SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

வெட்டிவேரில் விசிறி தயாரிப்பு!

2020-10-13@ 16:57:22

நன்றி குங்குமம் தோழி

மிகவும் குறுகிய காலத்தில் பாண்டிச்சேரி ஆர்ட்ஸ் அண்டு கிராப்ட்ஸ் கிராமத்தின் தவிர்க்க முடியாத அடையாளம் ஆகியுள்ளது ஐராணி ராமச்சந்திரனின் இமயம் கிராப்ட் பேக்ஸ் சிறு தொழில் நிறுவனம். பாண்டியிலேயே பிறந்து வளர்ந்த ஐராணிக்கு, 1996ம் ஆண்டு திருமணம் நடந்தது. கணவர் ராமச்சந்திரனின் பிளம்பிங் தொழிலில் கிடைக்கும் சொற்ப வருமானத்தில் வாழ்க்கையை ஓட்ட வேண்டும் என்ற கட்டாயம். பத்து ஆண்டு மண வாழ்வில் 2 பிள்ளைகள். பற்றாக்குறை வருமானத்தில் தவித்த ஐராணியை, பள்ளிப் பருவத்தில் அவர் கற்றுக் கொண்ட எம்ப்ராய்டரி வேலைப்பாடு ஓரளவு தலை நிமிர்த்தியது என்றால் மிகையாகாது.

‘‘பத்தாண்டுகளாகியும் பொருளாதார முன்னேற்றம் காண முடியவில்லையே, பிள்ளைகளை வளர்த்து ஆளாக்க வேண்டுமே, அவர்களின் கல்லூரி படிப்புக்கு என்ன செய்வது என்றெல்லாம் யோசித்தேன். அப்போது தான் எம்ப்ராய்டரி என் மனதில் பிளாஷ் அடித்தது. சில நூறு முதலீட்டில் துணி வாங்கி, அதில் எம்ப்ராய்டரி வேலைப்பாட்டை வித்தியாசமாக வெளிப்படுத்தி பெண்களுக்கான கைக்குட்டை தயாரித்து பொருட்காட்சிகளில் விற்று, சிறு லாபம் பார்த்தேன். இப்படித்தான் எனக்கு தொழில் பிடிப்பு ஏற்பட்டது.

இதனிடையே இந்தியன் வங்கி ஏற்பாடு செய்த பெண்களுக்கான சிறு தொழில் வாய்ப்பு நிகழ்ச்சியில் பழ வகைகளில் இருந்து ஜூஸ், ஜாம் தயாரிக்க கற்றுக் கொண்டேன். நிகழ்ச்சி ஏற்பாடு செய்த இடத்தில், வித விதமான துணிப் பைகளை கடை விரித்து பெரியவர் ஒருவர் விற்பனை செய்தது என்னை ஈர்த்தது. வித்தியாசமாக இருக்கவே, பெரியவரிடம் கனிவாக விசாரித்தேன். இயற்கை வண்ணங்களில் ஓவியம் தீட்டப்பட்ட கலம்காரி ரகம் எனக் கூறினார். 1,000 ரூபாய்க்கு பைகளை வாங்கி விற்க இருப்பதாக அவரிடம் கூறினேன். அவரும் எனக்கு உற்சாகமளித்து, விற்பனை நுணுக்கங்களும் கற்றுத் தந்தார். இன்றும் என்னுடைய தொழிலுக்கான குருநாதர், வழிகாட்டி அவர்தான். எம்ப்ராய்டரி கைக்குட்டையுடன் அந்த பைகளையும் கண்காட்சியில் விற்றதில் கணிசமான லாபம் கிடைத்தது’’ என்றவர் அடுத்த கட்ட வளர்ச்சியை நோக்கி பயணிக்க ஆரம்பித்தார்.

‘‘இதனிடையே சுய உதவிக் குழுவில் தலைவியாக இருந்த எனக்கு சென்னை ராஜீவ் காந்தி தொழில் பயிற்சி நிறுவனத்தில் தொழில் முனைவோர் பயிற்சி பெறும் வாய்ப்பு கிடைத்தது. அங்கு தான் இளம் தொழில்முனைவராக புடம் போடப்பட்டேன். இப்படி 2004ம் ஆண்டு தொடங்கி படிப்படியாக வளர்ச்சி கண்டு வந்த எனக்கு 2018ம் ஆண்டு தான் பாண்டிச்சேரி ஆர்ட்ஸ் அண்டு கிராப்ட்ஸ் கிராமத்தில் எனது தொழில் நிறுவனத்தை தொடங்கும் சந்தர்ப்பம் அமைந்தது.

தற்போது என்னிடம் ஐந்து பேருக்கு மேல் வேலை பார்க்கிறாங்க. என்னால் அவர்களின் குடும்பத்தில் பொருளாதார விளக்கு நிரந்தரமாக ஒளி வீசுகிறது என்று நினைக்கும் போது, பெருமையாக உள்ளது. அதற்கு நான் மட்டும் உழைத்தால் போதாது. என்னுடன் வேலை பார்க்கும் பெண்களிடம் ஆர்வமும், கடுமையான உழைப்பும் இருந்தால் மட்டுமே சாத்தியப்படும். அது மட்டுமன்றி தொழிலில் எப்போதும் எதாவது ஒரு வகை போட்டி இருந்து கொண்டிருக்கும். அதற்காக கலக்கமோ, அச்சமோ இன்றி போட்டியை தகர்க்க, நம்மால் புதிதாக என்ன செய்ய முடியும் என யோசித்தால், எந்த வித போட்டியையும் நாம் சமாளித்துவிடலாம்.

அந்த வகையில்தான் இப்போது வெட்டிவேர் பயன்படுத்தி கை விசிறிகளை கற்பனை திறத்துடன் தயாரித்து விற்பனை செய்து வருகிறோம். அதி அற்புத மருத்துவ குணங்களை கொண்ட வெட்டிவேர், உடலுக்கு மிகவும் குளிர்ச்சியானது என்பதால் பனை ஓலை விசிறியைக் காட்டிலும் விற்பனையில் நல்ல வேகம் பிடித்துள்ளது. கோடையின் கேடயம் எனப்படும் வெட்டிவேர் உடல் சூட்டை தணிக்கும், சிறுநீர் சீராக பிரிய உதவும், மேலும் இதன் நறுமணம் மனதுக்கு புத்துணர்ச்சியும் உற்சாகத்தையும் ஏற்படுத்தும் என்பதால், அதன் முக்கியத்துவத்தை அறிந்து பலரும் விரும்பி வாங்குகிறார்கள். குறிப்பாக வெளிநாட்டினர் பலரும் அதீத ஆர்வத்துடன் வாங்கிச் செல்கின்றனர்’’ என்றவர் பாண்டிச்சேரியில் புகழ் பெற்ற சண்டே மார்க்கெட்டில் தன்னுடைய கைவினைப் பொருட்களை விற்பனைக்கு வைத்துள்ளார்.

‘‘வெட்டி வேர் கொண்டு விசிறி மட்டுமன்றி வேறு பல கைவினை பொருட்களும் உற்பத்தி செய்கிறோம். மணிபர்ஸ், கைப்பை போன்றவை எங்களின் தனித்துவம் வாய்ந்த படைப்புகளை. பெண்கள் வெளியில் எடுத்துச் செல்லும் கைப்பைகளை 50க்கும் மேற்பட்ட வடிவங்களில் உற்பத்தி செய்கிறோம். மொத்த விற்பனை மட்டுமன்றி சில்லரை விற்பனையிலும் ஈடுபட்டு வருகிறோம். சுற்றுச்சூழல் பாதிப்பு இல்லாத, உடலுக்கு தீங்கு விளைவிக்காத பொருட்களை உரிய கவனத்துடன், குறை ஏதுமின்றி தயாரித்து வருவதால் தொழிலை மிகவும் சிரத்தையுடன் அடுத்தடுத்த கட்டத்திற்கு கொண்டு செல்ல முடிந்துள்ளது’’ என்று கூறும் ஐராணி ஆரம்ப காலத்தில் பல இன்னல்களை சந்தித்துள்ளார்.

‘‘தொழில் தொடங்கிய புதிதில் கிடைத்த லாபத்தை சேர்த்து வைத்து அதன் மூலம் ஒரு வருமானம் பார்க்க நினைச்சேன். தெரிந்த ஒரு பெண்ணிடம் சீட்டு கட்டினேன். அது ஒரு சேமிப்பாக இருக்கும் என்று பார்த்தேன். ஆனால் அந்த பெண் சீட்டு கட்டிய அனைவரையும் ஏமாற்றி விட்டு சென்றுவிட்டார். அதில் இருந்து மீள்வதற்குள் எனது மகனுக்கு உடல் நிலையில் பாதிப்பு ஏற்பட்டது. முதுகு தண்டுவடத்தில் பிரச்னை இருந்ததால் அதில் அறுவை சிகிச்சை செய்ய வேண்டும் என்று டாக்டர்கள் கூறிவிட்டனர்.

என் தொழிலில் சேர்த்து வைத்திருந்த பணம் தான் அப்போது எனக்கு கைக்கொடுத்தது. என்னுடைய கணவர் பிளம்பிங் வேலை பார்த்து வந்தாலும், என்னுடைய தொழிலுக்கு முழு ஆதரவா இருக்கார். அவர் தான் எனக்கான கணக்கு வழக்குகள் மற்றும் ஆர்டர்கள் குறித்து பார்த்துக் கொள்கிறார். அதனால் என்னால் மேலும் உற்சாகமாக செயல்பட முடிகிறது’’ என்ற ஐராணி ராமச்சந்திரனுக்கு பெண்களை அதிகளவில் தொழில்முனைவராக உருவாக்க வேண்டும் என்பதே இலக்காம்.

தொகுப்பு: தோ.திருத்துவராஜ்

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • sun-dong25

  அற்புதங்களை கண்டு ரசிக்க 2 கண்கள் போதாது!: விஞ்ஞானிகளால் கூட நம்ப முடியாத சன் டூங் குகையின் ஆச்சரிய படங்கள்..!!

 • hongkomgggg_1111

  ஹாங்காங்கில் மனிதர்களை போல முக பாவனைகள், செயல்களை அப்படியே பிரதிபலிக்கும் ரோபோக்கள் உருவாக்கம்

 • china-gold25

  அதிர்ஷ்ட சாலிகள்!: சீன தங்க சுரங்க விபத்தில் 2000 அடி ஆழத்தில் சிக்கி தவித்த 11 பேர் 14 நாட்களுக்கு பிறகு மீட்பு..!

 • 25-01-2021

  25-01-2021 இன்றைய சிறப்பு படங்கள்

 • 24-01-2021

  24-01-2021 இன்றைய சிறப்பு படங்கள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்