SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

பள்ளிக்கூடமாக மாறிய பாலம்!

2020-10-14@ 17:17:23

நன்றி குங்குமம் தோழி

கொரோனா தொற்று ஆரம்பித்ததும், நாடு முழுவதும் இயங்கி வந்த பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டன. ஆனால், இந்த நோய்த் தொற்று விரைவில் நீங்காது என்பதை உணர்ந்து பல பள்ளிகளும், அரசாங்கத்தின் அறிவுரைப்படி, மாணவர்களின் கல்வி தடைபட்டுவிடக் கூடாது என்பதால் ஆன்லைன் வகுப்புகளில் பாடம் நடத்தி வருகின்றன.

இதன்படி, ஜூன் மாதம் முதல், கேரளாவில் பல  குழந்தைகளும் தங்களின் வீடுகளிலிருந்தபடியே இணையத்தில் கல்வி கற்றனர். இதில் ஆன்லைன் வசதிகள் இல்லாத வீடுகளில் குழந்தைகள் கல்வி தடையில்லாமல் தொடர, தொலைக்காட்சிகளில் பாடங்கள் ஒளிபரப்பாகின. ஆனால், வீடு, தொலைக்காட்சி, மின்சாரம் என எந்த வசதியும் இல்லாத  குழந்தைகளின் நிலைமை?

இது போன்ற குழந்தைகளுக்கும் கல்வி தடைபடக்கூடாது என்று  களமிறங்கியுள்ளனர் கேரளாவின் செயின்ட் ஜான் பாஸ்கோ பள்ளி ஆசிரியர்கள். கேரளாவில், எர்ணாகுளத்தில் அமைந்திருக்கும் இந்தப் பள்ளியைச் சேர்ந்த ஆசிரியர்கள் மூவரும், தங்கள் பள்ளியில் இலவசமாக பயின்று வந்த புலம்பெயர் தொழிலாளர்கள் குழந்தைகளுக்குப் பாடம் எடுக்க, அவர்கள் வசிக்கும் பாலத்தின் அடியிலேயே பள்ளிக்கூடத்தை உருவாக்கிவிட்டனர்.

ஆன்லைன் வகுப்புகள் தொடங்குவதற்கு முன், ஆசிரியர்கள் அனைவரும், தங்கள் வகுப்பு மாணவர்களிடம் இணையம் வழியே பாடம் கற்க வசதிகள் இருக்கிறதா என்பதை உறுதி செய்ய வேண்டும் என பள்ளிகளுக்கு உத்தரவிடப்பட்டது. அப்போதுதான், அந்த பள்ளி ஆசிரியர்களுக்கு, தங்கள் பள்ளி மாணவர்கள் ஏழு பேர் வீடே இல்லாத நிலையில், இணையத்தில் பாடங்களைத் தொடர வழியே இல்லை என்பது தெரிந்தது.

இந்த ஏழு மாணவர்களும், ஒரே இடத்தில் வாழாமல் இடம் விட்டு இடம் மாறி பயணிக்கும் நாடோடி சமூகத்தை சேர்ந்தவர்கள். வீடில்லாமல் இருந்தாலும், இக்குழந்தைகளின் பெற்றோர்கள் பிள்ளைகளை தினமும் பள்ளிக்கு அனுப்பி வந்துள்ளனர். ஆனால்,  இந்தாண்டு கல்வியைத் தொடர முடியாமல் போனால், அவர்கள் திரும்பப் பள்ளிக்கு வருவது கேள்விக்குறிதான்.

குழந்தைகள் பள்ளிக்கு வரமுடியாவிட்டால் என்ன, பள்ளியையே குழந்தையிடம் கொண்டு சென்றுள்ளனர் இந்த கேரள ஆசிரியர்கள். கொச்சியின் புறநகர்ப் பகுதியில் அமைந்துள்ள வல்லர்பாடம் என்ற பாலத்தின் அடியில்தான், இந்த குடும்பங்கள் வசித்து வருகின்றனர். ஆசிரியர்கள், தினமும் காலை பதினொறு மணி அளவில், இந்த பாலத்திற்குக் கீழ் வந்துவிடுவார்கள். முந்தைய நாளின், ஆன்லைன் வகுப்புகளைத் தரவிறக்கம் செய்து லேப்டாப், விளக்கப்படம், முகக்கவசம், ஹாண்ட் சானிடைசர் என அனைத்தையும் கொண்டு வருவர்.

ஐந்து முதல் ஏழாம் வகுப்பு வரை பயிலும் இக்குழந்தைகளுக்கு, முகக்கவசம் அணிவித்து, ஒரு மணி நேரம் கணிதம், அறிவியல், வரலாறு என அனைத்து முக்கிய பாடங்களும் கற்றுத்தருவார்கள். இது குறித்து அப்பள்ளியின் தலைமை ஆசிரியர் எலிசபெத் கூறும் போது, ‘‘பெற்றோர்களைச் சம்மதிக்கவைப்பது மிகவும் சவாலாக இருந்தது. தினமும் ஆசிரியர்கள் அவர்களிடம் பேசி, குழந்தைகள் கல்வியைத் தொடர அனுமதி பெற்றனர்.

அங்கே சென்ற போதுதான், இந்த ஏழு மாணவர்களைத் தாண்டியும் சில குழந்தைகள் பள்ளிக்கே போகாமலிருந்தது தெரியவந்தது. எங்கள் ஆசிரியர்கள் அவர்களுக்கும் சேர்த்தே பாடம் எடுக்கத் தொடங்கினர். முதல் சில நாட்கள் எங்கள் ஆசிரியர்களே பாலத்திற்குக் கீழே ஒரு  இடத்தை சுத்தம் செய்து, வகுப்புகள் எடுக்க ஏற்பாடுகள் செய்தனர். பின் தினமும் மூன்று ஆசிரியர்கள் அங்கே சென்று பாடங்கள் எடுப்பார்கள்” எனக் குறிப்பிட்டுள்ளார். இந்த ஆண்டு பள்ளிக்குச் செல்ல முடியாததால், குழந்தைகள் தங்கள் பெற்றோருடன் மீன் சந்தைக்குச் சென்று உதவியாய் இருந்துள்ளனர். ஆனால் இப்போது ஆசிரியர்களே இவர்கள் வசிக்கும் இடம் தேடி வந்து பாடம் எடுப்பதால், குழந்தைகள் உற்சாகத்தில் ஆர்வமாக பயில்வதாக கூறப்படுகிறது.

பெற்றோர்கள் மீன் பிடிக்கவும், மீன் சந்தைக்கும் சென்று விட, இக்குழந்தைகள் பெரியவர்களின் பராமரிப்பின்றி தனியாகத்தான் இருப்பார்கள். ஆனால் ஆசிரியர்கள் இவர்களை தனியாக  விட்டுச் செல்வதில்லை. அவர்களது குடும்பத்தினர் திரும்பி வரும் வரை, அவர்களை கவனித்துக்கொண்டு, குழந்தைகளுடன் சேர்ந்து ஓவியமும் கலைப் பொருட்கள் செய்தும் துணையாய் இருக்கின்றனர்.

இக்குழந்தைகளிடம் பிறப்பு சான்றிதழோ, ஆதார் அட்டை, ரேஷன் அட்டை என எந்தவொரு அடையாளமும் இல்லை. இவர்கள் வசிக்கும் இடத்தில் குழந்தைகளுக்கு பாதுகாப்பாகச் சுவர், கதவு என எந்தவொரு வசதியும் இல்லை. இவர்களுக்குக் கூரையாக இருப்பது வல்லர்பாடம் பாலம்தான். ஆனால் இப்போது மழைக்காலம் ஆரம்பமாகும் நிலையில், இவர்கள் தங்க பாதுகாப்பான இடம் தேவை. இதனால் பள்ளி அதிகாரிகளும் ஆசிரியர்களும் அரசாங்கத்திடம் வீட்டு வசதி கோரியும் முறையிட்டுள்ளனர்.   

தொகுப்பு: ஸ்வேதா கண்ணன்

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • 07-03-2021

  07-03-2021 இன்றைய சிறப்பு படங்கள்

 • 07-03-2021

  22-11-2018 இன்றைய சிறப்பு படங்கள்

 • 06-03-2021

  06-03-2021 இன்றைய சிறப்பு படங்கள்

 • military-helicopter5

  துருக்கியில் ராணுவ ஹெலிகாப்டர் தரையிறங்க முயன்ற போது கீழே விழுந்து வெடித்து சிதறியதில் 11 பேர் பலி..!!

 • 05-03-2021

  05-03-2021 இன்றைய சிறப்பு படங்கள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்