SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

கற்பித்தல் என்னும் கலை

2020-11-02@ 17:24:24

நன்றி குங்குமம் தோழி

நம் இந்திய கலாச்சாரம் உலகம் முழுவதும் போற்றப்படுவது, இந்திய மாணவர்கள் உலகத்தின் எந்த மூலை முடுக்குகளில் வசித்தாலும், படித்த நாட்களையும், சூழலையும் மறக்க மாட்டார்கள். அங்கும் நட்பு என்னும் வட்டம் உருவாக்கி, படித்த நாட்களில் அடைந்த மகிழ்ச்சியை மீண்டும் பெறவே முயற்சிக்கிறார்கள். அப்படியாக, சில இந்திய மாணவர்கள் ஒன்று கூடி, ஏரியில் நடைபெற்ற பட்டாசு விடும் நிகழ்ச்சியில் பங்கு கொண்டதை அமெரிக்காவில் காண நேர்ந்தது. இதன்மூலம் அவர்களின் நட்பு அசாத்தியமானது என்பது புலப்படுகிறது. அது திடீரென ஏற்பட்ட நட்பு கிடையாது. பள்ளி நாட்களில் ஏற்பட்ட நட்பு என்பது மிகவும் கலங்க வைத்தது. திருவள்ளுவர் கூறியுள்ள நட்பு என்பது கண்கூடாகத் தெரிய வருகிறது. படிக்கும் காலத்தில் சிறுசிறு விஷயங்களில் அவர்களுக்கு ஏற்படும் பிரச்னைகளில், நாமும் தலையிட்டு அவற்றைத் தீர்ப்பதில் உதவியிருக்கிறோம் என்பதும் மகிழ்ச்சி அளிக்கிறது.

ஒவ்வொரு முன்னேற்றப்பாதையிலும், உதவ முடியும் என்பதில் கற்பிப்பவர் பாக்கியசாலி என்றுதான் கூறவேண்டும். அதிலும் பள்ளி வாழ்க்கையில் ஒரு மாணவன் பதினான்கு ஆண்டுகள் ஒரே ஆசிரியரைப் பார்ப்பதும், ஆசிரியர் பதினான்கு ஆண்டுகளாக ஒரு மாணவனின் அடுத்தடுத்த பரிணாம வளர்ச்சியைப் பார்த்துக்கொண்டு வருவதும் ஒரு குடும்ப உறவைப் போன்று ஆகிவிடுகிறது. இடையிடையே எத்தனையோ நல்ல நிகழ்வுகள், துயர சம்பவங்கள், மனதை உருக்கும் காட்சிகள் என வந்துேபாய்க்கொண்டுதான் இருக்கும். சில விஷயங்கள் பொதுவாக பார்க்கப்பட்டு விலகி விடும். ஒரு சில நிகழ்வுகள் மறக்க முடியாமல் மனதில் இருந்துகொண்டேயிருக்கும்.

பல நிகழ்வுகள் நம்மை இளம் வயதிற்குக் கொண்டு செல்லும். வினோதமான பழக்க வழக்கங்களைக் கொண்டவர்களையும், திருத்துவதற்கு ஒரு ஆயுதமாக நாமும் இருந்திருக்கிறோம் என்பதுதான் உண்மை. சர்க்கஸ் போன்று வித்தை காட்டுபவர்கள் அல்லது அதிசய நிகழ்வுகளை நடத்துபவர்கள் இரும்புப்பொருட்கள், ஆணி போன்றவற்றை விழுங்குவதெல்லாம் பார்த்திருக்கிறோம். ஆனால், அமிர்தாஞ்சன் சாப்பிட்டவனை முதலில் பார்த்தேன். பெற்றோருக்கு பல வருடங்கள் கழித்துப் பிறந்த ஒரே பிள்ளை. அதனால் மிகவும் செல்லமாக வளர்க்கப்பட்டான். அவன் பிறந்த சில வருடங்களில், அப்பா வடஇந்திய மூலைக்கு வேலை நிமித்தம் சென்றுவிட்டார். அம்மாவால், மகிழ்ச்சியுடன் அவன் படிப்பிலோ, முன்னேற்றத்திலோ கவனம் செலுத்த இயலவில்லை. காரணம், அவர் மிகவும் ரத்த அழுத்தத்தினால் பாதிக்கப்பட்டிருந்தார்.

உடல் சோர்வினால் நடமாடுவதுகூடக் கடினமாக இருந்தது. அவனுக்கென்று வீட்டில் யாரும் இல்லாததாகக் கருதியிருக்கிறான். படிப்பிலும் மிகவும் நிதானமாகக் காணப்பட்டான். சிரமப்பட்டு அவன் தாய் ஒருமுறை ஆசிரியர்களைச் சந்திக்க வந்தார். அவரால் நடக்கக்கூட முடியவில்லை. தனக்கு எப்பொழுதும் பள்ளிக்கு வந்து ஆசிரியர்களைச் சந்திப்பது சிரமம் என்றும் தன் மகனை நன்கு பார்த்துக்கொள்ளும்படியும் கூறினார். பழைய ஆசிரியர்கள் இருவரிடம் தனிப்பட்ட முறையில் குடும்பப் பிரச்னைகளை பகிர்ந்துகொண்டார். அப்பொழுதுதான் எங்களுக்குத் தெரியவந்தது அவன் அடிக்கடி அமிர்தாஞ்சனை உட்கொள்கிறானென்று. ஐயோ, பாவம்! முடியாமல் தவிக்கும் தாயால் எப்படித்தான் இவனை வழிக்குக் கொண்டுவருவதென்று புரியவில்லை. அன்று முதல் அவனை நண்பனாகப் பார்த்து அவன் குறைகளைக் கேட்க ஆரம்பித்தோம். அப்பொழுது அவன் ‘பேண்ட்’ பையில் பெரியதொரு பொருள் தெரிவதைக்கண்டு எடுத்துத்தரச் சொன்னோம்.

பார்த்தால், தலைவலி மருந்து. புது டப்பா. அவனுக்கு உதவுவதாக மனம் விட்டுப் பேசியதில் அவன் அம்மா சொன்னது அனைத்தும் உண்மை எனத் தெரிந்தது. அன்பாகப் பேசியதில், அவன் மனம் ஆறுதல் அடைந்து அவனும் நட்புடன் பேச ஆரம்பித்தான். சிறு வயதில் தெரியாமல் வாயில் சிறிது போட்டுக்கொண்டானாம். அந்த ருசி பிடித்துப்போகவே அடிக்கடி சாப்பிட வைத்துள்ளதாம். எப்பொழுதெல்லாம் சாப்பிட நினைக்கிறானோ, அப்பொழுதெல்லாம் சிறிய மிட்டாய்களையும், நாட்டு மருந்துப் பொருட்களான அந்த வாசனை கொண்ட கிராம்பு போன்ற பொருட்களை பயன்படுத்தி பழக்கத்தை மாத்தச் சொன்னோம். ரொம்ப நாட்கள் சிரமப்பட்டு அவனை முழுவதும் மாற்றினோம். இந்தப் பழக்கத்தை விட்டுவிட்டால், தேர்வில் வெற்றி பெற நிறைய சொல்லித்தந்து வெற்றியாளனாக மாற்றிடுவோம் என்றெல்லாம் உற்சாகப்படுத்தி கவனத்தை மாற்றினோம். அவன் தாய் மிகவும் சந்தோஷப்பட்டார். கல்லூரி முடித்தபிறகு நேரில் வந்து வாழ்த்துப் பெற்றான்.

தான் நடந்துகொண்டதை நினைத்து மிகவும் வெட்கப்படுவதாகச் சொன்னான். எப்படியோ அவன் ஒரு நல்ல இளைஞனாக அவதாரம் எடுத்ததில், அவன் தாய் எப்படி பூரித்தாரோ அதே அளவு எங்களுக்கும் மகிழ்ச்சி. விளையாடவோ, பேச்சுத்துணைக்கோ ஆளில்லாமல் குழந்தைப் பருவத்தில் சிரமப்பட்டிருக்கிறான். தனக்கு எதில் மகிழ்ச்சி கிடைக்கிறதோ அதைச் செய்திருக்கிறான். காலம் கனிந்து, விவரம் புரிந்தவுடன் தன் வினோத பழக்கத்தை நினைத்து தானே வெட்கிப்போகிறான். இதுதான் புரியாத பருவம் என்பது. செடி வைத்தால் போதாது. மண்ணைக் கிளறிவிட்டு, உரம் போட்டு பூச்சிகளிலிருந்து காப்பாற்றினால்தான் அது தலை தூக்கி நிமிர்ந்து, பூவோ, காயோ பலன் தரும். அத்தகைய சேவையை வீட்டில் பெற்றோரும், வெளியில் மற்றோரும் தருதல் அவசியம். வேண்டியதை சாப்பிடத்தந்தால் போதாது. நல்ல பழக்கங்களை போதித்து, தீய அல்லது வேண்டாத பழக்கங்களிலிருந்து காப்பாற்றி, முன்னேற்றத்திற்கு உதவி முயற்சி செய்தல் நமது கடமையாகும். அவன் நல்லவனாகவே இருந்ததால், வினோதமான செயல் செய்வதில் மட்டும் அவன் ஈடுபட்டிருந்திருக்கிறான்.

மற்றவர்களுக்கு எந்த தொல்லையும் தரவில்லை. வெளியில் யாருக்கும் இதுபற்றித் தெரியவுமில்லை. வளரும் சூழல் ஏதேனும் பாதிப்பை ஏற்படுத்தினால், அவர்கள் பழகும் விதம் நடத்தையில் மாறுதல்கள் ஏற்படக் காரணமாகிறது. ஒருசில பிள்ளைகள் வாய் பேசுவார்கள். ‘ஜோக்’ அடிப்பதாக நினைத்து, புரியாமல் பேசி வம்புகளில் மாட்டிக்கொள்வதுமுண்டு. இத்தகைய சம்பவங்கள் நிறைய தமிழ் வகுப்புகளில் நடைபெறுவதுண்டு. தாய் மொழியில் பேசி கற்பிக்கும்பொழுது, சீக்கிரம் புரிந்துகொள்வதால் உடன் ஏதேனும் கேள்விகளும் கேட்பதுண்டு. கோவலன் மாதவிக்காக, சிலம்பைக்கூட விற்றான் என்று பாடலில் வருவதை விளக்கினால்கூட, ஒரு பெண்ணிற்காக ஏன் விற்கத் துணிந்தான் என்று கேள்வி கேட்டு துளைப்பார்கள்.

விடை நமக்குத் தெரிந்தும், தெரியாததுபோல் நடந்துகொள்ள வேண்டும் அல்லது ஏதாவது சொல்லி சமாளிக்க வேண்டும். பதில் கூறாமல் இருக்க முடியாது. வளர்ந்துவிட்ட பிள்ளைகளுக்கு எல்லா விஷயமும் புரியும். ஆனால் நாம் என்ன சொல்வோம் என்றுகூட எதிர்பார்ப்பார்கள். நன்கு படிக்கும் மாணவர்களிடம், படிக்காத பிள்ளைகளுக்கு சிறிது உதவுங்கள் என்று சொல்லிவிட்டால் போதும். அவர்கள் வேறு நிலைவரை வந்துவிடுவார்கள். ‘‘ஓ தேர்வில்தானே! அவன் என் அருகில் உட்கார மாட்டான் மிஸ், அவன் நம்பர் வேறு வரிசையில் வரும்’’ என்றான் ஒரு சுட்டிப்பையன். ஓய்வு நேரங்களில் சிறிது படிப்பதற்கு உதவினால் போதும் என்று விளக்க வேண்டியிருந்தது. ஒரு தமிழாசிரியை பாரதியார் பாடல் ஒன்றை வகுப்பில் விளக்கிக்கொண்டிருந்தார். பாரதியார் பாடல்கள் என்றாலே எழுச்சிமிக்கவை.

ஆசிரியருக்கும் அப்பாடல் உற்சாகத்தை அதிகரித்தது. படிக்காதவர், கல்லாதவர் என்று யாருமே இருக்கக் கூடாது. கல்வி கேள்விகளில் அனைவரும் சிறந்து விளங்க வேண்டும். ‘‘தேமதுரத் தமிழ் ஓசை உலகமெல்லாம் பரவும் வகை செய்தல் வேண்டும்’’ என்றெல்லாம் அவர் உணர்ச்சியோடு விளக்கி முடித்தார். பாடலையும் பலமுறை சொல்ல வைத்து மனப்பாடம் செய்வித்தார். ஒவ்வொருவருக்கும் படிக்கும் திறனில் பயிற்சி அளித்தார். பின் ஏக்கத்துடன், ‘‘இந்த காலக்கட்டத்தில் நீங்கள் அனைவரும் இவற்றைப் பின்பற்ற வேண்டும். அனைவரும் நூற்றுக்கு நூறு எடுத்து வெற்றி பெற வேண்டும். அப்படி எடுத்தால்தான் எங்களுக்கு மகிழ்ச்சி. பாரதி வார்த்தைகள் நனவாகட்டும். இதெல்லாம் உங்களால் சாத்தியப்படுமா? எப்பொழுது நடக்கும்?’’ எனக்கேட்டார். ஒரு மாணவன் உடன் எழுந்து, ‘‘மிஸ் கூடிய சீக்கிரம் நடக்கும். பார்த்து ஆச்சரியப்படப் போறீங்க’’ என்றான். ஆசிரியருக்கு ஒரே ஆச்சரியம்.

இவ்வளவு பொறுப்புணர்ச்சி தந்து பதில் கூறுகிறானே, நாம் இன்று நடத்திய விதம் அவர்களுக்கு ரொம்ப மனதைத் தொட்டுவிட்டதோ, என்றெல்லாம் யோசித்து முடிப்பதற்குள் அவன் தொடர்ந்தான். ‘மிஸ் பிப்ரவரி முப்பதாம் தேதி எல்லாம் நடக்கும்’  என்றான். அவன் மூளை எவ்வளவு யோசித்து, நடக்கப் போகாத ஒன்றை, ஆசிரியருக்கு ஆறுதல் அளிப்பதுபோல் கூறியிருக்கிறான். எங்களால் அப்படி சாதிக்க முடியாது என்று கூற நினைத்தவன், மனதில் யோசித்து ஆசிரியருக்கு ஆறுதல் தரும் விதத்தில் வார்த்தையை மாற்றிப் பேசியிருக்கிறான். சரியான சமயத்தில் அவன் புத்திக் கூர்மை எப்படி சிந்திக்க வைத்துள்ளது பாருங்கள்! பிப்ரவரியில் முப்பதாம் தேதி என்கிற நடக்க முடியாத உண்மையைக்கூறி, தாங்கள் அன்று சாதிப்பதாகவும் கூறியிருக்கிறான். கள்ளங்கபடமற்ற இத்தகைய பதில்களுக்கு நாம் கோபப்படவா முடியும்? அந்தந்த வயதிற்கேற்ற குறும்புத்தனங்கள்தான். பாடங்களை வரிசையில் நின்று, திருத்திக்கொள்வது அவர்களின் வழக்கம்.

அனைவரும் கும்பலாக வந்துவிட்டால், கட்டுப்பாடின்றிப்போகும் என்பதற்காக ஒவ்வொரு பெஞ்சிலுள்ள மாணவர்களையும், வரிசை வாரியாக வரச்சொல்லி பிழைகளை திருத்துவது ஆசிரியரின் வழக்கம். அப்பொழுது ஆசிரியர் யாருக்கு என்ன பிழை சொல்கிறார்களோ, அதைப்பின்னாலிருக்கும் மாணவர்கள் கூர்மையாக கவனித்து, தங்கள் நோட்டிலுள்ள பிழைகளை வெளிக்குத் தெரியாமல் அழித்துச் சரி செய்துகொள்வார்கள். ஏனெனில் எல்லா விடைகளும் சரியாக இருந்துவிட்டால் ஆசிரியர் ‘குட்’ போடுவார். ‘ஸ்டார்’ படம் ஒட்டுவார். அந்த நற்பெயரை எடுப்பதற்காக அப்படியெல்லாம் செய்வார்கள். அவர்கள் எப்படியெல்லாம் செய்வார்கள் என்பது ஆசிரியருக்கும் நன்கு தெரியும். இருப்பினும் சில விஷயங்களை அலச ஆரம்பித்தால், ஆசிரியருக்கும் பிள்ளைகளுக்குமான புனித உறவில் விரிசல்கள் ஏற்படக் காரணமாகிவிடும். எப்பொழுது, எந்த விதத்தில், என்ன சொல்லி திருத்தலாமோ அதன்படி திருத்துபவர்கள் ஆசிரியர்கள். அதனால்தான் அவர்களுக்குப் பிள்ளைகளின் மனநிலை குறித்தும் தெரிந்துகொள்ள வேண்டிய அவசியங்கள் பயிற்சிகளில் இடம் பெற்றுள்ளன.

‘‘கண்களுக்கு அழகு எனப்படுவது, பிற உயிர்களிடத்தில் அன்பு செலுத்தும் கருணைப்பார்வை, கைகளின் அழகு என்பது பிறரிடம் யாசிக்காமல் இருத்தல், ஈகையுடன் கொடுத்தல், கால்களுக்கு அழகு என்பது பிறரிடம் நடந்துசென்று உதவி கேட்காமலிருத்தல்’’ என்றெல்லாம் ஆசிரியர் ஒரு பாடலின் கருத்தை மாணவர்களுக்கு விளக்கினார். பாடம் முடித்தபிறகு அவர்கள் எந்த அளவு புரிந்துகொண்டிருக்கிறார்கள் என்பதை பரிசோதித்துப் பார்ப்பதற்காக இடையிடையே கேள்விகள் கேட்டு அதன்மூலம் திறனை வளர்க்க முயற்சிப்போம். அப்பொழுது அந்த ஆசிரியரும், கண்கள், கை, கால் போன்ற ஒவ்வொரு உறுப்பின் அழகைப்பற்றி கேட்டுக்கொண்டிருந்தார். அப்பொழுது ஒரு மாணவன், ‘கால்களால் நடந்துசென்று பிறர் உதவி கேட்கக் கூடாதென்றால், தொலைபேசி மூலம் உதவி கேட்கலாமா?’ என்று நடுவில் ஒரு கேள்வியை வைத்தான். வகுப்பு முழுவதும் சிரிப்பொலி, உண்மையில் அவன் நன்கு புரிந்துகொண்டான் என்பது நமக்குப் புரிந்தது. பிறரின் கவனத்தை ஈர்ப்பதற்காக அவன் குறுக்குக் கேள்வி கேட்டான். இது ஆசிரியருக்கும் நன்கு புரியும்.

சில சமயங்களில் தன்னையும் புத்திசாலியாகக் காட்ட நினைத்து, பிள்ளைகள் சிரிக்க வைப்பார்கள். அதுதான் பெரிய குடும்பம் என்று சொன்னேன். சிறிய குடும்பத்தில் பேசப் பேச பிரச்னைகள், மனஸ்தாபங்கள் ஏற்பட வாய்ப்புண்டு. ஆனால் ஆயிரக்கணக்கான பிள்ளைகள், நூற்றுக்கணக்கான ஆசிரியர் மற்றும் தொழில் புரிவோர் மத்தியில் சமூகத்தில் அனுசரித்து நடக்கவும், சிரிக்கவும் கற்கிறோம்.

தொகுப்பு: சரஸ்வதி ஸ்ரீநிவாஸன்

படங்கள்: ஜி.சிவக்குமார்

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • alangaa_jaallii

  அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டியை முதல்வர் பழனிசாமி, துணை முதல்வர் ஓ பன்னீர் செல்வம் கொடியசைத்து தொடங்கி வைத்தனர்

 • stalinnnraa

  மாட்டு வண்டியை ஒட்டிய மு.க.ஸ்டாலின்... மக்களுடன் அமர்ந்து உணவு சாப்பிட்ட முதல்வர் பழனிசாமி, ராகுல் காந்தி!!

 • 16-01-2021

  16-01-2021 இன்றைய சிறப்பு படங்கள்

 • 14-01-2021

  14-01-2021 இன்றைய சிறப்பு படங்கள்

 • master13

  9 மாதங்களுக்கு பிறகு தியேட்டரில் ‘மாஸ்டர்’ ரிலீஸ்!: விஜய் ரசிகர்கள் கொண்டாட்டம்..புகைப்படங்கள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்