SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

வாழ்வென்பது பெருங்கனவு! கண்ட கனவுகளும் நிஜமாகியவையும்!

2020-10-15@ 16:47:16

நன்றி குங்குமம் தோழி

நமது கல்வித் திட்டம், வேலை வாய்ப்பை உருவாக்கும் விதமாக மாற்றி அமைக்கப்பட வேண்டும். 40 கோடி வேலைவாய்ப்புக்கு தகுதியானவர்களில் 3 கோடியே 60 லட்சம் பேர் வேலை வாய்ப்பின்றி இருக்கின்றனர். இவர்கள் அனைவருக்கும் நம்மால் வேலை வாய்ப்பு வழங்க முடியும் என்ற கல்வி நிலையைக் கொண்டு வர வேண்டும்... எனக் கருதும் வேல்ஸ் கல்விக் குழுமத்தின் துணைத் தலைவராக பொறுப்பேற்ற ப்ரீத்தா தனது வாழ்வின் பெருங்கனவை பகிர்ந்துகொள்கிறார்.

‘‘நான் தொழில்ரீதியாக பல மைல் கற்களை கடந்து.... எனக்கென்று ஒரு சாம்ராஜ்யத்தை அடித்தளத்திலிருந்து உருவாக்க வேண்டும் என்ற கனவு உண்டு. அது ஒருபக்கம் இருப்பினும் தற்பொழுது என் தந்தையின் கால் சுவடுகளை பின்பற்றி அவர் உருவாக்கிய கல்விக் குழுமத்தின் பொறுப்புக்களை ஏற்றுக் கொண்டமைக்கு ஒரே காரணம்... கல்வி மட்டுமே ஒரு மனிதரின் வாழ்க்கையை கீழிருந்து மேலே கொண்டு சேர்க்கும்... நல்ல கல்வி சிறந்த வாய்ப்புகளை அமைத்துத் தரும்; சிறந்த வாய்ப்புகள் நல்ல பணிகளுக்கான வழியை வகுத்துத் தரும்; நல்ல பணிகளில் விடாமுயற்சியும் கடின உழைப்பும் இருந்தால் வாழ்வில் முன்னேறி விடலாம்...

இதை பெரிதும் நம்புவதால் எனக்கு பணியாற்ற கிடைத்த வாய்ப்பை முறையாக பயன்படுத்திக்கொண்டேன். செல்வம், செல்வாக்கு, வாழ்வாதாரம் இவற்றை தாண்டி ஒரு பிரிவினை இல்லாத சமுதாயத்தை உருவாக்க முடியும் என்று நம்புகின்றேன்” என்றவர்  லண்டன் கல்வி வாழ்க்கையை பற்றி விவரித்தார். ‘‘சிறு வயதிலிருந்தே எனக்கு படிப்பில் ஆர்வம் அதிகம். பத்தாம் வகுப்பு மற்றும் பன்னிரண்டாம் வகுப்பு பொதுத்தேர்வுகளில்  முதலிடம் பெற்றேன். பொறியியல் கல்லூரியில் எனது  இளங்கலைப் பட்டத்தை முடித்தேன்.அதன் பிறகு லண்டன் ஸ்கூல் ஆஃப் எகனாமிக்ஸ், கல்வி நிறுவனத்தில் என் முதுகலை பட்டத்தை படிக்க சென்றேன்.

புது நாடு புது இடம் பலதரப்பட்ட மனிதர்கள்... இவை எதுவும் என்னை பெரிதாக பாதிக்கவில்லை. இவற்றை ஒரு வாய்ப்பாக கருதி அனைவரிடமும் என்னை நான் அறிமுகம் செய்துகொண்டேன். கல்வி நிறுவனத்தில் நடைபெறும் அனைத்து நிகழ்ச்சிகளிலும் ஒருங்கிணைப்பாளராக பணிபுரியும் வாய்ப்புகளை நானே எடுத்துக் கொள்வேன். அந்த அனுபவம் எனக்குள் தலைமை பண்புகளையும் வளர்த்துக் கொள்ள உதவியது.

வீட்டை விட்டு வெளியில் வந்தால் நாட்டை கற்றுக்கொள்ளலாம் என்று சொல்வார்கள். என்னை பொறுத்தவரை நாட்டை விட்டு வெளியில் வந்தால் தான் உண்மையான உலகையே புரிந்துகொள்ள முடியும் என்பதை எனது லண்டன் வாழ்க்கை உணர்த்தியது’’ என்றவர் துணைத் தலைவராக பொறுப்பேற்ற பின்பு மாணவர் சேர்க்கை வழிமுறைகளை ஆய்வு செய்துள்ளார்.

‘‘பொதுவாக விண்ணப்ப படிவங்களில் தான் விண்ணப்பிப்போம். ஆண்டிற்கு 7 ஆயிரத்திற்கும் மேற்பட்ட விண்ணப்பங்கள் பல்கலைக்கழகத்திற்கு வந்து சேரும். அதில் பேப்பர் மூலம் விண்ணப்பிக்கும் படிவங்கள் தான் அதிகம். இந்த விஞ்ஞான உலகில் இன்னும் எதற்கு படிவங்களை எழுத வேண்டும். அதனை ஆன்லைன் முறையில் மாற்றி அமைக்கலாம் என்று முடிவு செய்தேன்.

அதற்கென்று ஒரு தனிக்குழு அமைத்து, அனைத்தை படிவங்களும் எங்களின் கல்வி குழும இணையத்தில் சென்று நேரடியாக பதிவு செய்யும் திட்டத்தை அமைத்தேன். உண்மையை சொல்ல வேண்டுமானால் இந்திய கல்வி முறையில் எனக்கு இளம் வயதிலேயே நம்பிக்கை குறைவாக இருந்தது. இப்படி சொல்கின்றேன் என்று என்னை தவறாக எடுத்துக்கொள்ள வேண்டாம். ஒரு மாணவியாக நான் அதை உணர்ந்திருக்கிறேன். இப்போது துணைத் தலைவராக பொறுப்பேற்ற பிறகு அதை உறுதி செய்யவும் முடிகிறது’’ என்றவர் கல்வி திட்டத்திலும் மாற்றம் வரவேண்டும் என்பதில் மிகவும் உறுதியாக இருக்கிறார்.

‘‘இந்தியக் கல்வி முறையில் பெரும்பாலும் மனப்பாடம் செய்துதான் தேர்வு எழுதுகிறோம். இதனால் மாணவர்களுக்கு புரிந்து படிக்கும் திறமை குறைந்து அறிந்து வாழும் தன்மை மறந்து சொந்தக் கால்களில் நிற்க இயலாமல் போய்விடுகிறது. கல்வி என்பது உயர்கல்வி அளவிலிருந்து பிராக்டிகல் ஸ்கில்ஸ் என சொல்லப்படும் திறமைகளை வளர்க்க ஏதுவாக அமைய வேண்டும்.

வெளிநாடுகளில் குறிப்பாக ஜப்பான், அயர்லாந்து, கனடா போன்ற நாடுகளில் பிராக்டிகல் ஸ்கில்ஸ் வளர்ப்பதிலேயே கல்வி முறைகள் முழு கவனம் செலுத்தி வருகின்றன. அதை என் கல்வி மையத்தில் கொண்டு வரும் திட்டம் உள்ளது. மேலும் தொழில் சார்ந்த திறமைகளில் மாணவர்கள் கை தேர்ந்து இருக்க வேண்டும் என்பதற்காக சாஃப்ட் ஸ்கில் வகுப்புகளை கட்டாயமாக்கவும் ஒரு திட்டம் உள்ளது.

ஓர் உயர்ந்த இடத்திற்கு நாம் செல்ல வேண்டும் என்பதை மனதில் கொண்டு நாம் உழைக்கக் கூடாது என்பதில் மிகத் தெளிவாக உள்ளேன். சென்று சேரும் இடத்தை விட நாம் கடந்து போகும் பயணம் தான் முக்கியம். அதற்கு என் தந்தை ஐசரி கணேஷ் தான் உதாரணம். என்னுடைய ரோல் மாடலும் அவர்தான். அவர் தன் கல்லூரி பட்டப்படிப்பிற்கு கட்டணம் செலுத்த முடியாமல் கஷ்டப்பட்டவர்.

அவர் தந்தையின் மறைவிற்குப் பிறகு வீட்டு வாடகை கூட தர முடியாமல் தவித்துள்ளார். கல்வி எவ்வளவு முக்கியம் என்று உணர்ந்தவர் என்பதால் தான் அவரால் 25 ஆண்டுகளில் 36 கல்வி நிறுவனங்களை இந்தியா, சிங்கப்பூர், லண்டன் என மூன்று நாடுகளில் துவங்க முடிந்தது. வசதி இல்லாதவர்களுக்கு அவரின் சொந்த செலவில் படிக்க வைத்துள்ளார். மேலும் எங்க குழுமத்தில் வேலைப் பார்க்கும் பலரின் குழந்தைகளுக்கு இலவச கல்வியும் வழங்கி வருகிறார்.

துணைத் தலைவராக எனது பயணத்தில் என் தந்தை உருவாக்கிய பெயரை உலகம் முழுவதும் கொண்டு செல்ல வேண்டும் என்பது தான் என் விருப்பம். எந்த நாடுகளில் கல்வி துறைகள் வளர்ந்து வரும் நிலையில் இருக்கிறதோ, மக்களுக்கு கல்விக்கு தட்டுப்பாடு இருக்கிறதோ அந்நாட்டு மக்களுக்கு உதவி செய்யும் வண்ணம் ஒரு திட்டத்தை அமல் செய்ய இருக்கிறேன்.

என்னைப் பொறுத்தவரை பெண்களின் முன்னேற்றம் என்று எப்பொழுது யோசிக்கிறோமோ... அன்று தான் ஒரு நாடு, இன மக்களாக தலை நிமிர்ந்து வாழ முடியும். எங்கள் கல்விக் குழுமங்களில் தலைமை பொறுப்புகளில் உள்ள அனைத்து வல்லுனர்களுள் பெரும்பாலானோர்  பெண்களே. மேலும் ஆண்டுதோறும் சிறு மற்றும் குறு தொழில் செய்து வரும் பெண் தொழில் அதிபர்களை ஊக்குவிக்க பல முன்னேற்ற நிகழ்ச்சிகளை ஒருங்கிணைத்து அவர்களை கவுரவித்து வருகிறோம்” என்றார் ப்ரீத்தா.

தொகுப்பு: தோ.திருத்துவராஜ்

படங்கள்: ஜி.சிவக்குமார்

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • twins22

  தலை ஒட்டிப் பிறந்த இரட்டை சகோதரிகள் இனி தனித்தனியே!: அறுவை சிகிச்சைக்கு பின் சந்தோஷமாக நாடு திரும்பினர்..!!

 • mumbaitrain22

  7 மாதத்திற்கு பிறகு மும்பை மின்சார ரயிலில் பெண்கள் உற்சாக பயணம்!: 4 மகளிர் சிறப்பு ரயில்களும் இயக்கம்..!!

 • dinosauregg22

  பெரம்பலூரில் தோண்ட தோண்ட கிடைத்த ‘டைனோசர்’ முட்டைகள்!: ஒன்னு இல்ல ரெண்டு இல்ல.. ‘மிரள’ வைத்த எண்ணிக்கை..வியப்பில் பொதுமக்கள்..!!

 • locusts22

  எத்தியோப்பியாவில் வெட்டுக்கிளிகள் அட்டகாசம்!: 25 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு உணவு பயிர்கள் நாசம்..விவசாயிகள் வேதனை..!!

 • rainbowtree22

  உலக பொறியாளர்களின் கவனத்தை ஈர்த்த பிலிப்பைன்ஸ் ரெயின்போ ட்ரீ டவர்!: கண்கவரும் புகைப்படங்கள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்