SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

மனசே மனசே குழப்பம் என்ன?

2020-09-28@ 16:38:53

நன்றி குங்குமம் தோழி

டாக்டர் சேகர் ராஜகோபால் மனநல மருத்துவர்

தீவிரமாய் பரவும் கோவிட் 19 வைரஸ் தொற்றில் மனநலம் சார்ந்த பிரச்சனைகளை இங்கே அலசுகிறார் மனநல மருத்துவரும் தருமபுரி மருத்துவக்
கல்லூரியின் உளவியல் துறை உதவி பேராசிரியருமான டாக்டர் சேகர் ராஜகோபால். நாம் அனைவரும் கொரோனாவோடு போராடிக் கொண்டிருக்கிறோம். இது ஒரு போர்க்களம். நமக்கு பிடித்திருந்தாலும் இல்லாவிட்டாலும் நம்மிடம் இருக்கும் கேடயம் மற்றும் ஆயுதம் கொண்டு போராடுவோம். நமது ஆயுதம், நம் உடலின் எதிர்ப்பு சக்தியை பேணிக்காப்பது. கேடயம், மனநலம் காத்து கொரோனாவை வெற்றிக் கொள்ளச் செய்வது. தொலைக்காட்சிகள் தற்போது தொல்லைகாட்சிகளாக மாறிவிட்டன.

ஆன் செய்தால், கொரோனா பற்றிய செய்தி தொகுப்புகள் அதிர்ச்சி ஏற்படுத்தும் பின்னணி இசையுடன் காண்பிக்கப்படுகின்றன. இதனை கேட்டு பலர் மனப்பதட்டம் என்ற நோய்க்கு ஆளாகின்றனர். ஒருவர் எனக்கு போன் செய்து, எனக்கு கொரோனா வந்துவிடுமோ என்று பயமாக இருக்கிறது, வந்துவிட்டால் என்ன செய்வது? என் குடும்பத்தை எப்படி காப்பாற்றுவது? சமயத்தில் நான் மாடியில் இருந்து கீழே குதித்து விடலாமா என்றுகூட தோன்றுகிறது என கூறினார்.  

அவர் இப்போது என்னிடம் சிகிச்சை பெற்று நலமுடன் இருக்கிறார். இதுபோன்ற மனம் சார்ந்த  பிரச்சனைகளுக்கும் தீர்வு உண்டு. பீகாரில் ஒரு முதியவர் தனக்கு கொரோனா பாதித்துள்ளது என்று தெரிந்தவுடன் தற்கொலை செய்து கொண்டார்.  பெங்களூரை சேர்ந்த விக்டோரியா மருத்துவமனையிலும் இப்படி ஒரு சம்பவம் அரங்கேறியுள்ளது. பாண்டிச்சேரியில் புகழ்பெற்ற ஜிப்மர் மருத்துவமனை அண்மையில் அளித்துள்ள புள்ளிவிவரப்படி கொரோனாவினால் பாதிக்கப்பட்டவர்கள் உடல்ரீதியாக மட்டுமின்றி மனரீதியாகவும் பாதிக்கப்பட்டுள்ளார்கள் என்று அறிவித்துள்ளது. அதற்கு மேற்குறிப்பிட்டுள்ள சம்பவங்களே சாட்சி. கொரோனா நம் வாழ்க்கையையே புரட்டிப் போட்டிருக்கிறது.  

தினசரி பல இடர்களை சந்திக்க வேண்டி இருக்கிறது.  முதலாவதாக லாக்டவுன் என்ற கட்டுப்பாட்டினால் தனிமைப்படுத்தப்படுவது,  அதனால் ஏற்படும் மனச்சஞ்சலங்கள், தொழில் முடக்கம், அது சார்ந்த வருமான இழப்பு, ஐடி கம்பெனிகள் வீட்டில் இருந்த படியே வேலை செய்ய உத்தரவிட்டாலும் அந்த வேலையின் நிரந்தர தன்மை பற்றிய கவலை, இப்படி சொல்லிக்கொண்டே போகலாம்.  இவையெல்லாம் மன அழுத்தம் கொடுக்கக் கூடியவையே. எந்நேரமும் மன உளைச்சலில் இருப்பது உடலில் கார்டிசால் அட்ரினலின் (CortisolAdrenaline) என்ற ஹார்மோன்களை அதிகப்படியாக சுரக்க செய்துவிடும், அதன் விளைவாக இருதய துடிப்பு அதிகமாகுதல், உயர்ந்த ரத்த அழுத்தம்,  சிலசமயங்களில் இருதயம் படபட என்று அடித்துக் கொள்ளுதல், உடல் எடை கூடுதல், ஏன் சர்க்கரை நோய் கூட வரலாம்.  

தலைவலி, ஆங்காங்கே தசை பிடிப்புகள், உடல்சோர்வு, தாம்பத்தியத்தில் நாட்டமின்மை, சோகமான மனம், அதிக கோபம், தூக்கம் குறைந்து போவது போன்ற நிலைகள் ஏற்படும். இந்த மனப்பதட்டம் தரும் சூழலில் இருந்து விடுபட எளிய வழிமுறைகள் சில உள்ளது...  வள்ளுவர் ஒரு குறளில் நோயை எவ்வாறு கட்டுப்படுத்துவது என்று தெளிவாக குறிப்பிட்டிருப்பார். ‘நோய் நாடி நோய் முதல் நாடி அது தணிக்கும் வாய் நாடி, வாய்ப்பச் செயல்’... அதாவது எந்தக் காரணத்தினால் நோய் ஏற்படுகிறதோ, அதை முதலில் அறிந்து அதை கட்டுப்படுத்த வேண்டும். சதா சர்வகாலமும் கொரோனா பற்றிய செய்திகள் கேட்பதினாலும், ஆங்காங்கே இறப்பு சதவிகிதத்தை பார்ப்பதாலும் மனம் அதிர்ச்சியடைந்து விடுகிறது.

எந்த அளவிற்கு இந்த கொரோனா செய்திகளிலிருந்து விலகியிருக்கிறோமோ அவ்வளவுக்கு நம் மனதிற்கு அமைதி. ஒரு கிரேக்க பழமொழி உண்டு (As sound mind is in a sound body). ஓர் ஆரோக்கியமான உடலில்தான் ஆரோக்கியமான மனம் குடியிருக்கும். உடல் ஆரோக்கியமுள்ள ஒருவனால் நன்கு சிந்தித்து, எந்தவித இக்கட்டான சூழ்நிலையிலிருந்தும் உடனடியாக செயலாற்ற முடியும். தினசரி உடற்பயிற்சி செய்வது நல்ல பலனை தரும். உடற்பயிற்சி செய்யும் போது நமது நரம்பு மண்டலம் மற்றும் மூளையிலிருந்து எண்டார்பின்ஸ் (Endorphins) என்று சொல்லப்படும் நியுரோ கெமிக்கல் சுரப்பதால், மனப்பதட்டத்திலிருந்து காப்பது மட்டுமின்றி, நோய் எதிர்ப்பு சக்தியையும் கூட்டுகிறது.

யோகா, தியானம் நமது முன்னோர் நமக்களித்த பொக்கிஷம், மனதையும் உடலையும் இணைக்கும் பாலங்கள் இவை.  நமக்கு எளிதில் வரக்கூடிய ஆசனங்களை செய்வதால் மனம் மற்றும் உடல் செம்மையடையும். காலில் இருந்து தலை வரை ஒவ்வொரு பகுதியாக தசைகள் தளர்வடைய மனம் மயிலிறகாய் லேசாகும்.  ப்ரெஷ்ஷான காய்கறிகளை நேரம் தவறாமல் தினமும் சாப்பிடுங்கள். புரதச்சத்து மிகுந்த கடலை வகைகள், முட்டை, பால், மீன் போன்ற சமச்சீரான உணவுகளை எடுத்துக் கொள்ள வேண்டும். இவை உடலுக்கு ஊட்டத்தை கொடுக்கும். ஒரு கட்டிடத்திற்கு அஸ்திவாரம் முக்கியம் போல மன நலனுக்கு தூக்கம் முக்கியம்.  

தூக்கத்திற்கு தேவையான மெலெட்டோனின் ஹார்மோன் (Melatonin) இரவில் தான் சுரக்கும். மாலையில் பறவைகள் கூட்டை நோக்கி பறக்க மெலெட்டோன் சுரப்பே காரணம். இரவு தூக்கத்தை எதிர்த்து செய்யும் வேலையால் உடல் நலன் மாறுகிறது. நல்ல உறக்கம் நமக்கு சொர்க்கம். இந்த லாக்டவுன் சமயத்தில் வேலை சுமைகளை பெண்கள் மீது மட்டுமே திணிப்பதும் ஒருவிதமான அழுத்தத்தை உருவாக்கும். இந்தப் பிரச்சனைகளை சரி செய்ய வீட்டில் இருப்பவர்கள் இணைந்து பேசிக் கொண்டே வீட்டு வேலைகளைச் செய்வது, சமைப்பது, ஒருவரே அனைத்து வேலைகளையும் செய்யாமல் பகிர்ந்து செய்து, அனைவரும் ஒன்றாய் அமர்ந்து படம் பார்ப்பது, வீட்டிற்குள் இருந்தே விளையாடும் விளையாட்டுக்களை குழந்தைகளுடன் கூடி விளையாடுவது, குடும்பத்தினருடன் நேரத்தை செலவழிப்பது, மனைவியோடு மனம் விட்டு பேசுவது என சூழ்நிலைக்கு ஏற்ப மாற்றிக் கொள்ளலாம்.

நல்ல இசையினைக் கேளுங்கள். இசை கேட்கும்போது மூளையில் டோப்போமையின் (dopamine) என்ற வேதிப்பொருள் சுரக்கிறது.  இது நமது மனதை மயிலிறகைப் போல லேசாக்கிவிடும். நமது ஞாபக சக்தி அதிகரிக்கும்.  உடல் வலிகளை நீக்கும்,  மனப் பதட்டத்தை குறைக்கும், சிந்திக்கும் ஆற்றலை அதிகரிக்கும் என்பது அறிவியல் பூர்வமான உண்மை.  உங்கள் நகைச்சுவை உணர்வுகளை பெருக்கிக்கொள்ளுங்கள், நெருக்கமான நண்பர்களுடன் மனம் விட்டு பேசுங்கள், உங்கள் எண்ணங்களை தினசரி டைரியில் பதிவு செய்யுங்கள், எல்லை மீறும் சமயங்களில் மனநல மருத்துவர் ஆலோசனையை பெறுங்கள். இதில் தவறேதும் இல்லை. கொரோனாவுக்குதான் பாசிட்டிவ் இருக்கக் கூடாது. ஆனால் நாம் பாசிடிவ்வான மனோநிலையை தக்க வைத்துக் கொள்ளலாம். ஏனெனில், ஹேப்பி ஆர்மோன்ஸ் (happy harmones) என்று சொல்லப்படும்  டோப்பமைன், செரடோனின், ஆக்சிடோசின் போன்றவை நம் முகத்தில் புன்னகையை வரவைக்கும். மனநலமே வாழ்வின் நலம்!

தொகுப்பு: அன்னம் அரசு

படங்கள்: ஜி.சிவக்குமார்

மேலும் செய்திகள்

Advertisement
Like Us on Facebook Dinkaran Daily News
 • humanbodies23

  2,000 ஆண்டுகளுக்கு முன் எரிமலை வெடிப்பிலிருந்து தப்பிக்க முயன்ற 2 மனித உடல்கள் இத்தாலியில் கண்டுபிடிப்பு!: புகைப்படங்கள்

 • jammu23

  ஜம்மு காஷ்மீரில் நிலவும் கடுங்குளிர்!: தரை, வீடுகளின் கூரைகள், வாகனங்களின் மேற்பகுதி ஆகியவை பனி உறைந்து வெண்ணிறமாக காட்சி..!!

 • yamuna23

  இனவிருத்திக்காக யமுனை நதியில் கூட்டம் கூட்டமாக படையெடுக்கும் பறவைகள்!: சுற்றுலாப் பயணிகள் ஆர்வமுடன் கண்டு ரசிப்பு..!!

 • chadpuja23

  சூரிய கடவுளுக்கு நன்றி தெரிவிக்கும் சாத் பூஜை!: நியூ ஜெர்சியில் நூற்றுக்கணக்கான அமெரிக்க வாழ் இந்தியர்கள் வழிபாடு..!!

 • isrelviva23

  இப்படிக்கூட விவசாயம் செய்ய முடியுமா!: இஸ்ரேலில் வியக்க வைக்கும் செங்குத்து வேளாண்மை..புகைப்படங்கள்..!!

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்