SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

வாழ நினைத்தால் வாழலாம்!

2020-10-08@ 17:01:11

நன்றி குங்குமம் தோழி

சமீபத்தில் ஸ்டான்லி மருத்துவ கல்லூரியில் பட்ட மேற்படிப்பு படிக்கும் மாணவர் ஒருவர் மூன்றாம் மாடியிலிருந்து குதித்து தற்கொலை செய்து கொண்ட செய்தி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. சில ஆண்டுகளுக்கு முன்பு மதுரை மருத்துவக் கல்லூரி மாணவர் ஒருவர் விஷ ஊசி போட்டு தற்கொலை செய்து கொண்டார்.  கொரோனா நோய் தொற்றிலும் பலர் தற்கொலை முடிவுகளை தேர்ந்தெடுக்கின்றனர். அடுத்தடுத்து இரு பெண்கள் தற்கொலை செய்து கொண்டதையடுத்து பெண் கொரோனா நோயாளிகள்துப்பட்டா அணிய தடை விதித்து பெங்களூரு மருத்துவமனை ஒன்று உத்தரவு பிறப்பித்துள்ளது.

தற்கொலை எண்ணங்கள் எதனால் ஏற்படுகின்றன. அவற்றை தவிர்க்கும் வழிமுறைகள் என்ன என்பது பற்றி இங்கு அலசுகிறார் பிரபல மன நல மருத்துவரும், தருமபுரி மருத்துவக் கல்லூரியின் மன நல துறை உதவி பேராசிரியருமான டாக்டர் சேகர் ராஜகோபால்.உலகில் மனிதனை தவிர வேறு எந்த பிராணியும் தற்கொலை செய்து கொள்வது கிடையாது. ஆறு அறிவு படைத்த மனிதன் தான் தற்கொலை செய்து கொள்கிறான்.

இந்தியாவில் ஆண்டிற்கு 10,000 மாணவர்கள் தற்கொலை செய்து கொள்கிறார்கள் என்று மனிதவள மேம்பாட்டு துறை ஓர் ஆய்வறிக்கை வெளியிட்டுள்ளது. 15 வயது முதல் 39 வயது வரை உள்ள நபர்களின் இறப்பு அதிகம் தற்கொலையில் மட்டுமே நிகழ்கின்றன என்பது வேதனைக்குரிய விஷயம். இந்தியாவில் மட்டும் சுமார் 12 நிமிடங்களுக்கு ஓர் தற்கொலை நிகழ்கின்றது என்பது மேலும் அதிர்ச்சியளிக்கக்கூடிய செய்தியாக உள்ளது.

காதலில் தோல்வி, பத்தாம் வகுப்பு மற்றும் பனிரெண்டாம் வகுப்பு தேர்வுகளில் எதிர்பார்த்த மதிப்பெண்கள் பெறாத காரணத்தினால் தற்கொலை என்ற தவறான முடிவை எடுத்து விடுகிறார்கள். மேலும் கடன் தொல்லை, போதை பழக்கம், தீராத நோய், குடிகார கணவன், சில சமயம் அப்பா அம்மா திட்டிவிட்டார்கள் என்று கூட தற்கொலை முயற்சியில் ஈடுபடுகிறார்கள். பொதுவாகவே தீவிரமான மன அழுத்தம், மன இறுக்கம் போன்ற மனோநிலையின் அதிகபட்ச வெளிப்பாடே தற்கொலை.

இதற்கு அறிவியல் ரீதியான விளக்கம் உண்டு. விஞ்ஞானிகள் தற்கொலை செய்துகொண்டு இறந்தவர்களின் முதுகுத்தண்டில் துளையிட்டு ஊசி வழியாக மூளையை சுற்றியுள்ள திரவத்தை (Cerebrospinal Fluid) சோதித்து பார்த்ததில், “செரடோனின்”(Serotonin) என்ற நியூரோ ரசாயனம் குறைவாக இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இந்த வேதிப்பொருள் சரியான அளவில் இருந்தால் நாம் சந்தோஷமான மனநிலையில் இருப்போம், குறைவாக இருந்தால் தீவிர மன அழுத்தத்திற்கு தள்ளப்படுவோம் என்பது அறிவியல் பூர்வமான உண்மை.

மனநல மருத்துவர்கள் பரிந்துரைக்கும் மாத்திரைகள் மூளையில் உள்ள செரடோனின் அளவை அதிகமாக சுரக்கச் செய்து தற்கொலை எண்ணங்களை தவிடு பொடியாக்கி, மகிழ்ச்சியான மனோநிலைக்கு மாற்றும்.  உளவியல் ரீதியான கவுன்சிலிங் கொடுப்பதால் மனோபலத்தை அது அதிகப்படுத்தும்.  தீவிரமான தற்கொலை எண்ணங்கள் தொடர்ந்து நீடித்து வந்தால் மின் அதிர்வு சிகிச்சை மூலம் உயிரை காப்பாற்றிவிடலாம். இது சிறந்த பலனை அளிக்கும் சிகிச்சை முறையாகும். இத்தகைய சிகிச்சையை மயக்க மருந்தின் உதவியோடு கொடுப்பதால் நோயாளிக்கு எந்த பாதிப்பும் ஏற்படாது.  

ஒரு கல் பல ஆயிரக்கணக்கான உளிகளின் வலிகளை தாங்கித்தான் ஒரு அழகிய சிலையாக மாறுகிறது. வாழ்க்கையென்றால் பிரச்னைகள் வரத்தான் செய்யும். அதை எதிர் கொண்டு  நம்பிக்கையுடன் மனம் தளராமல் வாழ பழகிக்கொள்ள வேண்டும். உங்கள் கவலைகளை நம்பிக்கைக்குரிய  நண்பர்களிடமும், உற்றார் உறவினர்களிடமும், பெற்ற தாய், தந்தையிடமும் பகிர்ந்து கொள்ளலாம்.

யாரிடமும் பகிர்ந்து கொள்ள முடியாத தருணத்தில் மனநல மருத்துவரின் ஆலோசனையை பெறலாம். எல்லா பூட்டுகளுக்கும் ஒரு சாவி உண்டு என்பது போல் எல்லா பிரச்னைகளுக்கும் ஒரு தீர்வு உண்டு.பெற்றோர்கள் தம் குழந்தைகளை வளர்க்கும் போது, எப்படி தோல்விகளை எதிர்கொள்வது என்று சொல்லிக் கொடுத்து வளர்க்க வேண்டும்.  ஒரு சிறிய ஏமாற்றங்களை கண்டு அழும்போது அதை எதிர்கொள்வது எப்படின்னு தைரியத்துடன் வளர்க்க வேண்டும். இது  அவர்களின் எதிர்கால வாழ்க்கையில் தன்னம்பிக்கை மிக்க நபர்களாக வாழ ஏதுவாக அமையும்.

உதாரணமாக தேர்வில் மதிப்பெண் குறைந்து காணப்படும் அந்த குழந்தையை மனம் துவண்டுபோகாமல், உற்சாகப்படுத்தி அடுத்த தேர்வில் சற்றே அதிகம் மதிப்பெண் பெற்றிருந்தாலும் மேலும் பாராட்டி அவர்கள் வாழ்க்கையில் தன்னம்பிக்கை பெருக முயற்சிக்க வேண்டும். கீதையில் சொல்லியிருப்பதை போல “இந்த உலகத்தில் எதை கொண்டு வந்தோம் இழப்பதற்கு”  என்ற தத்துவத்தை சற்று சிந்தித்துப் பார்த்தாலே, மனம் அமைதி பெறும். நினைவில் கொள்ளுங்கள்.  வாழ்க்கை வாழ்வதற்கே!

தொகுப்பு: அன்னம் அரசு


படங்கள்: ஜி.சிவக்குமார்

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • humanbodies23

  2,000 ஆண்டுகளுக்கு முன் எரிமலை வெடிப்பிலிருந்து தப்பிக்க முயன்ற 2 மனித உடல்கள் இத்தாலியில் கண்டுபிடிப்பு!: புகைப்படங்கள்

 • jammu23

  ஜம்மு காஷ்மீரில் நிலவும் கடுங்குளிர்!: தரை, வீடுகளின் கூரைகள், வாகனங்களின் மேற்பகுதி ஆகியவை பனி உறைந்து வெண்ணிறமாக காட்சி..!!

 • yamuna23

  இனவிருத்திக்காக யமுனை நதியில் கூட்டம் கூட்டமாக படையெடுக்கும் பறவைகள்!: சுற்றுலாப் பயணிகள் ஆர்வமுடன் கண்டு ரசிப்பு..!!

 • chadpuja23

  சூரிய கடவுளுக்கு நன்றி தெரிவிக்கும் சாத் பூஜை!: நியூ ஜெர்சியில் நூற்றுக்கணக்கான அமெரிக்க வாழ் இந்தியர்கள் வழிபாடு..!!

 • isrelviva23

  இப்படிக்கூட விவசாயம் செய்ய முடியுமா!: இஸ்ரேலில் வியக்க வைக்கும் செங்குத்து வேளாண்மை..புகைப்படங்கள்..!!

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்