SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

வீட்டிலேயே பியூட்டி பார்லர்!

2020-09-17@ 13:59:19

நன்றி குங்குமம் தோழி

பொதுவாகவே பெண்கள் தான் அழகாக இருக்க வேண்டும் என்பதில் மிகவும் அக்கறை செலுத்துவது வழக்கம். பருவம் எய்தியதும், மஞ்சள் தேய்த்து குளி, மருதாணி இட்டுக்கோ, உளுந்து களி சாப்பிடு, தலைக்கு தவறாம தேங்காய் எண்ணெய் தேய், வாரத்தில் இரு நாட்கள் சீயக்காய் போட்டு தலைக்கு குளி என பெண்களின் வெளித்தோற்றம் அழகாக இருக்க வேண்டும் என்பதற்காகவே நாம் காலம் காலமாகவே சில விஷயங்களை கடைப்பிடித்து வருகிறோம்.
காலத்தின் கட்டாயத்தில் இவை மங்கி வந்தாலும், ஆதி காலத்தில் இருந்து தங்களது அழகை பேணி பாதுகாத்துக் கொள்ள பெண்கள் இன்றும் தவறவில்லை. உலகமே அழிந்தாலும், கரப்பான்பூச்சி அழியாது என்பார்கள். பெண் அப்படி அல்ல. உலகம் அழிகிறது என்றாலும், அந்த கடைசி நொடியிலும், தன்னை அழகாக்கும் முயற்சியில் தீவிரம் செலுத்துவாள் என்பது யதார்த்தம். எதிர் பால் ஈர்ப்பு பருவத்தில், பருவ பெண் தனது அழகு குறித்து அதிகம் கவலைப்படுகிறாள். அதுவே, படிப்படியாக ஒவ்வொரு கட்டத்திலும், அவளது வாழ்வுடன் பின்னிப் பிணைகிறது.

வசீகரமான உடல் தோற்றமும், முகப்பொலிவும் இருக்க இந்த பெண்கள் தங்களை எப்படி எல்லாம் அக்கறை செலுத்துகிறார்கள் என்பது பெற்றோரும், கணவர்களும், காதலர்களும் அறியாததல்ல. அவள் மட்டும் அழகா இருக்கா.. எனக்கு ஏன் அப்படி அமையல எனும் பெண்களின் அங்கலாய்ப்பை எவ்வளவு முறை கேட்டாலும் சலிக்காது. அழகு விஷயத்தில் குறிப்பாக முகம் பொலிவாக அமைய பியூட்டி பார்லரை நாடாத பெண்களே இன்றில்லை. ஆனால், கொரோனா தொற்று காரணமாக, ஊரடங்கு அமலாகியதால், பார்லருக்கு செல்ல முடியாமல் தவிக்கும் பாவையரின் திண்டாட்டத்திற்கு மாற்று தீர்வாக, வீட்டிலுள்ள பொருட்களை கொண்டு உங்களை ‘பியூட்டி குயின்’ ஆக்க முடியும் என்கிறார் கங்கா பாலசுப்பிரமணியன். படைப்பை குறை சொல்வதை காட்டிலும் பட்டான மேனியை பகட்டாக பராமரிப்பது பற்றி ஆதம்பாக்கத்தில் ஹரிணீஸ் லேடிஸ் சாய்ஸ் என்ற பெயரில் பியூட்டி பார்லர் மற்றும் மகளிருக்கான ஆடை வடிவமைப்பு டெய்லர் மற்றும் பயிற்சி வகுப்பு நடத்தி வரும் கங்கா பாலசுப்பிரமணியன் சொல்லும் சிம்பிள் டெக்னிக்குகளை பக்குவமாக கையாண்டால் போதும். அப்புறம் என்ன நீங்களும் அழகிதான். சரி, வாங்க கங்கா என்ன சொல்கிறார் என்று கவனிப்போம்.

பெண்கள் பொதுவாகவே எல்லா விதத்திலும் அழகாக இருக்க வேண்டும் என்று நினைப்பார்கள். அழகாக வைத்துக் கொள்வதில் ஆர்வம் இருந்தாலும்., அதற்கான வழிமுறைகள் தெரிந்திருக்காது. அப்படியே தெரிந்திருந்தாலும் முழுமையாக தெரிந்திருக்காது. அதோடு கோடை காலத்தில் பொசுக்கும் வெயிலுக்கு நிகராக கொரோனாவும் பேயாட்டம் போட்டு வருகிறது. ஊரடங்கு என்பதால் பியூட்டி பார்லருக்கும் போக முடியலைன்னு கவலையே வேண்டாம். வீட்டில் எப்போதும் ஸ்டாக் உள்ள பொருட்களை வைத்து நாம் நம்முடைய அழகை எப்படி பராமரிப்பது என்பது பற்றி பார்ப்போம். பெண்ணின் சருமம் மூன்று வகைப் படும். எண்ணைப்பசை சருமம், சாதாரண சருமம் மற்றும் உலர்ந்த சருமம். ஆயில் ஸ்கின் என்றால் ஒரேயடியாக பிசுபிசுப்பாக இருப்பது அல்ல. தொட்டால் பஞ்சு மெத்தை கணக்கில், மல்லிகை கொத்தை கையாள்வது போல இருக்கும். உலர்ந்த சருமம் அதற்கு எதிர்ப்பதமாக இருக்கும்.

இதற்கு காரணம் தோலில் உள்ள குறைபாடு. நான்கு அடுக்குகளாக உள்ள தோலில், அழகுக்காக நாம் என்ன தான் ரசாயன கலவை பூச்சுகளை (கிரீம் அல்லது பேஸ்ட்) பூசினாலும், அவை இரண்டு அடுக்குகள் வரை மட்டுமே பரவும் தன்மை கொண்டவை. எனவே, கிரீம் அல்லது பேஸ்ட்களால் உடல் பாதிப்பு ஏற்படுவதில்லை. அதே சமயம் ஒவ்வாமை காரணமாக அலர்ஜி ஏற்பட்டு அது சீரியசான பிரச்னையாகவும் மாறக்கூடும். தோல் சுருங்கும் தன்மை ஆண்களை விட பெண்களுக்கு விரைவில் ஏற்படுவது இயற்கை.  சீக்கிரம் வயதான தோற்றம் வந்து விடும் காரணம், ஆண்களின் பேஸ் அளவு நான்கு பாகம் என்றால் பெண்களுக்கு 3 பாகம் தான் முகத்தில் உள்ள எலாஸ்டிக் தன்மையை குறிக்கும். இழுப்பு (எலாஸ்டிக்) குறைவாக உள்ளதால் பெண்களின் முகம் எலாஸ்டிக் தன்மையை இழந்துவிடும் இதனால் முகம் சுருங்கி விடுகிறது. தோலிலுள்ள கொலோஜன் திரவக்குறைவால் சருமத்தில் சுருக்கம் விழுகிறது என அறிவியல் ரீதியில் கூறப்படுகிறது. கொலோஜனை தக்க வைக்க முறையான ஃபேஷியல் செய்ய வேண்டும்.

முதலாவதாக நாம் உண்ணும் உணவுக்கும் நமது முகப் பொலிவிற்கும் நெருங்கிய தொடர்பு உள்ளது. நாம் உண்ணும் சத்தான பொருட்களில் நம் அழகுக்கு தொடர்புடைய சமாச்சாரங்கள் கொட்டிக்கிடக்கிறது. வைட்டமின் (ஊட்டச்சத்து) ஏ, பி, பி12, டி, சி, ஏ போன்றவையும், கால்சியம், இரும்பு, கொழுப்பு போன்ற கனிமம் நிறைந்த உணவுகளை அதிகம் சேர்த்துக் கொண்டால் இயல்பிலேயே முகப்பொலிவு கூடும். மொத்த தேகமும் மென்மையாவதை நீங்களே உணருவீர்கள்.
வைட்டமின் ஏ: அழகு வைட்டமின் என்றும் கூறப்படுகிறது. கண்கள் பளபளக்க, கூந்தல் வளர, நகங்கள் உடையாமல் உறுதியாக இருக்க என சரும
ஆரோக்கியத்தை காக்கிறது. இந்த வைட்டமின் உடலில் குறைந்தால் சருமம் தடிப்பது, தோல் வெடிப்பு தோன்றும், நகங்கள் உடைவது, கண் இமைகள் வீக்கம் என சிக்கல் வரும்.

வைட்டமின் பி: பருக்கள் வராமலும், உடல் பருமனையும் கட்டுப்படுத்தும்.

வைட்டமின் பி12: கண்களுக்கு அழகூட்டும். வழுக்கை பிரச்னைக்கு தீர்வு. பருக்கள் வராது.

வைட்டமின் சி: இளவயது வழுக்கையை தடுக்கும்.

வைட்டமின் இ: இளமையாக வைத்திருக்கும். கூந்தல் ஆரோக்கியத்துக்கு காரணகர்த்தா.

அதுபோல புரதச்சத்தும் (புரோட்டீன்) பெண்களின் அழகுக்கும் ஆரோக்கியத்திற்கும் இன்றியமையாதது. முகப் பொலிவிற்கு வீட்டில் இருந்தே பராமரிக்க
* அரிசி மாவு ஒரு ஸ்பூன், கற்றாழை (ஆலுவேரா) ஜெல் ஒரு ஸ்பூன், கஸ்தூரி மஞ்சள் ஒரு சிட்டிகை, தயிர் ஒரு ஸ்பூன். இவற்றை குழைத்து முகத்தில் தடவி 10 நிமிடம் மெதுவாக நீவி (மசாஜ்) விடுங்கள். மேலும் 10 நிமிடம் ஆனதும் குளிர்ந்த நீரில் முகத்தை சுத்தம் செய்யவும். வாரம் 2 முறை இப்படி செய்தால், வெண்ணெய் போல கன்னங்கள் வழுக்கும். புதுப்பொலிவு ஏற்படும்.

* இரண்டு ஸ்பூன் உருளைக்கிழங்கு ஜூஸுடன் 2 ஸ்பூன் தயிர் கலந்து பரவலாக முகத்தில் தேய்த்து காயவிடுங்கள். நன்கு காய்ந்த பின், குளிர்ந்த நீரில் வாஷ் பண்ணவும். கருமையான முகம் கலராக மாற்றம் பெறும். வாரம் இருமுறை செய்து வந்தால் நல்ல பலன்  கிட்டும்.

* கற்றாழை ஜெல் கண் இமைகளுக்கு மேலும், கண்ணுக்கு கீழ்ப்புறத்திலும் தடவி கண்களை மூடி மெதுவாக மசாஜ் செய்யுங்க. பத்து நிமிடம் மசாஜ் செய்து பின்னர் குளிர்ந்த நீரில் கழுவினால் கண்களை சுற்றிப்படரும் கருவளையம் நீங்கும்.

* புதினா இலையை மைய அரைத்து கண்களை சுற்றி தடவி 10 நிமிடம் விட்டு குளிர்ந்த நீரில் கழுவினாலும் கருவளையம் போயே போச்சு.

* மஞ்சளில் சருமத்தை பிரகாசமாக்கும் ஏஜென்ட்கள் நிறைய உள்ளது. 1 ஸ்பூன் கஸ்தூரி மஞ்சளுடன் அரை ஸ்பூன் தேங்காய் எண்ணெய் சேர்த்து கண்களை சுற்றி தடவி, சிறிது நேரமானதும் குளிர்ந்த நீரில் கழுவ வேண்டும். வாரம் இரு முறை செய்து வந்தால், உங்களை அறியாமலே கருவளையத்துக்கு விடை கொடுத்திருப்பீர்கள்.

* எலுமிச்சையில் உள்ள வைட்டமின் சி கண்ணின் கருவளையத்தை அகற்றும் தன்மை கொண்டது. எலுமிச்சை சாறை பஞ்சில் தோய்த்து கண்களில் வைத்து (கண்ணை தொறக்காதீங்க) 20 நிமிடம் விட்டு குளிர்ந்த நீரால் கழுவினால் கருவளையம் அகலும். வறண்ட சருமம் உள்ளவர்கள் செய்யக்கூடாது. இதில் உள்ள சிட்ரிக் அமிலம் சருமத்தில் காயம் ஏற்படுத்தும்.

* எலுமிச்சம் பழத்தை இரண்டாக நறுக்கி ஒரு ஸ்பூன் தேங்காய் எண்ணெய் கலக்கி உடலில் கருமை படர்ந்த கை,கால் முட்டி, கழுத்து பகுதிகளில் தேய்த்து, கால் மணி நேரத்திற்கு பின் குளியல் போட்டால் கருமை நீங்கும். தேகத்திற்கு தனிப்பொலிவும் கூடும்.

* ஐந்து துளி எலுமிச்சைசாறு, 5 துளி தேன், அரை ஸ்பூன் சிகப்பு சந்தனம், ஒரு ஸ்பூன் தயிர் ஆகியவற்றை குழைத்து முகத்தில் அப்ளை செய்து, 20 நிமிடங்களுக்கு பின் வாஷ் செய்தால் முகம் பளபளக்கும்.

* 1 ஸ்பூன் தயிர், 1 ஸ்பூன் தேங்காய் எண்ணெய் இரண்டையும் கலந்து முகத்தில் போட்டு 5 நிமிடம் மசாஜ் கொடுக்கவும். பின் 10 நிமிடம் விட்டு கடலை மாவை தேய்த்து வாஷ் பண்ணவும். முகம் கண்ணாடி போன்று பளபளப்பாகும்.

* ஒரு கைப்பிடி அரைத்த வெந்தயம், கொஞ்சம் கற்றாழை ஜெல்லை 3 ஸ்பூன் தேங்காய் எண்ணெயில் சேர்த்து குழைத்து தலையில் கூந்தலின் அடிவேருக்குள் ஊடுருவும் வகையில் நன்றாக தடவவும். இருபது நிமிடங்கள் ஆறவிட்டு, பின்னர் ஷாம்பு வாஷ் செய்தால் முடி கருகருவென வளரும்.

* ஐந்து ஸ்பூன் தேங்காய் எண்ணெயில் 2 வைட்டமின் மாத்திரையை பொடி செய்து கலக்கி பின் அதனுடன் 2 ஸ்பூன் விளக்கெண்ணெய் சேர்த்து கூந்தலில் தடவி வந்தால் முழங்கால் முட்டியை தொடும் அளவுக்கு கூந்தல் முடி நீளமாவது உறுதி.

* தேங்காய் எண்ணெயில் செம்பருத்தி இலை ஒரு பிடியும், கறிவேப்பிலை ஒரு பிடியும் கலந்து கூந்தலில் அப்ளை செய்து நன்றாக ஊறவிடுங்கள். அதன் பின் சுத்தமான நீரில் குளித்தால் தலைமுடியில் கலந்திருந்த பொடுகு ஒட்டுமொத்தமாக குளோஸ்.

* கறிவேப்பிலையையும், வேப்பிலையையும் சிறிது தண்ணீர் சேர்த்து விழுதாக அரைத்து, தலையில் தேய்த்து 10 நிமிடங்கள் விட்டு ஷாம்பூ வாஷ் பண்ணினால் பேன்  உங்கள் தலையை எட்டிக்கூட பார்க்காது.

* கறிவேப்பிலை, மருதாணி, செம்பருத்தி இலை இவை மூன்றையும் சேர்த்து அரைத்து தலையில் தேய்த்து குளித்து வர எல்லாவித கூந்தல் பிரச்னைகளும் தீரும்.

இது போன்ற சிம்பிள் டெக்னிக்கை வீட்டில் அடைந்து கிடக்கும் இந்த நேரத்தில் பொறுமையாக செய்து வந்தால் நீங்கள் பலனடைவது  உறுதி. முக்கியமான விஷயம் என்ன என்றால், முகப்பொலிவுக்கு இது மட்டும் காரணம் அல்ல, அக அழகும் மிக முக்கியம். மனதில் தூய சிந்தனை நீடித்தால், முகமும் அழகாகும். இளமையும் நெடுநாள் கைகோர்க்கும். தினமும் ஏதாவது ஒரு  தேகப் பயிற்சியை முறையாக செய்வது அகத்தூய்மைக்கு அழகு சேர்க்கும். நடை பயிற்சி செல்வது உடல் எடையை கட்டுக்குள் நிறுத்தும். யோகா அமைதியான மனநிலை உண்டாக்கும். யோகாசனம் அழகுக்கு மிகவும் இன்றியமையாதது. நாம் அதை முறையோடு கற்றுக் கொள்வது நன்மை தரும். தங்களால் முடிந்த அளவு மனதை சந்தோஷமாக வைத்திருந்தாலே முகம் பளபளப்பாக இருக்கும். கண்களை மூடிக்கொண்டு மனதை ஒருநிலை ஆக்கினாலே கண்கள் பொலிவுறும். தெளிவான சிந்தனை உருவாகும்.

தொகுப்பு: தி.ஜெனிபா

படங்கள்: ஜி.சிவக்குமார்

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • gandhi-13

  ஏஐ தொழில்நுட்பத்தை பயன்படுத்தி உருவாக்கப்பட்டுள்ள செல்பிக்கள்

 • taipei-fashion-week-taiwan

  தைவானில் உள்ள தைபே ஃபேஷன் வீக் பாரம்பரிய உடைகளில் கவனம் செலுத்துகிறது..!!

 • kalifffo1

  தண்ணீரில் நகரம் .. கண்ணீரில் மக்கள்... கலிஃபோர்னியாவை புரட்டிப்போட்ட பேய் மழை, சூறைக்காற்று!!

 • pak-123

  பாகிஸ்தான்,ஆப்கானிஸ்தானில் நிலநடுக்கம்: 9 பேர் பலி

 • cherry-blossom-tokyo

  டோக்கியோ, வாஷிங்டன், பெய்ஜிங்கில் செர்ரி மலரும் பருவம் தொடக்கம்..!!

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்