாது. இந்த வைரஸ் லெதர், மெட்டல் போன்ற பொருட்கள் மீது 24 மணி நேரம் அழியாமல் இருக்கும் என்பதால், நாங்கள் 48 மணி நேரம் வரை, அதைப் பயன்படுத்தாமல் சுத்தம் செய்கிறோம்.

இது தவிர கேரவனுக்குள் சானிடைசர், கிருமி நாசினி, முகமூடிகளும் வைக்கப்பட்டுள்ளன. ஓட்டுநருக்கும் வாடிக்கையாளர்களுக்கும் தொடர்பு இல்லாதபடி கேரவன்கள் வடிவமைக்கப்பட்டுள்ளன. இதன் மூலம் எங்களது ஊழியரின் பாதுகாப்பும் உறுதி செய்யப்படுகிறது” என்கிறார். ‘‘டீசல், சுங்கச்சாவடி கட்டணங்கள் அதிகரிப்பால், சுற்றுலாத் துறைக்கு பெரிய அடிதான். இப்போது அத்தியாவசிய தேவைகளுக்காக மட்டுமே மக்கள் பயணிக்கின்றனர். இந்த தொற்று காலத்தில், குடும்பத்தினரை அழைத்து வரவும், திருமணம் போன்ற முக்கிய நிகழ்ச்சிக்காக, வேறு வழியில்லாமல் நிர்ப்பந்தத்தில் கேரவன்களை வாடகைக்கு எடுத்துச் சென்ற வாடிக்கையாளர்கள்தான் அதிகம். சுற்றுலாவிற்காக யாரும் முன்வரவில்லை. ஆனால், தற்போது தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளதால், சில வாடிக்கையாளர்கள் சுற்றுலாவிற்காகவும் எங்களை அணுக ஆரம்பித்துள்ளனர். முதுமலை காடு போன்று, மக்கள் அதிகம் கூடாத இடங்களுக்குச் செல்லவே விரும்புகின்றனர் என்றார்’’.

இந்தியாவில் கேரவன் சுற்றுலாத் துறை வளர்ச்சிக்கு அரசாங்கத்தின் உதவியும் தேவை என்கிறார் அருணாச்சலம், “இங்கு ரோட் ட்ரிப் செல்வதை ஊக்குவிக்க, சாலைகளில் அடிப்படை வசதிகள் உருவாக்கப்பட வேண்டும். வெளிநாடுகளில் 200 கிமீ இடைவெளிகளில் கேரவன் நிலையங்கள் இருக்கும். அதில் கழிவறை தண்ணீரை மாற்றவும், பேட்டரிகளை சார்ஜ் செய்யும் வசதிகளும் இருக்கும். அடுத்ததாக, கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரை நாடு முழுவதும் ஒரேமாதிரியான வரிகள் விதிக்கப்பட வேண்டும். ஒவ்வொரு மாநிலத்திலும் ஒவ்வொரு விதமான வரிகள் இருக்கும் போது பல ஆயிரங்கள் செலவாகும். ஆனால், இன்னும் பத்து வருடங்களில், நடுத்தர மக்களும் கேரவன் விடுமுறை செல்லும்படி சட்டங்கள் மாறும் என்ற நம்பிக்கை உள்ளது” என்றார்.

‘‘ஒருவரது வீட்டிலிருக்கும் அனைத்து சேவையையும் கேரவனில் வழங்குவதுதான் இதன் சிறப்பம்சம். மேலும், இனி வீட்டிலிருந்தே வேலை செய்யும் போக்கும் அதிகரித்து வரும் நிலையில், கேரவன்களில் பயணித்தபடி, வேலையும் செய்யலாம் சுற்றுலாவும் போகலாம் என்ற நடைமுறை உருவாகும் என இந்நிறுவனங்கள் நம்புகின்றன.  கேரவனில் பயணம் செய்வதன் மூலம், நமக்குப் பிடித்த வழியைத் தேர்வு செய்து, பிடித்த இடங்களை ரசித்து, யாரும் அறியாத, யாரும் செல்லாத இடங்களுக்கும் சென்று மகிழலாம்’’ என்றார் அருணாச்சலம்.

தொகுப்பு: ஸ்வேதா கண்ணன்

படங்கள்: ஜி.சிவக்குமார்

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • 15-05-2021

  15-05-2021 இன்றைய சிறப்பு படங்கள்

 • 13-05-2021

  13-05-2021 இன்றைய சிறப்பு படங்கள்

 • 11-05-2021

  11-05-2021 இன்றைய சிறப்பு படங்கள்

 • 09-05-2021

  09-05-2021 இன்றைய சிறப்பு படங்கள்

 • 07-05-2021

  07-05-2021 இன்றைய சிறப்பு படங்கள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்