SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

நவராத்திரி டிப்ஸ்

2020-10-27@ 17:20:34

நன்றி குங்குமம் தோழி

கொலுப் படிகள் வைப்பது எப்படி?

நவ என்றால் ஒன்பது என்று அர்த்தம். ஒன்பது நாள் கொண்டாடப்படும் இந்த பண்டிகையின் போது வீட்டில் கொலு வைத்து அம்பிகையை வழிப்படுவது வழக்கம். பொதுவாக 3, 5, 7, 9 என படிகள் வைக்கலாம். படிப்படியாக மனிதனின் வாழ்க்கை உயர்ந்தது என்றும், உலகில் உயிரினங்கள் எப்படி படிப்படியாக தோன்றியது என்றும், மற்றொரு விளக்கமாக மனிதன் படிப்படியாக கடந்து வாழ்க்கையில் முன்னேற வேண்டும் என்பதை உணர்த்தும் விதமாக இந்த கொலுப் படிகள் அமைகின்றன. ஒவ்வொரு படியிலும் குறிப்பிட்ட பொம்மைகள் வைக்க வேண்டும் என்பது ஐதீகம். அதன்படி எந்த படியில் என்ன பொம்மைகள் வைக்கலாம்னு தெரிந்துகொள்ளலாம்.

முதல் படி: மரம், செடி, கொடிகள்.   
 
இரண்டாம் படி: சங்கு, நத்தை, ஆமை.
    
மூன்றாம் படி: எறும்பு, கரையான் போன்றவை.   
 
நான்காம் படி: நண்டு, வண்டு,

ஐந்தாம் படி: பறவை, சிங்கம் போன்ற ஐந்தறிவு கொண்ட  உயிரினங்கள்.  
 
ஆறாம் படி: மனித பொம்மைகள். மனிதர்கள் கடைப்பிடிக்கும் பழக்கமான திருமணங்கள், கடை வியாபாரம் செய்வது போல, நடனம் ஆடுவது போல உள்ள பொம்மைகள் வைக்கலாம்.  

ஏழாம் படி: மனிதர்களுக்கு அப்பாற்பட்ட ரிஷிகள், முனிவர்கள், குரு மார்கள்.    

எட்டாம் படி: தேவர்கள், நவகிரகங்கள், பஞ்சபூதங்கள், திக்குப் பாலகர்கள் போன்றோரின் பொம்மைகள். தசாவதாரம், அஷ்டலட்சுமிகளின் பொம்மைகள் வைக்கலாம்.  

ஒன்பதாம் படி: முப்பெரும் தேவியர்களான பார்வதி, சரஸ்வதி, லெட்சுமி தேவி ஆகியோரின் பொம்மைகளும், பூரண கலச கும்பத்தையும் வைக்கலாம். இதோடு நாம் பிள்ளையார் பொம்மையையும் வைக்க வேண்டும்.
   
இதைத்தவிர, முதலாம் படியில் அரிசி, பருப்பு ஆகியவற்றை சிறிய கிண்ணங்களில் நிரப்பி வைக்க வேண்டும். பூங்கா, நீர்வீழ்ச்சி என அவரவர் விருப்பத்திற்கு ஏற்ப கொலுப் படிகளை சுற்றி அலங்கரிக்கலாம்.

பிரசாதங்கள்

* ஓமப்பொடி, வேக வைத்த கார்ன், வெங்காயம், கேரட், கொத்தமல்லி தூவி கலந்த சுண்டலை வழங்கலாம்.

* ஒரு டீஸ்பூன் நல்லெண்ணெய், சர்க்கரை போட்டு நிறம் மாறாமல், சுவையாக பட்டாணி சுண்டலை வழங்கலாம்.

* இனிப்பு பாகுடன் வறுத்த சீவல், சுக்கு, ஜாதிக்காய் பொடியைத் தூவி, சுவை தரும் இனிப்பு சுண்டலை வழங்கலாம்.

* சின்னச் சின்ன உளுந்து வடை, சிறிய வடிவத்திலான ஜிலேபியை வருவோருக்கு வழங்கலாம்.

- இல.வள்ளிமயில், மதுரை.

நவராத்திரி செய்தி

* பொம்மைக் கொலு வைப்பதற்கு படி இல்லாவிடில் வீட்டிலுள்ள மேஜை, பெஞ்ச், ஸ்டூல்கள், பலகைகள் ஏன் சூட்கேஸ்களைக்கூட ஒன்றின்முன் ஒன்றாக படிப்படியாக வருமாறு அடுக்கி வைத்து அதன்மேல் ஒரு வெள்ளை அல்லது வெளிர்நிற விரிப்பை விரித்தால் கொலுப்படி தயார்.

* மலை செய்ய மண்ணைக் குழைப்பதற்கு பதில் ஒரு பெரிய பாத்திரத்தின் வெளிப்புறம் எண்ணெய் தடவி அதன்மேல் மலை வடிவத்தில் ‘ப்ளாஸ்டர் ஆஃப் பாரிஸைக்’ கரைத்துக் கொட்டி காய்ந்தபின் பெயிண்ட் அடிக்கவும். இதை ஒருமுறை செய்தாலே போதும். பல ஆண்டுகள் உபயோகிக்கலாம்.

* பழைய பொம்மைகளை சாதாரண அக்ரிலிக் அல்லது ஆயில் பெயிண்ட் கொண்டு டச்-அப் செய்தாலே புதிதுபோல ஆகிவிடும்.

* கொலு முடிந்து பொம்மைகளை பத்திரப்படுத்தி வைக்கும்போது தெர்மாகோல், வைக்கோல், காகிதம், துணி போன்றவைகளைச் சுற்றி வைக்கவும்.

* எல்லாவித சுண்டலுக்கும் தேங்காயுடன் மேலாக துருவிய கேரட் அல்லது பீட்ரூட் தூவினால் ருசியாக இருப்பது மட்டுமல்லாமல் சத்து நிறைந்தது.

* சுண்டலுடன் சிறிது பொடி செய்த சிப்ஸையும் கலந்தால் பேல் பூரிபோல கரகரப்பாக ருசியுடன் இருக்கும்.

* கொலுப்படிக்கு முன் தாம்பாளங்களை வைத்து அவற்றில் பூக்கோலம், ரங்கோலி, தண்ணீர் மேல் கோலம், தண்ணீருக்கடியில் கோலம் என்று போட்டு அழகு செய்யவும்.

* வெண்கல உருளிகளில் நீர் நிரப்பி அதில் ஓர் ஆஸ்ப்ரின் மாத்திரையைக் கரைய விட்டு பூக்களை மிதக்க விடுங்கள். மூன்று அல்லது நான்கு நாட்கள் வரை வாடாமல் இருக்கும்.

- எஸ். ராஜகுமாரி, சென்னை.

பளிச் பளிச் பொம்மைகள்

* கொலு வைப்பதற்கு சில நாட்களுக்கு முன்பே பொம்மைகளை எடுத்து, ஆயில் பெயின்ட் தடவி வெயிலில் காய வைத்தால் புது பொம்மைகள்போல் பளிச்சிடும்.

* நவராத்திரி கொலுவில் ஒவ்வொரு நாளும் சுண்டல் வழங்குவது வழக்கம். இதற்கு அறிவியல் ரீதியான காரணமும் உண்டு. புரட்டாசி, ஐப்பசி மழைக்காலத்தில் தோல் நோய் வர வாய்ப்பு உண்டு. சுண்டல் சாப்பிட்டால் சரும பாதிப்பு வராது. மேலும் சுண்டலில் புரோட்டீன் சத்தும் கிடைக்கும்.

* மரப்பாச்சி பொம்மைகளுக்கு வார்னிஷ் பூசிவிட்டால் பளிச்சென்று மின்னும். தூசி படர்ந்தால் துடைத்து விடலாம். பெயிண்ட்டும் உதிராது.

* பெட்டியிலிருந்து பொம்மைகளை எடுத்ததும் ஒரு துணியால் துடைத்துவிட்டு, கெரசினில் பஞ்சை முக்கியெடுத்து துடைத்து, சற்று நேரம் கழித்து விபூதி தடவி, துணியால் துடைத்தால் புதிதுபோல இருக்கும்.

தொகுப்பு: ஆர். பத்மப்ரியா, திருச்சி.

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • 28-01-2021

  28-01-2021 இன்றைய சிறப்பு படங்கள்

 • jayallithaa_mmeerrr

  மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவிற்கு ரூ.80 கோடி செலவில் பீனிக்ஸ் பறவை வடிவில் நினைவிடம்

 • 27-01-2021

  27-01-2021 இன்றைய சிறப்பு படங்கள்

 • ramukudi

  குடியரசு தின விழாவில் பாரம்பரியத்தை பறைசாற்றும் கண்கவர் நிகழ்ச்சிகள் :மாமல்லபுரம் கடற்கரை கோவில், ராமர் கோவில் அலங்கார ஊர்திகள் பங்கேற்பு!!

 • autoooo_maaa

  சாலைகளில் படுத்து மறியல்... மாட்டு வண்டி, டிராக்டர்கள், ஆட்டோக்களில் பேரணி : விவசாயிகளுக்கு ஆதரவாக தமிழர்கள் ஆவேசப் போராட்டம்!!

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்