SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

கற்பித்தல் என்னும் கலை

2020-10-13@ 17:04:59

நன்றி குங்குமம் தோழி

மூன்று வயது முதல் பதினேழு வயது வரை ஒரே பள்ளியில், பார்த்த முகங்களையே பார்த்துக்கொண்டு, பழகிய நண்பர்களை உறவுகள் போன்று பாவித்துக்கொண்டு, அதுதான் சந்தோஷமான உலகம் என்று நினைப்பவர்கள் பள்ளி மாணவச்செல்வங்கள். கல்லூரிகளில் ஏற்படும் நட்பைவிட, பள்ளிகளில் ஏற்படும் நட்பு மிகவும் ஆழமானது. எல்.கே.ஜி. முதல் பனிரெண்டாம் வகுப்பு வரை என்பது ஒரு நீண்ட வாழ்க்கை. நாம் நடைமுறையில் பார்த்தால், நிறைய பேர் ‘பால்ய சிநேகம்’ என்று அறிமுகப்படுத்துவார்கள். அது என்றும் நீடித்து தொடரக்கூடியது. அந்த வயதில் எந்த ஏற்றத்தாழ்வுகளும் தெரியாது.

அனைவரையுமே நட்பாகப் பார்க்கக்கூடிய காலகட்டம். ஆனால் கல்லூரி நட்பு ஓரளவு வளர்ந்தவுடன் கிடைப்பது. மேலும் அவரவர்களே தங்கள் நட்பை தேர்ந்தெடுக்கும் காலகட்டம். வெவ்வேறு சூழல்களிலிருந்து, வெவ்வேறு ஊர்களிலிருந்து ஒவ்வொரு விதமான பழக்க வழக்கங்கள் கொண்டவர் அனைவரும் கலந்து காணப்படும் மாணவர் உலகம் என்றுகூட சொல்லலாம். ஆனால் பள்ளிப்பருவம் நல்லபடியாக இருந்துவிட்டால், எங்கு சென்றாலும் மாணவர்கள் குணவான்களாகத்தான் இருப்பர்.

சிறுவயதில் கட்டுப்பாட்டுடன் வளரும் எந்தக் குழந்தைகளும் வழிமாறிச் செல்லுவதுமில்லை. பெற்றோர் பாதுகாப்பு, ஆசிரியர் கண்காணிப்பு அவர்களுக்கு எதிர்காலத்திற்கான ஒரு நல்ல அஸ்திவாரத்தை அமைத்துத் தருகிறது. சில சமயங்களில் இடையிடையே மாணவர்கள் வேறு பள்ளிகளிலிருந்தோ, வேறு ஊர்களிலிருந்தோ, அவரவர் குடும்ப சூழல் பொறுத்து வந்து சேருவர். அப்பொழுது புதிய இடத்தில் தனக்கென சில நண்பர்களை உருவாக்கிக்கொள்ளுவர். பெரும்பாலும் நல்ல சூழலில் வளர்ந்துவரும் பிள்ளைகள், தன்னை எந்த அளவிலும் மாற்றிக்கொள்ள மாட்டார்கள். சிலர் வெளியில் விளையாட்டுப் பயிற்சிகளுக்கென வெவ்வேறு இடங்களுக்குச் செல்வதுண்டு. அங்கு பலவிதமான சூழலிலிருந்து வருபவர்களை சந்திக்கும்பொழுது, நட்பு ஏற்படலாம். எங்காவது ஒன்றிரண்டு தவறான போக்கில் செயல்படுவர்.

அப்பொழுதும் அரசுத் தேர்வு அருகில் வந்துவிட்டால், மிகவும் கடினமாக உழைக்க ஆரம்பித்துவிடுவார்கள். சிலருக்கு தேர்வின் முக்கியத்துவமே தெரியாமல் போகும். அவர்கள் அதன் முக்கியத்துவத்தை உணரும்பொழுது, தன்னை தயார் செய்துகொள்ள போதிய கால அவகாசம் இல்லாமல் போய்விடும். அத்தகைய சமயங்கள் பெற்றோருக்கும், ஆசிரியர்களுக்கும் மனஅழுத்தத்தைத்தான் அதிகரிக்கும். கற்பிப்பவர் மிகவும் கண்டிப்பாக, எப்பொழுதும் கோபமாகப் பேசினால் பிள்ளைகளுக்கு அது பிடிக்காமல் போகலாம்.

ரொம்பவும் அன்புடன் மென்மையாகப்பழகி வந்தாலும் அதுவே அவர்களுக்கு சலுகை அளிப்பது போன்ற உணர்வை ஏற்படுத்தித்தரும். எனவே அன்பாகப் பேசியும், தவறை சுட்டிக்காட்ட வேண்டிய இடங்களில் எடுத்துரைத்தும், அவர்கள் செய்யும் தவற்றை புரிந்துகொள்ளும்படியும் கருத்துக்களை பரிமாறலாம். பிள்ளைகள் தங்களுக்குள் நெருங்கிய நண்பர்கள் என்று சிலரைச் சொல்வார்கள். அவர்கள் எங்கு சென்றாலும் சேர்ந்து செல்வார்கள். தவறு செய்தாலும், அந்த நட்புவட்டம் ஒன்றாக மாட்டிக்கொள்ளும்.

மிக நட்போடு பழகும் ஆசிரியரிடம், முக்கியமான விஷயங்களைக்கூட சில சமயங்களில் விளையாட்டாக எடுத்துக்கொள்வார்கள். அதுபோன்ற மாணவர்களை தேர்வுக்கு முன்பு, வீட்டிற்கு அழைத்து அதிகப்படியான பயிற்சி கொடுப்பது வழக்கம். ஒரு ஆங்கில ஆசிரியை அப்படி ஒரு சேவை செய்யப்போய், அது அவர்கள் வீட்டுப் பிரச்னையாகவே மாறிவிட்டது. பழக்க தோஷத்தால் பாதிக்கப்பட்ட, மூன்று நான்கு நண்பர்கள் மாதிரித் தேர்வில் மதிப்பெண் சரியாக எடுக்கவில்லை. ஆசிரியர் மிகவும் மனம் நொந்து மாணவர்களை அழைத்துப் பேசினார்.  ‘‘நடந்தது போகட்டும்.

இனி தேர்வுக்கு வேண்டிய பயிற்சிகளில் கவனம் செலுத்துங்கள். நான் உங்களுக்கு வேண்டிய உதவிகளைச் செய்கிறேன். கால அட்டவணை போட்டுத் தருகிறேன். அதன்படி ஒவ்வொரு நாளும் குறிப்பிட்ட பாடத்தை படித்து எழுதிக்காட்டுங்கள். நான் முடிந்தவரை உங்களுக்கு உதவி செய்கிறேன்’’ என்று சொல்லுவதுடன் மட்டுமல்லாது, எந்தெந்த நாட்களில் அவர்கள் தன் வீட்டிற்கு, எந்த நேரத்தில் வரவேண்டுமென்பதையும் எழுதித் தந்தார்.

அதன்படி அவர்களுக்கு எளிய முறையில் விளக்கித்தந்து, குறைந்தபட்ச தேர்ச்சிக்கு மதிப்பெண் எடுக்குமளவிற்கு தயார் செய்தார். ஆனால் ஆசிரியைக்கும் சில பிரச்னைகளை எதிர்கொள்ள வேண்டியதாக இருந்ததாம். அவர் அமர்ந்து மாணவர்களுக்கு சொல்லித்தரும் நேரம், கணவர் அலுவலகத்திலிருந்து வந்து ஓய்வெடுக்கும் நேரமும்கூட. பிள்ளைகளுக்கு சொல்லித் தருவதற்காக கணவரை வேறு இடத்திற்கு போகச் சொல்லி வற்புறுத்தியும் கூறியிருக்கிறார்.

எத்தனையோ வாக்குவாதங்கள் நடந்தாலும், எங்களின் நோக்கம் பிள்ளைகளை தேர்ச்சி பெறச் செய்வதுதான். குடும்பம் என்றால் பிரச்னைகள் வருவது சகஜம்தான். அது வந்துபோகும். ஆனால் படிக்காத பிள்ளைகளை தேர்ச்சி பெறச் செய்வதென்பது நம் மகத்தான பணியின் சாதனை என்பதை உணர்ந்தோம். அவர்கள் நல்ல மதிப்பெண் பெற்றதுடன், நல்ல பிள்ளைகளாகத் தன் பொறுப்பையும் உணர்ந்தார்கள். இன்று வரை அவர்கள் கூறுவது ‘‘அன்று அவர் அத்தகைய வகுப்பெடுத்து, எங்களை தேர்ச்சி பெற வைக்காதிருந்தால், நாங்கள் பள்ளிப்படிப்பைக்கூட சரியாக முடித்திருக்க மாட்டோம்.
நாங்கள் செய்த தவறுகளிலிருந்து திருந்திஇருக்க மாட்டோம்’’ என்பதுதான்.

இத்தகைய சூழலில், வீட்டிற்கு அழைத்து தனியே பயிற்சி அளிக்க வேண்டுமானால், கற்பிப்பவர் மட்டும் நினைத்தால் முடியாது. அவர்கள் குடும்பத்தினரின் ஒத்துழைப்பும் தேவை. வீட்டில் சிறு குழந்தைகளோ, முதியோர்களோ இருந்தால் இவை சாத்தியப்படுமா என்றெல்லாம் பார்க்க வேண்டியுள்ளது. குறிப்பிட்ட நேரத்தில் வீட்டு வேலைகளை தியாகம் செய்ய வேண்டும். கணவர் ஆசிரியராக இருந்தால் மனைவி விட்டுத் தரவேண்டும். மனைவி ஆசிரியையாக இருந்தால் கணவர் விட்டுக்கொடுக்க வேண்டும். இதற்கிடையில் சில சமயங்களில் உறவினர்களும்கூட பாதிக்கப்படுவர். பெரும்பாலும், மாலை நேரங்களில் தொலைபேசி அழைப்பு வரும்போதெல்லாம் ‘‘நான் பிள்ளை களுடன் இருக்கிறேன். அப்புறம் பேசுகிறேன்’’ என்றுதான் சொல்ல வேண்டி வரும். அதிலும் பிப்ரவரி முதல் ஏப்ரல் முடியும் வரை அவர்கள்தான் எங்கள் குடும்பம்.

பாவம் உறவினர், அவர்களுக்கு முடியும்பொழுது தொலைபேசியில் தொடர்புகொள்ள நினைப்பார்கள். சிலர் வீட்டிற்கு வரக்கூட நினைப்பார்கள். என்ன செய்வது? குறிப்பாக, அரசுத்தேர்வு எழுதும் மாணவர்களுக்கு உதவி விரும்பும்பொழுது, சிலவிதமான தியாகங்களை செய்யத்தான் வேண்டியுள்ளது. மறுநாள் ‘போன்’ பேசாமல் முதல்நாள் கூப்பிட்டவர்களை, நினைவில்லாமல் விட்டோமானால், அதுவே சில மனஸ்தாபங்களை ஏற்படுத்தலாம். சமீபத்தில் நடந்த சில சந்திப்புகளைக்கூட ஏற்க முடியாத சூழல். பலமுறை பிறந்தநாள், திருமண நாள் போன்ற விசேஷங்களைக்கூட பிள்ளைகளுடனே கொண்டாடி, அவர்களுக்கு விருந்தளித்து குடும்ப அங்கத்தினர்கள் போன்று பாவித்தோம்.

பாடம் கற்றுத்தருவது மட்டுமல்ல, நாடகம் - நாட்டியம் போன்ற கலைத்துறையிலும் அவர்கள் மேடையேறத் துடிப்பார்கள். இப்பொழுது நிறைய ‘சேனல்கள்’, ‘மீடியாக்கள்’ திறமையை ஊக்குவிக்கின்றன. சுமார் முப்பது ஆண்டுகளுக்கு முன், மேடை ஏிறனால்தான் அவன் திறமைசாலியாக கருதப்பட்டான். அதனால் அதற்குப்போட்டி நிறையவேயிருந்தது. இப்பொழுது அனைத்து கலைகளுக்கும், வகுப்புகள் நிறைய அங்கங்கே நடத்தப்படுகின்றன.

நிறைய தனிப்பட்ட பள்ளிகள் வந்துவிட்டன. அங்கு சென்று கற்றுக்கொண்டால், அவர்களே அனைத்திற்கும் தயார் செய்து விடுகிறார்கள். மேலும் பெற்றோர் ஒத்துழைப்புடன் எங்கு வேண்டுமானாலும், போட்டிகளில் பங்கு கொண்டு வெற்றி பெறுகிறார்கள். வெற்றி பெற்றதை பள்ளியிலும் சொல்லி மேலும் பாராட்டைப் பெறுகிறார்கள். நிறைய வாய்ப்புகள் திறமையைத் தேடி வருகின்றன. ஆனால் அப்பொழுது திறமைகளை நாங்கள் தேடிக் கண்டுபிடித்தோம்.

ஒரு சிலரைப் பார்த்தால், அவர்களின் திறமையே தெரியாது. பழகிப் பழகி பாடம் சொல்லித்தரும்பொழுது, அவர்கள் அதை எவ்வளவு தூரம் உள்வாங்கிக் கொள்கிறார்கள், அதன் பயனாக எவ்வளவு தூரம் புரிவுணர்வை வெளிப்படுத்துகிறார்கள் என்பதை வைத்து அவர்கள் திறமையை கணிக்கலாம். சிறிது நாட்கள் பொறுமையுடன் அவர்கள் வகுப்பை விரும்பும்படி உற்சாகப்படுத்திக்கொண்டேயிருந்தால் போதும்.

வகுப்பை விரும்பினால், பாடத்தை அவசியம் விரும்புவார்கள். இடையிடையே அவர்களுக்கு ஏற்படும் ஐயங்களுக்கு நாம் தீர்வு தரத்தயாராக நம்மையும் தயார்படுத்திக்கொள்ள வேண்டும். அதனால்தான் பாடத்தைப் பற்றிய முழு விபரங் களையும் தெரிந்துகொள்ள வேண்டும் என்பார்கள். ஆங்கிலத்தில் ‘சப்ஜெக்ட் நாலெட்ஜ்’ என்பார்கள். மாணவர்கள் என்று எடுத்துக்கொண்டால், சிலர் அத்தகைய புரிதலோடு ஒவ்வொன்றையும் கற்பார்கள். சிலர் ரொம்ப மனப்பாடம் செய்வார்கள். ஒரு சிலர் மனப்பாடம் செய்வதில் ‘புலி’யாக இருப்பார்கள்.

சொந்தமாக நடுவில் ஏதேனும் கேள்விகள் கேட்டால், அவர்களால் பதிலளிக்க இயலாது. இப்படியாக, முப்பது வருடங்களுக்கு முன் என்று நினைக்கிறேன். ஒரு பாடப்பகுதியை சுருக்கமாக வகுப்பில் மாணவனிடம் சொந்த வார்த்தைகளில் கூறச்சொன்னேன். அவன் அட்டையிலுள்ள பதிப்பகம் பேர் முதல் கடைசியில் உள்ள ஆசிரியர் பற்றிய செய்திகள் வரை ஒப்புவித்தான். இதைக்கேட்டு முழு வகுப்பும் சிரித்த ஒலி கேட்டு, பக்கத்து வகுப்பிலிருந்த ஆசிரியர்கள் வந்துவிட்டனர். அப்பொழுது சிரித்தாலும், அவனின் மனப்பாட சக்தியைப் பாராட்டி, அவனுக்கு வேண்டிய சில குறிப்புகளைத்தந்து, புரிந்து பதில் சொல்லும் முறையை பின்பற்றச் சொன்னோம்.

அதுபோல், புத்தித்திறன் அதிகம் கொண்ட மாணவர்கள் நிறைய உண்டு. அதில் ஒருவனை ‘அகராதி’ என்றுகூட சொல்லலாம். அந்த அளவுக்கு அறிவு ஜாஸ்தி அவனுக்கு. ஆனால், அவனுக்கு நிறைய தெரியும் என்பதைக் காட்டும் விதமாக இடையிடையே பல கேள்விகள் கேட்டு பாடத்தை முடிக்க விடாமல்கூட செய்வது வழக்கம். இதனால், அவன் மேடைப்பேச்சிற்கோ, ஏதேனும் நாடகத்திற்கோ அழைக்கப்பட மாட்டான்.

‘நாம் இவ்வளவு புத்திசாலியாக இருந்தும் நமக்கு மேடையேற வாய்ப்பே கிடைக்கவில்லையே!’ என்று மிகவும் தனக்குள் வருத்தப்பட்டிருக்கிறான். ஒருமுறை என்னிடம் வெளிப்படையாகக் கூறி வேதனைப்பட்டான். ‘‘சந்தர்ப்பம் நேரும்பொழுது வாய்ப்பு உன்னைத்தேடி வரும்’’ என்று சொன்னேன். பின் ஆங்கில ஆசிரியையிடம் அவன் திறமையைச் சொல்லி சிபாரிசு செய்து வைத்தேன். ‘‘அவன் அதிகப்படியாக பேசி விடுவானோ என்கிற பயம் எனக்கு. இருந்தாலும் நீங்கள் சொன்னதால் சேர்த்துக்கொள்கிறேன்’’ என்றார்.

நகரின் பல பள்ளிகளுக்கான நாடகப்போட்டி அது. ‘‘ஷேக்ஸ்பியர்’’ நாடகம் எங்கள் பள்ளி சார்பில் அரங்கேறியது. மேடை அலங்காரம் முதல் உடை வடிவமைப்பு வரை எங்கள் பள்ளி பாராட்டைப் பெற்றது. பல்வேறு நடுவர்களுக்கிடையே, பல விவாதங்களுக்குப்பின், வெற்றி பெற்றது எங்கள் நாடகமாக அறிவிக்கப்பட்டது. அதுவும் மேலே குறிப்பிட்ட பையன் மிகச் சிறந்த பேச்சாளராக அறிவிக்கப்பட்டான். நேரே அந்த ஆசிரியை ஓடிவந்து என்னை தழுவிக் கொண்டார். பையனுக்கு வார்த்தைகள் வரவில்லை. கண்ணீர்தான் வந்தது. ‘‘மிஸ் பெரிய தாங்க்ஸ்’’ என்றான் என்னிடம். இதுதான் மாணவருக்கும் கற்பிப்பவருக்குமான தொடர்பு என்பது. ஏணியில் ஏற சொல்லித் தந்தால் போதும். நடுவே ஊக்க வார்த்தைகள் போதும்! உச்சியை அடைந்து விடுவார்கள்.

தொகுப்பு: சரஸ்வதி ஸ்ரீநிவாஸன்

படங்கள்: ஜி.சிவக்குமார்

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • 04-12-2020

  04-12-2020 இன்றைய சிறப்பு படங்கள்

 • rainpurevi111

  தமிழகத்தை மிரட்டும் புரெவி புயல்... கொட்டும் மழை; கொந்தளிக்கும் கடல் : சாலைகளில் சூழ்ந்த வெள்ளம்!!

 • radish3

  புவியீர்ப்பு சக்தியில்லாத சர்வதேச விண்வெளி நிலையத்தில் முள்ளங்கியை வெற்றிகரமாக வளர்த்த நாசா விஞ்ஞானிகள்!: புகைப்படங்கள்

 • farmers_proteeee11

  மத்திய அரசின் சட்டங்களை எதிர்த்து வீறுகொண்டெழுந்த விவசாயிகள்... டெல்லியில் 8வது நாளாக ஆவேச கோஷங்களை எழுப்பி போராட்டம்!!

 • 03-12-2020

  03-12-2020 இன்றைய சிறப்பு படங்கள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்