SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

ஏழைகளின் முந்திரி வேர்க்கடலை!

2020-10-22@ 16:53:07

நன்றி குங்குமம் தோழி

உணவே மருந்து

ஆங்கிலத்தில் ‘Peanut’ எனப்படும் நிலக்கடலையை வேர்க்கடலை என்றும் கூறுவார்கள். மனிதனின் உணவு வகைகளில், பூமிக்கடியில் விளைகின்ற ஒரு பருப்பு வகையான இந்த நிலக்கடலை தென் அமெரிக்க கண்டத்தை பூர்வீகமாகக் கொண்டிருந்தாலும் தற்போது உலகெங்கிலும் வெப்ப மண்டல நாடுகளில் அதிகம் பயிரிடப்படுகிறது. உலகில் வேர்க்கடலை உற்பத்தியில் இந்தியா இரண்டாவது இடத்தில் உள்ளது.

வேர்க்கடலை தொழில்நுட்ப ரீதியாக பட்டாணிக் குடும்பத்தைச் சார்ந்ததாக கருதப்பட்டாலும், பீன்ஸ் / பருப்பு வகைகளின் குடும்பத்திற்கு  சொந்தமானது. ஒரு பருப்பு என்றாலும், இது பொதுவாக அதிக எண்ணெய் உள்ளடக்கம் காரணமாக எண்ணெய் வித்துக்களில் சேர்க்கப்பட்டுள்ளது. வேர்க்கடலையில் புரதம், எண்ணெய் மற்றும் நார்ச்சத்துக்கள் நிறைந்துள்ளன. எண்ணெயைத் தவிர, வேர்க்கடலை வெண்ணெய், மிட்டாய்கள், வறுத்த வேர்க்கடலை, சிற்றுண்டிப் பொருட்கள், சூப்கள் மற்றும் இனிப்பு வகைகள் ஆகியவற்றிற்கு வேர்க்கடலை பரவலாகப் பயன்படுத்தப்படுகிறது.

நிலக்கடலையில் பல உபரி ரகங்கள் உயிரித் தொழில்நுட்பத்தின் மூலமாக கண்டுபிடிக்கப்பட்ட வண்ணம் இருக்கின்றன. உலகெங்கிலும் பல கோடி மக்கள் ஊட்டச்சத்து மிகுந்த ஒரு உணவாக கருதி நிலக்கடலையை அதிகம் உண்கின்றனர். இயற்கையான சத்துக்களை அதிகம் கொண்ட இந்த நிலக்கடலையை மனிதர்கள் அதிகம் சாப்பிடுவதால் ஏற்படும் நன்மைகள் என்ன என்பதைப் பற்றி பார்ப்போம்.

வேர்க்கடலையில் உள்ள ஊட்டச்சத்துக்கள்

புரோட்டீன், கொழுப்புகள் மற்றும் நார்ச்சத்து ஆகியவை வேர்க்கடலையில் உள்ள முக்கிய கூறுகள். தாவர அடிப்படையிலான புரதம்: நிறைவுறாத கொழுப்பு, நார்ச்சத்து மற்றும் கார்போஹைட்ரேட் நிறைந்துள்ளன. இவை அனைத்தும் மனித ஊட்டச்சத்துக்கு சிறந்தவை என்று நிரூபிக்கப்படுகின்றன. ஒரு கைப்பிடியளவு வேர்க்கடலை, தோராயமாக 208 கலோரி வழங்கும். இது 2 இட்லி மற்றும் சட்னிக்கு சமம். எனவே அதிக எடை கொண்டவர்கள், கலோரி கட்டுப்பாடு தேவைப்படுபவர்கள் மற்றும் இதய நோயாளிகள் வேர்க்கடலையை மிதமாக உட்கொள்வது நல்லது.

கொழுப்பு

அமெரிக்க வேர்க்கடலை கவுன்சிலின் கூற்றுப்படி, வேர்க்கடலை கொழுப்பு சுயவிவரத்தில் (Fat Lipid Profile) சுமார் 21 கிராம் மோனோசாச்சுரேட்டட் கொழுப்பு அமிலங்கள் (Monounsaturated Fatty Fatty Acid MUFA), 10.2 கிராம் மற்றும்  நிறைவுற்ற கொழுப்பு அமிலங்கள் (Poly Unsaturated Fatty Acid PUFA கள்) 8.8 கிராம் / 100 கிராம் நிலக்கடலையில் உள்ளது.இது இதய நட்பு கொழுப்பு அமிலங்களின் கலவையாகும். அமெரிக்க ஊட்டச்சத்து அறிவியலாளர்களான கிரிஸ்-ஈதர்டன் மற்றும் பலர், குறைந்த கொழுப்பு உணவுகளுடன் ஒப்பிடும்போது வேர்க்கடலை பொருட்கள் (மூல, வெண்ணெய் மற்றும் எண்ணெய்) இதய ஆரோக்கியத்திற்கு அதிக நன்மை பயக்கும் என்பதை சுட்டிக்காட்டி உள்ளனர்.

அதிக மோனோசாச்சுரேட்டட் கொழுப்பு வேர்க்கடலை உணவுகள் அவற்றின் மொத்த உடல் கொழுப்பை 11% ஆகவும், மோசமான எல்.டி.எல் கொழுப்பை 14% ஆகவும் குறைத்தன. அதே நேரத்தில் அவற்றின் நல்ல எச்.டி.எல் கொழுப்பு ட்ரைகிளிசரைட்களைக் குறைப்பதன் மூலம் பராமரிக்கப்பட்டது. கொலஸ்ட்ராலில் வேர்க்கடலை உணவின் நன்மைகள் ஆலிவ் எண்ணெய் உணவோடு ஒப்பிடத்தக்கவை. மோனோசாச்சுரேட்டட் கொழுப்பு மற்றும் ஒட்டுமொத்த நட்ஸ் உட்கொள்ளல் மற்றும் கரோனரி இதய நோய்க்கான அபாயத்தைக் குறைத்தல் ஆகியவற்றுக்கு இடையேயான தொடர்பை ஆதரிக்க வலுவான சான்றுகள் உள்ளதாகவும் சொல்லப்படுகிறது.

புரோட்டீன்

வேர்க்கடலை  20 வகை அமினோ அமிலங்களையும் பல்வேறு விகிதத்தில் கொண்டுள்ளது மற்றும் இது “அர்ஜினைன்” (யு.எஸ்.டி.ஏ, 2011) எனப்படும் புரதத்தின் மிகப்பெரிய மூலமாகும். புரோட்டீன் டைஜெஸ்டிபிலிட்டி கரெக்டட் அமினோ ஆசிட் ஸ்கோர் (PDCAAS) படி, வேர்க்கடலை புரதங்கள் மற்றும் சோயா புரதங்கள் போன்ற பிற பருப்பு வகைகளில் உள்ள புரதங்கள் மனித வளர்ச்சிக்கும் ஆரோக்கியத்திற்கும் தேவைப்படும் புரத அளவில், இறைச்சி மற்றும் முட்டையிலிருந்து கிடைக்கும்  ஊட்டச்சத்துக்கு சமமானவை என்கிறது.

வேர்க்கடலையில் உள்ள புரதங்கள் தாவர அடிப்படையிலானவை என்பதால், விலங்கு புரதத்தைப் போலன்றி, ஃபைபர் மற்றும் தனித்துவமான பயோஆக்டிவ் கூறுகள் போன்ற நேர்மறையான ஆரோக்கிய நன்மைகளைக் கொண்ட கூடுதல் கூறுகளை இது கொண்டுள்ளது. வேர்க்கடலை புரதங்கள் நல்ல கெட்டியாகும் நிலைத்தன்மை, நுரைக்கும் திறன், சிறந்த நீர் வைத்திருத்தல் மற்றும் அதிக கரைதிறன் ஆகியவற்றைக் கண்டறிந்துள்ளன. மேலும் உணவுத் துறையில் ஒரு புதிய உயர் புரத உணவு மூலப்பொருள் தயாரிப்பு உருவாக்கம் மற்றும் புரத உருவாக்கம் ஆகியவற்றை வழங்க முடியும்.

நார்ச்சத்து

வேர்க்கடலை நார்ச்சத்துக்கான நல்ல மூலமாகும் என்று உணவு மற்றும் மருந்து நிர்வாகம் தெரிவித்துள்ளது. சர்க்கரைகளை குறைப்பது வேர்க்கடலை கார்போஹைட்ரேட்டுகளின் சிறிய விகிதத்தை உருவாக்குகிறது. வேர்க்கடலை குறைந்த கிளைசெமிக் குறியீட்டு (GI) மற்றும் கிளைசெமிக் சுமை (GL) ஆகியவற்றைக் கொண்டிருப்பதால், 100-புள்ளி அளவிலான கிளைசெமிக் எடையில், வேர்க்கடலையின் கிளைசெமிக் குறியீடு 14 ஆகும். மேலும், அதிக கிளைசெமிக் சுமை உணவில் வேர்க்கடலை அல்லது வேர்க்கடலை வெண்ணெய் சேர்க்கப்படும்போது, ​​அவல் உப்புமா, பேல் பூரி, சாகோ உப்புமா, வேர்க்கடலை சிக்கி போன்றவை ரத்த குளுக்கோஸை மிக விரைவாக எட்டுவதைத் தடுப்பதாக வேர்க்கடலையைப் பற்றிய கூடுதல் ஆராய்ச்சிகள் தெரிவிக்கின்றன.

கார்போஹைட்ரேட்

வேர்க்கடலையில், ஃபைபர் அல்லது ஸ்டார்ச் கொண்ட கார்போஹைட்ரேட்டுகள் உள்ளன. இந்த இரண்டு வகையான கார்போஹைட்ரேட்டுகள் ரத்த சர்க்கரையின் மீது மெதுவான, குறைவான  விளைவைக் கொண்டுள்ளன. அமெரிக்க நீரிழிவு சங்கம் வேர்க்கடலை மற்றும் பிற கொட்டைகளை நீரிழிவு நோயாளிகளுக்கான சிறந்த உணவுகளாக வரிசைப்படுத்துகிறது. ஒரு நல்ல உணவுப் பட்டியலை உருவாக்க,  ஃபைபர், கால்சியம், பொட்டாசியம், மெக்னீசியம் மற்றும் வைட்டமின்கள் ஏ மற்றும் வைட்டமின் ஈ நிறைந்த உணவுகள் இடம் பெறவேண்டும் எனவும் வலியுறுத்துகிறது. ஒரு நல்ல உணவுப் பட்டியலில் உள்ளஉணவுகள் கிளைசெமிக் குறியீட்டில் குறைந்த இடத்தைப் பெற வேண்டும். வேர்க்கடலை மெக்னீசியம், ஃபைபர்மற்றும் இதயத்திற்கு ஆரோக்கியமான எண்ணெய்களைக் கொண்டிருப்பதால் ரத்த குளுக்கோஸை அதிகமாக பாதிக்காத இந்த உணவுப் பட்டியலை உருவாக்குகிறது.

குடல் புற்றுநோய்

உலக சுகாதார நிறுவன கணக்கின் படி 2012 ஆம் ஆண்டு முதல் வயிறு மற்றும் குடலில்  ஏற்படும் புற்று நோய் பாதிப்புகள் உலகெங்கிலும் அதிகரித்துள்ளதாக தெரி யவந்துள்ளது.  வேர்க்கடலை வயிறு மற்றும் குடல் பகுதியில் ஏற்படும் புற்றுநோயை தடுப்பதில் சிறப்பாக செயல்படுகிறது. இதில் நிறைந்திருக்கும் பைட்டோஸ்டீரால் (Phytosterols) எனப்படும் வேதிப்பொருள் வயிறு மற்றும் குடல் செல்களில் புற்று நோய் செல்கள் வளராதவாறு தடுத்து, குடற்புண் ஏற்படாமல் பாதுகாக்கிறது. வாரத்தில் குறைந்தபட்சம் இரண்டு முறையாவது வேர்க்கடலை சாப்பிட்டவர்களுக்கு வயிற்றில் புற்று நோய் ஏற்படும் ஆபத்து வெகுவாக குறைந்திருப்பதாக அமெரிக்க மருத்துவ குழு நடத்திய ஆய்வில் தெரிய வந்திருக்கிறது.

மூளைத்திறன் அதிகரிக்கமனிதனின் அத்தனை விதமான செயல்களுக்கும் அடிப்படை உறுப்பாக மூளை இருக்கிறது. தினந்தோறும் நிலக்கடலை சாப்பிடும் நபர்களுக்கு மூளையின் செயல்திறன் அதிகரிப்பதோடு, கூர்மையான ஞாபகத்திறன் உண்டாவதாக ஆய்வுகளில் தெரியவந்திருக்கின்றன. நிலக்கடலையில் ரிசர்வரெட்ரால் (Reservatarol) எனப்படும் வேதிப்பொருள், உடலில் இருந்து மூளைக்கு ரத்தம் பாய்வதை தங்குதடையில்லாமல் பார்த்துக் கொள்வதால் மூளை மிகவும் சுறுசுறுப்பாக செயலாற்றுகிறது.

மேலும் இதில் வைட்டமின் பி3 மற்றும் நியாசின் வேதிப்பொருட்கள் இருப்பதால் மிக வலுவான ஞாபக சக்தியை கொடுக்கிறது. மேலும் மூளை மற்றும் நரம்பு மண்டலங்கள் சிறப்பாக செயலாற்ற உதவி செய்கிறது.கர்ப்பிணி பெண்களுக்குகருவுற்ற பெண்கள் போலிக் அமிலங்கள் நிறைந்த உணவுகளை அதிகம் சாப்பிட வேண்டும் என மருத்துவர்கள் வலியுறுத்துகின்றனர்.  

வேர்க்கடலையில் இந்த போலிக் அமிலம் அதிகம் நிறைந்துள்ளது.  தொடர்ந்து சாப்பிட்டு வரும் கர்ப்பிணிப் பெண்களுக்கு அவர்களின் வயிற்றில் வளரும் குழந்தைக்கு மூளை சம்பந்தமான குறைபாடுகள் ஏற்படாமல் தடுப்பதாக அவர்கள் நடத்திய ஆய்வில் கண்டுபிடித்துள்ளனர். மேலும் பிறக்கப் போகும் குழந்தைக்கு எதிர்காலங்களில் ஆஸ்துமா நோய் ஏற்படுவதற்கான சாத்தியங்களையும் வெகுவாக குறைப்பதாகவும் அந்த ஆய்வுகளில் தெரியவந்திருக்கிறது.

அல்சைமர் நோய்க்கு எதிரானதுஅல்சைமர் என்பது முதுமை அடைந்தவர்களுக்கு ஏற்படும் தீவிர ஞாபக மறதி நோயாகும். இந்த நோய் நம் நாட்டில் மிகக் குறைந்த அளவிலும், மேலை நாடுகளில் மிக அதிக அளவில் ஏற்படுகின்ற ஒரு நோயாக வும் இருக்கிறது. இந்த நோய் ஏற்படுவதற்கு பிரதான காரணமாக மூளைக்குத் தேவையான சத்துக்கள் இல்லாத உணவுகளை அதிகம் சாப்பிடுவது என கூறப்படுகிறது.

நிலக்கடலையில் நியாசின் அமிலம் அதிகமிருக்கிறது. நிலக்கடலையை அதிகம் சாப்பிடும் நபர்களுக்கு ஞாபக சக்தி வலுவடைவதோடு, மூளையின் செயல்பாடும் சுறுசுறுப்பாக இருக்கிறது.  வேர்க்கடலையை தொடர்ந்து எடுத்துக் கொள்ளும் ஒரு நபருக்கு 70 சதவீதம் வரை இந்த அல்சைமர் நோய் ஏற்படுவதற்கான ஆபத்து குறைவதாக மருத்துவர்கள் குறிப்பிடுகிறார்கள்.

எக்சிமா, சோரியாசிஸ் நோய்கள்

எக்சிமா மற்றும் சோரியாசிஸ் எனப்படும் தோல் வியாதிகள் உலகம் முழுவதும் பல லட்சக்கணக்கான மக்களை பாதிக்கிறது. பரம்பரை காரணங்கள், உடலில் செல்களில் ஏற்படும்  தாக்கத்தால் மேற்கூறிய வியாதிகள் ஏற்படுகின்றன. இந்த நோய்களின் தீவிரத்தன்மையை கட்டுப்படுத்துவதற்கான மருந்துகள் இருக்கிறது என்றாலும் முழுமையாக குணப்படுத்துவதற்கான மருந்துகள் தற்போது வரை கண்டுபிடிக்கப்படவில்லை.

எனவே இத்தகைய நோய்கள் ஏற்படாமல் தடுப்பதே சிறந்த நிவாரணமாக கருதப்படுகிறது. நிலக்கடலையில் தீங்கில்லாத கொழுப்பு அமிலங்கள் மற்றும் புரதங்கள் அதிகம் நிறைந்திருக்கின்றன. தினந்தோறும் நிலக்கடலை சாப்பிடுபவர்களுக்கு அவர்களின் உடலில் இருக்கும் செல்களில் மாற்றங்கள் ஏற்படுவதை தடுத்து, மேற்கூறிய நோய்கள் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் வெகுவாக குறைகிறது.

தலைமுடி உதிர்வைத் தடுக்க உலகம் முழுவதும் இருக்கின்ற இளம் வயது மற்றும் நடுத்தர வயது ஆண்கள், பெண்களுக்கு தலை முடி உதிர்வு ஒரு
கவலைக்குரிய விஷயமாக இருக்கிறது. ஊட்டச்சத்து குறைவு மற்றும் உடலில் சுரக்கின்ற ஹார்மோன்களின் காரணங்களால் தலைமுடி உதிர்வு ஏற்படுகிறது. நிலக்கடலையில் வைட்டமின் பி சத்து வகையை சார்ந்த பயோட்டின் எனப்படும் வேதிப்பொருள் இருக்கிறது. இந்த பயோட்டின் தலை முடியின் ஆரோக்கியத்தை காப்பதோடு, அதிக அளவில் முடி உதிர்வதை தடுக்கிறது. முடி உதிர்ந்த இடங்களிலும் மீண்டும் முடி வளர செய்ய தூண்டுகோலாகவும் செயல்படுகிறது.

தசைகள் பலம் பெற நாம் அன்றாடம் சாப்பிடும் பல வகையான உணவுகளில் உடலில் தீங்கு ஏற்படுத்தும் கொலஸ்ட்ரால் சத்து குறைந்த அளவிலாவது இருக்கிறது. நிலக்கடலை மட்டுமே தீங்கில்லாமலும் அதே நேரத்தில் உடலுக்கு நன்மை செய்யும் புரதச் சத்துக்கள் அதிகம் நிறைந்த ஒரு இயற்கை உணவாக இருக்கிறது. தினமும் நிலக்கடலையை சிறிதளவு சாப்பிடுபவர்களுக்கு உடலின் தசைகளின் வளர்ச்சி மற்றும் வலிமைக்கு தேவையான புரதச் சத்துக்கள் கிடைக்கின்றன. மேலும் நமது உடலில் இருக்கின்ற எண்டோக்ரைன் சுரப்பிகளை நன்றாக இயங்க செய்து உடலின் அனைத்து உறுப்புகளின் சீரான செயல்பாட்டிற்கு பேருதவி புரிகிறது.

குழந்தைகளுக்கான உணவு வளரும் குழந்தைகளுக்கு உணவில்புரதச்சத்து, அமினோ அமிலங்கள் மற்றும் தீங்கில்லா கொழுப்பு அமிலங்கள் இருப்பது அவசியமாகும். நிலக்கடலையில் மேற்கூறிய அத்தியாவசிய சத்துக்கள் அதிகம் நிரம்பியிருக்கின்றன. நிலக்கடலை சார்ந்த உணவுகளை வளரும் குழந்தைகளுக்கு கொடுப்பதால் அவர்களின் உடல் வலிமை பெறுவதோடு சீரான வளர்ச்சியையும் அடைகிறது. மேலும் அக்குழந்தைகளின் மூளை செயல் திறனும் சிறப்படைகிறது. வயதிற்கேற்ற உடல் எடையையும் கொடுக்கிறது.

மன அழுத்தத்தைப் போக்க வேகமான வாழ்க்கை முறையால் தற்போது உலகெங்கிலும் மக்கள் பலருக்கும் மன அழுத்த பிரச்சனை அதிகம் ஏற்படுவதாக சர்வதேச மனநல மருத்துவ சங்கம் கூறியிருக்கிறது. மன அழுத்தத்தால் பாதிக்கப்பட்டவர்கள் சாப்பிடக்கூடிய சிறந்த உணவாக நிலக்கடலை இருக்கிறது. நிலக்டலையில் ட்ரிப்டோபன் (Triptophan) எனப்படும் வேதிப்பொருள் அதிகமுள்ளது. இது மன அழுத்தத்தை குறைப்பதற்கான ஒரு சிறந்த இயற்கை மருத்துவ பொருளாக இருக்கிறது. மேலும் இந்த ட்ரிப்டோபன் மனிதர்களின் மூளையில் செரோடோனின் எனப்படும் வேதிப்பொருளை சுரக்கச் செய்கிறது. இந்த செரோடோனின் மனிதர்களின் மன இறுக்கத்தை தளர்த்தி மன அமைதி உண்டாக செய்கிறது.

பித்தப்பை கற்கள் கரைய நமது உடலின் செயல்பாடுகளுக்கு அத்தியாவசியத் தேவையாக இருக்கும் பித்தநீரை சுரக்கும் பணியை பித்தப்பை செய்கிறது. கொழுப்புச் சத்துள்ள உணவுகளை அதிகம் சாப்பிடும் போது சிலருக்கு பித்தப்பைகளில் கற்கள் உருவாகின்றன. பித்தப்பை கற்கள் ஏற்படக் கூடாது என நினைப்பவர்கள் அடிக்கடி நிலக்கடலைகளை சாப்பிட வேண்டும் என பரிந்துரைக்கப்படுகிறது. இதில் குறைந்த அளவே கொழுப்பு சத்து இருப்பதால் பித்தப்பை சீராக இயங்க உதவுகிறது. மேலும் அப்பித்தப்பையில் நச்சுகள் மற்றும் கொழுப்புக்கள் படியாமல் தடுத்து பித்தப்பை கற்கள் உருவாகாமல் பாதுகாக்கிறது.

பெண்களின் ஹார்மோன் வளர்ச்சியை இது சீராக்குகிறது. இதனால், அவர்களுக்கு மார்பகக் கட்டி ஏற்படுவதையும் தடுக்கிறது. போலிக் அமிலம், பாஸ்பரஸ், கால்சியம், பொட்டாசியம், துத்தநாகம், இரும்பு, வைட்டமின்கள் ஆகியவை நிலக்கடலையில் நிறைந்துள்ளன. நிலக்கடலையில் மாங்கனீஸ் சத்து நிறைய உள்ளது. நாம் உண்ணும் உணவில் இருந்து கால்சியம் நமது உடலுக்குக் கிடைக்கவும் பயன்படுகிறது. குறிப்பாகப் பெண்கள் நிலக்கடலையைத் தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் எலும்புத்துளை (Osteoporosis) நோய் வராமல் பாதுகாத்துக் கொள்ளலாம்.

உடல் எடை அதிகமாகாமல் இருக்க வேண்டும் என்று நினைப்பவர்கள் நிலக்கடலை சாப்பிடலாம். நிலக்கடலையில் ரெஸ்வரெட்ரால் என்ற சத்து நிறைந்துள்ளது. இது இதய வால்வுகளைப் பாதுகாக்கிறது. இதய நோய்கள் வருவதையும்தடுக்கிறது.நிலக்கடலை நோய் வருவதைத் தடுப்பதுடன் இளமையைப் பராமரிக்கவும் பயன்படுகிறது. நிலக்கடலை சாப்பிட்டால் கொழுப்புச் சத்து அதிகமாகும் என்று நாம் நினைத்துக் கொண்டிருக்கிறோம். ஆனால், அது உண்மையில்லை.

நிலக்கடலையில் உள்ள தாமிரம் மற்றும் துத்தநாகச் சத்து, நமது உடலில் தீமை செய்யும் கொழுப்பைக் குறைத்து நன்மை செய்யும் கொழுப்பை அதிகமாக்குகிறது. பாதாமைவிட நிலக்கடலையில் நன்மை செய்யும் கொழுப்பு அதிகமாக உள்ளது. நிலக்கடலையில் உள்ள ஒமேகா-3 சத்து, நமது உடலின் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது.

பொதுவாக பாதாம், பிஸ்தா, முந்திரி பருப்புகளில்தான் சத்து அதிகம் உள்ளது என்று அனைவரும் எண்ணுகிறார்கள். ஆனால், நிலக்கடலையில்தான் இவற்றையெல்லாம் விட சத்துக்கள் உள்ளன. நோய் எதிர்ப்பு சக்தியை உருவாக்கும் ஆற்றலும் நிலக்கடலைக்குத்தான் உண்டு. அதனால்தான் இது “ஏழைகளின் முந்திரி’ என்று அழைக்கப்படுகிறது. சமீபத்திய ஆராய்ச்சி முடிவுகள் ஆவியில் வேகவைத்த வேர்க்கடலையில் ஆக்ஸிஜனேற்ற செறிவை அதிகரிக்கிறது என்று கூறுகின்றன.

வேகவைத்த வேர்க்கடலையில் முறையே ஐசோஃப்ளேவோன் ஆக்ஸிஜனேற்றிகளான (Isoflavone Antioxidants) பயோகானின் ‘ஏ’ (Biochanin A) மற்றும் ஜெனிஸ்டீன் (Genistein) இரண்டு மற்றும் நான்கு மடங்கு அதிகரிப்பு இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. வழக்கமான உணவின் ஒருங்கிணைந்த பகுதியாக வேர்க்கடலை சேர்த்துக்கொள்பவர்களிடத்தே எந்தவொரு காரணத்தாலும் ஏற்படும் இறப்பு விகிதத்தில் 40 சதவீதம் குறைப்பு ஏற்பட்டுள்ளது. குறிப்பாக வேர்க்கடலை அல்லது வேர்க்கடலை வெண்ணெய் உட்கொள்ளும் மக்களில் கார்டியோ வாஸ்குலர் நோய்களால் ஏற்படும் இறப்புகளில் குறைவு காணப்பட்டது.

வேர்க்கடலை நுகர்வு அனைத்து வயதினருக்கும், பாலினம் மற்றும் நீரிழிவு உள்ளிட்ட பல ஆபத்துக் காரணிகளைக் கொண்ட நோயாளிகளுக்கு கூட இதய நோய்களின் ஆபத்துக் காரணிகளைக் குறைக்கிறது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.உயர் ரத்த அழுத்தம், இதய நோய் மற்றும் பக்கவாதம் ஆகியவை அதிக ஆபத்துகளுடன் தொடர்புடையது . நாம் செய்யும் உணவுத் தேர்வுகள் ரத்த அழுத்தத்தில் தாக்கத்தை ஏற்படுத்தும் என்பதை விஞ்ஞானிகள் அறிந்து கொண்டனர். வேர்க்கடலை மற்றும் வேர்க்கடலை வெண்ணெய் ஆகியவை ஆரோக்கிய மோனோசாச்சுரேட்டட் கொழுப்பு அமிலங்கள், தாவரப் புரதங்கள், மெக்னீசியம், பொட்டாசியம், ஃபைபர் அர்ஜினைன் மற்றும் பல பயோஆக்டிவ் கூறுகளைக் கொண்டிருக்கின்றன. இவை ஒவ்வொன்றும் ரத்த அழுத்தத்தைக் குறைக்க பங்களிக்கக்கூடும்.

வேர்க்கடலை பர்பி (சிக்கி)

பல சத்துக்கள் அடங்கிய வேர்க்கடலையைக் கொண்டு சுவையான பர்பி எவ்வாறு தயாரிக்கலாம் என்று விவரிக்கிறார் சமையல் கலை நிபுணர் நித்யா நடராஜன்.

வேர்க்கடலை பர்பி (சிக்கி)

தேவையான பொருட்கள்

நிலக்கடலை 2 கப்,
வெல்லம் 1 ½ கப்,
தண்ணீர் தேவைக்கேற்ப,
நெய்  1 டேபிள் ஸ்பூன்

செய்முறை

நிலக்கடலையை மிதமான தீயில் நன்கு வறுத்து தோல் நீக்கி எடுத்து வைத்துக் கொள்ளவும். அல்லது கடைகளில் விற்கும் வறுத்த நிலக்கடலையை வாங்கி தோல் நீக்கிக் கொள்ளவும். ஒரு பாத்திரத்தில் வெல்லத்தை போட்டு, தண்ணீர் ஊற்றி கரைந்ததும் தண்ணீரை வடிகட்டி எடுத்து வைத்துக் கொள்ளவும். ஒரு கனமான பாத்திரத்தில் கரைத்து வைத்துள்ள  வெல்ல நீரை ஊற்றி  5 முதல் 10 நிமிடம் வரை காய்ச்சவும்.

பாகு பதம்:

ஒரு துளி பாகு நீரை தண்ணீரில் போட்டால் அது உருண்டு வர வேண்டும். இப்போது அடுப்பை அணைத்துவிட்டு, வறுத்த நிலக்கடலையை சேர்த்து கிளறி நெய் தடவிய தட்டில் கொட்டி துண்டுகள் போட்டு ஆறிய பின் சாப்பிடலாம். குழந்தைகளும் சரி, பெரியவர்களும் சரி, ஆரோக்கியத்திற்கு கேடான சாக்லெட், எண்ணெய் பதார்த்தங்கள் சாப்பிடுவதற்கு பதில் வேகவைத்த நிலக்கடலை அல்லது கடலைமிட்டாய் செய்து சாப்பிடலாம். நம்ம கோவில்பட்டி கடலைமிட்டாய்க்கு புவிசார் குறியீடு வழங்கியிருக்கிறார்களே... இதிலிருந்தே தெரியவில்லையா? இதன் மகிமை.

தொகுப்பு: மகாலட்சுமி

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • humanbodies23

  2,000 ஆண்டுகளுக்கு முன் எரிமலை வெடிப்பிலிருந்து தப்பிக்க முயன்ற 2 மனித உடல்கள் இத்தாலியில் கண்டுபிடிப்பு!: புகைப்படங்கள்

 • jammu23

  ஜம்மு காஷ்மீரில் நிலவும் கடுங்குளிர்!: தரை, வீடுகளின் கூரைகள், வாகனங்களின் மேற்பகுதி ஆகியவை பனி உறைந்து வெண்ணிறமாக காட்சி..!!

 • yamuna23

  இனவிருத்திக்காக யமுனை நதியில் கூட்டம் கூட்டமாக படையெடுக்கும் பறவைகள்!: சுற்றுலாப் பயணிகள் ஆர்வமுடன் கண்டு ரசிப்பு..!!

 • chadpuja23

  சூரிய கடவுளுக்கு நன்றி தெரிவிக்கும் சாத் பூஜை!: நியூ ஜெர்சியில் நூற்றுக்கணக்கான அமெரிக்க வாழ் இந்தியர்கள் வழிபாடு..!!

 • isrelviva23

  இப்படிக்கூட விவசாயம் செய்ய முடியுமா!: இஸ்ரேலில் வியக்க வைக்கும் செங்குத்து வேளாண்மை..புகைப்படங்கள்..!!

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்