SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

கொரோனா பாசிடிவ் தாய்மார்களும் தாய்ப்பால் கொடுக்கலாம்!

2020-09-23@ 17:13:43

நன்றி குங்குமம் தோழி

கர்ப்பிணிப் பெண்களுக்கு மகப்பேறு குறித்த அச்சத்துடன், அவர்களைத்தான் கொரோனா அதிகமாக தாக்கும் போன்ற தகவல்கள் பயத்தை மேலும்
அதிகரித்துள்ளது. இந்த நேரத்தில் தேவையற்ற கவலை உடல்நலத்தைக் கெடுக்கும். உண்மையான தகவல்களை ஆராய்ந்து தெரிந்துகொள்வதின் மூலம் மட்டுமே இந்த பயத்தைப் போக்க முடியும். இதற்காக பதினைந்து ஆண்டுகளாக மகப்பேறு மருத்துவராகவும், லேபராஸ்கோபிக் அறுவை சிகிச்சை நிபுணருமாக சிறந்து விளங்கும் டாக்டர் தென்றல், ஆலோசனைகள் வழங்குகிறார். “கொரோனா நோய், கர்ப்பிணிப் பெண்களை அதிகம் தாக்கும்
என்பது தவறான கருத்து. கொரோனா தொற்றில் பாதிக்கப்பட்ட கர்ப்பவதிகளில் பலரும் அறிகுறிகள் இல்லாத மிதமான பாதிப்புகளுடன் விரைவில் குணமடைகின்றனர். சாதாரண பொதுமக்களைப் போல ஆரோக்கியமான உணவு, முறையான உடற்பயிற்சியை கடைப்பிடித்து சமூக விலகல், முகக்கவசம் போன்ற அடிப்படை வழிமுறைகளைப் பின்பற்றுவதே போதுமானது.

கொரோனாவைக் கண்டு கர்ப்பிணிகள் அதீத பயம் கொள்ளத்தேவையில்லை. வயதான கர்ப்பிணிப் பெண்கள், உயர் ரத்த அழுத்தம், நீரிழிவு நோய் போன்ற சிக்கல் உள்ள தாய்மார்கள் மட்டும், மருத்துவரின் ஆலோசனைகளைப் பின்பற்றி கண்காணிப்பில் இருப்பது நல்லது.  அதே போல, கொரோனா பாதிக்கப்பட்ட தாயிடமிருந்து பிறக்கும் குழந்தைக்கு நோய் பரவும் வாய்ப்பும் மிகவும் குறைவுதான். நோய்த் தொற்று ஏற்பட்ட அம்மாக்களும் குழந்தைகளுக்குப் பால் கொடுக்கலாம். இதுவரை, தாய்ப்பாலில் கோவிட்-19 வைரஸ் கண்டறியப்படவில்லை என்று யுனிசெஃப் அமைப்பு தெரிவித்துள்ளது.  தாய்ப்பால் குழந்தைக்கு ஊட்டச்சத்தை அளித்து, நோயிலிருந்தும் பாதுகாக்கிறது. இதனால், அனைத்து தாய்மார்களும் குழந்தைக்குத் தாய்ப்பால் கொடுப்பதைத் தொடர வேண்டும் என்றே நிபுணர்கள் அறிவுறுத்தி உள்ளனர்.

அதே நேரம் தாய்ப்பால் கொடுக்கும் சமயம், பாதிக்கப்பட்ட பெண் இருமும் போதும் தும்பும் போதும், சுவாசக் குழாயிலிருந்து வெளியேறும் நீரிலிருந்து குழந்தைக்கு நோய் பரவும் வாய்ப்பு இருக்கிறது. குழந்தைக்கு முகக்கவசம் அணிவிக்க முடியாது என்பதால், கூடுதல் எச்சரிக்கையுடன் சுகாதாரத்தை  கடைப்பிடிப்பது அவசியம். வைரஸ் பாதிக்காத பெண்களும், தாய்ப்பால் கொடுக்கும் போது நிச்சயம் முகக்கவசம் அணிய வேண்டும். குழந்தையை தொடுவதற்கு முன்னும், பின்பும் கைகளை சுத்தமாக கழுவ வேண்டும். கொரோனா பாசிடிவ் பெண்கள் தாய்ப்பால் கொடுக்க Breast pump பயன்படுத்துவதும் சிறந்தது. கர்ப்பிணி பெண்களில் கொரோனா தொற்றால் ஏற்படும் பாதிப்புகளின் ஆய்வுகள் குறைவாகவே உள்ளன. இதனால் முன்னெச்சரிக்கையுடன் இருந்து தேவையில்லாத மன அழுத்தத்திற்கு இடம் தராமல் இருப்பது முக்கியம்.

குழந்தை பிறந்து வீட்டிற்குச் சென்றதும், நிலைமை சீராகும் வரை நெருங்கிய குடும்பத்தினரைத் தவிர, மற்றவர்கள் குழந்தையைக் கையாள அனுமதிக்கவே கூடாது. ஒரே வீட்டில் வசிப்பவர்களும் குழந்தையை பாதுகாப்புடன் அணுக வேண்டும். மேலும் கர்ப்பிணிப் பெண்களுக்கும், குழந்தைக்கும் நடத்தப்படும் நிகழ்ச்சிகளை சில காலம் தள்ளிப்போட வேண்டும் அல்லது வீட்டாருடன் வீட்டிலேயே முடித்துக்கொள்ள வேண்டும்” என்கிறார்  இச்சமயம் பல கர்ப்பிணி பெண்கள், தங்கள் தாய்வீட்டிற்கு செல்ல முடியாமல் வெளிநாட்டிலோ அல்லது வெளியூர்களிலோ இருக்கலாம். அவர்களுக்கு கணவர்கள்தான் முக்கிய துணையாகவும் ஆதரவாகவும் இருக்க வேண்டும். பல மருத்துவர்களும் இந்த நேரம் இணையம் மூலம் ஆலோசனைகள் வழங்குகின்றனர். கர்ப்பிணிப் பெண்களுக்கான சிறப்பு ஆன்லைன் வகுப்புகள் இருக்கின்றன. இவை உளவியல் பிரச்சனைகளைத் தீர்க்கவும், ஆரோக்கியமான உணவையும் உடற்பயிற்சியையும் மேற்கொள்ள உதவுகின்றன. மேலும் கர்ப்பிணி பெண்களுக்கென சமூக ஊடகங்களில் குழுக்களும் இருக்கின்றன. அதில் கலந்துகொண்டும் மற்ற பெண்களுடன் தொடர்பிலிருந்து ஆதரவாக இருக்கலாம்.

தொகுப்பு: ஸ்வேதா கண்ணன்

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • 02-12-2020

  02-12-2020 இன்றைய சிறப்பு படங்கள்

 • pramos1

  கப்பலை மிக துல்லியமாக தாக்கி அழிக்கும் பிரமோஸ் ஏவுகணையை வெற்றிகரமாக பரிசோதித்தது இந்தியா..!!

 • pamaka1

  20% இடஒதுக்கீடு போராட்டம்: சென்னையில் மின்சார ரயில் மீது பாமக-வினர் சரமாரி கல்வீசி தாக்குதல்...புகைப்படங்கள்!!

 • jammuele1

  ஜம்மு - காஷ்மீரில் மாவட்ட வளர்ச்சி கவுன்சில் தேர்தல்!: 2ம் கட்ட வாக்குப்பதிவு தொடங்கியது..ஆர்வமுடன் வாக்களிக்கும் மக்கள்..!!

 • nuclearscientist1

  ஈரானில் கொல்லப்பட்ட அணு விஞ்ஞானியின் உடல் டெஹ்ரான் நகரில் அடக்‍கம்!: இறுதி ஊர்வலத்தில் ஏராளமானோர் பங்கேற்பு..!!

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்