SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

நிச்சயதார்த்தம் ஆன பிறகு ஆண்மை இல்லையாம்

2020-10-05@ 17:03:35

நன்றி குங்குமம் தோழி

என்ன செய்வது தோழி?

அன்புடன் தோழிக்கு,

எனக்கு வயது 27. கல்லூரி முடித்த பிறகு எனக்கு மாப்பிள்ளை தேட ஆரம்பித்தனர்.  கடந்த ஆண்டு இறுதியில்  ஒரு வரன் கிடைத்தது. அவரை எங்கள் வீட்டில் எல்லோருக்கும் பிடித்திருந்தது. எனக்கும் தான். ஜனவரி மாதம்  நிச்சயதார்த்தம் முடிந்தது. அவரும் என் செல்போன் எண்ணை கேட்டார். நானும்  உற்சாகமாக கொடுத்தேன்.

அன்றிரவே அவரது செல்போனில் இருந்து வாட்ஸ்அப் செய்தி வந்தது. முதலில் சாதாரண நல விசாரிப்புகள்...  ‘சாப்பிட்டாயா....  தூங்கலையா.. என்ன  செய்றே...’ என்று ஆரம்பித்தது. பிறகு, ‘என்ன  பிடிக்கும்..’ கல்யாணத்திற்கு பிறகு ‘எப்படி வாழலாம்...’, ‘எத்தனை பிள்ளைகள் பெற்றுக் கொள்ளலாம்’..  என்ற  ஆலோசனைகளாக தொடர்ந்தன.

அப்படி பேச ஆரம்பித்த இரண்டு மூன்று வாரங்களில் மிக உரிமையுடன் பேச ஆரம்பித்தார். திருமணமும் சித்திரை மாதம் நடத்த இருவீட்டாரும் முடிவு செய்திருந்தனர். கல்யாண பத்திரிகை அச்சடிப்பது உட்பட என திருமண வேலைகள் எல்லாம் சுறுசுறுப்பாக நடந்து கொண்டிருந்தன. திருமணத்திற்கு முன்பே நாங்கள் செல்போனில் கணவன்  மனைவியாகவே வாழ ஆரம்பித்து விட்டோம்.

செல்போனில் பேசும் போதெல்லாம் என்னை உரிமையுடன், ‘பொண்டாட்டி’  என்றுதான் அழைப்பார். அப்படி அழைப்பது எனக்கும் அது மிகவும் பிடிக்கும். அதுமட்டுமல்ல  எனது பெயரை சொல்லி கூப்பிட்டதை விட ‘பொண்டாட்டி’ என்று அழைத்ததுதான் அதிகம். இந்நிலையில் மார்ச் மாதம் கொரோனா பீதி காரணமாக திருமணங்கள் நடத்துவதில் சிக்கல் ஏற்பட்டது. அப்படியே நடத்துவதாக இருந்தாலும் ‘சிலர் மட்டுமே பங்கேற்க முடியும்’ என்று சொல்லிவிட்டனர். அதனால்  திருமணத்தை தள்ளி வைப்பது என்று இரு வீட்டாரும் முடிவு செய்தனர்.

ஆனால்  திருமணம் தள்ளிப்போனது தவிர எங்கள் பேச்சு நிற்கவில்லை. அவர் வேலைக்கு செல்ல முடியாததால் வழக்கத்தை விட அதிகமாகவே பேசினோம். ஏப்ரல் ஆரம்பத்தில் பேச்சுக்கு இடையே சிறுசிறு கருத்து வேறுபாடுகள் ஏற்பட ஆரம்பித்தன. அவ்வப்போது சண்டையும் போட்டுக்கொள்வோம்.

ஒரு கட்டத்தில் பேசினால் சண்டையில்தான் முடியும் என்றாகி விட்டது. இதற்கிடையில்  அவர்கள் வீட்டில், ‘தள்ளிப் போட்ட கல்யாணத்தை  மீண்டும் நடத்த வேண்டுமா’ என்று பேசுவதாக கேள்விப்பட்டேன். எனக்கு அது மிகவும் அதிர்ச்சியாக இருந்தது. அது குறித்து அவரிடம் கேட்டபோது அவர் சரியாக பதில் சொல்லவில்லை. இதனால் எங்களுக்குள் சண்டைகள் அதிகரித்ததுதான் மிச்சம். கூடவே  தள்ளிவைக்கப்பட்ட  திருமணம் நடக்குமா? என்ற சந்தேகம் எனக்கு மட்டுமல்ல எங்கள்  குடும்பத்தினருக்கும் ஏற்பட்டது.

இதற்கிடையில் அவர் என்னிடம் பேசுவதை படிப்படியாக குறைத்து விட்டார். திருமணம் நடந்தால் எல்லாம் சரியாகும் என்று நானும் நினைத்தேன்.
ஒரு நாளைக்கு 10 முறையாவது எனக்கு போன் செய்வார். 100 மெசேஜ்களுக்கு மேல் வாட்ஸ்ஆப்பில் வரும். திடீரென எல்லாம் கொஞ்சம் கொஞ்சமாக குறைய ஆரம்பித்தன.  ‘ஏன் இப்படி செய்கிறீர்கள்’ என்று அவரிடம் கேட்டபோது   சரியான பதில் இல்லை. மீண்டும் மீண்டும் கேட்க முயன்றபோது அவர் செல்போனை எடுப்பதை தவிர்க்க ஆரம்பித்தார்.  

வேறு வேறு எண்களில் இருந்து அழைத்து பேசுவேன். அப்படி ஒருமுறை அவரிடம் பேசியபோது அவர், ‘எனக்கு உடல்நிலை  சரியில்லை. அதனால்  இந்த திருமணத்தை நடத்த வேண்டுமா என்று யோசிக்கிறேன்’ என்றார்.

நான் அதற்கு ‘உங்களுக்கு என்ன பிரச்சனை இருந்தாலும் பரவாயில்லை. எல்லா பிரச்னைக்கும் இப்போது தீர்வு இருக்கிறது. நான் உங்களை நன்றாக கவனித்துக் கொள்கிறேன். உங்கள் உடல்நலத்தைப் பற்றி நீங்கள் கவலைப்பட வேண்டாம்’ என்று ஆறுதல் சொல்ல முயன்றேன். அவர் அதை காதில் வாங்கி கொள்ளவில்லை.  

‘எனக்கு உடல்நிலை சரியில்லை. அதனால் திருமணம் செய்து கொள்ள முடியாது. தயவு செய்து புரிந்து கொள்’ என்பதையே திரும்ப திரும்பச்  சொல்லிக்கொண்டே இருந்தார். எனக்கு என்ன செய்வதென்றே  புரியவில்லை. வீட்டில் சொன்னேன். அவர்களும் போன் செய்து அவரது வீட்டில்  பேசினார்கள். அவர்களும்  ஏறக்குறைய அவரின்  மனநிலையிலேயே  இருந்தனர். இந்த நிமிடம் வரை அவரை தான் நினைத்துக் கொண்டிருக்கிறேன்.  

என்னால் அவரை மறக்க முடியவில்லை. இதை என் வீட்டில் சொல்லி  அழுதேன். அதனால் என் பெற்றோர்கள்  மீண்டும் அவரது குடும்பத்தினரிடம் நேரில் போய் பேசினார்கள். ‘நிறைய  திருமணங்கள் இந்த ஊரடங்கு காலத்திலேயே நடக்கின்றன. அது போல் கோயிலில் எளிமையாக நடத்திக்கொள்ளலாம். நிச்சயதார்த்தம் நடந்து இவ்வளவு  நாட்கள் தள்ளிப் போடுவது சரியாக இருக்காது’ என்று சொல்லியுள்ளனர்.

ஆனால் அவரது பெற்றோர் பிடி கொடுக்காமலேயே பேசியுள்ளனர். கூடவே, ‘எங்களுக்கு நிறைய சொந்தக்காரர்கள் இருக்கிறார்கள். அவர்களை அழைக்காமல் திருமணம் செய்ய முடியாது.  எனவே கொரோனா முடியும் வரை நீங்கள் காத்திருக்கத்தான் வேண்டும். அப்படி  இல்லை என்றால்... உங்களுக்கு அவசரம் என்றால்...உங்கள் மகளுக்கு வேறு வரன் பார்த்துக் கொள்ளுங்கள் நாங்கள் ஏதும் தடை சொல்ல மாட்டோம்’ என்று கூறிவிட்டனர்.

எத்தனை முறை கேட்டும், அவர்களின் பதில் மாறவேயில்லை. ஒரு கட்டத்தில், ‘நீங்கள் மிகவும் அவசரப்படுகிறீர்கள்... எங்களால் அப்படி அவசரப்பட  முடியாது. அதனால் இந்த திருமணத்தை நிறுத்திவிடலாம். இனிமேல்  இது குறித்து எங்களிடம் நீங்கள் ஏதும் பேச வேண்டாம்’ என்று கண்டிப்புடன்  சொல்லிவிட்டனர்.

அவரிடம் பேசிய போது,  ‘எனக்கு ஆண்மை குறைவு பிரச்னை இருக்கிறது. அதனால்தான் திருமணம் செய்ய தயங்குகிறேன். மீறி செய்தால்  உன் வாழ்க்கை வீணாகிவிடும். இதை  எப்படி வெளியில் சொல்வது என்று தெரியாமல்  தான் நான் திருமணம் வேண்டாம் என்று சாக்கு போக்குகள் சொல்லி  வந்தேன்‘ என்று சாதாரணமாக கூறினார்.  எனக்கு அதிர்ச்சியாக இருந்தாலும் அதை நம்ப முடியவில்லை. ஏன் என்றால் முதலில் நன்றாக பேசிக் கொண்டிருந்தார்.  இப்போது திடீரென ஆண்மைக்குறைவு என்கிறார்.  திருமணத்தை நிறுத்த பொய் சொல்கிறாரோ என்ற சந்தேகம்  ஏற்பட்டது. ‘வாங்க டாக்டரிடம் போகலாம்’ என்று அழைத்தேன்.

உடனே ‘இந்த விஷயம் வெளியே தெரிந்தால் நான்  தற்கொலை செய்து கொள்வேன்’ என்றார்.  அதிர்ந்து போனேன். போனில் பேசும் போதெல்லாம்,‘விஷயத்தை நீ யாரிடமாவது  சொன்னது தெரிந்தால் நான் உடனடியாக உயிரை விட்டுவிடுவேன்’ என்று மிரட்டுகிறார். எனக்கு என்ன செய்வது தெரியவில்லை. கடந்த 6 மாதங்களாக  அவரை கணவராகவே நினைத்து வாழ்ந்து கொண்டு இருக்கிறேன்.  மனதுக்குள் அவருடன் குடும்பம் நடத்திக் கொண்டு இருக்கிறேன். அதை என்னால் மாற்ற முடியுமா? அவர் இல்லாவிட்டால்  வாழ்வது கூட சிரமமாக இருக்கும். ஆனால் விருப்பம் இல்லாதவரை கட்டாயப்படுத்தி திருமணம் செய்தால் ’சரியாக வருமா என்ற யோசனையும் அடிக்கடி வருகிறது.

எங்க வீட்டில், ‘‘காவல் நிலையத்தில் புகார் கொடுக்கலாம். நிச்சயதார்த்தம் நடந்தாலே ஏறக்குறைய பாதி திருமணம் நடந்தது போல் தான். அதனால் அவர்கள் திருமணம் செய்து கொள்ள  மாட்டோம் என்று சொல்வது சட்டப்படி குற்றம். எனவே உடனடியாக  புகார் கொடுக்கலாம்’ என்கிறார்கள்.  எனக்கு என்ன செய்வது என்று புரியவில்லை. தற்கொலை செய்து கொள்ளலாமா  என்று தோன்றுகிறது. எனக்கு உரிய விளக்கமும், நல்ல தீர்வையும் வழங்க வேண்டும் என்று  கேட்டுக் கொள்கிறேன். நீங்கள் சொல்லும் பதிலை வைத்து தான் என் வாழ்க்கையை நான் முடிவு செய்ய வேண்டும்.

இப்படிக்கு,
பெயர் வெளியிட விரும்பாத வாசகி.

நட்புடன் தோழிக்கு,

தங்களின் கடிதம் கண்டேன் தோழி. விருப்பத்துடன் கல்யாணத்திற்கு ஒப்புக் கொண்டுள்ளீர்கள். அவரிடமும் அன்புகொண்டு உள்ளீர்கள். இப்படி இருக்கும் போது, ஒருவர் திடீரென கல்யாணம் வேண்டாம் என்று சொல்வதும் அதற்கான காரணத்தையும் முறையாக குறிப்பிடாமல் இருப்பதும் சரியாகத் தெரியவில்லை. நீங்கள் கூறியபடியே வைத்தால் கூட ஏற்கனவே குறைபாடு உள்ள ஒருவர் திருமணத்திற்கு ஏன் முதலில் ஒப்புக் கொள்ள வேண்டும். அப்படி ஒப்புக்கொண்ட பிறகுதான் அவருக்கு தனது குறைபாடு தெரிந்ததா? என்ற கேள்வியும் எழுகிறது.

நீங்கள் சொல்வது போல் எல்லா பிரச்னைகளுக்கும் சிகிச்சையும், வாய்ப்புகளும் இருக்கும் போது ஏன் திருமணத்தை நிறுத்த முயற்சிக்க வேண்டும்.  இரண்டுமே சரியாக தெரியவில்லை. முரணாக இருக்கிறது.கல்யாணத்திற்கு  முன்னரே வெளிப்படையாக இல்லாமல் ஏமாற்றுவதும்,  வேறு ஏதாவது  சொல்லி கல்யாணத்தை  நிறுத்தி விட்டு,  அதற்கு திடீரென எதையாவது காரணம் சொல்வது  நல்ல பண்பு அல்ல. உங்களுக்கு அவரை பிடித்து இருந்தாலும், அவரது குணத்தை எண்ணிப்பார்த்து  கொஞ்சம் அறிவார்ந்து யோசியுங்கள்.

நீங்கள் அந்த உறவில் இருந்து வெளியே வரவேண்டும். ‘அவரை  பிரிவதற்கு கஷ்டமாக இருக்கிறது’ என்று நீங்கள் கூறுவது புரிகிறது. வேறு வழியில்லை. அவர் சொல்வது போல் உண்மையில் குறை ஏதாவது இருந்தால் வாழ்க்கை முழுவதும் சிக்கல் தானே. எனவே அதை எண்ணி பாருங்கள். ஒருவேளை அது பொய்யாக இருக்கலாம்.  இப்படி ஒரு பொய்யை  சொல்பவர்,  கல்யாணத்திற்குப் பின் எப்படி வெளிப்படை தன்மையுடன் இருப்பார். இதையெல்லாம் நீங்கள் எண்ணிப்பார்க்க வேண்டும். கேட்பதற்கு கடினமாகத்தான் இருக்கும். செயல்படுத்துவது அவ்வளவு எளிதல்ல.  உட்கார்ந்து யோசியுங்கள்... நிதானமாக சிந்தியுங்கள்.... அறிவை பயன்படுத்துங்கள்.

விரும்பி செய்யும் திருமணங்கள் கூட சில  நேரங்களில் சிக்கலாகி விடுகின்றன. கட்டாயப்படுத்தி நடக்கும் திருமணத்தின் நிலைமையை யோசித்து பாருங்கள்.  உணர்வுபூர்வமாக அந்த உறவில் சிக்கி கொண்டுள்ளீர்கள்.வெளிவருவது சற்று கடினமாக இருக்கலாம். ஆனால் விலகுவதே உங்களுக்கும், உங்கள் எதிர்காலத்துக்கும் நல்லது. காலம் எல்லாவற்றையும் மாற்றும். அதையும் தாண்டி உங்களுக்கு மன உளைச்சல் அதிகம் ஏற்படுகிறது. அவரை மறக்க இயலவில்லை. முடிவெடுக்க முடியவில்லை  என்றால் நல்ல மன நல மருத்துவரிடம் ஆலோசனை பெறுங்கள்.

தொகுப்பு: ஜெயா பிள்ளை

என்ன செய்வது தோழி
பகுதிக்கான கேள்விகளை எழுதி
அனுப்ப வேண்டிய முகவரி

‘என்ன செய்வது தோழி?’
குங்குமம் தோழி,
தபால் பெட்டி எண்: 2924
எண்: 229, கச்சேரி சாலை,
மயிலாப்பூர், சென்னை - 600 004


வாசகிகள் கவனத்துக்கு,
பிரச்னைகள் குறித்து எழுதும் போது பிரச்னைகளுடன் முழு விவரங்களையும் குறிப்பிடுங்கள். சம்பவங்களை, காரணங்களை தெளிவாக... ஏன் விரிவாக கூட எழுதுங்கள். அப்போதுதான் தீர்வு சொல்பவர்களுக்கு வசதியாக இருக்கும். பெயர், முகவரி போன்றவற்றைதான் தவிர்க்க சொன்னோம். விவரங்களை அல்ல...

தொகுப்பு: அன்னம் அரசு

படங்கள்: ஜி.சிவக்குமார்

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • jaipourelephant20

  ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூர் கோட்டையில் மீண்டும் யானை சவாரிக்கு அனுமதி!..

 • delhiformer20

  வேளாண் சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஹரியானா, பஞ்சாப்பில் இருந்து டெல்லி நோக்கி விவசாயிகள் பேரணி - கண்ணீர்புகை, தண்ணீர் பீய்ச்சி விரட்டியடிப்பு

 • nivarpondyvilupuram20

  நிவர் புயல் கரையை கடந்த நிலையில் புதுச்சேரி, விழுப்புரம் மற்றும் கடலூர் மாவட்டத்தில் சேதமடைந்த இடங்கள் ! புகைப்படங்கள்

 • nivarkadaloorcmvisit20

  நிவர் புயலால் பாதிக்கப்பட்ட கடலூர் மாவட்ட மக்களை பார்வையிட்டு நிவாரண பொருட்களை வழங்கினார் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.எடப்பாடி கே.பழனிசாமி!..

 • nivarthirvannamali20

  திருவண்ணாமலை மற்றும் திருப்பத்தூரில் நிவர் புயலின் தாக்கம் !... புகைப்படங்கள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்