SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

இரவில் பேசும் போலீஸ்காரர்

2020-09-28@ 16:35:51

நன்றி குங்குமம் தோழி

அன்புடன் தோழிக்கு,

நான் தனியார் பள்ளி ஆசிரியை. வயது 27. திருமணமாகி 2 பிள்ளைகள். எனது கணவர் தனியார் நிறுவனத்தில் வேலை செய்கிறார். அவருக்கு குடிப்பழக்கம் இருப்பதால் அடிக்கடி வீட்டில் சண்டை சச்சரவுகளுக்கு பஞ்சமில்லை. ஆனாலும் சமாளித்து வாழ்க்கையை ஓட்டிக் கொண்டு இருக்கிறோம். வாடகை வீடு என்பதால், வாடகை பிரச்னை ஒருபக்கம் என்றால் மின்கட்டணம், பராமரிப்பு செலவுகளை சேர்த்து சமாளிப்பது சிரமமாகவே இருந்து வருகிறது. எங்க அப்பா, அம்மாவும் அதே பகுதியில்தான் வசிக்கின்றனர். என் பெற்றோருக்கு நான் ஒரே மகள். வேறு பிள்ளைகள் இல்லை. என் வீட்டுக்காரர் அடிக்கடி குடித்துவிட்டு வந்து பிரச்னை செய்வது என் பெற்றோருக்கு தெரியும். அவர்கள் ‘கொஞ்சநாள் பொறுத்துக்கமா எல்லாம் சரியாகிவிடும்’ என்று ஆறுதல் சொல்வார்கள். ஆனால் செலவுகளை சமாளிக்க முடியாமல் நான் திணறுவதை பார்த்த எனது பெற்றோர், தங்கள் வீட்டு மாடியில் வந்து தங்கிக்கொள்ளும்படி சொன்னார்கள். நானும் மகிழ்ச்சியுடன் தலையாட்ட... என் கணவர் மட்டும் ஒப்புக் கொள்ளவில்லை. பிரச்னை அங்குதான் ஆரம்பித்தது.

கேட்டதற்கு, ‘மாமியார் வீட்டில் வந்து தங்க நான் ஒண்ணும் மானங்கெட்டவனில்லை’ என்று குடித்துவிட்டு வந்து பிரச்னை செய்தார். நானோ, ‘எங்க அம்மா வீட்டுக்குப் போனாலும், நாம தனிக்குடித்தனம்தான் இருக்கப் போகிறோம். அதனால் உங்களுக்கு என்ன பிரச்னை’ என்று சண்டையும் சமாதானமாகவும் விளக்கினேன். ஆனால் அவர் ஒப்புக்கொள்ளவில்லை. இதுகுறித்து தினமும் விவாதம், சண்டையுமாகவே தொடர்ந்தன. ஒருநாள் காலை, அவர் குடிக்காமல் இருந்த போது மீண்டும் இது சம்மந்தமாக பேசினேன். அதற்கு அவர், ‘வேண்டுமானால் வீட்டை உன் பேருக்கு மாத்திக் குடுக்கச் சொல்லு... அப்புறம் பாக்கலாம்’ என்று தெளிவாக சொன்னார். எனக்கு அதில் உடன்பாடு இல்லை. அதே நேரத்தில், ‘எப்போ வீடு மாறப் போறீங்க’ என்ற கேட்ட அம்மாவிடம், வேறு வழியில்லாமல் என் கணவரின் பேராசையை சொன்னேன். ஆனால் அம்மாவோ, ‘அவர் சொல்றது நியாயம்தான். எங்களுக்கு என்ன வேறு பிள்ளையா? நீ மட்டும்தானே வாரிசு. எப்படியிருந்தாலும் இந்த வீடு உனக்குதான். அதை எப்போ செய்தா என்ன? நான் அப்பாவிடம் பேசுகிறேன்’ என்றார்.

கொஞ்ச நாட்கள் அமைதியாக போனது. ஒருநாள் என்னை கூப்பிட்ட அப்பா, ‘வீட்டை அடுத்தவாரம் உனது பெயருக்கு மாத்தித் தர்றேன். அதற்கு உன்னோட அடையாள அட்டை, போட்டோ எல்லாம் ரெடிப்பண்ணு மா’ என்று சொன்னார். சொன்னபடி வீட்டை எனது பெயருக்கு மாற்றுவதற்கான வேலைகளும் நடந்தது. ஆனால் என் சித்தி மூலமாக ஒரு பிரச்னை ெவடித்தது. என் அம்மாவின் தங்கையான அவர், ‘தன் மகளுக்கு வீட்டில் பங்கு வேண்டும்’ என்று தகராறு செய்தார். அவர் என் அம்மாவுக்கு தங்கை மட்டுமல்ல, என் அப்பாவின் 2வது மனைவியாகவும் இருப்பவர். சித்தி படித்து முடித்து விட்டு வெளியூரில் வேலைக்கு சென்றார். ஏற்கனவே அந்த ஊரில் தனது வேலைக்கு சென்று வர வசதியாக அப்பா மட்டும் தங்கியிருந்தார். அதனால் அவர் இருந்த வீட்டிலேயே சித்தியும் தங்கினார். அப்போது நான் 10வது படித்துக் கொண்டு இருந்தேன். அதனால் பள்ளி மாற்ற வேண்டாம் என்பதற்காக சொந்த ஊரிலேயே நானும், அம்மாவும் பாட்டி வீட்டிலேயே இருந்தோம். பள்ளி இறுதித் தேர்வு முடிந்து வந்தபோது வீட்டில் ஒரே களேபரமாக இருந்தது. காரணம் சித்தியை அப்பா 2வது திருமணம் செய்திருந்ததுதான்.

அம்மாவும், சித்தியும் அக்கா, தங்கைகள் என்பதால் பிரச்னைக்கு தீர்வு சொன்னவர்கள் எல்லாம், ‘சமாதானமாக போங்கள்’ என்றனர். அதுவே தீர்ப்புமாகி போனதால், நானும் அம்மாவும் ஒரு வீட்டிலும், சித்தியை வேறு வீட்டிலும் குடி வைத்தார் அப்பா. சித்திக்கும் அப்பா மூலமாக ஒரே ஒரு மகள்தான். அப்பாவை போல சித்தியும் அரசுப் பணியில் இருக்கிறார். சொந்த வீட்டில்தான் இருக்கிறார். கொஞ்சம் தாமதமாகத்தான் எங்களுக்கு அப்பா வீடு கட்டிக் கொடுத்தார். எப்படியிருந்தாலும் அப்பா என்னிடம் பாசமாகவே இருக்கிறார். அவரது 2வது திருமணத்தால் பாசத்தில் எந்த வேறுபாடும் இல்லை. ஆனால் நானோ,அ்ம்மாவ சித்தியுடனோ, அவரது மகளுடனோ பேச மாட்டோம். சித்தி பேச முயன்ற போதும் நாங்கள் கண்டுகொண்டதில்லை. எனது திருமணத்துக்கும் அவரை அழைக்கவில்லை. இப்போது வீட்டை எனது பெயருக்கு மாற்றுவதை எதிர்ப்பதின் மூலமாக மீண்டும் பிரச்னை ஏற்பட்டுள்ளது. அந்த எதிர்ப்பு விவாதத்தில் தொடங்கி தகராறாக மாறிவிட்டது. ஒருகட்டத்தில் அவரையும், அவரது மகளையும் அடித்து விட்டதாக என்மீதும், அம்மா மீதும் சித்தி காவல்நிலையத்தில் புகார் கொடுத்தார்.

அதன்பிறகு காவல்நிலையத்தில் அழைத்து அடிக்கடி விசாரிப்பார்கள். வேலைக்கு கூட சரிவர போக முடியாதபடி எப்போது பார்த்தாலும் விசாரணைக்கு வாங்க என்று அழைப்பார்கள். ஆனால் அங்கு போனால், ‘அய்யா வெளியில் போயிருக்கிறார், வெயிட் பண்ணுங்க’ என்பார்கள். நாள் முழுக்க காத்திருந்து விட்டு சும்மா வர வேண்டியிருக்கும். அப்படி அடிக்கடி போனபோது, ஒரு போலீஸ்காரர், ‘ஏம்மா இப்படி வந்து காத்துட்டு இருக்கீங்க. உங்க செல்நெம்பர குடும்மா, நான் அய்யா வந்ததும் கூப்டுறேன்னு’ சொன்னார். நானும் என் அம்மாவின் செல்போன் எண்ணை தந்தேன். அவரோ ‘உங்க நெம்பர குடும்மா’ என்று என் எண்ணை வாங்கிக் கொண்டார். அதன் பிறகு அடிக்கடி போன் செய்து கேஸ் விஷயமாக பேசுவார். வகுப்பில் பாடம் நடத்திக் கொண்டு இருக்கும்போது கூப்பிடுவார். என்னால் போனை எடுக்க முடியாது. அதற்கு திட்டுவார். ‘உன்கிட்ட பேசணும்னு எவ்வளவு ஆவலா காத்துட்டு இருக்கேன். நீ என்னடான்னா போன் எடுக்க மாட்டங்கற’ என்பார்.

அவர் போலீஸ்காரர் என்பதால் ஒன்றும் சொல்ல முடியவில்லை. யாரிடமும் சொல்லவும் முடியவில்லை. இரவு நேரங்களிலும் கூப்பிடுவார். ‘புடவை கட்டிட்டு இருக்கிறீயா... நைட்டி போட்டுட்டு இருக்யா’ என்று தேவையில்லாததை எல்லாம் கேட்க ஆரம்பித்தார். இரவில் அழைப்பு வருவதை பார்த்து குடிகாரரான என் கணவர், ‘யாருடி இந்த நேரத்துல’ என்று சண்டை போட்டார். எடுக்காவிட்டால் அந்த போலீஸ்காரர் திட்டுகிறார். ஒருகட்டத்தில் என் கணவர் சந்தேகப்பட்டு சண்டை போடவும் ஆரம்பிக்கவே, வேறு வழியில்லாமல் செல்போனை ஆப் பண்ணி வைத்து விட்டேன்.  வேறு சிம்கார்டு வாங்கி பயன்படுத்தினேன். அந்த எண்ணையும் அந்த போலீஸ்காரர் எப்படியோ கண்டு பிடித்து விட்டார். அதிலும் போன் செய்து, ‘நீ அழகாக இருக்கிறேன்னு ஆடாதே.... உன் பேர்ல கொலை முயற்சி கேசு இருக்கு. உள்ளே போனா ஆயுசுக்கு வெளியில் வர முடியாது. நீயும் உன் அம்மாவும் களிதான் திண்ணனும்’ என்று மிரட்டினார்.

அந்த போலீஸ்காரர் டார்ச்சர் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. போனில் அசிங்க அசிங்கமாக பேசுகிறார். அப்பாவிடமும் சொல்ல முடியவில்லை. கணவரிடம் சொல்லலாம் என்றால், ‘ஏன் இவ்வளவு நாள் சொல்லவில்லை’ என்று கேட்பார். கூடவே போலீஸ்காரரை எதிர்த்து அவரால் என்ன செய்ய முடியும். அதனால் நிம்மதியின்றி தவிக்கிறேன். சத்தியமாக என் சித்தியை நானோ, என் அம்மாவே அடிக்கவேயில்லை. வாய் வார்த்தையாகத்தான் தகராறு நடந்தது. திட்டிக் கொண்டோம். ஆனால் அவர் கொடுத்த பொய் புகரை போலீஸ் நம்புகிறது. அதனால் எங்களுக்கு பிரச்னை. என்ன செய்வது என்றே தெரியவில்லை. எனக்கு ஒரு நல்ல வழியை காட்டுங்கள் தோழி.

இப்படிக்கு,
பெயர் வெளியிட விரும்பாத வாசகி.


நட்புடன் தோழிக்கு,

ஒருவர் சுயமாக சம்பாதித்த சொத்தாக இருந்தால் அதை யாருக்கு தர வேண்டும் என்பதை அவரே முடிவெடுக்கலாம். யாரும் அதற்கு தடை போட முடியாது. நீங்கள் எழுதிய கடிதம் மூலம் அது பூர்வீக சொத்து இல்லை என்று தெரிகிறது. உங்கள் தந்தை சம்பாதித்த சொத்தாக இருப்பதால், அதை உங்கள் பெயருக்கு மாற்றுவதில் பிரச்னை ஏற்பட வாய்ப்பில்லை. எனவே கவலைப்பட வேண்டாம். சொத்து பிரச்னையுடன் இப்போது அந்த போலீஸ்காரர் மூலம் இன்னொரு பிரச்னையும் எழுந்துள்ளது. போலீஸ்காரர் என்றில்லை, வெளியாட்கள் யாரிடமும் இதுபோல் எண்களை கொடுக்கக்கூடாது. அதே போல் பிரச்னை எழுந்ததும் வீட்டில் உள்ளவர்களிடம் சொல்லியிருக்க வேண்டும். பிரச்னைகளை ரகசியமாக வைத்துக் கொள்வது பிரச்னைகளை அதிகப்படுத்துமே தவிர குறைக்காது.

இதுபோன்ற இடங்களுக்கு வீட்டில் உள்ள ஆண்களையும் அழைத்துச் சென்றால் இப்படி பிரச்னைகள் ஏற்படும் வாய்ப்பு குறைவு. இந்த சமூகம் இன்னும் ஆணாதிக்க சமூகமாகவே இருக்கிறது என்பதால் சொல்கிறேன். ஒவ்வொரு பிரச்சனைக்கும் தீர்வு உண்டு. நீங்கள் மீண்டும் காவல்நிலையம் செல்லும் போது ஒரு வழக்கறிஞரை உடன் அழைத்துச் செல்லுங்கள். வழக்கின் உண்மை தன்மை என்னவென்று பாருங்கள். வழக்கறிஞர் ஆலோசனையுடன், ‘புகார் மனு தொடர்பாக விசாரணை என்ற பெயரில் உங்களை அச்சுறுத்தக் கூடாது’ என்று உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரலாம். மேலும் முதல் தகவல் அறிக்கை (எப்.ஐ.ஆர்) பதிவு செய்யப்பட்டிருந்தால், எந்த பிரிவுகளில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது என்று பார்த்து, உங்களை கைது செய்யாமல் இருக்க தடையாணை பெறலாம்.

முடிந்தால் உங்கள் சித்தியுடன் சுமுகமாக பிரச்னை தீர்க்க வழி காணுங்கள். அதனால் கவலைப்பட்டுக் கொண்டு இல்லாமல், பிரச்னைகளுக்கு என்ன தீர்வு என்பதை யோசியுங்கள். அதற்கு நிச்சயம் பலன் கிடைக்கும். அப்புறம் இன்னொரு விஷயம். அந்த போலீஸ்காரர் உங்களுக்கு தொல்லை தந்ததற்கான ஆதாரங்கள் இருந்தால் நீங்கள் புகார் செய்யலாம். மேலும் புகாரின் அடிப்படையில் விசாரணை அதிகாரியை மாற்றி வேறு அதிகாரியை நியமிப்பார்கள். அதற்கு முன்பு உங்கள் சித்தி தந்த புகார் மீது, தீர்வு காண்பதில் ஆர்வம் காட்டுங்கள். அது சுமுகத் தீர்வாக இருக்க வழி காணுங்கள்.

வீட்டில் மறைப்பது தவறு

தோழியின் பிரச்னை தொடர்பாக காவல்துறை அதிகாரிகளிடம் கேட்ட போது, ‘‘உங்கள் மீது புகார் கொடுத்ததாலேயே நீங்கள் குற்றவாளி என்று அர்த்தம் கிடையாது. காவல்நிலையத்தில் அழைக்கும் போது தைரியமாக போய் விவரங்களை சொல்லுங்க. உங்களிடம் அத்துமீறி நடக்கும் காவலர் குறித்து நீங்கள் அவரின் மேலதிகாரியிடம் சென்று புகார் செய்யுங்கள். பயப்பட வேண்டாம். அவர் கட்டாயம் உங்கள் புகார் மீது நடவடிக்கை எடுப்பார். அதனால் உங்கள் மீதான புகாருக்கும் அதற்கும் சம்பந்தமில்லை. அதேநேரத்தில் உங்களுக்கு ஏற்பட் டுள்ள பிரச்னை குறித்து வீட்டில் சொல்லாமல் இருப்பது சரியல்ல. உங்கள் மீது தவறில்லை என்பதை வீட்டில் உள்ளவர் களிடம் விளக்கிச் சொல்லுங்கள். குடும்பத்தினரிடம் இப்படி மறைப்பது, மேலும் பல பிரச்னைகளை கொண்டு வந்து விட்டு விடுகின்றன. எனவே விவகாரத்தை வீட்டிலும் சொல்லுங்கள். அவர்கள் துணையுடன் சம்பந்தப்பட்ட காவலர் குறித்து அவரின் மேலதிகாரியிடமும் உடனடியாக புகார் கொடுங்கள்.’’

தொகுப்பு: ஜெயா பிள்ளை

என்ன செய்வது தோழி
பகுதிக்கான கேள்விகளை எழுதி
அனுப்ப வேண்டிய முகவரி

‘என்ன செய்வது தோழி?’
குங்குமம் தோழி,
தபால் பெட்டி எண்: 2924
எண்: 229, கச்சேரி சாலை,
மயிலாப்பூர், சென்னை - 600 004


தொகுப்பு: அன்னம் அரசு

படங்கள்: ஜி.சிவக்குமார்

மேலும் செய்திகள்

Advertisement
Like Us on Facebook Dinkaran Daily News
 • humanbodies23

  2,000 ஆண்டுகளுக்கு முன் எரிமலை வெடிப்பிலிருந்து தப்பிக்க முயன்ற 2 மனித உடல்கள் இத்தாலியில் கண்டுபிடிப்பு!: புகைப்படங்கள்

 • jammu23

  ஜம்மு காஷ்மீரில் நிலவும் கடுங்குளிர்!: தரை, வீடுகளின் கூரைகள், வாகனங்களின் மேற்பகுதி ஆகியவை பனி உறைந்து வெண்ணிறமாக காட்சி..!!

 • yamuna23

  இனவிருத்திக்காக யமுனை நதியில் கூட்டம் கூட்டமாக படையெடுக்கும் பறவைகள்!: சுற்றுலாப் பயணிகள் ஆர்வமுடன் கண்டு ரசிப்பு..!!

 • chadpuja23

  சூரிய கடவுளுக்கு நன்றி தெரிவிக்கும் சாத் பூஜை!: நியூ ஜெர்சியில் நூற்றுக்கணக்கான அமெரிக்க வாழ் இந்தியர்கள் வழிபாடு..!!

 • isrelviva23

  இப்படிக்கூட விவசாயம் செய்ய முடியுமா!: இஸ்ரேலில் வியக்க வைக்கும் செங்குத்து வேளாண்மை..புகைப்படங்கள்..!!

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்