SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

பயப்படுகிறார் என் கணவர்

2020-10-07@ 17:08:51

என்ன செய்வது தோழி?

அன்புடன் தோழிக்கு,

வழக்கமாக இந்தப் பகுதியில் தோழிகள்,  தங்கள் பிரச்னைகள் குறித்தும், குறிப்பாக ஆண்களால் தாங்கள் பாதிக்கப்பட்டது  குறித்தும்  கேள்விகள் கேட்பதை பார்த்திருக்கிறேன். ஆனால் நான் கேட்கும் கேள்வியும் ஏறக்குறைய அப்படித்தான். ஆனால் பாதிக்கப்பட்டுள்ளது ஒரு ஆண். அவர் என் கணவர். அதனால் நானும் மன உளைச்சலுக்கு ஆளாகியுள்ளேன்.

என் கணவர் மிகவும் அன்பானவர். என்னிடமும் பிள்ளைகளிடத்திலும் எப்போதும் அன்பாக நடந்து கொள்வார். நண்பர்கள், உறவினர்கள் என எல்லோரிடமும் அனுசரணையாக பழகுவார். அதனால் அவரை எல்லோருக்கும் பிடிக்கும். அவர் சாமி எல்லாம் கும்பிடமாட்டார். ஆனால் நாங்க போக விரும்பும் கோயில் எந்த ஊரில் இருந்தாலும் அழைத்துச் செல்வார். அந்த கோவிலின்,  கட்டிடக்கலையின் சிறப்புகளை எங்களுடன் பகிர்ந்து கொள்வார்.

எங்களுடன் கோவில்களுக்கு வரும் போது உற்சாகமாக தான் வருவார். திருவண்ணாமலையில்  இடுக்குப் பிள்ளையார் கோயில் ஒன்று உள்ளது. அந்த கோவிலுக்குள் நுழைய வேண்டுமென்றால் இரண்டு பாறைகளுக்கு இடையில் குறுகலான சந்தில் நுழைந்து அடுத்த பக்கம் செல்ல வேண்டியிருக்கும். அதையெல்லாம் என் கணவர் ஆர்வமாக செய்வார். இதெல்லாம் நல்ல பயிற்சி என்று சொல்வார்.

அதே போல் ஒரு முறை மராட்டிய மாநிலம் நாசிக்கில் உள்ள காலா ராம் கோயில் சென்றோம். வழக்கம்போல் அங்கு நடந்த புரட்சி, போராட்டங்கள் குறித்து கூறினார். காலா ராம் கோவில் எதிரில் ஒரு ராமர் கோவில் எதிரே உள்ள பாதாள சீதா ராமர் கோயிலுக்குள் தவழ்ந்து குகைக்குள் நுழைந்து மிகவும் சிரமப்பட்டு செல்லவேண்டும். அந்த இடத்திலும் அவர் எங்களைவிட உற்சாகமாக, முன்வந்து, நகர்ந்து வந்தார்.

இதையெல்லாம் ஏன் சொல்கிறேன் என்றால் இப்போதெல்லாம் அதுபோன்ற இண்டு இடுக்குகளில் செல்வதைப்பற்றி பேசினாலே பதட்டப்படுகிறார். அதேபோல் தனி அறைக்குள் இருப்பதென்றால் தயங்குகிறார். திரைப்படங்களில் சிறைச்சாலை காட்சிகள் வந்தால் பதட்டப்படுகிறார். “அந்த தனி அறைக்குள் ஒரு மனிதன் எப்படி தனியாக இருக்க முடியும்? எவ்வளவு கொடுமையான விஷயம். அதனால் மனநலம் பாதிக்கப்பட்டு விடுமே, தனியாக இருப்பது மிகவும் கஷ்டமாக இருக்குமே’’... என்று சொல்ல ஆரம்பித்தார்.

‘‘ஒரு அறைக்குள் ஒருவனை பூட்டி வைத்துவிட்டு அவனை அங்கும் இங்கும் நகர விடாமல் செய்வது மிகப்பெரிய தண்டனையல்லவா” என்பார். அவர் திரைப்படங்களில் வரும் காட்சிகளை குறித்து விமர்சனங்கள் செய்ததால், நாங்கள் அதனை இயல்பாக எடுத்துக் கொண்டோம்.

ஆனால் நாளடைவில் அதுபோன்ற காட்சிகள் குறித்து திரும்பத் திரும்ப பேசுகிறார். குகை காட்சிகளை பார்க்கும் போது “அதில் சிக்கிக் கொண்டால் வெளியில் வருவது மிகவும் சிரமமாகி விடும் அல்லவா... அப்படியே மூச்சுத்திணறி இறந்து போய்விட வேண்டியதுதான்” என்று மீண்டும் மீண்டும் சொல்கிறார். வி.ஐ.பி ஒருவர் இமயமலைச் சாரல் குகை ஒன்றில் தவம் செய்வது போன்ற படங்கள் வெளியான போதும் இப்படி தான் சொல்லிக் கொண்டே இருந்தார். எப்போதும் எதிர்மறையான சிந்தனையுடனே பேசுகிறார்.

அது குறித்து அவரிடம் கேட்டபோது, “ஏனோ எனக்கு இப்போதெல்லாம் அது போன்ற காட்சிகளை பார்க்கும்போது ஒரு மாதிரி பதட்டமாகி விடுகிறது. அதுபோன்ற சூழ்நிலையில் சிக்கிக் கொள்வோமோ என்று பயம் வருகிறது. ஏனென்று தெரியவில்லை. நான் தைரியமாகத்தான் இருக்கிறேன். ஆனாலும் அது போன்ற சிந்தனைகள் வருவதை தவிர்க்க முடியவில்லை.

எங்காவது யாரிடமாவது ஏதாவது தகராறு செய்யும் சூழ்நிலை வந்தால் கூட அந்த காட்சிகள் தான் நினைவில் வந்து செல்கிறது. நாம் ஏதாவது விமர்சனங்கள் செய்து இது போன்ற பிரச்னைகளில் சிக்கிக் கொள்வோமோ.... சிறைக்கு செல்ல நேரிடுமோ என்று ஒரு பதட்டம் ஏற்படுகிறது. அங்கு தனிமைப்படுத்துதல் போன்ற சூழ்நிலை ஏற்பட்டுவிடுமோ என்று தான் அதிகம் அஞ்சுகிறேன். ஏன் இப்படி மாறிப்போனேன் என்று எனக்கு புரியவில்லை.முதலில் சாதாரணமாகத்தான் நினைத்தேன். ஆனால் இப்போதெல்லாம் அடிக்கடி தோன்றுகிறது.  என்ன செய்வதென்று புரியவில்லை” என்று வருத்தப்படுகிறார்.

எப்போதும் தைரியமானவராக... ஏதாவது பிரச்னை என்றால் முன்னின்று சமாளிப்பவராக.... ஏதாவது தகராறு என்றால் முன்னுக்கு சென்று தட்டிக் கேட்பவராக... அறியப்பட்ட எனது கணவர் இப்படி கற்பனையான காட்சிகளுக்கு பயப்படுகிறார் என்று நினைக்கும் போது எனக்கு மிகவும் வருத்தமாக உள்ளது. அவரது திடீர் மாற்றத்திற்கு காரணம் என்னவென்று அவருக்குச் சொல்லத் தெரியவில்லை. எங்களுக்கும் புரிந்து கொள்ள
முடியவில்லை.

இது கொரோனா பீதிக்கு பிறகு அதிகமாகிவிட்டது. அவருக்கு வீட்டிலிருந்தே வேலை செய்யும் வாய்ப்பு அளிக்கப்பட்டது. தனியறையில் இருந்து வேலை செய்வதை விடுத்து ஹாலில் உட்கார்ந்துதான் வேலை செய்கிறார். தொலைக்காட்சி பார்த்துக் கொண்டோ அல்லது எங்களுடன் பேசிக் கொண்டுதான் வேலை செய்வதை விரும்புகிறார்.

“தொல்லை இல்லாமல் படுக்கை அறைக்குள் உட்கார்ந்து வேலை செய்யலாமே’’ என்று கேட்டால், “எனக்கு இதுதான் வசதியாக இருக்கிறது. கூட்டத்தோட வேலை செய்ய பிடிக்கிறது. தனியாக இருந்தால் ஏதாவது யோசனைகள் வருவதால், வேலை செய்ய முடியவில்லை” என்கிறார். இடையில் அவருக்கு மீண்டும் அலுவலகம் வந்து வேலை செய்யும்படி சொன்னார்கள்.

வேலைக்கு  சென்று வந்தவர் கொஞ்சம் உற்சாகமாகத்தான் இருந்தார். ஆனால் சில நாட்களில், “நமக்கு கொரோனா வந்து விட்டால் நம்மை தனிமைப்படுத்தி விடுவார்கள். தனியறைக்குள் போட்டு அடைத்து விடுவார்கள். அந்த அறைக்குள் எப்படி தனியாக இருப்பது? டாக்டர்கள், நர்சுகள் என யாரும் அருகில் கூட வர மாட்டார்கள். அப்படி தனியாக அறையில் இருப்பது மிகவும் கொடுமையாக இருக்கும் அல்லவா... அதனால் கொரோனா வராமல் பார்த்துக்கொள்ள வேண்டும்” என்று ஏகப்பட்ட முன்னெச்சரிக்கை செயல்களில் ஈடுபடுகிறார்.

அவரிடம், “சோதனை செய்து கொள்ளலாம். எதற்கு பயப்படுகிறீர்கள்? பல வயதானவர்கள் கூட நலமாகி வீடு திரும்புகின்றனர். தேவையில்லாமல் பயப்படுகிறீர்கள்” என்று ஆறுதல் சொன்னோம்.அவர், “எனக்கு பயம் எல்லாம் ஒன்றும் இல்லை. இருந்தாலும் ஏனோ அப்படி தோன்றுகிறது” என்று கூறினாலும், வீட்டிலேயே மற்றவர்களுடன் கலக்காமல் தனியாகவே இருக்கிறார்.

தினமும் 10 முறை சோப்பு போட்டு கை கழுவுகிறார்.  வெளியில் சென்று வந்தாலும்,  இல்லை வேறு பொருட்களை தொட்டுவிட்டாலும் கிருமி நாசினியால் சுத்தம் செய்கிறார். வெளியில் இருந்து வாங்கி வரும் பொருட்கள் ஒவ்வொன்றையும் உப்பு நீரால் அல்லது பொட்டாசியம் பர்மாங்கனேட்டால் கழுவி சுத்தம் செய்ய கட்டாயப்படுத்துகிறார்.

இதெல்லாம் இன்றைய சூழ்நிலைக்கு தேவையானது என்றாலும் அவர் தேவைக்கு அதிகமாக பயப்படுகிறார் என்று எங்களுக்கு தோன்றுகிறது. எப்போதும் தைரியமாக பார்த்தவரை இப்படி பதட்டத்துடனும் பயத்துடனும் பார்ப்பது பிள்ளைகளுக்கு மட்டுமல்ல எனக்கும் மிகவும் சங்கடமாக இருக்கிறது. மற்ற நேரங்களில் சகஜமாக இருப்பவர் ஏதாவது சிறை,  குகை போன்ற காட்சிகளை தொலைக்காட்சியில் பார்த்து விட்டாலோ அல்லது கொரோனாவுக்கு சிகிச்சை அளிக்கும் ஐசியூ அறை காட்சிகளை பார்த்தாலோ பதட்டம் ஆகிவிடுகிறார்.

அதனைக் காட்டிக் கொள்ளாமல் இருக்க அவர் முயற்சி செய்கிறார். இதனால் அவரது மனநிலை மேலும் பாதிக்குமோ என்று எங்களுக்கு பயமாக இருக்கிறது. சமூக வலைத்தளங்களில் அரசியல் செய்திகளில் ஆக்டிவ்வாக இருந்தவர் இப்போது, சாப்பாடு சம்பந்தப்பட்ட பதிவுகள் மட்டுமே போடுகிறார். திடீர் மாற்றத்திற்கான காரணம் புரியவில்லை.

அவரின் இந்த பதட்ட மன நிலையை மாற்றி பழையபடி தைரியமாக எதையும் எதிர்கொள்ளும் மனிதராக பார்க்க வேண்டும் என்று விரும்புகிறேன். இது என்ன மனநோயா? இல்லை சாதாரணமான விஷயமா? எதையாவது கண்டு பயந்து இருக்கிறாரா? இல்லை அவரை யாராவது மிரட்டி இருக்கிறார்களா? என்று ஏதேதோ எண்ணத் தோன்றுகிறது. என்ன செய்வது என்று புரியவில்லை. அவர் பழைய நிலைக்கு மாறி எங்கள் குடும்பம் பழையபடி மகிழ்ச்சிக்கு மாற என்ன செய்ய வேண்டும்? நீங்கள்தான் சரியான வழிகாட்டவேண்டும் தோழி.  

இப்படிக்கு,பெயர் வெளியிட விரும்பாத வாசகி.

நட்புடன் தோழிக்கு...      
 
உங்கள் கணவரின் பிரச்னையை உணர்ந்தது மட்டுமல்லாது... ஒரு மனநல மருத்துவரை அணுக வேண்டும் என்று நீங்கள் புரிந்து  கொண்டிருப்பதற்காக உங்களை பாராட்டுகிறேன். மகிழ்ச்சி.  எப்போதும் ஏதாவது ஒரு சிக்கலை உணர்ந்துகொள்வதுதான் தீர்வுக்கான முதல்படி . இரண்டா வதாக  தீர்வுகளை தேட வேண்டும்.  மாற்றத்திற்கு பொருத்தமான நடவடிக்கைகளை எடுப்பதுதான் 3வது படி. நீங்கள் முதல் இரண்டு படிகளையும் கடந்துவிட்டீர்கள்.

அவரிடம்  ஏற்பட்டிருக்கும்  இந்த மாற்றங்கள், அதனால் ஏற்படும் பிரச்னைகளை சமாளிப்பது  அவருக்கு மிகவும் கடினமாக இருக்கும்.  ஆனால் நல்ல செய்தி என்னவென்றால், அவர்  மோசமான நிலையை அடையவில்லை. சிகிச்சையுடன் முழுமையான மாற்றத்திற்கான திட்டவட்டமான சாத்தியங்கள் உள்ளன. எனவே கவலைப்பட வேண்டாம்.

பயம் அல்லது பதட்டம் என்பது மிகவும் பொதுவான ஒன்று, நாம் அனைவரும் வாழ்க்கையில் ஏதோவொன்றைப் பற்றி பயப்படுகிறோம் அல்லது கவலைப்படுகிறோம். தற்போதைய சூழ்நிலைகளைப் பொறுத்தவரை நமது அச்சங்கள் வழக்கத்தை விட அதிகமாகி விட்டன. அடிக்கடி கைகளை கழுவுவதும் இப்போது மிகவும் சாதாரணமாகி விட்டது. இருப்பினும் அவரது அச்சங்கள் அவரது வாழ்க்கையின் ஒவ்வொரு அம்சத்திலும் பரவுகின்றன என்பது தெளிவாக புரிகிறது. அவர் தனிமைப்படுத்தப்பட்டால், அவருக்கு நிச்சயமாக உதவி தேவை.

கொரோனா,  இப்போது  கவலைகளையும், அச்சங்களையும் அதிகரிக்க செய்துள்ளது. நிலைமைகளை  மோசமாக்கியுள்ளது. நாளுக்கு நாள் நிலைமை மோசமடைவது சிலருக்கு இன்னும் கொஞ்சம் பயத்தை உண்டாக்குகிறது. நல்லதைக் கட்டுப்படுத்த முடியும். தூக்கம் மற்றும் பசியின்மை அவர் எதிர்கொள்ளும் மற்றொரு பிரச்னையாக இருக்கலாம். அதை நீங்கள் கடிதத்தில் குறிப்பிடவில்லை.

ஒரு குடும்பமாக நீங்கள் அவருக்கு மிகவும் ஆதரவாக இருக்க முயற்சிப்பது புரிகிறது. அந்த வகையில் அவர் மிகவும் அதிர்ஷ்டசாலிதான்.  மூச்சுப் பயிற்சிகள் அவருக்கு மிகவும் உதவியாக இருக்கும். கூடவே யோகா மற்றும் தியானம் செய்ய சொல்லுங்கள்.  அப்படி அவரால் மனதை ஒருமுகப்படுத்தி தியானம் செய்ய முடியவில்லை என்றால் கட்டாயப்படுத்தாதீர்கள்.

உங்கள் கணவரின் பிரச்னையை பொறுத்தவரை நீங்கள் ஒரு மனநல மருத்துவரை அணுகுவது மிகச்சரியான தீர்வாக இருக்கும்.  அவரது பிரச்னை  முற்றிலும் சரி செய்யக்கூடியது. அதை  கவனிக்காமல் அப்படியே விட்டால்  நிலைமை மோசமாக வாய்ப்பு உள்ளது. எனவே மனநல மருத்துவரை அணுகுவது உங்கள் கணவரை பழைய நிலைமைக்கு திருப்ப உதவும்.

மனநல மருத்துவர் என்றதும் யோசிக்க வேண்டாம். மன நோயும் மற்ற நோய்களை போன்றதுதான். மன நோய் குறித்து வெட்கப்பட  ஏதுமில்லை. அது எந்த நேரத்திலும் யாருக்கு வேண்டுமானாலும் ஏற்படலாம். மற்ற நோய்களுக்கு சிகிச்சை போலவே மனநோய்க்கும் சிகிச்சை அளிக்க வேண்டும். மனநல மருத்துவரை பார்க்க பலரும் தயங்குகின்றனர். அது தேவையற்ற தயக்கம். எனவே தயவுசெய்து உடனடியாக ஒரு மனநல மருத்துவரின் உதவியை நாடுங்கள். எல்லாம் சரியாகும்... உங்கள் குடும்பத்தில் மீண்டும் உற்சாகம் கட்டாயம் தழைக்கும். வாழ்த்துகள்.

தொகுப்பு: ஜெயா பிள்ளை

என்ன செய்வது தோழி
பகுதிக்கான கேள்விகளை எழுதி
அனுப்ப வேண்டிய முகவரி


‘என்ன செய்வது தோழி?’
குங்குமம் தோழி,
தபால் பெட்டி எண்: 2924
எண்: 229, கச்சேரி சாலை,
மயிலாப்பூர், சென்னை - 600 004


வாசகிகள் கவனத்துக்கு,
பிரச்னைகள் குறித்து எழுதும் போது பிரச்னைகளுடன் முழு விவரங்களையும் குறிப்பிடுங்கள்.  சம்பவங்களை, காரணங்களை தெளிவாக... ஏன் விரிவாக கூட எழுதுங்கள். அப்போதுதான் தீர்வு சொல்பவர்களுக்கு வசதியாக இருக்கும். பெயர், முகவரி போன்றவற்றைதான் தவிர்க்க சொன்னோம். விவரங்களை அல்ல...

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • 02-12-2020

  02-12-2020 இன்றைய சிறப்பு படங்கள்

 • pramos1

  கப்பலை மிக துல்லியமாக தாக்கி அழிக்கும் பிரமோஸ் ஏவுகணையை வெற்றிகரமாக பரிசோதித்தது இந்தியா..!!

 • pamaka1

  20% இடஒதுக்கீடு போராட்டம்: சென்னையில் மின்சார ரயில் மீது பாமக-வினர் சரமாரி கல்வீசி தாக்குதல்...புகைப்படங்கள்!!

 • jammuele1

  ஜம்மு - காஷ்மீரில் மாவட்ட வளர்ச்சி கவுன்சில் தேர்தல்!: 2ம் கட்ட வாக்குப்பதிவு தொடங்கியது..ஆர்வமுடன் வாக்களிக்கும் மக்கள்..!!

 • nuclearscientist1

  ஈரானில் கொல்லப்பட்ட அணு விஞ்ஞானியின் உடல் டெஹ்ரான் நகரில் அடக்‍கம்!: இறுதி ஊர்வலத்தில் ஏராளமானோர் பங்கேற்பு..!!

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்