SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

கிச்சன் டைரீஸ்

2020-10-01@ 16:54:08

நன்றி குங்குமம் தோழி

டயட் மேனியா

இம்யூன் பவர் டயட் இந்த கொரோனா காலத்துக்கு ஏற்ற டயட் என்று மருத்துவர்களால் அறிவுறுத்தப்படுவது. கொரோனா உலகையே படுத்திக்கொண்டிருக்கும் இந்த நாட்களில் உடலின் நோய் எதிர்ப்பு சக்தியை மேம்படுத்துவது ஒன்றே அந்த நோயிலிருந்து நம்மைக் காப்பதற்கான ஒரே வழிமுறை. இன்னமும் தடுப்பு மருந்துகள் ஏதும் கண்டுபிடித்திராத சூழலில் இயற்கை நம் உடலுக்குத் தந்த பாதுகாப்பு அரணான நோய் எதிர்ப்பு மண்டலத்தை வலுப்படுத்துவதை நோக்கமாகக் கொண்டதே இம்யூன் பவர் டயட். கொரோனா நாட்களில் ஊரடங்கு காரணமாக பலரும் வீட்டிலேயே முடங்கியிருப்பதால், வழக்கம் போல் உண்டு, உடல் உழைப்பு இல்லாமல் இருந்தால் எடை அதிகரிப்பதற்கான வாய்ப்பும் உண்டு. இதைக் கட்டுப்படுத்துவது இந்த கொரோனா நாட்களின் முக்கியமான சவால். எனவே, உடலின் எடையை அதிகரிக்கும் கார்போ பொருட்களை அளவாகச் சேர்த்துக்கொண்டு, உடலுக்கு வலுவூட்டும் காய்கறிகள், பழங்களை போதுமான அளவு எடுத்துக்கொண்டு, ஜங்க் ஃபுட்ஸ், ஃபாஸ்ட் ஃபுட்ஸ், கோலா பானங்கள், செயற்கைப் பழரசங்கள், மைதா போன்றவற்றை அறவே தவிர்ப்பதுதான் இம்யூன் பவர் டயட்டின் முக்கிய அம்சம். மேலும், இதனோடு, நுரையீரலுக்கு வலுவூட்டும் சில காய்கறிகள், பழங்களை எடுத்துக்கொள்வதும் அடங்கும்.

அரிசி, கோதுமை போன்றவற்றை வழக்கமாக எடுத்துக்கொள்வதைவிட பாதியாகக் குறைத்துவிடுவது நல்லது. ஏனெனில், உடல் உழைப்பு இல்லாத காலங்களில் இவை உடலின் எடையைப் பெருகச் செய்துவிடும். அதற்குப் பதிலாக சிறுதானியங்கள், ஓட்ஸ் போன்றவற்றைச் சாப்பிடலாம். தினசரி உணவில் ஒரு வேளை மட்டுமே அரிசி அல்லது கோதுமை இருப்பது நல்லது. கீரைகள், காய்கறிகள், பழங்கள் எவ்வளவு அதிகமாக எடுத்துக்கொள்கிறோமோ அவ்வளவு நல்லது. கீரைகளில் அனைத்துக் கீரைகளையுமே எடுத்துக்கொள்ளலாம். குறைந்தபட்சம் வாரம் இரண்டு நாட்களாவது கீரையை உணவில் சேர்ப்பது மிகவும் நல்லது. காய்கறிகளில் மாவுச் சத்து நிரம்பிய உருளைக் கிழங்கு, சர்க்கரைவள்ளிக் கிழங்கு, கருணைக் கிழங்கு, மக்காச்சோளம் போன்றவற்றை அளவாகச் சாப்பிடலாம். மற்றவற்றை தாராளமாகச் சாப்பிடலாம். இதே போல் பழங்களில் சர்க்கரைச் சத்தும் மாவுச்சத்தும் அதிகமாக உள்ள பப்பாளி, அன்னாசி, வாழைப்பழம் போன்றவற்றை அளவாகச் சாப்பிடலாம்.

வைட்டமின் சி அதிகம் உள்ள பழங்கள் நுரையீரலுக்கு நல்லது. சளிப்பிடிக்காமல் பாதுகாக்கும் என்பதால் எலுமிச்சை, நெல்லிக்காய், ஆரஞ்சு, சாத்துக்குடி, ஆப்பிள் போன்ற சிட்ரிக் நிறைந்த பழங்கள் சாப்பிடலாம். இவற்றில் வைட்டமின் சி நிறைந்துள்ளது.  கொய்யாக்காய் செரிமானத்துக்கு மிகவும் நல்லது. பொதுவாகவே, காய்கறிகள் பழங்களில் உள்ள நார்ச்சத்து செரிமானத்தை மேம்படுத்தி மலச்சிக்கலைப் போக்கும் என்பதால் இவற்றை அதிகமாக எடுத்துக்கொள்ளலாம். முள்ளங்கி நுரையீரலின் நண்பன். இதனை சாம்பாரில் போட்டு உண்ணலாம். முள்ளங்கி ஜூஸாகவும் பருகலாம். பாகற்காய், சுண்டைக்காய் போன்ற கசப்பான காய்கறிகள் உடலின் நோய் எதிர்ப்பு சக்தியை மேம்படுத்துவதில் முக்கியப் பங்கு வகிக்கின்றன. மஞ்சள், இஞ்சி, பூண்டு, மிளகு, பட்டை, லவங்கம், எலுமிச்சை, வெங்காயம், பச்சை மிளகாய் போன்றவற்றை செயல்படு உணவுகள் என்பார்கள். இவை நோய்க்கு எதிராகப் போராடும் முன்னணிப் படைவீரர்கள் போன்றவை.

எனவே இவற்றையும் நாள்தோறும் உணவில் சேர்த்து வருவது நல்லது. அசைவ உணவுகளில் மீன், கோழி, ஆடு ஆகியவற்றை உண்ணலாம். தினசரி ஒரு முட்டை உணவில் இருக்கலாம். ஆனால், ஒரு அரை மணி நேரமாவது யோகா போன்ற உடற்பயிற்சிகளை வீட்டிலேயே செய்வது நல்லது. புரதச்சத்து நிறைந்த உணவுகளுக்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும். பருப்புகள், நட்ஸ் போன்றவை அன்றாடம் உணவில் இருக்க வேண்டும். உடல் எடையை அதிகரிக்கும் சர்க்கரையை அறவே தவிர்ப்பது நல்லது. இனிப்புகள், பலகாரங்கள் நொறுக்குத் தீனிகளை இயன்ற வரை தவிர்த்திடுங்கள். காய்கறிகளை அதிகமாகவும் கார்போவைக் குறைவாகவும், கொழுப்புச்சத்தையும் புரதத்தையும் மிதமாகவும் எடுத்துக்கொள்வதே இந்த கொரோனா நாட்களில் ஆரோக்கியமாக இருப்பதற்கான அழகான வழி.

எக்ஸ்பர்ட் விசிட்

டீடாக்ஸ் என்பது இந்நாட்களில் நம் ஒவ்வொரு உள்ளுறுப்புக்கும் அத்தியாவசியமான சிகிச்சையாக இருக்கிறது. நாம் சுவாசிக்கும் காற்று முதல் உண்ணும் உணவு வரையான ஒவ்வொரு பொருளும் நம் உடலில் சென்று ஆற்றலாய் மாறி, கழிவாக எஞ்சுகிறது. என்னதான் இக்கழிவுகள் வியர்வை, சிறுநீர், மலம் மூலம் வெளியேறினாலும் மிகச் சிறிய அளவில் இவை நம் உடலிலேயே இருக்கும். ரத்தம் முதல் இதயம் வரை ஒவ்வொரு உள்ளுறுப்பிலும் இக்கழிவுகள் இருக்கும். இவற்றை சுத்தம் செய்யவே டீடாக்ஸ் அவசியம். இந்தியாவின் புகழ்பெற்ற டயட்டீஷியன் ருஜுதா டீடாக்ஸ் பற்றி சொல்லும் டிப்ஸ் இங்கே..

ரத்தம்

ரத்தம்தான் நம் உடல் முழுதும் பாயும் ஜீவநதி. காற்றில் உள்ள ஆக்சிஜன் முதல் உண்ணும் உணவுப் பொருள்களில் உள்ள சத்துகள் வரையிலும் அனைத்தையும் கொண்டு போய் உடலில் உள்ள ஒவ்வொரு செல்லுக்கும் சேர்ப்பது ரத்தம்தான். இது மட்டும் அல்ல உடலில் உள்ள தேவையற்ற கழிவுகளைச் சுமந்து சென்று வெளியேற்றுவதிலும் ரத்தம் முக்கியப் பங்கு வகிக்கிறது. ரத்தத்தை சுத்தமாக்க இரும்புச்சத்து நிறைந்த உணவுப் பொருட்களையும், நீர்ச்சத்து நிறைந்த காய்கறிகளையும் கேரட், பீட்ரூட் போன்ற கரோடினாய்டு நிறைந்த காய்கறிகளையும், சிவப்பு வண்ணப் பழங்களையும் அதிகமாக எடுத்துக்கொள்ள வேண்டும். தினசரி 2-3 லிட்டர் தண்ணீர் பருகுவது ரத்தத்தை எப்போதும் தூய்மையாக வைத்திருக்கும் ஒரு டீடாக்ஸ் டிரிக்.

இதயம்

நாம் துடிப்புடன் இருக்க நமக்காகத் துடித்துக்கொண்டே இருக்கும் உறுப்பு இதயம். உடல் முழுதும் ரத்த ஓட்டம் சீராக இருக்க இதயத் துடிப்பு சீராக இருக்க வேண்டியது அவசியம். ரத்த அழுத்தத்தைக் கட்டுப்பாடாக வைத்திருப்பது இதயத்தை ஆரோக்கியமாக வைத்திருப்பதற்கான முக்கியமான வழி. புகைப் பழக்கம் இதயத்துக்கு எமன். கேரட், பீட்ரூட் போன்ற கரோட்டினாய்டு நிறைந்த உணவுகளும் சாத்துக்குடி, ஆரஞ்சு, எலுமிச்சை போன்ற சிட்ரிக் நிறைந்த உணவுகளும் இதயத்தைச் சுத்திகரிப்பதில் முக்கியப் பங்கு வகிக்கின்றன. வாக்கிங், ஜாகிங், நீச்சல், சைக்கிளிங், ஸ்கிப்பிங் போன்ற கார்டியோக் பயிற்சிகளும் நடனம், ஏரோபிக்ஸ் பயிற்சியும் இதயத்தைக் காக்கும் நற்பழக்கங்கள்.

கல்லீரல்

உறுப்புகளின் அரசன் என்றால் அது கல்லீரல்தான். நாம் உண்ணும் உணவைச் செரிப்பதில் கல்லீரலின் பங்கு மகத்தானது. நம் உடலில் கல்லீரல் மட்டும்தான் பாதியாக அறுத்தாலும் மீண்டும் வளரும் இயல்புகொண்ட ஒரே உறுப்பு. அந்த அளவுக்கு கடினமான உழைப்பாளி இது. ஆரோக்கியமாக உள்ள கடைசி நொடி வரையிலும் சிறப்பாக வேலை செய்யும். இதனால்தான் கல்லீரல் பாதிப்புகளை முற்றிய நிலையிலேயே கண்டறிய முடிகிறது. கல்லீரலைப் பாதுகாக்க எளிதில் ஜீரணமாகும் உணவுகளை அதிகமாக உண்பதும், இரவில் கண் விழிக்காமல் எட்டு மணி நேரம் உறங்குவதும் அவசியம்.கீழாநெல்லி கல்லீரலின் நண்பன். இது, கல்லீரலில் உள்ள தேவையற்ற நஞ்சுகள், கொழுப்பை அகற்றி கல்லீரலைச் சுத்தம் செய்கிறது. மஞ்சள் காமாலை பாதிப்பு உள்ளவர்கள், மதுப் பழக்கத்துக்கு அடிமையானவர்கள் கீழாநெல்லியைப் பயன்படுத்தி கல்லீரலைச் சுத்தம் செய்யலாம்.

நுரையீரல்

தாயின் வயிற்றிலிருந்து வெளியே வந்ததும் செயல்படத் தொடங்கும் பிரதான உறுப்பு நுரையீரல்தான். நுரையீரலைப் பாதுகாப்பது என்பது நீண்ட ஆயுளுக்கான அடிப்படைகளில் ஒன்று. மூளை சுறுசுறுப்பாகவும் உற்சாகமாகவும் செயல்பட நுரையீரல் வலுவாக இருக்க வேண்டும் என்று மருத்துவ ஆய்வுகள் கூறுகின்றன. சுற்றுப்புறச் சூழல் தூய்மையின்மையாலும் காற்று மாசு ஏற்படுவதாலும் புகைப்பழக்கத்தாலும் நுரையீரல் மோசமாகப் பாதிக்கப்படுகிறது. நுரையீரலை சுத்திகரிப்பதில் புதினாவுக்குச் சிறப்பான இடம் உள்ளது. இதைத் தவிரவும் ஆண்டிஆக்சிடண்ட் நிறைந்த இஞ்சி, மஞ்சள் போன்றவையும் நுரையீரலைச் சுத்திகரிக்கவல்லவை. கிரீன் டீ, கேரட், எலுமிச்சை போன்றவற்றையும் உணவில் சேர்த்துக்கொள்ளலாம். தினசரி காலை எழுந்ததும் பிராணாயாமம் எனும் மூச்சுப் பயிற்சி செய்வதும் ஓஸோன் நிறைந்த அதிகாலைக் காற்றைச் சுவாசிப்பதும் நுரையீரலுக்கு நல்லது.

சிறுநீரகம்

நமது உடலின் கழிவுத் தொழிற்சாலை இதுதான். உடல் முழுதும் பயணித்து ரத்தம் சேகரித்துக்கொண்டுவரும் தேவையற்ற கழிவுப் பொருட்களை ரத்தத்தில் இருந்து பிரிக்கும் முக்கியமான வேலையைச் சிறுநீரகங்கள் செய்கின்றன. தினசரி போதுமான அளவு தண்ணீர் பருகாதது, மதுப்பழக்கம், அதிக உப்புத்தன்மை கொண்ட தண்ணீர் போன்றவற்றால் சிறுநீரகம் பாதிக்கப்படுகிறது. வாழைத்தண்டு சிறுநீரகத்தை சுத்திகரித்து சிறப்பாகச் செயல்படவைக்கிறது. நீர்ச்சத்து நிறைந்த காய்கறிகள், பழங்கள் அதிகமாக எடுத்துக்கொள்வதன் மூலம் சிறுநீரகத்தைக் காக்கலாம்.

ஃபுட் சயின்ஸ்

ஃபுட் என்ஜினியரிங் எனும் உணவுப் பொறியியல் என்ற துறை நம் காலத்தில் வேகமாக வளர்ந்துவரும் ஒரு விஞ்ஞானத்துறை. நுண்ணுயிரியல், நவீன இயற்பியல், வேதியல் ஆகியவற்றின் பண்புகளை உணவுத் துறையில் எப்படிப் பயன்படுத்துவது என்பதைப் பற்றிய ஆய்வு மற்றும் நடைமுறையை ஃபுட் என்ஜினியரிங் என்கிறார்கள். அதேபோல், விவசாயப் பொறியியல், இயந்திரவியல், வேதிப் பொறியியல் ஆகியனவும் இந்தத் துறையில் இணைந்தே இயங்குகின்றன. ஓர் உணவுப் பொருளை உற்பத்தி செய்வதில் தொழில்நுட்பச் சாத்தியங்களை மேம்படுத்தி, உற்பத்தி செலவையும் அடக்க விலையையும் கட்டுப்படுத்தித் தருவதில் இந்தத் துறையின் பங்கு மகத்தானது. உணவுப் பொருட்களை ப்ராசஸ் செய்வது, பேக் செய்வது, தேவையான உட்பொருட்
களை கலக்குவது, சேர்ப்பது, அரைப்பது, கரைப்பது என்ற உணவுப் பொருள் தயாரிப்பில் இயந்திரவியலைப் பயன்படுத்தி, இயந்திரங்கள் மூலம் வேகமாகவும், துல்லியமாகவும் உணவைத் தயாரிப்பதும் இந்தத் துறையின் நோக்கங்களில் ஒன்று.

உணவு மற்றும் மருந்து தயாரித்தல், அந்தத் தொழில்களுக்கான வடிவமைப்பை உருவாக்குதல், கழிவுகளைத் திறமையாகக் கையாள்வது, உற்பத்தி நிறுவனங்களுக்கான சந்தையை விரிவாக்க உதவுவது எனப் பல வகைகளில் இந்தத் துறை உணவு உற்பத்தித் துறைக்குப் பங்களிக்கிறது. நானோ தொழில்நுட்பம் போன்ற நவீன தொழில்நுட்பங்களைக்கூட இன்று இந்தத் துறையில் பயன்படுத்துகிறார்கள். முழுமையாகக் கணிப்பொறிகளாலும், ஆட்டோமேட்டட் இயந்திரங்கள், ரோபோக்களாலும் இயங்கும் உணவுத் தயாரிப்பு துறைகள் எல்லாம் இன்று வெற்றிகரமாக இயங்கிக் கொண்டிருக்கின்றன. மானுடக் கைகள் படாமல் தயாரிக்கப்படுவதால் உணவின் தரம், அதன் ஷெல்ஃப் லைஃப் எனும் ஆயுள் உட்பட பல விஷயங்களில் நல்ல மேம்பாட்டை அடைய முடிகிறது என்பது இந்தத் துறையின் வெற்றிகளில் ஒன்று. எதிர்காலத்தில் இந்தத் துறை உணவைத் தயாரித்தல், பதப்படுத்துதல், சந்தைப் படுத்துதல், விநியோகித்தல் எனப் பல மட்டங்களில் மிகப் பெரிய சாதனைகளைப் புரியும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

சைவமும் அசைவமும்!

இந்திய உணவுக்கு உலக அளவில் ஒரு கவனம் உண்டு. அது இந்தியாவின் பெரும்பான்மை உணவு முறை சைவம் என்பதுதான். அமெரிக்க, ஐரோப்பிய நாடுகளிலும் மத்திய கிழக்கிலும் காணவியலாத விஷயம் இது என்பதால் அவர்கள் நம் உணவுப் பழக்கவழக்கத்தை ஆச்சர்யமாகப் பார்ப்பார்கள். இந்தியர்களில் மிகச் சிறிய அளவிலான மக்கள் மட்டுமே நனி சைவர்கள். அதாவது, முட்டையைக்கூட சாப்பிடாத முழுமையான சைவர்கள். மற்றவர்கள் பெரும்பகுதியினர் அசைவம் சாப்பிடுபவர்கள்தான் என்றாலும் வாரம் ஒருமுறையோ மாதம் ஒருமுறையோ அசைவம் சாப்பிடுபவர்கள்தான் அதிகம். எஞ்சிய நாட்களில் சைவம்தான் சாப்பிடுவார்கள். எனவே நம்முடைய அசைவ உணவுத் தேவை மற்ற நாடுகளோடு ஒப்பிடும்போது குறைவுதான்.

இப்படி இந்தியச் சமூகம் சைவம் உணவுச் சார்போடு இருப்பதற்கு வரலாற்றுக் காரணங்கள் இருக்கின்றன. இந்தியாவில் உருவான கொல்லாமையை வலியுறுத்திய பெளத்த, சமண மதங்கள் மற்றும் அதற்கு முந்தைய அவைதீக மதங்களில் அசைவம் விலக்கப்பட வேண்டிய உணவு என்ற கருத்து இருந்தது. மேலும், அந்நாட்களில் மத வேறுபாடுகள் இன்றி பெளத்த, சமண, இந்து மதத் துறவிகள் அனைவருமே தங்கள் தவ வாழ்வுக்கு இடையூராய் இருக்கும் என்று அஞ்சி அசைவத்தைத் தவிர்த்தார்கள். அதையே மக்களுக்கும் போதித்தார்கள். வரலாற்றுக்கு முந்தைய காலங்களில் எல்லா நாடுகளைப் போலவே நாமும் அசைவத்தில் வெளுத்துக்கட்டிதான் வந்திருக்கிறோம். பின்னர் வந்த கொல்லாமை போன்ற சிந்தனைகள் பிற உயிர்களை உணவுக்காகக் கொல்வது பாவம் என்ற மனநிலையை இந்தியர்களிடம் உருவாக்கவே மரக்கறி முக்கிய உணவானது.

ஆனால், புலால் மீதான நம் வேட்கையை அடக்க இயலாததன் சான்றுதான் நாம் வாரம் ஒருநாளாவது அசைவம் சாப்பிட்டு விட வேண்டும் என்ற பழக்கத்தில் வந்து நிற்பது. சைவம் என்ற சொல்லே மதத்தோடு தொடர்புடையது தான். இங்கு தமிழில் அது சிவ வழிபாட்டு உடன் தொடர்புடையது. சிவ மதத்தார் உண்ணும் உணவு சைவம். மற்றவர்கள் உண்பது அசைவம். இங்கு சிவம் எனும் சைவ மதத்தின் பெயரால் மரக்கறி உணவு அழைக்கப்படுகிறது என்றால் வட நாட்டில் வைணவம் எனும் விஷ்ணு வழிபாட்டின் பெயரால் அது அழைக்கப்படுகிறது. இப்படியாக, உணவுமுறைக்குப் பெயரிடுவதிலும் வரலாற்றின் சுவடுகளை நாம் அறியலாம்.


ஃபுட் மித்ஸ்

தேங்காய் எண்ணெய் சாப்பிட்டால் மாரடைப்பு வரும் என்ற தவறான நம்பிக்கை ஒன்று நம்மிடம் உள்ளது. உண்மையில் தேங்காய் எண்ணெயில் நல்ல கொழுப்பும், புரதச்சத்தும் நிறைந்திருப்பதால் அது நமது இதயத்துக்கு நல்லது. இதயக் குழாய்களில் படிந்திருக்கும் கெட்ட கொழுப்பை நீக்கி நல்ல கொழுப்பை உடலில் சேர்த்து, ரத்த ஓட்டத்தை சீராக்குவதில் தேங்காய் எண்ணெய்க்கு முக்கியப் பங்கு இருக்கிறது.

உணவு விதி #50

வெறும் வயிற்றில் தண்ணீர் பருகுவது ஒரு நல்ல பழக்கம். தினமும் காலையில் எழுந்ததும் சுமார் அரை லிட்டர் தண்ணீராவது அருந்துவது அந்த நாளை உற்சாகமாக வைத்திருக்க உதவும். நீரில் உள்ள ஆக்சிஜன் மூளையை சுறுசுறுப்பாக்குகிறது. நீரால் குடல் பகுதி சுத்தமாகி காலைக் கடன் சுலபமாகிறது. மலச்சிக்கல் உள்ளிட்ட பிரச்சனை நீங்குகிறது. எனவே, தினமும் வெறும் வயிற்றில் நீர்ப் பருக மறவாதீர்கள்.

தொகுப்பு: இளங்கோ கிருஷ்ணன்

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • humanbodies23

  2,000 ஆண்டுகளுக்கு முன் எரிமலை வெடிப்பிலிருந்து தப்பிக்க முயன்ற 2 மனித உடல்கள் இத்தாலியில் கண்டுபிடிப்பு!: புகைப்படங்கள்

 • jammu23

  ஜம்மு காஷ்மீரில் நிலவும் கடுங்குளிர்!: தரை, வீடுகளின் கூரைகள், வாகனங்களின் மேற்பகுதி ஆகியவை பனி உறைந்து வெண்ணிறமாக காட்சி..!!

 • yamuna23

  இனவிருத்திக்காக யமுனை நதியில் கூட்டம் கூட்டமாக படையெடுக்கும் பறவைகள்!: சுற்றுலாப் பயணிகள் ஆர்வமுடன் கண்டு ரசிப்பு..!!

 • chadpuja23

  சூரிய கடவுளுக்கு நன்றி தெரிவிக்கும் சாத் பூஜை!: நியூ ஜெர்சியில் நூற்றுக்கணக்கான அமெரிக்க வாழ் இந்தியர்கள் வழிபாடு..!!

 • isrelviva23

  இப்படிக்கூட விவசாயம் செய்ய முடியுமா!: இஸ்ரேலில் வியக்க வைக்கும் செங்குத்து வேளாண்மை..புகைப்படங்கள்..!!

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்