SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

பெண்களை மிரட்டும் பி.சி.ஓ.டி...

2020-09-16@ 15:16:28

நன்றி குங்குமம் தோழி

சினைப்பையில் கட்டிகள் தோன்றுவதற்கு சரியானக் காரணம் இன்னும் கண்டறியப்படவில்லை. ஆனால், ஆண் பாலின ஹார்மோன் அதிகமாய் சுரப்பதற்கு காரணிகளாய் நம்பப்படுவது சினைப்பையின் அழற்சி, இன்சுலின் அளவுகளில் மாற்றம் மற்றும் மரபணு. பெண் பூப்படைந்த நாளில் ஆரம்பித்து இறுதி மாதவிடாய் (மெனோபாஸ்) வரை என வயது வித்தியாசம் இன்றி பத்தில் ஐந்து பெண்களுக்கு இன்றைக்கு ‘சீரான மாதவிடாய் சுழற்சி’யானது நிகழாமல் இருக்கிறது. இந்த ஒழுங்கற்ற மாதவிடாய்க்கு பல காரணங்கள் இருப்பினும், முதல் முக்கிய காரணமாய் இருப்பது பி.சி.ஓ.டி (POLY CYSTIC OVARIAN DISORDERS) என்னும் சினைப்பை நீர்க்கட்டிகள் கோளாறுதான்.

நம்மில் கிட்டத்தட்ட எல்லோரும் ‘கருப்பை’ எனும் வார்த்தையை அறிந்து வைத்திருப்போம். ஆனால், இதென்ன ‘சினைப்பை’ என்று பலரும் நினைக்கலாம். அதிலும், அதற்குள் வரக்கூடிய கட்டிகள், அதை எப்படி தடுப்பது? அதற்கென உள்ள சிகிச்சை முறைகள்? முறையாய் சிகிச்சை எடுக்காமல் இருந்தால் வரக்கூடிய பாதிப்புகள்? என்பதையெல்லாம் ஒருசேரப் பார்க்கவே இக்கட்டுரை.

சினைப்பை என்பது..?

பெண்ணானவள் பூப்படைந்தது முதல் இறுதி மாதவிடாயான மெனோ பாஸ் வரை மாதம் ஒரு கருமுட்டை உற்பத்தியாகும். இது நன்கு வளர்ந்து, முதிரும் இடம்தான் சினைப்பை. கருப்பைக்கு இரு பக்கத்திலும் ஒரு சினைப்பை என மொத்தம் இரண்டு சினைப்பைகள் இருக்கும். மாதத்திற்கு ஏதேனும் ஒரு சினைப்பையிலிருந்து ஒரு கருமுட்டை மட்டுமே உற்பத்தியாகும். இது முதிர்ந்தபின் சினைப்பைக் குழாய் வழியாய் கருப்பையை வந்தடையும். இந்த நிகழ்வை மருத்துவத்தில் `ovulation'என்று கூறுவர். இது மட்டுமில்லாமல் சினைப்பையில் ஹார்மோன்கள் சுரக்கும். பெண் பாலின ஹார்மோன் (esrtrogen, progesterone) ஆண் பாலின ஹார்மோன் (androgen). இவை பெண்னின் மாதவிடாய் சுழற்சி சீராய் அமைவதற்கு உதவும் ஹார்
மோன்கள்.

மாதவிடாய் சுழற்சியும்... கரு உருவாதலும்...

சினைப்பையில் முட்டை வளரும் அதே சமயம் கருப்பையின் திசுக்களின் படலம் அதிகமாய், தடியானதாய் உருமாறும்  (ஒருவேளை கர்ப்பம் தரித்தால் இந்த திசுப்படலம் கருவை திடமாய் தாங்கிப்பிடிக்க உதவுவதற்கே இந்த நிகழ்வு). கருப்பையை வந்தடைந்த வளர்ந்த முட்டை ஆண் விந்தணுவோடு சேர்ந்தால் கரு உருவாகும். இல்லையெனில் மாதவிடாய் உதிரப்போக்காய் முட்டையும், திசுப் படலமும் ரத்தத்துடன் வெளியேறும். பின் புதிதாய் முட்டை உருவாகும். இதுபோல் மாதாமாதம் நிகழ்வதையே மாதவிடாய் சுழற்சி என்கிறோம்.

சினைப்பை நீர்க்கட்டிகள்...

இந்தக் கோளாறானது 15 முதல் 44 வயதுவரை உள்ள பெண்களை மட்டுமே பாதிக்கும். உலக அளவில் 26.7 சதவீதம் பெண்கள் இந்த கோளாறினால் பாதிக்கப்படுகிறார்கள் என்று ஒரு புள்ளி விவரம் கூறுகிறது. இக்கோளாறு உள்ளவர்களுக்கு சினைப்பையில் சிறு நீர்க்கட்டிகள் (நீரால் நிரப்பப்பட்ட சிறு பைகள்) வளரும். ஒவ்வொரு கட்டியின் உள்ளும் ஒரு முதிராத முட்டை இருக்கும். அது முதிராத முட்டை என்பதால் அது சினைப்பையை விட்டு சினைப்பை குழாய் வழியாய் எப்பொழுதும் கர்ப்பப்பையை வந்து அடையாது. இந்த நிகழ்வு நடக்காமல் இருப்பதால் மாதவிடாய் சுழற்சிக் கோளாறுகள் ஏற்படும். இதனால் ஹார்மோன்களின் அளவிலும் மாற்றம் ஏற்படும்.

இயல்பிலேயே பெண்களுக்கு ஆண் பாலின ஹார்மோன் (androgen) சிறிதளவு சுரக்கும் (இது இயல்பு). அதே போல் ஆண்களுக்கும் பெண் பாலின ஹார்மோன்கள் சுரக்கும். அதனால் இக்கோளாறு இருக்கும் பெண்களின் ரத்தத்தில் ஆண்பாலின ஆண்ட்ரோஜன் ஹார்மோன் இயல்பை விட அதிகமாகவும், பெண்பாலின ஈஸ்ட்ரோஜன், புரோஜெஸ்டிரோன் ஹார்மோன்கள் இயல்பை விட குறைவாகவும் இருக்கும். இதன் விளைவாய் மாதவிடாய் சுழற்சியில் மாற்றம் ஏற்பட்டு, மாதவிடாய் வராமல் இருப்பது அல்லது அதிகமாய் உதிரப்போக்கு ஏற்படுவது என சுழற்சி சிக்கல்கள் தோன்றும்.

என்ன காரணம்..?

ரத்தத்தில் உள்ள சர்க்கரையை உடல் செல்கள் உறிஞ்சுவதற்கு இன்சுலின் பயன்படுகிறது. இந்தக் கோளாறினால் பாதிக்கப்படும் பெண்களில் 70 சதவீத பெண்களுக்கு அவர்களின் செல்களால் இன்சுலினை சரியாகப் பயன்படுத்த முடியவில்லை. இதனால் தவறுதலாய் அதிகமான அளவில் இன்சுலின் சுரக்கப்படுகிறது. இப்படி அதிகமாய் சுரக்கப்படும் இன்சுலின் சினைப்பையைத் தூண்டி அதிகமாய் ஆண் பாலின ஹார்மோன்களை உற்பத்தி செய்ய வைக்கிறது. ஒருவகையில் உடல் பருமன் அதிகமாய் இருப்பதும் இன்சுலின் எதிர்ப்புக்கு காரணமாய் இருக்கிறது.

அறிகுறிகள் அறிவோம்...

* ஒழுங்கற்ற மாதவிடாய் சுழற்சி, அதாவது மாதாமாதம் வரவேண்டிய சுழற்சி இரண்டு அல்லது மூன்று மாதத்திற்கு ஒரு முறை வருவது, வந்தாலும் அதிக உதிரப்போக்குடன் வருவது அல்லது ஓரிரு நாளில் உதிரப்போக்கு நின்றுவிடுவது.

* இயல்பாக ஒருவருக்கு வருடத்திற்கு 12 சுழற்சி வரவேண்டும். ஆனால், இவர்களுக்கு குறைந்தது 8 சுழற்சிகளே வரும்.

* சட்டென்று சில மாதங்களிலேயே உடல் எடை அதிகமாய் கூடுவது. இந்த கோளாறினால் பாதிக்கப் படும் 80 சதவீத பெண்களுக்கு உடல் பருமன் இருக்கிறது.

* ஆண் பாலின ஹார்மோன் அளவு அதிகமாய் இருப்பதால் 70 சதவீத பெண்களுக்கு முகத்தில், நெஞ்சில், தோள்பட்டையில் ஆண்களைப்போல் அதிகமாய் முடி வளர்தல் இருக்கும்.

* தலையில்  ஆண்களுக்கு ஏற்படும் வழுக்கை போல் வருவதற்கும் வாய்ப்புண்டு.

* ஆண்பாலின ஹார்மோன் அதிகமாய் சுரப்பதால் தோலில் பிசுபிசுப்புத் தன்மை அதிகம் காணப்படும். இதனால் முகப்பருக்கள் வரக்கூடும்.

* தோளில் கருப்பு நிறத் திட்டுகள் போன்று ஏற்படும். இதைப் பெரும்பாலும் கழுத்து மற்றும் கை மடிப்புகளில் அதிகமாய் காணலாம்.

* ஹார்மோன் அளவு மாற்றங்களினால் சிலருக்கு தலைவலி வரக்கூடும்.

கண்டறிவது எப்படி..?

* கருப்பையை மருத்துவர் சோதனை செய்வர்.

* ரத்தப் பரிசோதனையில் ஆண்பாலின ஹார்மோன் அளவு, பெண்பாலின ஹார்மோன்கள் அளவு, கொழுப்பின் அளவு, இன்சுலின் அளவும் சோதனை செய்யப்படும்.

* அல்ட்ரா சவுண்ட் ஸ்கேன் மூலம் சினைப்பை நீர்க்கட்டிகளையும், கருப்பையில் வேறு ஏதேனும் கோளாறுகள் இருந்தாலும் அதையும் கண்டறிவர்.
 
விளைவுகள் ஆபத்தானவை...

* பிள்ளை பெரும் வயதில் இருப்பவர்களுக்கு இதனால் கர்ப்பம் தரிக்க முடியாமல் இருக்கும் (குழந்தை பிறப்பு குறைபாடுமின்மை). இந்த கோளாறினால் பாதிக்கப்பட்ட  80 சதவீதப் பெண்களுக்கு குழந்தையின்மை குறைபாடு இருப்பதாக ஆய்வு முடிவுகள் கூறுகிறது.

* சில பெண்களுக்கு இளம் வயதினிலே நீரிழிவு நோய் வருவதற்கும், இருதயக் கோளாறுகள் வருவதற்கும் வாய்ப்புகள் இருக்கின்றது.

* உயர் ரத்த அழுத்தம், ரத்தத்தில் அதிக கொழுப்பு அளவு ஆகியவை ஏற்படலாம்.

* கருப்பையில் புற்றுநோய் வருவதற்கும் வாய்ப்புகள் உண்டு.

* மனச்சோர்வு ஏற்படவும் வாய்ப்புள்ளது.

* உடல் எடை அதிகமாக இருக்கும் பெண்களுக்கு இரவில் தூக்கத்தில் மூச்சு விடுவதில் சிரமம் ஏற்படும்.

* இவை மட்டும் இல்லாமல் கர்ப்பம் தரித்த பின்னும் கர்ப்ப காலத்தில் ஏதேனும் சிக்கல்கள் உருவாக வாய்ப்புகள் அதிகமாக உள்ளது. உதாரணமாய் கர்ப்பகால நீரிழிவு நோய், உயர் ரத்த அழுத்தம் வரலாம். கருச்சிதைவு ஏற்படலாம். குறிக்கப்பட்ட தேதிக்கு முன்னரே (premature baby) குழந்தை பிறக்கவும் நேரலாம்.

என்ன தீர்வு?

அலோபதி மருத்துவத்தில் இன்சுலின் எதிர்ப்புக்கும், ஹார்மோன்கள் சமச்சீரின்மைக்கும் மருந்துகள் வழங்குவர். கூடவே, இயன்முறை மருத்துவத்தில் உடல் பருமன் குறைப்பதற்குத் தேவையான பயிற்சிகள் வழங்குவோம். இவற்றோடு உணவுக் கட்டுப்பாடு, வேறு சில வாழ்வுமுறை மாற்றங்களையும் மேற்கொண்டால் எளிதில் சினைப்பை நீர்க்கட்டிகள் கோளாறை வென்று இனிமை காணலாம்.

தொகுப்பு: அன்னம் அரசு

படங்கள்: ஜி.சிவக்குமார்

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • twins22

  தலை ஒட்டிப் பிறந்த இரட்டை சகோதரிகள் இனி தனித்தனியே!: அறுவை சிகிச்சைக்கு பின் சந்தோஷமாக நாடு திரும்பினர்..!!

 • mumbaitrain22

  7 மாதத்திற்கு பிறகு மும்பை மின்சார ரயிலில் பெண்கள் உற்சாக பயணம்!: 4 மகளிர் சிறப்பு ரயில்களும் இயக்கம்..!!

 • dinosauregg22

  பெரம்பலூரில் தோண்ட தோண்ட கிடைத்த ‘டைனோசர்’ முட்டைகள்!: ஒன்னு இல்ல ரெண்டு இல்ல.. ‘மிரள’ வைத்த எண்ணிக்கை..வியப்பில் பொதுமக்கள்..!!

 • locusts22

  எத்தியோப்பியாவில் வெட்டுக்கிளிகள் அட்டகாசம்!: 25 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு உணவு பயிர்கள் நாசம்..விவசாயிகள் வேதனை..!!

 • rainbowtree22

  உலக பொறியாளர்களின் கவனத்தை ஈர்த்த பிலிப்பைன்ஸ் ரெயின்போ ட்ரீ டவர்!: கண்கவரும் புகைப்படங்கள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்